தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday 25 June 2015

வரலாற்றுப் புகழ் மிக்க இரு நேர்காணல்கள்



20.06.2015 ஆம் நாளிட்ட தமிழ் இந்து நாளேட்டில், அகில இந்திய (?) மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் அவர்களின் நேர்காணலும், 24.06.2015 ஆம் நாளிட்ட ஆனந்த விகடனில், "மதுரை ஆதினம் 292 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள்"(?) அவர்களின் நேர்காணலும் இடம்பெற்றுள்ளன.

டாக்டர் சேதுராமன் அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சித் தலைவர். ஆதினம், அம்மாவின் தீவிர ஆதரவாளர். இருவரின் நேர்காணல்களும் ஏராளமான செய்திகளை நமக்குத் தருகின்றன. 


ஊழலுக்கு எதிராகவும், மதுவிற்கு எதிராகவும் பரப்புரை செய்துவரும் சேதுராமனிடம், "ஆர்.கே.நகர் தொகுதியில் ஓட்டுக்குப் பணம் வாங்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்ய முடியுமா" என்ற வினாவை முன்வைத்துள்ளனர். "இப்போது போய் நான், ஒட்டுக்குக் காசு வாங்காதே என்று சொன்னால் என்னை கல்லால் அடிப்பாங்க" என்று விடை சொல்லியிருக்கிறார். 

இந்த ஒப்புதல் வாக்குமூலத்தைத் தேர்தல் ஆணையம் குறித்துக் கொள்ளாது. ஏனெனில், தேர்தல் ஆணையமே அங்கு ஒரு தோழமைக் கட்சி போலத்தான் நடந்து கொள்கிறது.ஒரு தோழமைக் கட்சியை இன்னொரு தோழமைக் கட்சி காட்டிக் கொடுப்பது 'கூட்டணி தர்மம்' ஆகாது. 

சரி, மதுவையாவது எதிர்க்கலாம் இல்லையா? "மருத்துவரான நீங்கள் ஜெயலலிதாவிடம் எடுத்துச் சொல்லி, மதுவிலக்கு கொண்டுவர முயற்சிக்காதது ஏன்?" என்பது இன்னொரு கேள்வி. அதற்கு டாக்டர் சேதுராமன், நாங்கள் இப்போது ஜெயலலிதாவிடம் அடிமையாக இருக்கிறோம். அதனால் எங்களால் எந்தப் பிரச்சினைக்கும் அழுத்தம் கொடுக்க முடியவில்லை" என்று 'கூச்ச நாச்சம்' ஏதுமின்றி விடை சொல்லியுள்ளார். அமைச்சர்கள், கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி, தோழமைக் கட்சித் தலைவர்களும் அங்கு அடிமைகளாகத்தான் இருக்கிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சம் ஆக்கியுள்ளார் சேதுராமன். ஆகவே அ.தி.மு.க. என்றால், அண்ணா தி.மு.க. அன்று, அது அடிமைகளின் தி.மு.க என்பது தெளிவாகிறது.

ஒருமுறை, நடிகர் சரத் குமார், "அம்மா என்னை ஒரு அமைச்சரைப் போல நடத்துகிறார்" என்று கூறினார். சேதுராமன் நேரடியாகச் சொன்னதை, சரத் குமார் மறைமுகமாகச் சொல்லியுள்ளார். அமைச்சர், அடிமை ஆகிய இரு சொற்களுக்கும் அந்தக் கட்சியில் ஒரே பொருள்தான். மோடி இப்போதுதான் யோகா சொல்லிக் கொடுக்கின்றார். தமிழக அமைச்சர்கள் எப்போதோ யோகா கற்றுக் கொண்டு விட்டார்கள். வளைந்தும் நெளிந்தும் எப்படியெல்லாம் யோகா செய்கிறார்கள்!


ஆதினத்தின் பேட்டி 'முழு நீள நகைச்சுவை' என்றுதான் சொல்ல வேண்டும். 

"அம்மாவுக்குத் தெய்வ அருள் நிறைய இருக்கு" என்றுதான் அவர் தொடங்குகிறார். யார் யாருக்குத் தெய்வ அருள் இருக்கிறது என்பது ஓர் ஆதீனத்திற்குத் தெரியாதா என்ன!  ஆனால் 'நித்யா'வுடன் சேரும்போது, தனக்குத் தெய்வ அருள் இருக்கிறதா இல்லையா என்பதைப் பார்க்க "சாமிகள்" தவறிவிட்டார். ஆர்.கே. நகரில் அம்மா வெற்றி பெறுவார் என்று ஆதினத்தின் 'உள்ளுணர்வு' சொல்கிறதாம். இதற்கு என்ன வெங்காயம் உள்ளுணர்வு வேண்டிக் கிடக்கிறது,  'வெளியுணர்வே' போதாதா?

கதாநாயகிகளில் அவருக்கு அன்று முதல் இன்று வரை அம்மாவைத்தான் பிடிக்குமாம்.....சொல்கிறார்! ஆக, இப்போதும் அவர் அந்த அம்மாவைக் கதாநாயகியாகத்தான் பார்க்கிறார் போலிருக்கிறது. "அம்மா நடிச்ச படங்கள் டி.வி.யில எப்போ போட்டாலும் பார்ப்பேன். அவுங்க நடிச்சதுல 'ஆயிரத்தில் ஒருவன்' எனக்குப் பிடிச்ச படம்" என்பது சாமிகளின் வாயிலிருந்து வந்திருக்கும் 'தெய்வக் கூற்று.'

ஆதினத்தின் அரும்பணியைப் பார்த்தீர்களா? இனிமேலாவது  சிவ பக்தர்கள் தேவாரம், திருவாசகம் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் கண்டு களிப்பார்களாக!

ஆதீனம் ஒருமுறை, அம்மா பெயர் வைத்த புலிக்குட்டியைப் பார்க்க  வண்டலூர் போயிருந்தபோது, சிங்கம் அவரைக் கண்டு மிரண்டுவிட்டதாம். அவர் 'சிங்க வடிவிலான சிங்காதனத்தில்' அமர்ந்திருப்பதால், சிங்கத்திற்கு அவர் பேசுவது புரியுமாம். 'சத்தம் போடாதே, உட்கார்' என்று ஆங்கிலத்தில் சொன்னவுடன் உடனே புரிந்துகொண்டு (ஆங்கில சிங்கமாய்  இருக்குமோ)  உட்கார்ந்து விட்டதாம். 

சிங்கத்தோடு இவ்வளவு நெருக்கம் இருக்கும்போது, "சாமி, அடுத்த முறை நீங்கள் சிங்கத்தின் கூண்டுக்குள்ளேயே போய்ப் பேசலாமே....அது, சிங்கத்திற்கும் நல்லது, நாட்டிற்கும் நல்லதில்லையா?" என்று சொல்லத் தோன்றுகிறது.   

2 comments:

  1. மானங்கெட்ட தமிழர்களில் சாமியாரும் ஒருவர்

    ReplyDelete
  2. இரத்தினவேல்28 June 2015 at 15:04

    இவர்கள் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்கலாம். ஏராளமான ரசிகர்கள் கிடைப்பார்கள்.

    ReplyDelete