தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday 28 February 2016

அரசியல் மேடை -2

மக்கள் நலக் கூட்டணி உடையுமா?



 மக்கள் நலக் கூட்டணி தோன்றிய நாளிலிருந்தே அது உடைந்துவிடும் என்றும், நான்கு கட்சிகளில் ஒன்று இங்கே வந்துவிடும், இன்னொன்று அங்கே சென்றுவிடும் என்றும் பேசப்படுகிறது.

இது போன்ற ஊகங்களில் எனக்கு உடன்பாடில்லை. உடைவதும், உடையாமல் இருப்பதும் அவர்கள் பிரச்சினை. அது குறித்து அந்தகக் கூட்டணிக்கு வெளியே உள்ளவர்கள் கருத்துச் சொல்வதைத் தவிர்ப்பதே நல்லது.


உண்மையில் அந்தக் கூட்டணி தன் பயணத்தைத் தொடங்கி நடத்திக் கொண்டுள்ளது. அது தொடர்ந்து செல்வதற்கான வாய்ப்புகளே தென்படுகின்றன. ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்பதே ஜனநாயகம். நாம் அவர்களின் அரசியல் நிலைப்பாடுகளை  மட்டுமே விமர்சனம் செய்வது முறையானதாக இருக்கும்.

தி.முக.வையும். அ.தி.மு.க.வையும் சமப்படுத்தி அக்கூட்டணியினர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த நிலைப்பாடே நம்மால் எதிர்க்கப்பட வேண்டியதாக உள்ளது. அதில் ஓர் அரசியல் உள்நோக்கம் உள்ளது.

அணு உலை, ஈழச் சிக்கல், இந்திய ஒருமைப்பாடு போன்றனவற்றில், காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்ட்கள் அனைவருக்கும் ஏறத்தாழ ஒரே கொள்கைதான்.அதற்காக அவை மூன்றும் ஒன்றுதான் என்று நாம் திறனாய்வு செய்யலாமா? அது நியாயமாக இருக்குமா?

அதே போல, தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஒன்றல்ல என்பது அவர்களுக்கே மிக நன்றாகத் தெரியும். பிறகு ஏன் அப்படிச் செய்கின்றனர்? அங்கேதான் அவர்கள் மறைமுகமாக அ.தி.மு.க.விற்குத் துணை போகின்றனர். அதனைத்தான் நாம் அம்பலப்படுத்த வேண்டும். மற்றபடி, அவர்கள் ஒரு கூட்டணியாக நின்று மக்களைச் சந்திப்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.


இன்னொரு பார்வையில், மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க., நாம் தமிழர் கட்சி, இன்னொரு 'பேரியக்கமான' காந்திய மக்கள் இயக்கம் ஆகியன தனித்துப் போட்டியிடுவதில் என் போன்றவர்களுக்கு மகிழ்ச்சியே! அவர்களின் வலிமையை நாடும், நாமும் அறிந்து கொள்ள அது உதவும். அவர்கள் தங்களை மிகையாக மதிப்பிட்டுள்ளனரா, அல்லது நாம் குறைவாக மதிப்பிட்டுள்ளோமா  என்பதும் புரியும்.

அடுத்து: பிரேமலதாவின் ஆவேசம்!

3 comments:

  1. உங்கள் பேச்சாலோ அல்லது திமுக அதிமுகவை விமர்சனம் செய்து தயாரித்த விளம்பரத்தை நாளிதழ்,டிவி,பண்பலை ஆகியவற்றில் விளம்பரம் செய்துள்ளது.இந்த விளம்பரதிற்கான மொத்த செலவு தொகை இதுவரை 60 கோடியை தாண்டி உள்ளது! அதனாலோ குவாட்டரும் கோழிப்பிரியாணியும் சாப்பிடும் தொண்டர்களை மட்டுமே இந்த யுக்திகள் குஷிப் படுத்தும்.மக்களையோ,இளைஞர்களையோ இந்த விளம்பரங்கள் கவராது என்பதே நிதர்சனமான உண்மை.2016 என்பது 1967 அல்ல வாய்ப்பந்தல் போட்டு மக்களை இளைஞர்களை ஏமாற்றி ஆட்சியை பிடிக்க!.இப்படி விளம்பரம் செய்து திமுக பதவிக்கு வரப்போவது எதற்காக? 7கோடி மக்கள் தொகை உள்ள தமிழ் நாட்டில் 60கோடியை அசால்டாக செலவு செய்துள்ளது திமுக.தமிழக தேர்தல் என்பது வர்த்தகமா? முதலீடு செய்து லாபத்தை அறுவடை செய்வதற்கு?.ஒருமுறை ருசிகண்ட பூனை,மறுபடியும் மறுபடியும் பாலை நக்குவதற்கு அதே இடத்திற்கு வருவதைபோல் தான் உள்ளது அதிமுகவும் திமுகவும் தமிழகத்தில் அரங்கேற்றிவரும் அலப்பறைகள்.
    ஆனால் திமுக நினைத்தது ஒன்று,நடந்தது வேறொன்று.இன்றைய இளைஞர்கள் மத்தியில் என்னதான் வேஷம் போட்டாலும்,ஆசையை தூண்டினாலும் எடுபடாது என்பதை இந்த விளம்பரம் நிருபித்து விட்டது.திமுக,அதிமுகவை விமர்சனம் செய்ததைவிட திமுகவின் விளம்பரத்தை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யப்பட்டதே அதிகம்.மக்கள் நலக் கூட்டணி இன்றோ இன்றில்லாவிட்டாலும் என்றாவதொரு நாள் திமுக அதிமுகவின் ஆணவ அதிகார பகட்டு அரசியலை அழித்தொழிக்கும்!

    ReplyDelete
  2. மக்கள் நல கூட்டணி திமுகவையும் அதிமுகவையும் சமமாகத்தான் தாக்குகிறது என்று நம்ப முயற்சி செய்கிறேன். ஆனால் முடியவில்லை. அவர்கள் நிச்சயமாக அதிமுகவின் தயவு எதிர்பார்த்து கூடலுக்கு முன்பு வரும் ஒரு ஊடல் என்ற அளவில்தான் அந்த காட்சியை காட்டுகிறார்கள். திமுக மீதோ நஞ்சு நஞ்சாக அல்லவா கக்குகிறார்கள்? அவர்களின் வார்த்தைகளையும் பேசும் தோரணையையும் யாரை குளிர்விக்க என்பது எந்த பாமரனுக்கும் புரியும் . அவர்களின் அதிமுக எதிர்ப்பு என்பது அதிமுகவினரே பெரியாக அலட்டி கொள்ளாத சர்வ சாதாரணமான கருத்துக்கள்தான்.
    ம.ந.கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக தெரிகிறார்கள். ஏனையோர் என்னதான் கொள்கையை கொண்டுள்ளார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. வெறும் சுப்பர் சிங்கர்கள் போன்று வெறும் சுப்பர் பேச்சாளர்கள் மட்டுமே. வைகோ தமிழருவி மணியன் போன்றவர்களின் கலைஞர் மீதான் வார்த்தை பிரயோகங்கள் அவர்கள் தரத்தையே கேள்விக்குறியாக்கி விட்டது இது மிகவும் துரதிஷ்டமான நிகழ்வு.

    ReplyDelete
  3. திரு.கருனாநிதி அவர்களை கட்டுவிரியான் பாம்பு என்று விமர்சிக்கும் விடுதலைசிறுத்தைகள், யாரை இனைத்து கொண்டாலும் கருனாநிதியை இனைத்து கொள்ளகூடாது என்ற முத்தரசன் கருத்தையும், நேற்றுவரை காவி உடை அணிந்து இன்று சிவப்பு கொடி பிடித்து சந்தர்ப்பவாதம் அரசியலை கோபாலசாமி செய்து கொண்டு, பிழைப்பு அரசியல் நடத்தும் இவர்களா மாற்று?? மடையன்கூட நம்பமாட்டான்!!

    ReplyDelete