தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday, 26 February 2016

அரசியல் மேடை -1

எங்கே போகும் இந்தப் பாதை?


                                   
சில நாள்களுக்கு முன், கடலூரில், வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நாம் தமிழர் கட்சி நடத்தியுள்ளது. அதில் பேசிய அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தொடக்கத்திலேயே தமிழர் - திராவிடர் குறித்துப்  பேசியுள்ளார். அந்தப் பேச்சின் சாரம், மொழிச் சிறுபான்மையினரை அந்நியப்படுத்தி, பார்ப்பனர்களைத் தமிழர்கள் என்னும் உள்வட்டத்திற்குள் கொண்டு வருவதே!


தன் பெயரைத் தமிழில் மாற்றிக் கொண்ட பரிதிமாற் கலைஞர், உ.வே.சா., பாரதியார் ஆகிய மூவரைக் காட்டிலும் சிறந்த தமிழர்கள் யாவர் என்று கேட்கிறார் சீமான். வீட்டிலும் தமிழ் பேசி, வெளியிலும் தமிழ் பேசிக் கொண்டிருக்கும் பார்ப்பனர்களைத் தமிழர் என்று கூறாமல், வீட்டிற்குள் வேறு மொழி பேசுகின்றவர்களை ஏன் தமிழர் என்று ஏற்க வேண்டும் என்பதும் அவர் கேள்வி. 

வீட்டிற்குள் தமிழ் பேசினாலும், அவர்களின் உள் மனத்தில், சமற்கிருதமே தெய்வ மொழி. தமிழ் நீச பாஷை!  இதனைப் பாரதியாரும் தன் உரைநடையில் ஓரிடத்தில் வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்த் தாத்தாவும், சூத்திரனைப் பார்த்து 'சோறு தின்றாயா?' என்றும், பார்ப்பனரைப் பார்த்தால் 'போஜனம் ஆயிற்றா? என்றும் கேட்க வேண்டும் என்கிறார். சூரிய நாராயண சாஸ்திரியாரும், தன் பெயரில் எழுத வேண்டாம் என்று கருதி, பரிதி மாற் கலைஞர் என்று ஒரு புனைபெயர் வைத்துக் கொண்டேன், அவ்வளவுதான் என்கிறார். எல்லாவற்றிற்கும் சான்றுகள் உள்ளன.

எவர் ஒருவரையும் குறைப்படுத்துவதற்காக இவற்றை இங்கு குறிப்பிடவில்லை. குறைகள் எல்லோரிடமும் உண்டு என்பதைச் சுட்டிக் காட்டுவதற்கே இந்த மேற்கோள்கள்.

வீட்டில் தெலுங்கு பேசும் (உண்மையில் அது தெலுங்கே இல்லை என்பது வேறு) மக்களில் திறந்தவெளிப் போட்டியில் (ஓ.சி) உள்ளோர், பிற்படுத்தப்பட்டோர் (பி.சி), தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி), எனப் பல்வகையினரும் உண்டு. ஆனால் பார்ப்பனர்களில் ஒரு பிற்படுத்தப் பட்டவரையோ, தாழ்த்தப்பட்டவரையோ காட்ட முடியுமா? பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும், சமூக மதிப்பில் அவர்கள் அனைவரும் ஒரே நிலையில்தான் உள்ளனர். சமூக ஆதிக்கத்தை எதிர்க்கும் நோக்கம் திராவிட இயக்கத்திற்கு அன்றும் இருந்தது, இன்றும் இருக்கிறது. எனவேதான், பார்ப்பன எதிர்ப்பை நாம் என்றும் மேற்கொள்கிறோம்.

ஆனால் தமிழ்த் தேசியம் பேசும் பலர், சுற்றி வளைத்து, ஆதிக்க உணர்வு கொண்ட பார்ப்பனர்களைக் காப்பாற்றுவதில்தான்  முனைப்பாக உள்ளனர். திராவிடத்தை எதிர்க்கும் இவர்கள் பாதை எங்கே செல்லும் என்பதை ஒவ்வொரு முறையும் இவர்கள் மெய்ப்பிக்கின்றனர்.


தன் கருத்தை வலியுறுத்தி இமயம் தொலைக்காட்சி நேர்காணலிலும் (நேர் முகம்) சீமான் சில செய்திகளைக் கூறியுள்ளார். திருச்சியில் உள்ள சங்கர் என்னும் தமிழ்ப் பார்ப்பனர் ஒருவர் தனக்குப் பல கையேடுகளை அவ்வப்போது அனுப்புவதாகவும், அவற்றைக் கண்டு தான் வியந்து போவதாகவும்  கூறியுள்ளார். ஆக, சீமானின் 'குருநாதர்' எங்கே இருக்கிறார் என்பது தெளிவாகிறது. நாம் தமிழர் கட்சியை, நாம் பார்ப்பனர் கட்சியாக மாற்றுவதில் அவர்கள் தயக்கம் ஏதும் காட்டவில்லை என்பதும் புரிகிறது!

அடுத்து: மக்கள் நலக் கூட்டணி உடையுமா?

5 comments:

 1. சீமான்தான் பார்ப்பனர்களைத் தலைவர்களாக ஏற்கிறார் கேவலம்.சமூக ஆதிக்கத்தை எதிர்க்கும் உயர்ந்த நோக்கம் கொண்ட நீங்களும் நீங்கள் ஆதரிக்கும் 70ஆண்டுகள் பழமையான திராவிட இயக்கமாகிய திமுகவில் தலைமைப் பதவிகளில்,முதலமைச்சர் பொறுப்பில் தாழ்த்தப்பட்டவரைகளை நியமிக்கவேண்டுமென்று போராட வேண்டாம் குறைந்தபட்சம் வெளிப்படையாக கருத்து கூறலாமே!.அந்த எண்ணம் உங்களுக்கும், திமுகவிற்கும் அன்றும் இல்லை,இன்றும் இல்லை,என்றும் இருக்காதோ என்பதுதானே ஐயமாக உள்ளது!.பார்ப்பனர் எதிர்ப்பு,ஆரியர் எதிர்ப்பு, ஆதிதிராவிடரை அர்ச்சகராக ஆக்க வேண்டுமென்று சொல்லி குரல் கொடுக்கச் சொன்னால் உரக்க குரல் கொடுப்பார் சுபவீ அவர்கள்,ஆனால் 70ஆண்டுகளாகியும் கட்சியின் தலைமைப் பதவிகளில், 50ஆண்டுகளாகியும் ஆட்சியின் தலைமைப் பதவிப்பொறுப்பில் ஆதிதிராவிடர் வர முடியாத உண்மையான திராவிட இயக்கமாகிய திமுகவின் தலைமைப் பதவிகளில்,ஆட்சியின் தலைமைப் பதவிப்பொறுப்பில் ஆதிதிராவிடரை நியமிக்க வேண்டும் என்று சொல்லி குரல் கொடுக்கச் சொன்னால் 'If&But'வைத்து திசை திருப்பி பேசுவார் அல்லது சவுண்டே இல்லாமல் இருக்கும் ஓட்டைகள் அனைத்தையும் அடைத்து கொண்டு ஓடிவிடுவார்!.இது தான் அய்யா சுபவீ அவர்களின் சமூகநீதி கோட்பாடு, பண்பு&மாண்பு!.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் இந்த விமர்சனம், ஐயாவை பார்த்து வைப்பதுக்கு முன்னால், இந்த கேள்வி ஏன்? அதிமுகவை பார்த்து கேக்க மறந்துவிடுறிங்க? இல்ல கேக்க கூடாது என்ற என்னமா? திமுக ஆதிதிராவிடர் முன்னிலை படுத்துவது இல்லை என்றஉங்களின் வாதம் வேறுமே, கருனாநிதி எதிர்ப்பு என்ற அடிப்படையில் இருந்து தோன்றுவதாகவே நான் பார்க்கிறேன்!

   Delete
 2. சிங்காரம் சார், யாரும் எந்த சாதியாகவும் மாறி கொள்ளலாம் என்று ஒரு சட்டம் கொண்டு வர ஆலோசனை கூறுங்களேன்

  ReplyDelete
 3. திரு. சீமான் அவர்கள், தாய்மொழி தமிழாகக் கொண்ட பிராமணர்கள், மற்ற மொழியைத் தாய்மொழியாக கொண்டு,தமிழ் நாட்டில் தமிழ் பேசிக்கொண்டிருப்பவர்களை விட தேவலை என்று நினைக்கிறார் போலும். அவருக்கு கோபம் மனிதர்கள் மேலில்லை; இதர மொழிகளின் மீதுதான்.

  இருப்பினும், தமிழை தாய்மொழியாக கொண்ட பிராமணர்கள், தத்தம் வீடுகளில் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது வித்தியாச பாணியில், தங்களுக்கே உரிய வார்த்தைகளைப் போட்டு, ஒரு வித ராகத்தில் தமிழை பேசுவது வழக்கம். அந்த தமிழை திரு. சீமான் அவர்கள் ஏற்கிறாரா என்று தெரியவில்லை.

  ReplyDelete
 4. திராவிடத்தை எதிர்த்து தமிழ் தேசியத்தை கட்டமைக்க முடியாது மாறாக ஆரியத்தின் அடி தான் படியும் அதை தான் மெய்பிக்கிறது அவரின் கூற்று

  ReplyDelete