தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday 9 November 2016

கடற்கரையில் காதல் திருவிழா!


எதிர்ப்பு அலைகள் இப்போதே தொடங்கிவிட்டன. காதலின் பெயரால் கலாச்சாரத்தைப் பலி கொடுப்பதா என்று கனல் கக்குகின்றனர் தலைவர்கள் சிலர். எங்கே? எல்லாம் ஆந்திராவில். 

வரும் பிப்ரவரி 12, 13, 14 ஆகிய நாள்களில், ஆந்திராவின் விசாகப்பட்டினக் கடற்கரையில் காதல் திருவிழா கொண்டாடப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளதையொட்டியே இத்தனை பரபரப்பு. ஆந்திர முதல்வர் சந்திரபாபு (நாயுடு) திருவிழா நடந்தே தீரும் என்று கூற, கூட்டணிக் கட்சியான பா.ஜ.க. உட்பட எல்லாக் கட்சிகளும் எதிர்ப்பு.   நடத்த விடமாட்டோம் என்று சேலையை வரிந்து கட்டிக் கொண்டு களத்தில்  நிற்கிறார்  நடிகை ரோஜா. முதல்வர் சந்திரபாபுவைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்கிறார், ஒய்.எஸ்.ஆர். கட்சித் தலைவர் ஜெகன்மோகன் (ரெட்டி). 


இது ஒரு அதிரடியான செய்திதான். கடற்கரையில் மூன்று நாள்கள் இரவும் பகலுமாக 9000 காதல் ஜோடிகள் தங்கி ஆடிப் பாடி மகிழ்வது என்றால் பலருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். இதற்குள் ஒரு பெரிய வணிக நோக்கம் இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.  ஆனாலும் இந்த 'வீராதி வீர' எதிர்ப்பாளர்களிடம் நாம் சில கேள்விகளைக் கேட்க வேண்டியுள்ளது.

காதலின் பெயரால் கலாச்சாரம் கெடுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கர்ஜிக்கும் இந்த சிங்கங்கள் எல்லாம், மதத்தின் பெயரால் நிர்வாண சாமியார்கள் ஊர்வலம் போகும்போது எங்கே போனார்கள்? இன்றும் அப்படிப்பட்ட ஆபாசங்கள் நாட்டில் நடக்கின்றனவா இல்லையா? சுற்றுலாத்தளம் என்னும் அடிப்படையில், பா.ஜ.க ஆளும் கோவா மாநிலத்தில் இன்றும் கடற்கரைகள் எப்படி உள்ளன?  வெளிநாட்டவர்கள் அங்கு உல்லாசமாக இருப்பதையும், அந்தக் காட்சிகளை இந்தியர்கள் 'ஐயோ பாவமாக' வேடிக்கை பார்ப்பதையும், கலாச்சாரக் காவலர்கள் ஏன் தடுக்கவில்லை? கோவாவுக்கு ஒரு நீதி, ஆந்திராவுக்கு ஒரு நீதியா? 

காதல் விழாவைத் தடுப்பவர்களின் நோக்கம் வேறு. பண்பாட்டைக் காப்பது என்ற பெயரில் சாதியக் கட்டமைப்பைக் காப்பாற்றுவதே அவர்களின் நோக்கம். மதக் கலப்பு ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள்வது இன்னொரு நோக்கம்.

இந்தச் சிக்கலை மிகக் கவனமாகக் கையாள வேண்டியுள்ளது. பண்பாடுகளும், ஒழுக்க நெறிகளும் சிதைந்து போக வேண்டும் என்று நாம் கூறவில்லை. ஆனால், காதலுக்கான கட்டுப்பாடுகள் உடைக்கப்பட வேண்டும் என்பதிலும், சாதிகள் தகர்க்கப்பட்ட வேண்டும் என்பதிலும் நாம் உறுதியாக உள்ளோம். எனவே வரும் காதலர் நாளில், (பிப்.14) தமிழ்நாட்டில் சாதி மறுப்புத் திருமணங்கள், காதல் திருமணங்களைத்  திராவிட, தலித்திய  மற்றும் முற்போக்கு இயக்கங்கள் ஒருங்கிணைந்து நடத்திட  வேண்டும்.  அந்த நாள் கொண்டாடப்பட வேண்டும். அது மேலை நாட்டுக் கலாச்சாரத்தின் இறக்குமதி என்பது போன்ற 'நொண்டிச் சாக்குகளை'ப் புறந்தள்ளி பெரிய விழாக்களை நாம் இணைந்து ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு இப்போதே தயாராவோம். 


களை கட்டட்டும் காதல் திருவிழாக்கள்!   

4 comments:

  1. Sir,post your perspective in prime minister's new surgical strike on black money in your upcoming post.It's my humble request.

    ReplyDelete
  2. My request is same.... Is it modi doing good for people or good for bjp politicians... Please give the explanation....

    ReplyDelete
  3. பேராசிரியர் ஐயா அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள். சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதை ஒழுக்க கட்டுப்பாடாக திரித்து மக்களிடம் பரப்புரை செய்யும் பார்ப்பன கூட்டத்திற்கு ஒரு சவுக்கடி... வலைப்பூ அருமை...

    ReplyDelete