தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 13 December 2014

அறிந்தும் அறியாமலும்…(32)

பிறவி முதலாளி எதிர்ப்பு

சுயமரியாதை இயக்கத்தின் தொடக்க காலச் செயல்பாடுகள் அனைத்தும் வருண-சாதி அமைப்பை எதிர்ப்பதாகவே இருந்தன. இந்தியாவில் பொதுவுடமைக் கட்சி காலூன்றிய காலமும் அதுதான். 1916ஆம் ஆண்டில், நீதிக்கட்சி,மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் இயக்கம், அன்னி பெசன்ட் அம்மையாரின் ஹோம் ரூல் இயக்கம் ஆகியவை தோன்றின.1925-26இல், சுயமரியாதை இயக்கம், பொதுவுடமைக் கட்சி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆகியவை தோன்றின.


பொதுவுடமைக் கட்சி வர்க்க எதிர்ப்பை முன்னிலைப் படுத்தியது. ஏழை மக்களின் உழைப்பைச் சுரண்டும் முதலாளிகளை எதிர்ப்பதே அக்கட்சியின் முதன்மை நோக்கமாக இருந்தது. ஆனால் பெரியாரோ, அதற்கு முதலிடம் தரவில்லை. அதற்கான காரணத்தையும் பெரியார் சொன்னார்.

முதலாளி என்பவன் பரம்பரையாக வருபவன் அல்லன். இன்றைய முதலாளி நாளையே இன்சால்வென்ட் கொடுத்து பாப்பர் ஆகிவிடலாம். அது போலவே, இன்று கஞ்சிக்குத் திண்டாடுபவன் நாளைக்குப் பெருத்த முதலாளி ஆகிவிடலாம். ஆனால் பாப்பான் என்பவன் பிறவி முதலாளியாக அல்லவா இங்கே இருக்கிறான். அவன் என்னவோ கடவுளுக்கு நேராய்த் தந்தி கொடுப்பவன் போல அல்லவா மக்களும் நினைத்துக் கொள்கிறார்கள் (விடுதலை 1952) என்று கூறிய அவர், இந்தப் பிறவி முதலாளிகளைத்தான் முதலில் எதிர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.



அவர்களை எதிர்க்கும் பல வடிவங்களையும் அவர் மேற்கொண்டார். தாழ்த்தப்பட்டோர் கோயில்களுக்குள் நுழையக் கூடாது என்னும் ஜனநாயக எதிர் மரபை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தினார். தாழ்த்தப்பட்ட மக்களை முதன்முதலில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அழைத்துக் கொண்டு போனவர் வைத்தியநாத ஐயர் என்னும் மிகப் பிழையான செய்தி ஒன்று தொடர்ந்து நம் பாடப் புத்தகங்களில் இடம்பெற்று வருகிறது. அதற்கு 13 ஆண்டுகள் முன்பாகவே அந்தப் போராட்டத்தைச் சுயமரியாதை இயக்கம் தன் கையில் எடுத்தது. 1926 முதல் 29 வரையில் சு.ம.இயக்கம் நடத்திய போராட்டங்கள் பல கோயில் நுழைவுப் போராட்டங்களே! குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் தொடங்கி, ஈரோடு, மயிலாடுதுறை, திருச்சி எனப் பல்வேறு இடங்களில் அப்போராட்டம் நடந்துள்ளது. குத்தூசி குருசாமி, ஜே.எஸ். கண்ணப்பர், பூவாளூர் பொன்னம்பலனார், கி.ஆ.பெ.விசுவநாதம் போன்ற பெருமக்கள் பலர் அவற்றில் கலந்துகொண்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். திருச்சி மலைக்கோட்டையில் இந்துமத வெறியர்கள் தடி கொண்டு தாக்கியதில் சுயமரியாதை இயக்கத் தொண்டர்கள் பலர் காயம் அடைந்துள்ளனர்.

மறைமலை அடிகளாரே கூட, ஒரு கோணத்தில் அதனை எதிர்த்துள்ளார். சுயமரியாதை இயக்கம் அவசரப்படுகிறது என்று விமர்சனம் செய்துள்ளார். அது குறித்த செய்திகளை என்னுடைய நூல் ஒன்றில் ('பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்') விரிவாகத் தந்துள்ளேன். அதிலிருந்து ஒரு பகுதியைக் காணலாம்:

1928 ஜுன் மாதம் நடந்த நிகழ்வு அது. ஒரு கூட்டத்தில் கலந்துகொண்ட மறைமலை அடிகளார், தாழ்த்தப்பட்டோரைக் கோயிலுக்குள் சு.ம.இயக்கத்தினர் அழைத்துச் செல்வது குறித்துக் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு கீழ்வருமாறு விடை சொல்லியுள்ளார். அவருக்கு ஆதரவானவர்கள் அப்போது வெளியிட்டுள்ள 'திராவிடனின் பொய்ம்மையை நடந்த வண்ணம் உரைத்தல்' என்னும் சிறு நூலில் இச்செய்தி உள்ளது.

"தாழ்ந்த வகுப்பார் கொலையால் வரும் புலால் உணவுண்ணுதலையும் , கள், குடியையும் நீக்கித் துப்புரவான நடை, உடை வாய்ந்தவர்களாவதுடன் .......தாழ்ந்த சாதிப் பெயர்களையும் விட்டு,....உயர்ந்த ஒழுக்கத்துக்கு உரியவராகக் கருதப்படும் பார்ப்பனர், வேளாளர் முதலிய பெயர்களால் தம்மை வழங்கிக் கொள்ளுதலும் வேண்டும்" என்று கூறும் அடிகளார், அவ்வாறு நடந்து கொண்டால் அவர்கள் கோயில்களுக்குள் செல்லத் தடை என்ன இருக்கப் போகிறது என்று வினவுகின்றார்.

காந்தியாரை எதிர்த்தது போலவே, வருண-சாதி எதிர்ப்பு நோக்கில் அடிகளாரையும் பெரியார் எதிர்க்கின்றார். மேலும், மேல்சாதியார் உடன்பாடின்றி, தாழ்த்தப்பட்ட மக்களைக் கோயிலுக்குள் அழைத்துச் செல்வதில் தனக்கு உடன்பாடில்லை என்னும் அடிகளாரின் கருத்தையும் பெரியார் கடுமையாக மறுக்கின்றார். தூய்மையின் அடிப்படையிலோ, உணவு முதலான பழக்க வழக்கங்களின் அடிப்படையிலோ எந்த சாதியினரையும் கோயிலுக்குள் மறுக்கவில்லை. பிறப்பின் அடிப்படையிலேயே அம்மறுப்பு நிகழ்கிறது என்னும் உண்மையை அவர் எடுத்துக்காட்டுகின்றார்.

ஆகவே வருண சாதிக்கு உடன்பாடான கருத்துகள் எவரிடமிருந்து வந்தாலும் அதனை எதிர்ப்பதில் பெரியார் முதலிடம் வகிக்கின்றார். அவற்றின் பிறப்பிடமாக இந்து மதமே உள்ளது என்பதால், அவருடைய இந்துமத எதிர்ப்பு மேலும் மேலும் கூர்மையடைகிறது.


(காரிக்கிழமைதோறும் சந்திப்போம் )

தொடர்புகளுக்கு: (subavee11@gmail.com , www.subavee.com)

நன்றி: tamil.oneindia.in


1 comment:

  1. வருண சாதிக்கு உடன்பாடான கருத்துகள் எவரிடமிருந்து வந்தாலும் அதனை எதிர்ப்பதில் பெரியார்தான் என்றும் முதலிடம் வகிக்கிறார்

    ReplyDelete