தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday, 29 February 2016

அரசியல் மேடை -3

 பிரேமலதாவின் ஆவேசம்!


அரசியல் களத்தில், அதுவும் தேர்தல் நேரத்தில், ஆவேசமான பேச்சுகள் இயல்புதான். ஆனால் அப்போதும் நிதானம் தவறாமல் இருப்பதே தலைமைக்கு அழகு.

அண்மையில், காஞ்சிபுரத்திற்கு அருகே வேடல் என்னும் ஊரில் நடைபெற்ற தங்கள் கட்சி மாநாட்டில் பேசிய அக்கட்சித் தலைவரின் மனைவி பிரேமலதா பேச்சு பிற்போக்கானதாக உள்ளது. காஞ்சிபுரம் வந்தவுடன்,  அண்ணாவும், காஞ்சி சங்கராச்சாரியாரும் அவர் நினைவுக்கு வருகின்றனராம்.


போகட்டும், அடுத்து அவர்  ஜெயலலிதாவைத் தாக்குவதாக எண்ணிக்கொண்டு, ஆணாதிக்கச் சிந்தனைக்குத் துணை போயுள்ளார்.

"ஆண் என்றால் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும். கேப்டன் அப்படித்தான்  நடப்பார். எங்கள் கட்சி ஆண்களும் அப்படித்தான்" என்கிறார். அவரும், அவர் கட்சிப் பெண்களும் தலை நிமிர்ந்து நடப்பதில்லை போலும். அதனைத் தாண்டி, ஜெயலலிதாவைப் பார்த்து, "குடும்பம் இருந்தால் எப்படி ஆண்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியும். உனக்குக் குடும்பம் என்று ஒன்று இருந்தால்தானே அதைப் புரிந்துகொள்ள முடியும்" என்று பேசுகிறார்.

இது என்ன அரசியல் என்று நமக்குப் புரியவில்லை. அவருக்குக் குடும்பம் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? அதற்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு உள்ளது? நம் தனி மனித வாழ்வு பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்திலா மக்கள் கூட்டங்களுக்கும், மாநாடுகளுக்கும் வருகின்றனர்? 

தனி மனிதத் தாக்குதலைத் தவிர்த்து, அறிவு சார்ந்த, அறம் சார்ந்த அரசியலை முன்னெடுத்தால் மட்டுமே பொது மேடைகளின் விழுமியம் காப்பாற்றப்படும்.  


பிரேமலதாவின் பேச்சுக் குறித்து எழுத்தாளர் வே. மதிமாறன் தன் வலைப்பூவில் கடுமையான விமர்சனம் ஒன்றை வைத்துள்ளார். அது மிகச் சரியானது என்பதே என் கருத்து.

8 comments:

 1. நல்ல பகிர்வு சகோ.முதலில் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சண்டை போட்டல் நல்லா இருக்கும்.உங்கள் கருத்தை நானும் ஒப்புக்கொள்கிறேன்.

  ReplyDelete
 2. வெந்ததை தின்று விட்டு வாயில் வந்ததை உளறிவிட்டு போகும் போக்கு தான் இது
  தமிழ்நாட்டின் அரசியல் களம் பரிதாபகரமான நிலையில் உள்ளது நம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால் ஒழிய இது போன்ற கேடுகள் களையாது

  ReplyDelete
 3. இதுவரையில் இவர்கள் என்னதான் சொல்கிறார்கள் என்பதே புரிவதில்லை. இருந்தாலும் இவர்கள் என்னதான் சொல்ல முயற்சிக்கிறார்கள் என்றாவது அறிய ஒரு அவா இருந்தது. இப்பொழுது எல்லாம் மிகவும் தெளிவாகி விட்டது. அங்கு ஒன்றுமே இல்லை. ஏரியா விற்பனை அதிக வசூல் தவிர வேறொன்றும் அங்கிருப்பதாக தெரியவில்லை. தங்களின் குடும்பத்தை தமிழக மக்களின் தலைமேல் ஏற்றி வைத்துவிடவேண்டும் இதுதான் கொள்கை. எல்லா இடங்களில் பேரம் பேசி பேசி காலம் தாழ்த்தியே தாங்கள் எவ்வளவு தூரம் தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறார்கள் என்பதை காட்டி விட்டார்கள். சாமானிய மக்களுக்கும் நன்றாக விளங்கிவிட்டது இவர்கள் ரகசிய ஏல விற்பனை செய்கிறார்கள் எனபது வெளிச்சமாகிவிட்டது. இவர்கள் விற்பது தங்களை நம்பும் மக்களை. வாங்க நினைப்பது பதவி பொருள் புகழ் இத்தியாதி இத்தியாதி. இவர்களை கூட்டணியில் யார் சேர்த்தாலும் நிச்சயம் இவர்களால் பெரும் வாக்கு சரிவு ஏற்படவே வாய்ப்பு இருக்கிறது. ஒரு கௌரவமான அரசியல் இயக்கம் இவர்களையும் மேடையில் வைத்து கொண்டு என்ன கொள்கையை மக்களிடம் கூற முடியும்? கூட இருப்பவர்களின் நம்பக தன்மையையும் அல்லவா மக்கள் சந்தேகிப்பார்கள்?

  ReplyDelete
 4. மிகச்சரியான கருத்து ஐயா.

  ReplyDelete
 5. ஐயா.. உங்கள் கருத்து உண்மை தான். ஆனால் கலைஞர் செல்வி ஜெயலலிதாவின் குட்டி கதையை விமர்சிக்கும் போது பிள்ளை பெற்றால் தானே தெரியும் பெற்றோர் பிள்ளை உறவு என தனி மனித தாக்குதல் செய்தாரே அதை விமர்சிக்க உங்களுக்கு திராணி இருக்கிறதா?? ஊருக்கொரு நியாயம் திமுகவிற்கு ஒரு நியாயம் என்பது அநியாயமாக தெரிகிறது.
  திமுக அந்த சாதனை செய்தது இந்த சாதனை செய்தது என பினாத்தும் நீங்கள் ஒன்றை நினைவு கூற மறந்து விட்டீர்களே!! திமுக இது வரை செய்த நல்ல செயல்கள் எல்லாமே அதன் கடமையே இன்றி அதன் சாதனைகள் அல்ல. அவர்கள் அந்த கடமையை செய்ய தான் மக்கள் அதிகாரம் அளித்தார்கள் கடமையை செய்தவனுக்கு எதற்கு பாராட்டு.. ஆனால் கடமையை மட்டும் செய்தால் பரவாயில்லை கடல் கொள்ளயிலல்லவா அவர்கள் பிரசித்தி பெற்றார்கள்.. 70-களில் திமுக வின் 99% கட்சி நிர்வாகிகள் ஏழைகள். ஆனால் இப்போது 1% ஏழைகளாவது கட்சி பொறுப்பில் உள்ளனரா என்று எண்ண வைக்கிறது.. ஏன்?? தமிழ் நாட்டில் ஏழைகள் குறைந்து விட்டார்களா இல்லை திமுக வில் ஏழைகள் குறைந்து விட்டார்களா?? இதுதான் நீங்கள் புலம்பும் பகுத்தறிவா??? சார்புத்தன்முயுடன் சப்ப கட்டு கட்டுவதுதான் பகுத்தறிவு என்றால் அந்த பகுத்தறிவே தேவையில்லை என நினைக்கிறேன். உங்களின் பல கருத்துக்கள் என்னை கவர்ந்துள்ளது ஆனால் தேர்தல் காலங்களில் மட்டும் உங்கள் பகுத்தறிவை நீங்கள் அறிவாலயத்தில் மறந்து வைத்து விடுகரீர்களோ என கருத தோன்றுகிறது..
  உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். நன்றி ஐயா..
  கோவை நவாஸ்
  அமீரகம்

  ReplyDelete
  Replies
  1. திரு நவாஸ் அவர்களுக்கு,

   உங்கள் மடலில் மூன்று குற்றசாற்றுகள் உள்ளன.

   1. கலைஞர் மட்டும் தனிப்பட்ட முறையில் பேசலாமா என்று கேட்டுள்ளீர்கள். நேரடியாகப் பெயரைச் சொல்லி விமர்சனம் செய்வதற்கும், அந்த அம்மையார் சொன்ன குட்டிக் கதைக்கு மாற்றாக, இன்னொரு குட்டிக் கதை சொல்லும்போது வரும் செய்திக்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் அறியாமல் இருக்க முடியாது.

   2. கடமையைச் செய்வதற்குப் பாராட்டா என்பது உங்கள் கேள்வி. கடமையைச் செய்யாத அரசைக் கண்டிப்பதும், செய்யும் அரசைப் பாராட்டுவதும் சரிதான் என்று நினைக்கிறேன். மேலும், கை ரிகஷாவை ஒழித்ததும், தொழுநோயாளர்க்கு மறு வாழ்வு அளித்ததும் வெறும் கடமை என்று சொல்லிவிட முடியுமா? அதில் உள்ள மனிதநேயம் உங்கள் கண்ணில் படவில்லையா?

   3. தி.மு.க.வில் ஏழைகளே இல்லை என்கிறீர்கள். ஒரு கோடி உறுபினர்களைக் கொண்ட கட்சி தி.மு.க. அவர்களுள் மேலே வந்தவர்கள்தான் உங்கள் கண்களுக்குத் தெரிகிறது. இன்றும் அன்றாடம் காய்ச்சிகளாக உள்ள தி.மு.க.வினரை நீங்கள் பார்த்ததில்லை போலும்! திரைப்பட நடிகர்கள் அனைவருமே கோடிசுவரர்கள் என்று சொல்வதைப் போன்றது இது!

   நான் ஒரு சார்புடையவன் என்று கூறியுள்ளீர்கள். அதனை நான் எப்போதும் மறுத்ததில்லை. ஒரூ ஐயம் - சார்பு இல்லாத மனிதர்களை நீங்கள் எங்கேனும் சந்தித்துள்ளீர்களா?

   Delete
 6. அண்ணன் கேப்டன் அவர்கள், தனக்கு அப்போதைக்கு அப்போதைக்கு உதிப்பதெல்லாம் பேசுவதை சொற்பொழிவாகவும், அண்ணியார் அவர்கள் காலத்திற்கேற்ப மாறாமல், அவர் தன் நிலையிலேயே இருந்து உதிர்க்கும் வார்த்தைகளை பேச்சாகவும் கேட்க ஒரு கூட்டம் உள்ளது என்பது தற்போதைய தமிழகத்தின் விசித்திரமான நிலை.

  ReplyDelete
 7. நன்றி. நீங்கள் நான் எழுதியதை வாசித்தது மட்டுமல்லாமல்.. அது குறித்து இங்கு குறிப்பிடமைக்கும்.

  ReplyDelete