என்
சுதந்திரத்தைத்
தனி
நபரோ
அரசாங்கமோ
பறித்துக்
கொள்ளுமெனில்
அது
என்
சுதந்திரமல்ல
அவர்களின்
சுதந்திரம்தான்!
என்று ஆத்மநாம் எழுதிய
பழைய கவிதை ஒன்று இன்றும் பொருத்தமாகவே உள்ளது. கருத்துரிமைகள் தொடர்ந்து
மறுக்கப்பட்டும், பறிக்கப்பட்டும் வருகின்ற காலமாகவே
இன்றையச் சூழலும் உள்ளது.
அம்பேத்கர்
பிறந்த நாளான ஏப்ரல் 14 இவ்வாண்டு தமிழகத்தின் தலைநகரில்
கருத்துரிமைப் போராட்ட நாளாகவே இருந்தது. சென்னை பெரியார் திடலில் நடைபெறவிருந்த
நிகழ்வுகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தடை
வருவதற்கு முன்பே, தாலி அகற்றும் நிகழ்வு நடந்து
முடிந்து விட்டது என்றாலும், அது குறித்த விவாதமும், அதற்கு
எதிரான வன்முறைகளும் தொடர்ந்து கொண்டே உள்ளன.
தாலி
அணிவது சரியா, தவறா என்பது ஒரு நீண்ட விவாதம். நெடுங் காலமாக அது தமிழ் நாட்டில் நடந்து வருகின்றது. மறைந்த கவிஞர்
கண்ணதாசன், ம.பொ.சி ஆகியோர் நடத்திய பழைய விவாதம் அனைவரும் அறிந்ததே. தந்தை
பெரியாரின் தாலி குறித்த கருத்தும் நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.தமிழறிஞர்
மா.இராசமாணிக்கனார், 'தமிழர் திருமணத்தில் தாலி' என்று
ஒரு நூலே எழுதியுள்ளார்.
எந்த
ஒன்று குறித்தும் பல்வேறு கட்சிகள், மனிதர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள்
இருப்பது இயல்பே! அவரவர் வாழ்க்கை முறை, அனுபவம், சிந்தனையின்
அடிப்படையில் மாறுபட்ட நிலைப்பாடுகள் தோன்றுவதில் பிழை ஒன்றுமில்லை. தாலி அணிந்து
கொள்வதும் அவரவர் விருப்பமும், உரிமையும் சார்ந்ததாகும். ஆனால்
அது குறித்தெல்லாம் பேசவோ, விவாதிக்கவோ கூட எவரையும் அனுமதிக்க
மாட்டோம் என்று தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்த நினைக்கும் நிலை
இன்று உருவாகியுள்ளது. அதனால் கருத்துரிமைப் போருக்கான களமாய்த் தமிழகம் ஆகி வருகின்றது.
எந்த
ஒரு தொன்மையான பழக்கத்தையும் எளிதில் மாற்றிக்கொள்ளச் சமூகமும், தனி மனிதர்களும் உடன்பட்டு விட மாட்டார்கள். ஒரு நெடிய போராட்டத்தின்
பின்பே பல பழம் மரபுகள் மாறியுள்ளன. எடுத்துக்காட்டாக, கணவன்
இறந்தவுடன் மனைவியையும் நெருப்பில் போட்டு எரித்துவிடும் கொடுமையான 'சதி' என்று
அழைக்கப்பட்ட உடன்கட்டை ஏறுதல் என்னும் கொடுமையை ஒழிப்பதற்கும் கூட நீண்ட
போராட்டம் தேவைப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் அந்த வழக்கத்தை
ஒழிப்பதற்கான சட்ட முன்வடிவை, அன்று நாட்டை ஆண்ட ஆங்கில அரசு
கொண்டுவந்த போது, அதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்து மதத்தினரின் நம்பிக்கை மற்றும் மதப் பழக்க வழக்கங்களில் கை வைக்க
எங்கிருந்தோ வந்த வெள்ளைக் காரனுக்கு எந்த உரிமையும் இல்லை என்ற கருத்து
பரப்பப்பட்டது.
இறுதியில், கடும்
எதிர்ப்புகளுக்கிடையில், 1829ஆம் ஆண்டு,'சதி
தடைச் சட்டம்' நிறைவேறியது. ஆனாலும், இந்து மதப் பற்றாளர்கள் அதனை
நடைமுறையில் தொடர்ந்து கொண்டுதான் இருந்தனர். பிறகு, 1861இல், விக்டோரியா அரசி இதற்கென்றே
தனியாக ஒரு சிறப்புச் சட்டத்தை வெளியிட்டார். ஆனாலும் 1920ஆம் ஆண்டு வரையில் கூட நேபாளத்தில் அது நடப்பில் இருக்கவே செய்தது. இந்தியா
விடுதலை பெற்றபின்னும்,1988 ஆம் ஆண்டு, சதியை
மறைமுகமாகப் பின்பற்றுவதோ, அவ்வழக்கத்தைப் பாராட்டுவதோ
சட்டப்படி குற்றம் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதனையும் மீறி, ராஜஸ்தானில், இந்து
மதத்தின் பெயரால், கன்வர் என்னும் இளம்பெண் எரித்துக்
கொல்லப்பட்ட நிகழ்வை நாம் அறிவோம்.
குழந்தைத்
திருமணத் தடைச்சட்டம், தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம்
அனைத்தும் எதிர்ப்புகளைத் தாண்டியே நிறைவேறின. இவையெல்லாம் எங்கள் இந்து மதப்
புனிதங்கள்,இவற்றில் மாற்றம் செய்ய எவருக்கும் உரிமை இல்லை என்று
சட்டமன்றத்திலேயே சத்தியமூர்த்தி (அய்யர்), எம்.கே. ஆச்சார்யா ஆகியோர் பேசிய
உரைகள் இன்றும் சட்டமன்றக் குறிப்புகளில் உள்ளன. இச்சட்டங்களைக் கொண்டு வருவதன்
மூலம் இந்துக்களின் மனங்கள் புண்படுகின்றன என்றுதான் அன்றும் கூறினர்.
இவ்வாறு
ஒவ்வொரு பழைய மரபையும் மாற்றுவது கடினமாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால்
தாலி அணிவதென்பது அவ்வளவு பழைய மரபு கூட இல்லை. தமிழின் சங்க
இலக்கியங்களிலோ, காப்பியங்களிலோ, பக்தி
இலக்கியங்களிலோ கூட, தாலி அணிவது பற்றிய செய்தி ஏதும்
இடம்பெறவில்லை.கோவலன் கண்ணகி திருமணத்தை அணு அணுவாக விவரிக்கும் இளங்கோ அடிகள் , எந்த
இடத்திலும், கோவலன் கண்ணகிக்குத் தாலி கட்டினான் என்று கூறவில்லை. ஆண்டாள் கூட,'மதுசூதன்
வந்து தன் கைத்தலம் பற்றக் கனாக் கண்டதாகத்தான் கூறுகிறார். கனவிலும் தனக்குத்
தாலி கட்டியதாகக் கூறவில்லை. கி.பி. 9ஆம்
நூற்றாண்டிற்குப் பிறகுதான் இவ்வழக்கம் வந்திருக்கக் கூடும் என்று மா. இராசமாணிக்கனார்
போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர்.
இதனை
இந்து மதத்தின் பழக்கம் என்றும் கூறிவிட முடியாது. வங்காள இந்துப் பெண்கள் தாலி
அணிவதில்லை. மேல் நெற்றியில், தலைமுடி வகிட்டில் வைத்துக்
கொள்ளும் குங்குமமே திருமணம் ஆனமைக்கான அடையாளமாக உள்ளது. எனவே இது முழுமையான இந்து மரபும் இல்லை, தமிழ் மரபுமில்லை.
இவை
அனைத்தையும் தாண்டி, தாலி அணிந்து கொள்வதும், அணியாமல்
இருப்பதும் அவரவர் விருப்பமும், உரிமையும் சார்ந்தது என்பதை இங்கு
மீண்டும் கூற வேண்டியுள்ளது. நாம் யாரையும் கட்டாயப் படுத்துவதில்லை. சுயமரியாதைத்
திருமணம் சட்டப்படி செல்லும் என்னும் சட்ட முன்வடிவைத் தமிழகச் சட்டமன்றத்தில் முன்மொழிந்த
அறிஞர் அண்ணா, மிகக் கவனமாக, இனிமேல் எல்லோரும் இப்படித்தான்
திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று இச்சட்டம் கூறவில்லை, இம்முறையிலும் திருமணம் நடைபெறலாம் என்பதற்கான வழிவகையை மட்டுமே
இச்சட்டம் முன்மொழிகிறது என்றார். ஜனநாயகத்திலும், கருத்துரிமையிலும் நம்பிக்கை
கொண்டவர்கள் அவ்வாறே பேசுவர்.
ஆனால்
இன்று தாலி குறித்துப் பேசுவதற்கே அனுமதிக்க மாட்டோம் என்னும் நிலையை இங்கு சில
குழுக்கள் உருவாக்குகின்றன.ஒரு தொலைக்காட்சியில் தாலி குறித்த விவாதம்
ஒளிபரப்பப்படுவதற்கு முன்பே அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த நிகழ்ச்சி
தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் பின்பும், அந்தத் தொலைக் காட்சி
நிலையத்திற்குள் 'டிபன் பாக்ஸ்' வெடிகுண்டு
வீசப்பாட்டது. அதன் பின்பே, அதன் எதிர் அரசியலாகத் திராவிடர்
கழகத் தலைவர் கி. வீரமணி, தாலி அகற்றும் நிகழ்வைப் பெரியார்
திடலில் நடத்த இருப்பதாக அறிவித்தார். நடத்தியும் முடித்தார்.
தாலி
அகற்றும் நிகழ்வைத் தங்கள் வீடுகளுக்குள் நடத்திக் கொள்ள வேண்டியதுதானே, ஏன்
அறிவிப்பு செய்து, அனைவரையும் அழைத்துப் பொது
இடங்களில் நடத்த வேண்டும் என்று கேட்கின்றனர். தாலி கட்டும் திருமணங்கள் அறிவிப்பு
செய்து, அனைவரையும் அழைத்துப் பொது இடங்களில்தானே நடைபெறுகின்றன. அதே
வழிமுறைதான் இதிலும் பின்பற்றப்படுகிறது. இதிலென்ன குற்றம்? ஒரு நிகழ்வை எப்படி நடத்த வேண்டும் என்று அதனை
நடத்துகின்றவர்கள்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, மற்றவர்கள் தீர்மானிக்க முடியாது.
இதனால்
கோடிக்கணக்கான இந்துக்களின் மனம் புண்படுகிறது என்று கூறுகின்றனர். ஆனால் வெறும் 13 பேர்தான்
பெரியார் திடலுக்கு வந்து வன்முறையில் இறங்கினர். கோடிக்கணக்கான மக்கள் தத்தம்
பணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அடுத்தவர்கள் கழுத்தில் இருக்கும் தாலியைப்
பறித்தால், மற்றவர்களின் மனம் புண்படலாம். தங்கள் கழுத்தில் இருக்கும்
தாலியைத் தாங்களே அகற்றிக் கொள்வதற்கு மற்றவர்கள் மனம் ஏன் புண்பட வேண்டும்?
சட்டம், ஒழுங்கு
கேட்டுப் போய்விடும் என்று நீதிமன்றத்தில் முறையிடுகிறது, தமிழகக்
காவல்துறை. அப்படியானால், சட்டம் ஒழுங்கைக் கெடுப்பவர்களை
அல்லவா காவல் துறை கைது செய்ய வேண்டும். ஓர் அரசியல் தலைவரைக் கைது செய்யுமாறு
அரசு ஆணையிடும்போது, அவரைக் கைது செய்தால் சட்டம்
ஒழுங்கு கெட்டுவிடும் என்று கூறி காவல் துறை நீதிமன்றம் செல்லுமா? எந்த
ஒரு நிகழ்வையும்,சட்டத்திற்குப் புறம்பானதென்றால், அதற்குத்
தடை கோரலாம். சட்டம், ஒழுங்கு கெட்டுப் போகும் என்றால், காவல் துறை தன் பணியைச் செய்ய
விரும்பவில்லை அல்லது செய்யத் தவறி விட்டது என்றுதானே பொருள்!
அன்றைக்குத்
தாலி பற்றிய விவாதத்திற்கு இடையூறு செய்யாமல் இருந்திருந்தால், இன்றைக்குத்
தாலி அகற்றும் நிகழ்வு இவ்வளவு தூரம் மக்களிடம் பரவியிருக்காது.தாலி அகற்றும்
நிகழ்வுக்கு இவ்வளவு எதிர்ப்பு வரவில்லையென்றாலும், அது பத்தோடு பதினொன்றாக
முடிந்திருக்கும்.
தாலி
அகற்றப்படுவது சாதாரண நிகழ்வுதான்.அது பற்றிய விவாதங்கள் மக்களிடம் பரவலாகச் செல்ல
வேண்டும் என்பதே திராவிடர் கழகத்தின் நோக்கம்.அதனை இந்துத்துவ அமைப்புகளும், தமிழக
அரசும் பெரு முயற்சி எடுத்து நிறைவேற்றித் தந்திருக்கின்றன. அவர்களுக்கு நம் நன்றி!
நன்றி : oneindia.com
அருமையான கட்டுரை தோழர். ஒரு சின்ன திருத்தம் - "இறுதியில், கடும் எதிர்ப்புகளுக்கிடையில், 1929ஆம் ஆண்டு,'சதி தடைச் சட்டம்' நிறைவேறியது."என்று எழுதியுள்ளீர்கள். தட்டச்சு பிழை என்று நினைக்கிறேன். அது 1929 அல்ல 1829.
ReplyDeleteகருத்துச் சகிப்பின்மை பற்றிய தெளிவான விளக்கம்
ReplyDeleteதாலி என்பது ஐயமில்லாமல் இடையில் வந்த அடிமைத்தனத்தின் அடையாளம்தான். இக் கருத்தை ஏற்றுக் கொள்வதற்கும் அதைத் தவிர்ப்பதற்கும் கால அவகாசம் தேவைப்படும். அதற்குள் கருத்துரிமையின் கழுத்தை நெறிக்கப் பார்க்கிறார்கள்.
ReplyDeleteதற்போது முன்னேறிய மகளிரிடையே, தாலியினை, வீட்டில் உள்ளபோது கழற்றி வைத்து விடும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.
ReplyDelete