தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday 28 July 2015

மதுவிலக்கும் மகாத்மாக்களும்!


நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டில் முழுமையாக மதுவிலக்கை நடைமுறைப் படுத்துவோம் என்று தலைவர் கலைஞர் அறிக்கை வெளிவந்தவுடன் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அதனை வரவேற்றனர். பொதுமக்களிடையே , குறிப்பாகப் பெண்களிடையே அதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மதுவிலக்கை வலியுறுத்திப் பல போராட்டங்கள் நடத்திவரும் பெரியவர்  சசி பெருமாள் போன்றவர்கள் நேரிலேயே சென்று கலைஞருக்கு நன்றி கூறினர்.
ஆனால் மதுவிலக்கு குறித்துத் தொடர்ந்து பேசிவரும் பா...வும், திரு.நெடுமாறன், திரு தமிழருவி மணியன் போன்றவர்களும் கலைஞரின் அறிக்கையைக் கண்டித்தும், எதிர்த்தும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இவர்தானே அன்று மதுக் கடைகளைத் திறந்தார், 44 ஆண்டுகளுக்குப் பின் இப்போது என்ன திடீர் ஞானோதயம் என்று விதண்டாவாதம் பேசுகின்றனர். அன்று மதுக் கடையைத் திறந்ததற்காகக் கருணாநிதி மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிறார் ஒருவர். 26000 கோடி நட்டத்தை எப்படிச் சரி செய்யப் போகிறார் என்பதை இப்போதே சொல்ல வேண்டும் என்கிறார் மற்றவர்.
44 ஆண்டுகளுக்கு முன்பு மதுவிலக்கைத் தற்காலிகமாகக் கலைஞர் ஒத்தி வைத்தது உண்மைதான். அது தற்காலிகம் என்பதற்குச் சான்று, 73 ஆகஸ்டில் கள்ளுக் கடைகளையும், 74 செப்டெம்பரில் மதுக் கடைகளையும் அவர் மூடி விட்டார் என்பதுதான். கடைகளைத் திறந்ததைப் பற்றிப் பேசுகின்றவர்கள், அவற்றை அவரே மூடியதைப் பற்றி மறந்தும் பேசுவதில்லை.
கொட்டும் மழையில் ராஜாஜி வந்து கெஞ்சிக் கேட்ட பிறகும் அதனை ஏற்காமல் கலைஞர் மதுவிலக்கைத் தளர்த்தினார் என்று ஒரு குற்றச்சாட்டைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டுள்ளனர். ஏதோ குடை கூடப் பிடிக்காமல், மழையில் நனைந்துகொண்டே ராஜாஜி நடந்து வந்ததைப் போல ஒரு செய்தி சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அவர் கலைஞரைப் பார்க்க வந்தபோது மழை பெய்தது. அவ்வளவுதான். அதனைப் பெரிதுபடுத்தி ஒரு நாடகக் காட்சி போல் ஆக்க முயல்கின்றனர்.
குலக்கல்வித் திட்டம் என்ற பெயரில் ராஜாஜி பள்ளிக் கூடங்களை மூடினாரே, அது எவ்வளவு பெரிய சமூக அநீதி. அது குறித்து இவர்கள் யாரும் உரத்துப் பேசுவதில்லையே ஏன்?ராஜாஜி என்ன செய்தாலும் இவர்கள் ஏற்றுக்கொள்வார்கள், கலைஞர் எது செய்தாலும் இவர்கள் குறைசொல்வார்கள் என்பதுதான் உண்மை.
1974இல் கலைஞர் மூடிய மதுக் கடைகளை மீண்டும் யார் திறந்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். என் தாய் மீது ஆணையாக மீண்டும் மதுவைக் கொண்டுவர மாட்டேன் என்று சொன்ன எம்.ஜி.ஆர் தான், 1981 இல் மீண்டும் மதுவிலக்கைத் தளர்த்தினார். அது பற்றி இவர்கள் ஏன் பேசுவதில்லை என்றால், அய்யா நெடுமாறன் அப்போது .தி.மு.. அணியின் ஆதரவுடன், சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அன்று வாய்மூடி மௌனமாக இருந்ததற்காக இன்று அவர் மன்னிப்புக் கேட்பாரா?
ஓர் அரசு எடுக்கும் முடிவுகள் அனைத்தும் முழு விருப்பத்துடன் எடுக்கப்படும் முடிவுகளாக இருக்காது. தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டும் தீர்மானத்தையும், சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்னும் தீர்மானத்தையும் நிறைவேற்றியபோது அறிஞர் அண்ணாவிடம் இருந்த மகிழ்ச்சி, லாட்டரிச் சீட்டுகளை அறிமுகப் படுத்தியபோது அவரிடம் இருந்திருக்காது. அப்படித்தான், பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டத்தை நிறைவேற்றியபோதும், கை ரிக்ஷாக்களை ஒழித்தபோதும் கலைஞரிடம் இருந்த மகிழ்ச்சி, மதுவிலக்கைத் தளர்த்தியபோது இருந்திருக்காதுஅதனைத் தன் வரலாற்றில் (நெஞ்சுக்கு நீதி - இரண்டாம் பாகம்) அவரே கூறுகின்றார். ராஜாஜி, காயிதே மில்லத் போன்ற பெரியவர்கள் கேட்டுக்கொண்டபோது, அரசின் நிதி நிலையைப் பொறுத்துச் சில காலம் மதுவிலக்கை ஒத்த்திவைக்க வேண்டியுள்ளது என்பதை அவர்களிடம் விளக்கிக் கூறினேன் என்று கூறும் கலைஞர், என் மனசாட்சி இடம் கொடுக்காத நிலையில்தான் அதனைச் செய்தேன் என்றும் எழுதுகின்றார்.
எல்லாவற்றையும் மறைத்துவிட்டு, கலைஞரின் மீது பழி போடுவதில்தான் இவர்கள் குறியாக உள்ளனர். ராஜாஜியை அடிக்கடி எடுத்துக் காட்டும் இப்பெருமக்கள், ராஜாஜி முதல்வராக இருந்த 1937-39 கால கட்டத்தில் கூட சேலம், சித்தூர், கடப்பா, வட ஆர்க்காடு ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும்தான் மதுவிலக்கு நடைமுறையில் இருந்தது என்பதை நினைவு கூரட்டும்.
பா... குறித்து நாம் மிகுதியாக ஒன்றும் கூற வேண்டியதில்லை. அவர்கள் புலம்பலில் ஒரு நியாயம் இருக்கிறது. அவர்கள் மதுவிலக்கைத்தான் பெரிதாக நம்பிக் கொண்டிருந்தனர். கலைஞர் இப்படி ஓர் அறிவிப்புக் கொடுப்பார் என்று அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. அவர் அறிக்கை, பா... வின் கடைசிக் கையிருப்பையும் காலி செய்துவிட்டது. அதனால் அவர்கள் கோபப்படுவதும், புலம்புவதும் இயற்கைதான். அவர்களுக்காக நாம் வருத்தப் படலாமே அன்றி, சினம் கொள்ளல் ஆகாது!

ஒட்டுமொத்தத்தில் கலைஞரின் அறிவிப்பை எதிர்க்கும் இந்த மகாத்மாக்களின் உண்மையான எண்ணம் மதுவை எதிர்ப்பதன்று, கலைஞரை எதிர்ப்பதுதான்!

7 comments:

  1. நாம் வாய் மூடி இருப்பது அவர்கள் தங்களுக்கு சாதகமாக மாற்றுகிறார்கள்.
    பலமாக சொல்லுவோம்!!! புரியும்படி சொல்லுவோம்!!! புரியும்வரை சொலுவோம் !!!

    ReplyDelete
  2. இரத்தினவேல்31 July 2015 at 14:08

    தமிழ் மொழி, இன, நாட்டு முன்னேற்றத்திற்காக கடந்த முக்கால் நூற்றாண்டு காலம் கலைஞரின் உழைப்பும், முயற்சியும், தியாகமும் இருந்தாலும்கூட அவரை எதிர்ப்பதே கொள்கையாக சில தலைவர்கள் வைத்திருக்கின்றனர். அவர்களின் மனச்சாட்சி விழித்துக் கொள்ளும்போது அதற்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்.

    ReplyDelete
  3. மதியழகன்3 August 2015 at 21:40

    திரு.சுபவீ,கருணாநிதி,சடாலின் போன்றோர் சும்மா பேச்சுக்காக,பிரசாரத்திற்காக,ஓட்டிற்காக,பிழைப்பிற்காக,ஆதாயத்தி்காக இல்லாமல் உண்மையில் மதுவிலக்கை அமல்படுத்த விரும்பினால் பெரியவர் சசி பெருமாள் போன்று உலா பேசி கோபுரத்தில் ஏறி குதிக்கத் தயாரா?.கருணாநிதி,சடாலின் போன்றவர்கள் முதலமைச்சர் கனவில் மிதப்பவர்கள் அதனால் அவ்வாறு செய்ய முடியாது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால் எப்போதும் போல இவ்வளவு வியக்கியானம் பண்ணும் நீங்கள் உலா பேசி கோபுரத்தில் ஏறி குதித்து நான் எப்போதும் போல வாய்வீச்சு அரசன் அல்ல,மதுவிலக்கு தியாகி என்று நிருபிக்கலாமே?.செய்வீர்களா திரு.சுபவீ அவர்களே?

    ReplyDelete
    Replies
    1. திரு.சுபவீ கோபுரத்தில் ஏறி குதித்து இறந்தால்,இந்த மாதிரி விளக்கம் கொடுக்க ஆள் இல்லாம
      போகும்,அது தானே பார்பனீயம் எதிர் பார்க்குது,நீங்க நல்லா உசுபேதுரிங்க, நல்லா தெரியுது சாமி

      Delete
    2. கணேஷ்வேல்15 August 2015 at 23:31

      பெயரில் இருக்கும் இரண்டுமே தங்கள் கருத்தில் இல்லையே திரு மதியழகன் அவா்களே !

      Delete
  4. அருமையான பதிவு சுப.வீ. (வரலாற்றையும், தகவல் செய்திகளையும் கரைத்து குடித்து, அத்தனையையும் நினைவில் நிறுத்தி, தக்க சமயத்தில் தக்க சம்பவத்தை, செய்தியை ஏவுகணையாக்கி எதிரியை நிலையிழக்கச் செய்வதுதான் உங்களைப் போன்றோரின் பலமே.) மு.க. மீதான உங்கள் அபிமானத்தில் நீங்கள் எழுதியிருந்தாலும் கூட, நடுநிலையில் நின்று பார்த்தாலும் நீங்கள் எழுதியிருப்பது மிகவும் சரி; மிகவும் உண்மை.

    அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கி மதுக்கடைகளை அடித்து உடைத்ததை, சட்டத்துக்குப் புறம்பானதாக இருந்தாலும், என்னால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள முடிந்தது. ஒரு பெரிய நன்மை பயக்குமெனின் இது பரவாயில்லை என்று நினைத்தேன்.

    ஆனால் இது வரை நான் பேசிய நாலு நண்பர்களில் யாரும் இந்தப் போராட்டங்களை ஆதரிப்பதாகக் காணோம். "இப்போ என்ன திடீர்னு....எவ்வளவோ வருஷங்களா வியாபாரம் நடக்குது...இவங்க அரசியல் பண்றாங்க..." என்கிற ரீதியில் பேசினார்கள். நான் நொந்து போனேன். எதை எதையெல்லாமோ வைத்து அரசியல் பண்ணுபவர்கள் தானே; அதையெல்லாம் சகித்துக் கொள்கிறீர்கள்; ஆனால் இந்தப் போராட்டங்களால் மது விலக்கு வந்தால் நல்லது என்கிற காரணத்துக்காகவாவது இதை வரவேற்க மாட்டேன்கிறார்களே. இன்னும் மோசமாக நாடு நாறிப்போனால் தான் கவலைப்படுவார்களாமா?

    பெண்மணிகளும், தாய்க் குலங்களும் குடிப்பழக்கத்தில் மாட்டிக்கொண்டு விட்டிருப்பது எவ்வளவு ஒரு மோசமான நிலைமை. "இதுலயும் உங்களுக்கு chauvinism; ஆண்கள் குடிக்கலாம், பெண்களை குடிக்கக் கூடாதுன்னு சொல்றீங்களா?" என்று கேட்டுராதீங்க. இரு பாலரும் குடிக்கக் கூடாதுதான்.

    மது விலக்கு கொண்டுவந்துவிட்டால், அரசு பணத்துக்கு எங்கே போகும்? கள்ளச் சாராயம் எப்படியும் புழங்கப்போகிறது, அது எப்படியும் கேடுதான். இது மாதிரியான வாதங்களை "அர்த்தமற்றவை; தொலை நோக்குப் பார்வை அற்றவை; ஆக்க சிந்தனையும், நன்னம்பிக்கையும் அற்றவை" என்று நான் அடியோடு தள்ளுபடி செய்கிறேன்.

    உலகத்தில் உயிர்கள் எல்லாம் உயிர் பெறுவதும், உயிர் பிழைத்து வாழ்வதும் தாய்மைக்குத் தரப்பட்டுள்ள அந்த அதீத பாசத்தின் விளைவான அர்ப்பணிப்பால் தான்; தியாகத்தால் தான். இப்படிப்பட்ட தாய்மை குடித்து விட்டு சாலையில் விழுந்து கிடக்கும்படி செய்துவிட்டோமே. பெண்ணினமும், சிறார்களும் மதுப் பழக்கத்தில் தொடர்ந்து ஈடுபடும் நிலை இனியும் தொடர்ந்தால் நம் சமூகம் என்னாகும்? செய்திகளைப் படிக்கும் போது பதறுகிறது மனசு. -மணி


    ReplyDelete