தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday 1 September 2016

சுயமரியாதை - 15

வேலியிட முடியாத காற்று!
                          
                 

சுவரெழுத்து சுப்பையா பிறந்த ஊர், காரைக்குடிக்கு அருகில் உள்ள சூரக்குடி என்றாலும், அவர் தன் வாழ்நாள் முழுவதும் மயிலாடுதுறையில்தான் வாழ்ந்தார். அவ்வூரில் உள்ள, ரங்கசாமியின் புத்தன் தேநீர்க் கடையில்தான் அவரைப் பார்க்க முடியும் என்பார்கள். உணவு, உறைவிடம் எல்லாம் அந்தக் கடையில்தான், பசி வரும்பபோது கடையில் என்ன இருக்கிறதோ அதை உண்பார், அங்கேயே இரவு படுத்துக் கொள்வார் என்கிறார் ரங்கசாமி. 


தன்னைப் பற்றிய விவரங்களைக் கூட அவர் யாரிடமும் சொல்வதில்லை. . எது உங்கள் சொந்த  ஊர் என்று கேட்டால், அதெல்லாம் எதற்கு உங்களுக்கு என்பாராம். பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளைச்  சுவர்களில் எழுதுவதற்கென்றே வேறு எந்த நோக்கமும், ஆசையும் இல்லாமல் வாழ்ந்திருக்கிறார். இரவு 12 மணிக்கு மேல் கிளம்பி, ஒற்றை மனிதராக ஊர்ச் சுவர்களிலெல்லாம் எழுதி முடித்துவிட்டுக் காலையில்தான் திரும்புவாராம். யாரையும் துணைக்கு அழைத்துச் செல்வதில்லை. யாருடைய உதவியையும் கோருவதில்லை. 'தனி மனித ராணுவம்' போல் அந்த மனிதர்  செயல்பட்டுள்ளார்.

சாலைகளில் உருகி ஓடும் தார் அவருடைய மூலப் பொருள். அதில் மண்ணெண்ணெய் வீட்டுக் குழைத்து, விரலில் துணியைக் கட்டிக் கொண்டு எழுதத்  தொடங்கிவிடுவது அவரின் இயல்பு.  எழுதிக் கொண்டிருக்கும்போது யார் அழைத்தாலும் அவர் காதுகளில் விழாதாம். தொட்டு அல்லது தட்டி அழைத்தாலும் திரும்பிப் பார்க்க மாட்டாராம். எழுதி முடித்தபின்தான் திரும்பி என்ன என்று கேட்பார் என்பார்கள். 

முதலில் மயிலாடுதுறையில் எழுதிக் கொண்டிருந்த அவர், பிறகு ஊர் ஊராகப் போயிருக்கிறார்.  மயிலாடுதுறையில் தான் பார்த்துக் கொண்டிருந்த சிறு வேலையையும் விட்டுவிட்டு இதனையே தன்னுடைய வாழ்க்கையாக மாற்றிக் கொண்டுள்ளார். எந்த ஊருக்குப் போகின்றாரோ, அந்த ஊரில் உள்ள திராவிடர் கழக நண்பர்களே அவரின் பசியாற்றியுள்ளனர். பசிக்கு உணவும், படுத்தால்  உறக்கமும், ஓரிரு உடைகளும்  அன்றி அவருக்கு வேறு தேவைகள் ஏதுமில்லை. திருமணம் இல்லை, குழந்தைகள், குடும்பம் இல்லை. தனி மனிதராய் வாழ்ந்து, தன்னந் தனியாய் ஊர் சுற்றி, இறுதியில் மயிலாடுதுறை தொடர் வண்டி நிலையத்தில் தனியாய் இறந்து கிடந்த வரலாறு அவருடையது. வேலியிட முடியாத காற்று, வேண்டிய அறிவைத்  தந்த விளைநிலம் அவர். 

காரைக்குடிக்கு வந்தபோது, என் அப்பாவையும், என்.ஆர்.சாமி அவர்களையும் சந்தித்துள்ளார். அவர்கள் இருவரும்தான் தொடக்க காலத்தில் அந்த வைதீகக் கோட்டையில் பெரியார் சிந்தனைகளை விதைத்தவர்கள். 1949இல் அப்பா, தி,மு.கழகத்தில் இணைந்துவிட்டார். என்.ஆர்.சாமி இறுதிவரை தி.க.வில் பணியாற்றினார். இன்றும் அவருடைய குடும்பம் அதே பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. 

சுவரெழுத்து சுப்பையாவிற்குப் பல ஊர்களில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. யாரவன் நம் ஊரில் வந்து இப்படியெல்லாம் எழுதுகிறவன் என்ற கேள்வி! எங்கள் வீட்டுச் சுவரில் எப்படி நீ எங்களைக்  கேட்காமல் எழுதலாம் என்ற மிரட்டல்! ஆனால் எதற்கும் அஞ்சாமல் அவர் தன் பணியைச் செய்து கொண்டே இருந்திருக்கிறார். ஒருமுறை, குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து, மன்னார்குடியில்  ஒரு சுவரில் எழுதிக்கொண்டிருந்திருக்கிறார். அது ஒரு பார்ப்பனர் வீடு. அந்த வீட்டுக்காரர் மிகுந்த சினம் கொண்டு சுப்பையாவை அதட்டியுள்ளார். இவருக்குத்தான் காதிலேயே விழாதே. திரும்பியே பார்க்காமல் எழுதிக் கொண்டிருக்க, அவர் உள்ளே போய்  ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு வந்து முதுகில் தட்டியுள்ளார். அப்போதும் இவருடைய வேலை நிற்கவில்லை.

எழுதி முடித்துவிட்டுத் திரும்பியதும்,  அந்தப் பார்ப்பனர் இவரை மதிப்புக் குறைவாகப் பேசியுள்ளார். "யாரைக் கேட்டுடா என் சுவரில் எழுதினாய்?" என்று கேட்க, இவர் நிதானமாக, "யாரைக் கேட்டுடா ராமானுஜர் பிரசாரம் செய்தார்?" என்று திருப்பிக்  கேட்டுள்ளார்.

எல்லாவற்றையும் விடக்  கொடுமை, சென்னையில் ஒருமுறை இரவில் சுவரில் எழுதிக் கொண்டிருக்கையில், ஒரு காவல்துறை அதிகாரி, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அடித்து, தார்ச்  சட்டியில் இருந்த தாரை அவர் தலையிலேயே ஊற்றியுள்ளார். அதனால் சுப்பையாவுக்கு கண் பார்வை சற்று பிற்காலத்தில் மங்கிவிட்டது. அந்த அரைப் பார்வையோடும் அவர் சுவர்களில் எழுதினர் என்பது தியாக வரலாறு.

பகுத்தறிவுக் கருத்துகளுக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு? 


                                                                                                              (தொடரும்)
                                                                                  

நன்றி: நக்கீரன்

4 comments:

  1. சுவரெழுத்து சுப்பையா போன்றோரின் தன்னலமற்றப் பணி போற்றுதலுக்கு உரியது ஐயா

    ReplyDelete
  2. சுப்பையா போன்றவர்கள் அன்றைய நாளில் எப்படி மக்களால் பார்க்க பட்டு இருப்பார்கள் என்று யோசித்தேன். ஜோக்கர் படம் எனக்கு ஞாபகம் வந்தது. மக்களுக்காகவே வாழும் இது போன்ற தியாகிகள், பகுத்தறிவுக்காக போராடுபவர்கள் தன் குடும்பம் தவிர எதையும் யோசிக்காத சாதாரண மக்களால் பைத்தியங்களாக பார்க்க படுகிறார்கள் என்பதைத்தான் ஜோக்கர் படம் நமக்கு உணர்த்துகிறது. அந்த படத்தை பற்றி விவாதித்தோம். ஒரு மலையாளி நண்பரிடம் இது பற்றி கேட்டேன்.கேரளாவில் மக்கள் பிரச்சினைக்காக அவர்கள் உடனே வீதியில் இறங்கி விடுகிறார்கள், இது எப்படி உங்களால் இப்படி செய்ய முடிகிறது என்று. அவர் முகத்தில் அடித்தல் போல நேரடியாக பேச கூடியவர். ஆனால் நல்லவர்.அவர் சொன்னார், எங்களுக்கு சொரணை இருக்கிறது. ஆனால் தமிழர்கள் செருப்பால அடித்தல் கூட வாங்கி கொண்டு துடைத்து விட்டு போய் விடுவார்கள் என்று. எனக்கு சுறுக்க்கென்று கோபம் வந்து அந்த இடத்தை விட்டு வெளியேறி விட்டேன். பிறகு அவரிடம் மீண்டு பேசும்போது சொன்னார் நான் சொன்னது உங்களுக்கு வலிக்கத்தான் செய்யும் ஆனால் உண்மையை என்னால் சொல்லாமல் இருக்க முடியாது. ஏனென்றால் நான் தமிழர்களை நேசிக்கிறேன் அதனால்தான் அப்படி சொல்கிறேன் என்று.

    நான் தனிமையில் அவர் சொன்னதை யோசித்தேன். மக்கள் பிரச்சினைக்காக போராடுபவர்கள், பகுத்தறிவுக்காக போராடுபவர்கள், தியாகிகள் கொஞ்சம் பைத்தியம் போலத்தான் மக்களுக்கு தெரிகிறது. இவர்கள் பைத்தியம் போல தெரிவதாலேயே மற்ற சாதாரண மக்கள் வீதியில் வந்து போராடுவது கிடையாது. இருப்பதை வைத்து டீசெண்டாக இருந்து விடுவோமே என்று நினைக்கிறார்கள். ஆனால் விமர்சிக்காமல் இல்லை. அது சரி இல்லை இது சரி இல்லை என்று சும்மா யோசித்து கொண்டே இருந்து விட்டு எதையுமே செய்யாமல் போய் விடுகிறார்கள். ஆனால் இந்த சுப்பையா போன்றவர்கள்தான் இந்த சமூகத்தை அடுத்த தளத்துக்கு எடுத்து செல்கிறார்கள். சமூகத்துக்காக, அதன் மேன்மைக்காக இவர் போல தியாகம் நிறைந்த பைத்தியமாக மாறினால் ஒன்றும் தவறில்லை என்று எப்போது மக்கள் நினைக்கிறார்களோ அன்றுதான் இந்த சமூகம் முன்னேறும்.

    ReplyDelete
  3. Was it only one brahmin who attacked shri subbiah for defacing their property. Not sure. But shri subah vee always has to hint at some brahmin treachery. Did he bother to find the caste of the policeman- is it relevant. No. So is the caste of someone who was angry that his house is being defaced. sad that a noble man's story is coloured with author's prejudice.

    ReplyDelete
  4. மு. சந்தோஷ் குமார்3 September 2016 at 15:32

    சுவரெழுத்து சுப்பையா போன்றோரின் தியாகம், தன்னலமற்றப் பணி போற்றுதலுக்கு உரியது

    ReplyDelete