தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 19 December 2015

தொடங்கட்டும் சமூகநீதிப் போர்


தீர்ப்பு வந்தால் தெளிவு வரும் என்பார்கள்.  ஆனால், தீர்ப்பு வந்தபின்தான் குழப்பம் கூடியுள்ள்ளது!  அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் ஆணையையும், சட்டத்தையும் எதிர்த்து, உச்ச நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், 16.12.2015 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பின்படி, இனிமேல் எல்லா சாதியினரும் அர்ச்சகர் ஆகும் வாய்ப்புள்ளதா என்று கேட்டால், தேர்ந்த வழக்கறிஞராலும் விடை சொல்ல முடியவில்லை.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது,அட்டவணைச் சாதியினரின் சமூக, கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்ட  இளையபெருமாள் ஆணையம், 1969 ஆம் ஆண்டு,  சமூகநீதி அடிப்படையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக்கப்பட வேண்டும் என்னும் பரிந்துரையை அளித்தது. 

சாதி  இழிவை ஒழித்திட, தாழ்த்தப்பட்ட மக்களோடு 26.01.1970இல் கோயில் நுழைவுப் போராட்டம் நடத்தப்போவதாகத் தந்தை பெரியார் அறிவித்திருந்தார். 

இச்சூழலில், அன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் சட்டத்தை 02.12.1970 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றினார். 1971 சனவரியில், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று அது சட்டமாகியது. எனினும், சேஷம்மாள், எத்திராஜ் ஜீயர் உள்ளிட்ட 12 பேர் அதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தொடுத்த வழக்கு காரணமாக, அது முடங்கிப் போயிற்று.எம்.ஜி.ஆர். தமிழக முதலமைச்சர் ஆன பிறகு, இது தொடர்பாக ஆராய்வதற்கு, 24.09.1979 அன்று, நீதிபதி மகாராசன் தலைமையிலான 12 பேர் குழுவை அமைத்தார். அக்குழு, 1982இல் தன் அறிக்கையை அரசுக்கு அளித்தது. சாதி அடிப்படையில் உச்சநீதி மன்றம் எத்தடையும் விதிக்கவில்லை என்றும், ஆகமப் பயிற்சி அர்ச்சகர்களுக்குக் கண்டிப்பான தேவை என்றும் அது பரிந்துரைத்தது. அதன்படியே ஆகமப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. இன்று அந்தப் பள்ளிகளில் பயின்று ஆகமத் தேர்ச்சி பெற்ற 206 பேர் அர்ச்சகர் ஆவதற்குக் காத்துள்ளனர்.

இதற்கிடையில், 2002 ஆம் ஆண்டு கேரளாவில் ஒரு வழக்கு நடைபெற்றது. ஆதித்யன் என்பவரை அர்ச்சகராக நியமித்ததை எதிர்த்து நடந்த வழக்கு அது. நம்பூதிரிப் பார்ப்பனர் அல்லாத ஒருவரை அக்கோயிலின்  அர்ச்சகராக நியமித்தது செல்லாது என்று தொடுக்கப்பட்ட அவ்வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சாதி அடிப்படையில் மட்டுமே ஒருவரை அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்பது இந்திய அராசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று நீதி மன்றம் கூறிவிட்டது.

கேரள நீதிமன்றத் தீர்ப்பு, மகராசன் குழு அறிக்கை அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் அரசு ஆனையை 23.05.2006 அன்று, கலைஞர் தலைமையிலான தமிழக அரசு வெளியிட்டது. பிறகு அதனையே 2006 ஜூலையில் சட்டமாகவும் ஆக்கியது.அதனை  எதிர்த்து,2006 ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட வழக்கில்தான், உச்சநீதி மன்றம் இப்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. 

உச்ச நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செஇதிருப்பதின் மூலம், அச்சட்டம் செல்லுபடியாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், ஆகமப் பயிற்சி பெற்றோர் மட்டுமே என்று கூறாமல், ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. இங்கேதான் குழப்பம் தொடங்குகிறது. ஆகமப்படி என்றால், ஒரு குறிப்ப்பிட்ட சாதியினர் மட்டும்தானே அர்ச்சகர் ஆகா முடியும், மீண்டும் 1971 ஆம் ஆண்டு திரும்பிவிட்டதே என்று பலரும் கவலை கொள்கின்றனர். இது சமூக நீதிக்கு எதிரான தீர்ப்பு என்று தலைவர்கள் சிலர் அறிக்கை விட்டுள்ளனர்.

இத்தீர்ப்புக்   கண்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை. ஆகமங்கள் சாதி அடிப்படையில்தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று எங்கும் சொல்லவில்லை. ஆகமங்களைப் பற்றிப் படித்துள்ள என் போன்றோர் மட்டுமின்றி, ஆகமங்களையே படித்துள்ள சத்தியவேல் முருகனார் போன்றோரும் இவ்வாறே கூறுகின்றனர். 

ஆகமங்கள் என்பவை, கோயில் நடைமுறைகளைப் பற்றிக் கூறும் விதிமுறைகளைக் கொண்ட நூல்களே அன்றி வேறில்லை. கோயில்கள் எப்படிக் கட்டப்பட வேண்டும், குடமுழுக்கு எப்படி நடைபெற வேண்டும், பூசைகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் போன்ற தகவல்கள் ஆகமங்களில் இடம்பெற்றுள்ளன. அதிலும், சிவன் கோயில்களுக்கான ஆகமங்கள் வேறு,  வைணவக் கோயில்களுக்கான ஆகமங்கள் வேறு.

சிவாகமங்கள் மொத்தம் 28, வைணவ ஆகமங்கள் (சம்ஹிதைகள்)இரண்டு, சாக்த தந்திரம் ஒன்று, கௌமாரத் தந்திரம் ஒன்று என 32 ஆகமங்கள் உள்ளன என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் சிவாகமங்கள் ஒன்பதும், வைணவ ஆகமங்கள் இரண்டும்தான் உள்ளன. அவற்றுள்ளும், காமிய ஆகமம்தான் 90 சதவீதக் கோயில்களில் பின்பற்றப்படுகின்றது. அடுத்துக் காரணாகமம் பயன்பாட்டில் உள்ளது. சிதம்பரம், தில்லைக் கோயிலில் மகுட ஆகமம் பின்பற்றப்படுகிறது. அவ்வளவுதான். வைணவக் கோயில்களில் (தென்கலை), பாஞ்சரத்னம், வைகானசம் ஆகிய இரு சம்ஹிதைகளும் வழக்கில் உள்ளன. 

இவற்றில் எந்த ஒன்றும், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதைத்  தடுக்கவில்லை.

தடுத்தாலும், ஆகமங்கள் அப்படி ஒன்றும் மீறப்படாதவை அல்ல. தமிழ்நாட்டில் உள்ள 36000 கோயில்களில், 2000க்கும் குறைவான கோயில்களில் மட்டுமே, ஆகம விதிகள் பின்பற்றப்படுகின்றன என்று, தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் நாராயணனும், வழக்கரிஞார் ராமமூர்த்தியும், தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாகவே ஏற்றுக் கொண்டனர். 

டிசம்பர் 31 ஆம் தேதி இரவு எல்லா இந்துக் கோயில்களும் திறந்து வைக்கப்படுகின்றனவே, அதே எந்த ஆகமத்தின் கீழ் என்பதற்கு யாரேனும் விடை சொல்வார்களா? ஜனவரி ஒன்றாம் தேதிக்கும், இந்து மதத்திற்கும் என்ன தொடர்பு?

உருவ வழிபாட்டை ஏற்காத, நெருப்பை வணங்குகிற ஸ்மார்த்தப் பார்ப்பனர்கள் (சங்கராச்சாரி போன்றவர்கள்), கோயில் கொடிக்கம்பம் தாண்டி வரக்கூடாது என்று காரண ஆகமம் கூறுகிறதே, அது நடைமுறையில் உள்ளதா?

எனவே, இந்த நீதிமன்ற ஆணையைப் பயன்படுத்தி, அனைத்துச் சாதியினரையும் அரசு உடனடியாக அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும். அதுவே சமூக நீதி. அய்யா பெரியார் அவர்களின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றுவதற்கான  நேரம் இதுவே !.


அரசு நீதியை நிலைநாட்டத் தவறுமேயானால், சமூகநீதி கோரி ஒரு சமூகப் போரை அறவழியில் நாம் அனைவரும் தொடங்க வேண்டும். சட்ட வழியிலான போர் முடிந்துவிட்டது. சமூகப் போராட்டத்திற்கான நேரம் வந்துவிட்டது! 

17 comments:

 1. மிக அருமையான மற்றும் எளிமையான விளக்கமய்யா. மிக்க நன்றி. இதன் சாரத்தை மட்டுமே நான் அந்தக் குழப்பமான தீர்ப்பு வந்த அன்று எனது பதிவில் இட்டிருந்தேன். தங்களின் இந்த அரிய விளக்கத்தை மீண்டும் எனதந்தப் பதிவில் இணைக்கிறேன் - இணைப்பும் நன்றியும் தந்து. நன்றி

  ReplyDelete
 2. உண்மைதான் ஐயா
  சமூகப் போராட்டத்திற்காக நேரம் வந்துவிட்டது

  ReplyDelete
 3. தற்கால பெரியாராகவே தங்களைப் பார்க்கிறேன்

  ReplyDelete
 4. இரண்டு வருடங்களுக்கு முன், அமெரிக்கர் ஒருவர் இந்தியாவைப் பார்த்து விட்டு திரும்பிய பிறகு, எனக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி:
  Quote :
  Not allowing the people to enter into the temple and hold priest jobs who built the same temple is not at all acceptable. Foolishly the fellow Indians allowing this atrocity to continue for the past 2000 years. In the name of Hinduism, by simply brain washing the innocent people by a cunning 3% Indian High caste aggressors and dominating the 97% Indians is never heard of anywhere in the world. The Great Edmund Bureke said : “Silent spectators are dangerous”. Most of the Indians are Cowards, Naïve and Stupid. Sorry to use these strong terms, but they deserve. Let India wake up and start wars against these atrocities.
  Unquote :

  ReplyDelete
  Replies
  1. கணேஷ்வேல்21 December 2015 at 15:59

   அந்த அமெரிக்கரின் கூற்று இந்தியாவுக்குப் பொருந்தலாம் ஆனால் தமிழகத்திற்கு கண்டிப்பாகப் பொருந்தாது.

   Delete
  2. Not as stupid as the Europeans who believed they will fall off the earth if they venture out too far into the sea. Or the Germans who once believed in Hitler's words advocating Aryan supremacy. Or the caucasian Americans who still have not the sense to see african-americans as their own brothers! Atrocities happen everywhere, not just in India. Every country has its own dark periods! They who call others stupid, naive and cowards are themselves automatically qualified for the same adjectives in the superlative degree! And for your kind information, dear American, India has already woken up under the guidance of Periyar and Ambedkar. We know how to look after our own problems! You go and mind your own business!

   Delete
 5. கடவுள் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை வைத்து கொண்டு, அர்ச்சகர் என்ற இடைத்தரகர் முறை எதற்காக உள்ளது என்று புரியவில்லை.

  அர்ச்சகர்கள் அனைவரும் அப்படி என்னதான் முழு மனித நேயத்தோடு, பக்தர்களுக்காக, கடவுளிடம் மந்திரங்கள் மூலம் சிபாரிசு செய்கிறார்கள் என்றும் தெரியவில்லை.

  எல்லாம் ஏமாற்று வேலையே. பணத்தைப் (அல்லது கடின உழைப்பின் மதிப்பைப் ) பிடுங்க இது ஒரு எளிய நாகரீக வழி. அவ்வளவுதான்.

  ReplyDelete
 6. கணேஷ்வேல்21 December 2015 at 15:46

  நன்றி அய்யா !!!

  தீர்ப்பினால் குழம்பியிருந்த அனைவரையும் தெளிவாக்கியது தங்களின் கட்டுரை.

  ReplyDelete
 7. மிக்க நன்று அய்யா. தெளிவான புரிதல் கிடைத்துள்ளது.

  ReplyDelete
 8. அர்ச்சகர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் ஒரு பக்கம் இருக்கும் பொழுது ஊடகங்கள் பெரிதாக குரல் கொடுக்க வில்லை. ஆனால் டெல்லிபாலியல் வழக்கில் விடுதலை பெற்ற சிறுவனுக்கு எதிராக டெல்லியே குரல் கொடுத்து வருகிறது. சிறியவனா இல்லை பெரியவனா என்று பார்க்காமல் அனைவரையும் எப்பொழுதே தூக்கில் ஏற்றி இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். இது சவூதி அரேபியாவில் நடந்து இருந்தால் இவர்களை புதைத்த இடங்களில் இப்பொழுது புல் முளைத்து இருக்கும். நமது டெல்லியில் ஒவ்வொரு 2 மணிக்கும்ம் ஒரு பாலியல் வன்முறை நடக்கிறது. ஆனால் சவூதியில் கடந்த இரண்டு வருடங்களில் ஒரே ஒரு பாலியல் வன்முறை நடந்து உள்ளது.
  டெல்லிபாலியல் வழக்கில் “தீப்பந்தங்களை ஏந்த வேண்டும்” என்று குரல் கொடுக்கிறார்கள். அதே நேரத்தில் அர்ச்சகர் நியமனத்தில் தாழ்த்தப் பட்டவர்களுக்காக எந்தப் பெரிய போராட்டமும் நடந்ததாக தெரியவில்லை. மேலும் நாம் அதை மறந்து விட்டது போல் தோன்றுகிறது. இதைதான் ஒரு கண்ணில் சுண்ணம்ம்பும் மறு கண்ணில் வெண்ணையும் என்பார்களோ!

  ReplyDelete
 9. அர்ச்சகர் நியமனம் போல, “சாக்கடையில் இறக்கப்படும் பட்டதாரிகள்” - சாதி சகதியில் மாநகராட்சி என்னும் கட்டுரையில் – (நக்கீரன் டிசம்பர் 23-25) - குலக் கல்வி திட்டம் எவ்வாறு இன்றும் நடை முறையில் உள்ளது என்பதை ஆதாரங்களுடன் விவரித்துள்ளது. படித்த பட்டதாரிகளுக்கே இந்நிலை என்றால், படிக்காத ஏழை தலித்துக்களின் நிலை என்னவாகும்? வெறும் பத்தாவது, பிளஸ்டூ படித்த வேறு சதிக்கரர்களுக்கு இவர்களை மேற்பார்வை செய்யும் வேலைகள் கொடுக்கப் பட்டிருக்கும் கொடுமையை எங்கே போய் சொல்வது? ஒரு சமுதாய மக்களை "உன் குலத்தொழிலை செய்" எனச் சொல்லும் மாநகராட்சியை எப்படி நம்மால் பார்த்துக் கொண்டு இருப்பது!
  எது எப்படியோ, “குலக் கல்வி கொண்டு வந்த மகானை” நாம் வாழ்த்தியே தீர வேண்டும். வாழ்க அவர் புகழ்!

  ReplyDelete
 10. பிராமணர் அல்லாத இந்துக்களுக்கு எதிராக, கடந்த 2000 ஆண்டுகளாக மனு நீதி செயல் பட்டு வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகும், 67 ஆண்டுகளாக அதே கதைதான். பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள். (கீதை அத்தியாயம் 9 சுலோகம் 32) என்று கூறி மனு தர்மத்தை நியாயப் படுத்துகிறது. இந்தியாவில் பிராமணனாக பிறந்தாலே போதும். “ஜாக்பாட்” அடித்த மாதிரிதான். ஆனால் மற்ற இந்துக்களுக்கு “நாமம்” தான். சவுத் ஆப்ரிக்காவில் கூட உண்மையான சுதந்திரம் கிடைத்து விட்டது. இன்று இந்தியா மாதிரி ஜாதி வெறி பிடித்த நாடு உலகிலேயே வேறு எங்கும் கிடையாது. இன்னும் 1000 ஆண்டுகளானாலும் இதே கதிதான் மற்ற இந்துக்களுக்கு! தாழ்ந்த பாவ யோனியில் பிறந்த இந்துக்களாகிய நாங்கள் அர்ச்சகராகவும் முடியாது! ஐ.ஐ.டி. யிலும் சேர முடியாது!! இதற்க்கு மேலும் நான் என் எதற்காக இந்துவாக இருக்க வேண்டும்? ஒரு வேலை அர்ச்சகர் பட்டம் பெற்ற 206 பேரில் நானும் ஒருவனாக இருந்திருந்தால், இந்தப் பாழாய்ப்போன இந்து மதத்தை விட்டு என்றோ மதம் மாறி, மனிதனாகப் மதிக்கபட்டு, தன மானத்தை இழக்காமல் மானத்தோடு வாழ்ந்து இருப்பேன். மதம் மாறிய மறு நிமிடமே, இந்த சாபக்கேடு ஒழிந்ததை நான் பார்த்து வருகிறேன். பாவயோனியில் பிறந்தவர்கள் இதைப் புரிந்து கொண்டால் சரி.

  ReplyDelete
  Replies
  1. ஆம் உண்மைதான் இந்தியாவில் பிராமணனாக பிறந்தாலே ஜாக்பார்ட் அடித்த மாதிரிதான். மனுநீதிதுறையின் அடிமைத்தனத்தில் இருந்து விடுபடலாம் இதனால் பலரும் இலகுவாக மதம் மாறுகிறார்கள். ஒரு குப்பையில் இருந்து மறு குப்பைக்குள் வீழ்வதை விட சுதந்திர மனிதனாக வாழ்வது எவ்வளவு நல்லது. மதம் ஒருபோதும் மனிதனை சிந்திக்க விடாது.

   Delete
 11. வெற்றி என்று பொருள்படும் தமிழ் பெயர் (ஆண்) வேண்டும், உதவ வேண்டும்

  ReplyDelete
 12. தொடங்கட்டும் சமூகநீதிப் போர் - ஆகா சரியான போட்டி! - சகுனம், ஜாதகம், தோஷம், தாயத்து, தகடு, பில்லி சூனியம், பேய், பிசாசு, ஜோதிடம் இவைகளை ஒழிக்கவே, எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சமூகநீதிப் போரை, தந்தை பெரியார் தனி மனிதனாகத் தொடங்கினார். பொத்தாம் பொதுவாக, ஒரு குப்பையிலிருந்து மறு குப்பை என்று சொல்வது பொருத்தமாகத் தோன்றவில்லை. அது சரியான புரிதலாகப் படவில்லை. ஒரு வேலை பார்வைக் குறைவாகக் கூட இருக்கலாம். எப்படி நாம் “சாக்கடை”யுடன் “குப்பை”யை ஒப்பிடலாம்? அப்படியானால் தந்தை பெரியார் குப்பைகளையா கூட்டினார்? அப்படி இல்லேவே இல்லை. அவர் ஜாதி அக்கிரமங்களை அடித்து ஒழிக்கவே அவர் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வெற்றியும் பெற்றார் என்பதே உண்மை.

  ReplyDelete
 13. நாகராஜ்27 December 2015 at 00:14

  சாதி ஒழிப்பை முதன்மை பணியாக கருதும் உங்களைப் போன்றரோரிடம் கேட்பது என்னவென்றால்"ஆகம விதிகளுக்கு உட்பட்டு ‪அர்ச்சகர்கள்‬ தேர்வு இருக்க வேண்டும்"என்று ‪‎நீதிமன்றம்‬ தீர்ப்பளித்தால் ‪‎பெரியார் தொண்டர்கள், நீங்கள்‬ சமூகநீதிக்காக பெரும் கோபம் கொள்கிறிர்கள்,கூப்பாடு போடுகிறிர்கள், போராடுகிறிர்கள்.ஆனால்,"துப்புரவு தொழிலாளர்களை மற்ற மாவட்டங்களில் இருந்து வரவழித்து துப்புரவு தொழிலில் ஈடுபடுத்த வேண்டும்"என்று ‪தலித்‬ தலைவர் '‪‎திருமா‬'கூறினால்,ஏன் சமூகநீதிக்கான கோபத்தை திருமாவிடம் உங்களால்,பெரியார் தொண்டர்களால் வெளிப்படுத்த முடிவதில்லை?.‎ஆகமவிதிகள்‬ பேசும் நீதிபதிகளிடம் இருப்பது 'பார்ப்பன' குணமென்றால், திருமாவிடம் இருப்பது என்ன குணம்?,அதைப்பற்றி மூச்சு கூட விடாத உங்களின்,பெரியார் தொண்டர்களிடமிருப்பத்து என்ன குணம்?,என்ன கொள்கை?.ஒரு சிலமுறை களப்பணியில் தலித்களோடு நீங்கள்,பெரியார் தொண்டர்கள் ஈடுபட்டிருக்கலாம்.ஆனால் மிகவும் அத்தியாவசியமான நேரத்தில்,அதுவும் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பேரிடரில் குவிந்த பல டன் குப்பை கழிவுகளை அகற்றுவதற்கு அழைத்து வரப்பட்ட துப்புரவு தொழிலாளர்களை திருப்பி அனுப்புங்கள் என்று தமிழ்நாடு முழுவதும் ஆதித்தமிழர் பேரவை போராடிய போது ஏன் நீங்களும்,பெரியார் தொண்டர்களும் அவர்களோடு போராட்டத்தில் இணையவில்லை?.பொதுபுத்தியில் ‪‎துப்புரவு தொழிலாளர்கள்‬ என்பதை பொத்தாம் பொதுவாக முன்நிறுத்தப்படலாம்.ஆனால் ‪பஞ்சமர்கள்‬ [‪சக்கிலியர்கள்]தான் இந்தியா முழுவதும் இத்தொழில் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் என்பது நீங்களும்,பெரியார் தொண்டர்களும் அறியாததா?.‎ தமிழ் தேசியவாதிகள்‬ நடத்தும் போராட்டங்களில் காலத்தேவை பொருட்டு அல்லது வலிமை சேர்க்கும் பொருட்டு ‪பெரியாரிய இயக்கங்கள்‬/‎பெரியாரிய தொண்டர்கள்‬ போராட்டங்களில் கலந்து கொள்வதைப் போல் ஏன் ‪சக்கிலி‬ சாதியினருக்கு ஆதரவாக இச்சூழலில் நடைப்பெற்ற போராட்டத்தில் கலந்து கொள்ள முன்வரவில்லை?.மேலும் வைகோ,ஜி.ரா,முத்தரசன் போன்றோர் துப்புரவு பணிகளில் நேரடியாக ஈடுபடுவதைப் பார்க்க முடிந்தது,ஆனால் நீங்களோ,வீரமணியோ, ஸ்டாலினோ,கனிமொழியோ துப்புரவு பணிகளில் நேரடியாக ஈடுபடுவதைப் பார்க்க முடியவில்லையே,ஏன்?.அதை ‪பஞ்சமர்கள்‬ மட்டும் செய்ய வேண்டும் என்பதாலா?.

  ReplyDelete
 14. ரவிகுமார்27 December 2015 at 23:50

  22 டிசம்பர் 2015ல் இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக பிழற்சாட்சியங்களை முன்வைத்து 27 தலித்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ‪திருவள்ளூர் நீதிமன்றம்‬ தீர்ப்பு அளித்திருக்கிறது.இச்செய்தியை பத்திரிகைகளின் தலைப்புகள் "‪‎அம்பேத்கர்‬ சிலையை அவமதித்ததால் ஏற்பட்ட மோதலில் 2 பேர் கொலை,27 பேருக்கு ‪‎இரட்டை ஆயுள் தண்டனை‬" என்கிறது.2003-ஆம் ஆண்டுகளில் ‪தமிழகம் முழுவதிலும் அரசியல் காரணங்களுக்காக ஆதிக்க சாதிவெறியர்களால் அம்பேத்கர் சிலையை உடைப்பது,செருப்பு மாலைகள் அணிவித்து ‪அவமதிப்பு‬ செய்வது என்பது நடைப்பெற்றுக் கொண்டிருந்த சூழலில்.... தமிழ்நாட்டில் பிப்ரவரி 2003-இல் திருவள்ளூர் மாவட்டம்,அரண்வாயல்குப்பத்தில் இருந்த அம்பேத்கர் சிலைக்கு அப்பகுதியில் இருந்த ‪வன்னியர்கள்‬ செருப்பு மாலை போட்டு,அங்கிருந்த தலித் குடிசைகளுக்கு தீவைத்து,‎தாக்குதல்‬ முயற்சியில் ஈடுபட்ட போது அங்கிருந்த தலித்துக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் பொருட்டு எதிர்தாக்குதலை நடத்தினர்.இதில் இருவர் கொல்லப்பட்டனர்.இச்சம்பவம் வழக்கம் போல் பத்திரிகைகள் இருதரப்பு மோதல் என்பதோடு நிறுத்திக் கொண்டன.சேரிக்குள் நுழைந்து அம்பேத்கர் சிலையை அவமதிப்பது தலித்துக்களை தாக்குவது/ உடைமைகளை சூறையாடுவது என்பது அரண்வாயல்குப்பத்தில் மட்டும் வன்னியர்கள் நடத்தவில்லை.2003ல் தமிழ்நாட்டில் பல அம்பேத்கர் சிலைகளையும் வன்னியர்கள் தாக்கி சேதப்படுத்துவது,அவமதிப்பது என்பது நடந்து கொண்டிருந்தது.அதன் தொடர்ச்சியே அரண்வாயல்குப்பத்தில் நடைப்பெற்ற சம்பவமும். இவ்வழக்கு விசாரணையில் 5சாட்சியங்கள் அரசு தரப்பில் நிறுத்தப்பட்டனர்.முன்னுக்குபின் முரணாக சாட்சியின் வாதங்கள் இருப்பதாக கூறி மீண்டும் இரண்டாம் முறையும் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது."போலீசின் கட்டாயத்தின் பேரிலேயே நாங்கள் சாட்சி கூறினோம்" என்று தெரிவித்ததால் பிறழ்சாட்சிகளாக அறிவிக்கப்பட்டனர்.இவ்வழக்கு விசாரணை இப்படித்தான் 12ஆண்டுகளாக இழுபறி நிலையில் இருந்தது.தற்காப்பு பாதுகாப்புக்காக எதிர்தாக்குதல் நடத்திய 27 தலித்துக்குகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை,அதுவும் பிழற்சாட்சியின் அடிப்படையில் என்றால் நீதித்துறையின் யோக்கியதை குறித்து பேசும்முன் விசாரணை நடத்திய நீதிபதியின் யோக்கியதையை அல்லவா பேச வேண்டும்?
  வன்னியர் சாதி‬ தகுதி கொண்டவர் அந்த பெண் நீதிபதி.அவரது கணவர் வன்னிய முத்தழகன் வன்னியர் சங்கத்தில் உறுப்பினர்.ஏற்கனவே பெண் நீதிபதி மீது பல புகார்கள் நிலுவையில் உள்ளன.இந்நிலையிலேயே 27தலித்துக்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை பிழற்சாட்சியின் அடிப்படையில் தீர்ப்பளித்து சாதனை இந்திய நீதித்துறையில் சாதனை படைத்திருக்கிறார் என்றால் இதன் பின்னணி என்ன?தீர்ப்பளித்தவரின் உள்நோக்கம் என்ன? என்ற பல கேள்விகள் சமூகப் பொறுப்புள்ளவர்களுக்கு வருகிறது...ஆனால்,‎ ஆகமவிதி‬ தீர்ப்புக்கு எதிராக முன்வைத்த விமர்சனங்களை எதிர்ப்பகளைக்க்கூட,"பீப்" பாடலுக்கு வைத்த விமர்சனங்களைக்கூட இந்த அநியாய தீர்ப்புக்கு எதிராக கலைஞர்,வீரமணி,சுபவீ மற்றும் பெரியாரிஸ்ட்கள் விமர்சிக்க தயங்குவதற்கு என்ன காரணங்கள் இருக்கக்கூடும்?.தலித்துக்கள் என்றால் திராவிடர்கள் இல்லையா? தமிழர்கள் இல்லையா?.ஏன் இந்த கள்ள மௌனம்?.

  ReplyDelete