தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 12 December 2015

பாவம், உலகம் தெரியாத ஜெயலலிதா


குளித்தலையைச் சேர்ந்த நண்பர் மனோகரன் ஒரு நிகழ்ச்சியை வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். சில நாள்களுக்கு முன்பு, மழை பெய்து கொண்டிருந்தபோது,  சென்னையில் உள்ள தன் தம்பியைப் பார்க்கப் பயணப்பட்டுக் கொண்டிருந்த ஓர் அம்மையாருடன் நடந்த உரையாடல் அது. சென்னை,அய்யனாவரம், பால் பண்ணையில் பணியாற்றிய அவருடைய தம்பியை அப்போது ஆட்சியில் இருந்த 'அம்மா' வேலையை விட்டு நீக்கி விட்டதாகவும், பிறகு 'கருணாநிதி' ஆட்சி வந்த பிறகுதான் அவர் மீண்டும் வேலை போட்டுக் கொடுத்தார் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மனோகரன் மன வருத்தப்பட்டு, "ஏம்மா, வேலையை விட்டு நீக்குனவரை அம்மான்னு சொல்றீங்க. கருணையோட வேலை போட்டுக் கொடுத்தவரைக் கலைஞர் என்று சொல்ல மனமில்லாமல், கருணாநிதின்னு சொல்றீங்களே?" என்று கேட்டுள்ளார். அந்த அம்மாவுக்குத் தன் தவறு புரிந்திருக்கிறது. "பழகிப்போச்சு தம்பி" என்று மட்டும் விடை சொல்லியிருக்கிறார்.

நேற்றைக்கு ஒரு நிகழ்வு!  என் மனைவியும், நானும், சென்னை, சின்மயா நகரில் இரண்டு ஆட்டோ ஓட்டுனர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டோம். "பாருடா, 90 வயசுல இந்தக் கிழவன் ஊர் ஊராப் போயி மக்களைப் பாக்குறாரு....அந்த அம்மா வீட்டை விட்டு வெளியே வரமாட்டேங்குதே" என்று உரையாடிக் கொண்டிருந்தார்கள். இங்கும், மக்களைக் காண ஓடி வருகிறவர் 'கிழவன்' என்றும், மக்களை விட்டு விலகி நிற்கும் ஒருவரை  'அம்மா' என்றும் சொல்கிறார்கள்.

ஆனாலும் ஆறுதல் தரக்கூடிய செய்தி ஒன்றும் இதில் இருக்கவே செய்கிறது. சொற்களின் பயன்பாட்டில் மாற்றங்கள் தேவை என்றாலும், உண்மையை மக்கள் உணர்ந்துதான் இருக்கிறார்கள் என்பது புரிகிறது. சுற்றிச் சுழன்று, ஓய்வே இல்லாமல்  பணியாற்றும் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் குறித்தும் மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். 

ஊடகங்களிலும் உண்மைகள் பல இன்று வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, ஆனந்த விகடன் போன்ற ஏடுகள் தெள்ளத் தெளிவாக, வெள்ளம் ஏன் வந்தது என்பது பற்றிய உண்மைகளை எடுத்துக் காட்டியுள்ளன. தினமணி இப்போதும் உண்மைகளை மறைக்கவே முயற்சிசெய்கிறது. 'ரியல் எஸ்டேட் என்னும் பூதம்தான் மக்களை மதி மயங்கச் செய்துவிட்டது என்று கட்டுரை வெளியிடுகிறது. குமுதம் ரிப்போர்ட்டரோ, 'தவறு செய்த அதிகாரிகளை நோக்கி  ஜெயலலிதா சாட்டை எடுக்க வேண்டும்' என்று எழுதுகிறது. அதிகாரிகள் மீது பழி போட்டு ஜெயலலிதாவைக் காப்பாற்றிவிட அந்த ஏடு துடிக்கிறது, உண்மையில் ஜெயலலிதாவை நோக்கித்தான் சாட்டை எடுக்க வேண்டும். சாட்டையை எடுக்க வேண்டியவர்கள் மக்கள்!

வெள்ளப் பாதிப்பின்போது, அறிவாலயம்தான் தலைமைச் செயலகம் போல் பணியாற்றிக் கொண்டிருந்தது. தலைமைச் செயலகமோ, போயஸ் தோட்டம் போல் தூங்கிக் கொண்டிருந்தது.

ஒருவர், கட்செவி ஊடகத்தில் இப்படிப் பதிவு செய்திருந்தார்;
          "சின்னத்தம்பி படத்தின் கதாநாயகி குஷ்புவிற்குப் பிறகு, 
           பாவம், உலகமே தெரியாமல், போயஸ் தோட்டத்திலேயே 
           வாழ்ந்து கொண்டிருப்பவர் ஜெயலலிதாதான்."   


7 comments:

 1. அதிகாரிகள் அனுப்பிய கோப்புகளை உரிய நேரத்தில் பார்க்காமல் இவ்வளவு பெரிய பேரழிவுக்கு காரணமான ஜெயலலிதாவை நோக்கி தான் சாட்டையை எடுக்க வேண்டும்

  ReplyDelete
 2. உண்மைதானே அய்யா அவர் ஒன்றும் தெரியாத அப்புராணி குடந்தையில் மகாமக திருவிழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தது இவர் குற்றமன்று சட்டசபையில் கலவரத்தை ஏற்படுத்தி திமுக மீது வீண்பழி சுமத்தியதும் இவர் குற்றமில்லை இன்னும் நிறைய விடயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம் இப்போது கூட வானளாவிய அதிகாரத்தை கொண்டுள்ள மக்களின் முதல்வர் குடிநீர் பஞ்சம் வந்து லட்சக்கணக்கில் மக்கள் தாகத்தில் இறந்து விடுவார்கள் என்ற உயர்ந்த தொ(ல்)லை நோக்கில் ஏரியின் முழு கொள்ளளவுக்கு தண்ணீரை தேக்கி இப்போது வெள்ளம் வந்து ஏரி நிரம்பியவுடன் ஏரி உடைந்தால் லட்சக்கணக்கில் மக்கள் இறப்பார்கள் என்ற முன் யோசனையுடன் நூற்றுக்கணக்கில் மக்கள் இறந்தால பரவாயில்லை என்ற அறிவார்ந்த மனித நேயத்துடன் ஏரியை திறந்து சென்னையை வெள்ளக்காடாக்கினார் என்பதுதான் உண்மை.
  இதை விட வேடிக்கை என்னவெனில் இன்றைய நடுநிலைமை ஊடகங்கள் லட்சக்கணக்கில் மக்கள் இறக்காமல் இருக்க நூற்றுக்கணக்கான மக்களை கொன்றொழித்தது சரியா தவறா என்று பட்டி மன்றங்களை நடத்து தங்கள் டி ஆர் பி ரேட்டிங்கை உயர்த்தி அதன் வருமானத்தை பெருக்கி கொள்ளும் இதில் கலந்து கொள்கின்ற நடு நிலை நக்கிகள் இதற்கு காரணமே 50 வருட திராவிட இயக்கங்கள்தாம் என்றும் திமுக ஆட்சியில் நடந்த மிகச்சிறிய தவறுகளை இன்றைய ஆட்சியில் நடக்கின்ற இமாலயத்தவறுகளோடு ஒப்பிட்டு காட்டி தங்கள் நட்ட நடுவுநிலையையும் கலைஞர் மற்றும் திமுக மீதான தங்கள் அரிப்பையும் தீர்த்துக்கொள்வார்கள். இந்த ஊடகங்கள் இப்படி இருக்கிற வரை மக்கள் முதல்வருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு அளிக்க வேண்டும் என்று பாண்டே, தனியரசு, சரத்குமார் ,செ கு தமிழரசன் ,வேல்முருகன், மா பா பாண்டியராஜன் போன்றவர்கள் கோரிக்கை விடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

  ReplyDelete
 3. இரத்தினவேல்12 December 2015 at 19:34

  மக்கள் மனங்களில் மாற்றம் தெரிகிறது. இந்த மாற்றம் தேர்தல் முடிவுகளிலும் வெளிப்படும்.

  ReplyDelete
 4. இப்பொழுதும் இந்த அம்மையாரை நேரடியாக விமர்சிக்க வகையற்றவர்கள்... நாற்பதாண்டுகால திராவிட ஆட்சிதான் இந்த அழிவிற்கு காரணம்...தி மு க , அ தி மு க , இரண்டையும் தோற்கடிப்போம் ... நாங்கள் "நடுநிலையாளர்கள்" என்று பசப்புகிறார்கள்

  ReplyDelete
 5. ஜெயலலிதா வை நீங்கள் விமர்சிப்பதற்கும் கருணாநிதியை விமரசிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. கலைஞர் எது செய்தாலும் சரி என்பது போல விமர்சிக்கிறீர்கள். ஒரே ஆணையில் சென்னையை சுற்றி நூறு ஏரிகளை புறம்போக்கு நிலங்களில் கலைஞரால் உருவாகியிருக்க முடியும். ஆனால் கலைஞர் அதனை போன ஆட்சியில் செய்ய வில்லை. அந்த நிலங்கள் திமுகவினரால் விலை போனது. அதன் விளைவுதான் இது என்று கூட சொல்லலாம் அல்லவா.

  ReplyDelete
 6. ரவிகுமார்15 December 2015 at 01:01

  I.கடந்த 8.11.2015 முதல் தமிழகத்தில் தொடங்கிய கனமழை மூன்று கட்டங்களாக சென்னை, கடலூர் டெல்டா உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கொட்டித் தீர்த்ததன் விளைவாக,
  இன்று தமிழகமே, நிலைகுலைந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உயிர்கள் சிலவற்றையும், உடைமைகள் பலவற்றையும் இழந்து செய்வதறியாது நிர்கதியாகி நிற்கும், மக்களின் துயரத்தை துடைக்க இந்தியா மட்டுமல்லாது ஏனைய உலகநாடுகளும் கரம்கொடுத்து உதவுவதை நம்மால் காணமுடிகிறது.
  கொட்டித்தீர்த்த கனமழை வெள்ளத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் நீரில்மூழ்கி நிர்மூலமாகி போனாலும் எல்லோருடைய கவனமும் இப்போது தலைநகர் சென்னையை நோக்கியே இருக்கின்றது.
  அக்ரகாரத்து 'ஆ'சாமிகள் தொடங்கி, அனைத்து அரசியல் கட்சிகளும், அண்டைமாநில அரசுகளும், தொண்டு நிறுவனங்களும், தொழிலதிபர்களும், அறக்கட்டளைகளும், தனிநபர்களும், நடிகர்களும், மாணவ, மாணவியரும், தொலைக்காட்சி நிறுவனங்களும் போட்டிபோட்டு பாதிக்கப்பட்ட மக்களை காக்கவும், சென்னையை மீட்கவும் உறுதியேற்று.
  உணவு, உடை, பால் மருந்து, பாய், தலையணை போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்ய தங்களால் முடிந்த அளவுக்கு அள்ளிக்கொடுத்து, சேவைப்பணிகள் செய்து வருவதை தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் படம்பிடித்து காட்டுவதை நம்மால் காணமுடிகிறது.
  சாதிகளை கடந்து மதங்களை கடந்து இன,மொழி உணர்வுகளை கடந்து மனிதநேயத்தோடு மக்களுக்கு உதவும் இச்செயல் மிகவும் போற்றுதலுக்குறியது என புகழ்ந்து தள்ளும் சமூக வலைத்தள பதிவுகளையும் நம்மால் காணமுடிகிறது.
  இந்நிலையில் தற்போது கனமழை சற்று குறைந்து, தேங்கி நிற்கும் மழைநீர் கொஞ்சம் கொஞ்சமாக வடியத்தொடங்கி, மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றநிலையில்,
  சென்னை மாநகரமே! குப்பைமேடாகி சாக்கடைகள் பெருகி, கழிவடைப்புகள் ஏற்பட்டு விஷநோய் பரவும் அபாயத்தில் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பமுடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி கொண்டிருப்பதையும் நம்மால் காணமுடிகிறது.
  சென்னையை மீட்போம்! மக்களை காப்போம்!!
  என மார்தட்டி கொண்டு களத்தில் இறங்கி நிவாரண உதவிகளை செய்துவரும் இவர்கள்! சாக்கடை, கழிவடைப்புகளை அகற்றவும், குப்பைகளை கூட்டிப்பெருக்கவும், தூய்மை பணிகளை செய்யவும் முன்வராமல் ஒதுங்கி கொள்வது மட்டும் ஏன்?
  சென்னையை சேர்ந்த 20,000 தூய்மை தொழிலாளர்களையும், கோவை மற்றும் இன்னும் பல பகுதிகளில் இருந்து 4,000.க்கும் மேற்பட்ட தூய்மை தொழிலாளர்களையும் வரவழைத்து, சென்னையை தூய்மைப்படுத்தும் பணியில் இறங்கி இருக்கும் தமிழகஅரசின் செயல்பாட்டையும் நம்மால் காணமுடிகிறது.

  ReplyDelete
 7. ரவிகுமார்15 December 2015 at 01:15

  பெய்த மழையில்
  வந்த வெள்ளத்தில்
  உயிர் பிழைக்க போராடியதில்
  சாதியில்லை! ஆனால்
  சேற்றில்,கழிவில்,
  அவைகளை அகற்றுவதில்
  சாதி நாறுகிறது!!.

  ReplyDelete