தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday, 13 June 2016

எழுவர் விடுதலையும் தமிழக அரசியலும்


இராசீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 25 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்னும் கோரிக்கை இன்று தமிழகத்தில் வலிமை பெற்றுள்ளது. ஒட்டுமொத்தத் தமிழினத்தின் ஒற்றைக் குரலாய் அது இப்போது  எழுந்துள்ளது. அதன் வெளிப்பாடாக அண்மையில் ஒரு மாபெரும் பேரணியும் சென்னையில் நடந்தது.


எழுவரின் விடுதலையைப் பொறுத்தமட்டில்,  மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசுக்கும், இன்று ஆளும் பா.ஜ.க. அரசுக்குமிடையே பெரிய வேறுபாடு இல்லை. இதனை மனித நேயத்தோடும்,   நியாயத்தோடும் இருவரும் அணுகவில்லை. பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலமே தவறாகப் பதியப்பட்டுள்ளது என்று அந்த வாக்குமூலத்தை எடுத்த காவல்துறை அதிகாரியே தன் மனசாட்சி உறுத்தலால் தெரிவித்துவிட்ட பின்னரும் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அந்த வழக்கு பொடா சட்டத்தின் கீழ் வராது என்று உச்ச நீதி மன்றமே அறிவித்ததுள்ளது.  அப்படியிருக்க, அச்சட்ட நெறிமுறைகளின் கீழ் நடந்த விசாரணைகள் மட்டும் எவ்வாறு செல்லுபடியாகும்? இப்படிப் பல வினாக்கள் உள்ளன.

எழுவரையும் விடுவிக்கின்ற அதிகாரம், உச்சநீதி  மன்றம், மத்திய அரசு, மாநில அரசு ஆகிய மூவரிடமும் உள்ளது. 161 ஆவது சட்டப் பிரிவைப் பயன்படுத்தித் தானாகவே தமிழக அரசு அனைவரையும்  விடுவித்து விடலாம் என்றும்,சட்டம் வழங்கியுள்ள  இந்த மாநில அரசின்  உரிமையில் உச்ச நீதி மன்றம் உட்பட எவரும் தலையிட முடியாது என்றும் சட்ட வல்லுனர்கள் சிலர் திரும்பத் திரும்பக் கூறுகின்றனர். ஆனால் தமிழக அரசோ அதனைப் பயன்படுத்தாமல், மத்திய ஆரசுக்கே தன் கோரிக்கையை வைத்துக் கொண்டுள்ளது. அவ்வாறு செய்வதை இங்குள்ள எவரும் கண்டிக்கவில்லை.

இப்போது இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியே சென்னையில் ஒரு பேரணி நடைபெற்றது. வேலூரிலிருந்து ஊர்திப் பேரணி என்றுதான் முதலில் அறிவிக்கப்பட்டது.ஆனால் தமிழக அரசு அதற்கான அனுமதியை மறுத்துவிட்டது. வேண்டுமெனில், சென்னையில் நடத்திக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டது.

கோரிக்கைப் பேரணி நடத்துவதற்குக் கூட அனுமதி மறுத்துவிட்ட தமிழக அரசைக் கண்டித்து, அந்தப் பேரணியில் கலந்துகொண்ட "சீறும் சிங்கங்கள்", "தமிழ்த் தேசியப் புலிகள்" எவரும் ஒரு சொல் கூடக் கூறவில்லை. எந்தக் கண்டனமும் இல்லை. "அம்மா" சொன்னபடி நடந்து கொண்டனர். இதுவே தி.மு.கழக ஆட்சியில் நடந்திருக்குமானால், எவ்வளவு கண்டன உரைகள் எழுந்திருக்கும்! "தமிழினத் துரோகி கருணாநிதி" என்று வானதிர முழக்கங்கள் ஒலித்திருக்கும். 

அம்மா உடைத்தால் மண் பானை, ஐயா உடைத்தால் பொன் பானை! இதுதான் தமிழ்த் தேசிய அரசியல்!! 

4 comments:

 1. அய்யா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. எங்களுக்கும் இந்த கேள்வி எழுலுகிறது, ஏன் சீமான் உட்பட எவரும் அம்மா அரசை கேள்வி கேட்க வில்லை ?

  இன்னொரு சந்தேகம் உண்டு, ஏன் விடுதலை சிறுத்தைகளோ , திமுக வோ இந்த பேரணியில் தன் ஆதரவை தரவில்லை ? தலைவர் அவர்கள் இதை பற்றி ஒரு கருது கூட வெளியிட வில்லை ? உங்கள் பதில் எதிர்நோக்கி ..

  ReplyDelete
 2. திமுக ஆட்சியில் என்றால்
  "ஏ !கருணாநிதியே " ன்னு அடி வயிற்றில் இருந்து சத்தம் வரும்.
  அதிமுக ஆட்சி என்றால்
  "ஏ E3 போலீஸ் ஸ்டேசன் ஏட்டே" ன்னு முனங்குவார்கள்.

  போராளிச் சிங்கங்கள்.

  ReplyDelete
 3. இதில் பெரிய வேடிக்கையான ஒரு நாடகம் நடப்பது போல தெரிகிறது. திராவிட முன்னேற்ற கழகம் தவிர்ந்த இதர கட்சிகள் ஏறக்குறைய எல்லாமே அதிமுகவின் பணத்தில் இயங்குவது போல தெரிகிறது.
  இவர்கள் பேசும் தொனியே இவர்களை காட்டி கொடுக்கிறது கலைஞரையும் திமுகவையும் இவர்கள் தாக்கி பேசும்பொழுதெல்லாம் மிகவும் உணர்ச்சியுடன் வாங்கிய காசுக்கு குறைவில்லாமல் பேசும் கைதேர்ந்த நடிகர்களாக தெரிகிறார்கள்.
  அதே குற்றச்சாட்டுக்களில் ஜெயலலிதாவையும் அதிமுகவையும் சும்மா ஒரு ஒப்புக்கு நோகாமல் தாக்கும் பாவனை இருக்கிறதே, கேவலத்திலும் ரொம்ப கேவலமாக இருக்கிறது.
  பிழைக்கும் வழி வேறொன்றும் அறியாத - பிரள் மாந்தர் விதைக்கும் வினை அது.

  ReplyDelete
 4. ஏழு தமிழர்களை விடுதலை செய்ய நடத்தப்பட்ட பேரணியில் தமக்கு அழைப்பு விடுக்கபடாதது குறித்து பேராசிரியர் சுபவீ அவர்கள் தனது வருத்தங்களை பதிவு செய்திருந்தார் சுபவீ .பேராசிரியர் சுபவீ இதில் வருத்தப்பட ஒன்றும் இல்லை அற்புதம் அம்மாள் அவர்களின் அரசியல் நிலைப்பாட்டை உணர்ந்தவர்களுக்கு இதில் ஆச்சரியமும் இல்லை .

  1௦ சேர்ந்து மரணதண்டனைக்கு எதிராக குரல் கொடுத்தால் அவர்களோடு இணைந்து தானும் போராடுவார் .25 வருடமாய் மகனை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு தாயின் உணர்வுகள் நமக்கு புரியாமல் இல்லை ஆனால் அவரின் அரசியல் நிலைப்பாடுகள் தான் புரிந்து கொள்ள முடியாத ஒன்றாய் உள்ளது

  மரண தண்டனைக்கு எதிராக திருப்பத்தூரில் மாபெரும் ஆர்பாட்டம் அனைத்து கட்சிகளை ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது சுமார் 7கிமீ தொலைவில் ஜோலார்பேட்டையில் இருந்த பேரறிவாளன் குடும்பத்தினர் ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை காரணம் அதை ஒருங்கிணைத்தவர்கள் திராவிடர் கழகத்தினர் .அதே போல பெரியார் திடலில் நடந்த மரணதண்டனைக்கு எதிரான ,பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுருத்தி நடந்த கூட்டங்களில் கூட அவர்கள் கலந்து கொள்ள மறுத்துவிட்டனர்
  தூக்கிற்கு நாள் குறிக்கப்பட்டு உத்தரவு வந்த நேரத்தில் 7 தமிழர்களும் சொன்ன செய்தி பலருக்கும் நினைவு இருக்காது .ஒரு வேலை தாங்கள் தூக்கிலிடப்பட்டால் தங்கள் உடல்களை நாம் தமிழர் இயக்கத்திடம் ஒப்படைக்க சொன்னார்கள் 7 தமிழர்களின் விடுதலை கேட்பவர்களிடம் அரசியல் இல்லை ,விடுதலை யாசிப்பவர்களிடம் அரசியல் இருக்கிறது ,பேராசிரியர் சுபவீ அவர்களை புரிந்து கொண்டால் வருத்தமடைய வேண்டிய தேவை இருக்காது

  ReplyDelete