தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday 30 December 2016

ஒரு பொதுத் தேர்தல் - உடனடித் தேவை


அ.தி.மு.க.வின் புதிய பொதுச் செயலாளராகத் திரு சசிகலா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இது ஒன்றும் எதிர்பாராத திருப்பம் இல்லை. ஆனால் அடுத்தடுத்து நாடு என்ன திருப்பங்களை எதிர்கொள்ளப்  போகிறது என்பது எண்ணத்தக்கது. 


ஒரு கட்சியின் பொறுப்புக்கு யார் தேர்ந்தெடுக்கப்பட்டால் நமக்கென்ன என்பது சரிதான். ஆனால் அ.தி.மு.க. என்பது ஆளும் கட்சியாகவும் இருப்பதால், அதன் பின் விளைவுகள் அந்தக் கட்சியோடு மட்டும் நின்றுவிடாது. அது நாட்டையும் பாதிக்கும். எனவே அது குறித்துக் கவலை கொள்ள நமக்கும் உரிமை உள்ளது.

இன்றைய ஆளும் கட்சியின் சட்ட திட்டங்களின்படி, பொதுச் செயலாளர் பதவியே அனைத்து அதிகாரங்களையும் உடையது. எனவே அந்தப் பொறுப்பிற்கு வரும் ஒருவர் அடுத்து தமிழக முதலமைச்சராக வருவதற்கும் வாய்ப்புள்ளது. அவ்வாறில்லை எனினும், முதலமைச்சரையே கட்டுப்படுத்தும் அதிகாரம் அந்தப் பதவிக்கு உள்ளது. ஆதலால் இது கட்சிப் பிரச்சினையன்று, நாட்டின் பிரச்சினை என்பதாக நாம் உள்வாங்கி கொள்ள வேண்டியுள்ளது.  

சரி, முதலமைச்சராகத்தான் யார் வந்தாலென்ன என்று நாம் இருந்துவிட முடியாது. அப்படி ஒருவரைத் தேர்ந்தடுக்கும் சட்ட அடிப்படையிலான உரிமை அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்குத்தான் இருக்கிறது என்றாலும், அதிலும் பல வினாக்கள் உள்ளன. சட்டத்தைத் தாண்டி, பொது அறத்தின் அடிப்படையில் பார்த்தால், அந்தப் பதவிக்கு அடுத்து வருகின்றர், ஒரு பொதுத் தேர்தலைச் சந்தித்து, பொது மக்களின் ஆதரவைப் பெற்று அங்கு வருவதே நியாயம்.

அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அனைவரும் பொதுத் தேர்தல்களைச் சந்தித்தவர்கள். சசிகலா இன்றுவரையில் தேர்தலையே சந்திக்காதவர். அவர்கள் கட்சிக் கூட்டத்தில் கூட ஒரு முறையும் பேசாதவர். கட்சி நடவடிக்கைகள் எதிலும் கலந்து கொள்ளாதவர். அரசியல் போராட்டங்களில் கலந்துகொண்டு அதற்காகச் சிறை செல்லாதவர். அவருடைய குணம் என்ன என்பதை மட்டுமின்றி, அவர் குரல் எப்படியிருக்கும் என்பதைக் கூடத் தமிழகம் அறியாது. இந்த நிலையில் அவர் இத்தனை பெரிய பொறுப்புக்கு வருவது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது. 

தங்களின் கட்சித் தலைவியாக அவரை அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். ஆனால் நாட்டின் தலைவியாக வருவது குறித்து மக்களே முடிவெடுக்க வேண்டும். முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று கட்சி சொல்லலாம். முதலமைச்சர் யாரென்று மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும். 

திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் வீரமணி அவர்கள் சசிகலாவை ஆதரித்து எழுதியிருப்பது குறித்துச் சில கேள்வி எழுப்புகின்றனர்.  பிறப்பின் அடிப்படையிலும், அவர் செய்த தொழிலின் அடிப்படையிலும் அவரைப் பார்ப்பனர்கள் சிலர் குறி வைத்துத் தாக்கி வருகின்றனர். துக்ளக், தினமலர் போன்ற ஏடுகள் சசிகலாவுக்கு எதிரான எழுத்துப் பொறுத்த தொடங்கி நடத்தி வருகின்றனர். அவற்றுக்கு எதிராகவே, ஓர் எதிர்வினையாக ஆசிரியர் அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். மேலும், அ.தி.மு.க.வை வீழ்த்திவிட்டு அல்லது விழுங்கிவிட்டு  பா.ஜ.க அந்த இடத்திற்கு வர முயலும் நிலை கண்டும், எச்சரிக்கையாக அவர் அந்தக் கருத்தை சொல்லியிருக்கக்கூடும். 

அந்த எதிர்வினையையும், அந்தப் பார்வையையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும், அதனைத் தாண்டி நமக்குச் சில ஐயங்கள் உள்ளன. சசிகலாவைப் பின்னிருந்து ஆர்.எஸ்.எஸ். போன்ற இயக்கங்கள் வழி நடத்தாது என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. இல. கணேசன் போன்றவர்கள் சசிகலாவை ஆதரிப்பதையும் இங்கு நாம் நினைவு கூர வேண்டும். அவர் தலைக்கு மேல் உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொங்கிக் கொண்டுள்ளது. அதனை வைத்தும் மத்திய அரசு சசிகலாவை அச்சுறுத்த முடியும்.  சசிகலா மடியில் கணம் இல்லாதவர் என்று சொல்ல முடியாது. எனவே வழியில் பயம் இருந்தே தீரும்.

இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு பார்க்கும்போது, தமிழகத்தில் உடனடியாக ஒரு பொதுத்தேர்தல் நடத்துவது என்பதே சரியானது. ஒரே ஆண்டில் மீண்டும் பொதுத் தேர்தல் என்றால் மக்களின் பணம் வீணாகாதா என்று சிலர் கவலைப்படக்கூடும். ஆம், வீணாகத்தான் செய்யும். ஒரு நாடு வீணாவதை விட, பணம் வீணாவது அப்படி ஒன்றும் பிழையில்லை..

7 comments:

  1. மிகச்சரியான அரசியல் பார்வை

    ReplyDelete
  2. பார்ப்பணர்கள் கையில் நாடு இல்லை என்று சற்றே நிம்மதி பெருமூச்சு விட முடிகிறது. சசிகலா அவர்கள் மேல் எல்லா குற்றங்களும் செலுத்தப்பட்டு அவர்தான் இத்தனை நாள் மிக மோசமான ஆட்சியை மக்களுக்கு கொடுத்தவர் என்பது போல பார்ப்பண ஊடகங்கள் சித்தரிக்கின்றன.சசிகலா அவர்கள் அதிகாரத்தை சற்று பயன்படுத்திகொண்டார்கள். இங்கே யார்தான் அதிகாரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தவில்லை. ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் இன்று பார்ப்பணர்கள் கொடி கட்டி பறக்கிறார்கள். ஜெயலலிதா ஆதரவில்லாமல்தான் இது நடந்ததா. இப்படி ஜெயலலிதா பல பிஸினஸ் செய்யும் பார்ப்பணர்களை வளர்த்து விட பட்டிருக்கிறார்கள். அது மட்டும் அல்ல போட்டி என்று வருபவர்களை அழிக்கும் வேலையும் நடந்தது. அதற்கு சசிகலா போன்றவர்கள் உதவினார்கள். அழிக்கப்படுவது தன்னுடய சகோதரன் என்பதனை உணராமல் சசிகலா ஜெயலலிதாவிற்கு உதவினார்கள். இனிமேல் சசிகலா அவர்களுக்கு இன்று சுற்றி உள்ள அனைவரும் வழிநடத்த வேண்டும். திராவிடன் தவறு செய்தாலும் உணறும் பட்சத்தில் திருந்த முடியும். ஏனென்றால் காசு சேர்க்கும் எண்ணம் அவரிடம் இருந்தாலும் நிச்சயம் பார்ப்பணர்களிடம் இருக்கும் கர்வம் மற்றும் சாதி சண்டைகளை மூட்டி விட்டு எல்லாரையும் அழிக்கும் எண்ணம் இல்லை. எனவே எல்லாரும் சசிகலா அவர்களை ஆதரித்து திமுக உள்பட அவரை வழிநடத்த வேண்டும். பன்னீர் செல்வம் மாதிரி பார்ப்பண ஆதரவு தேவர் சாதிக்காரர்களும் பார்ப்பணர்களால் நாம் பின்னோக்கி தள்ளப்பட்டோம் பின்னோக்கி தள்ளப்படுவோம் என்பதை உணர்ந்து இனிமேல் பார்ப்பணர்களை தலைவராக்கி பார்க்கும் எண்ணத்தை (ஒரு பார்ப்பண நடிகரை இவர்கள் இப்போது வளர்த்து கொண்டிருக்கிறார்கள்)விட்டு விட வேண்டும்

    ReplyDelete
  3. Thirumathi Sasikalavai Thiru Sasikala endru kurippittulleerkal endral athil aayiram porul erukkum. Aanal purinthukolla mudiyavillai. Nandri Aiya pathivukku.

    ReplyDelete
  4. உங்கள் கருத்து எல்லாவற்றையும் ஏற்கிறேன். அனால் ஆசிரியர் வீரமணி ஐயா அவர்களின் கருத்தில் சற்று அவசரமோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

    ஒடுக்க பட்டவர்களுக்காக குரல் கொடுப்பதே சமூக நீதி. சசிகலா எந்த விதத்தில் ஒடுக்கப்பட்டார்? ஆங்காகே வரும் ஒன்று இரண்டு குரல்கள் சசிகலா போன்ற அதிகார வர்கத்தை ஒடுக்கிவிடுமா? இந்த குரல்கள் அ.தி.மு.க வின் அதிகார மையத்தில் இருக்கும் செயலாளர்களிடம் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தி விடுமா ?

    ஆசிரியர், உங்களை போன்ற வர்களை பின் பற்றி தான், உங்கள் பேசிச்சுக்களால் ஈர்க்கப்பட்டு தான் எங்களுக்கு சமூக நீதி பற்றிய பார்வையே வந்தது. என்னை பொறுத்த வரை பார்ப்பனீயதின் உச்சம் காலில் விழ வைப்பது. ஜெயலலிதாவுக்கு சில வருடங்கள் தேவை பட்டன. சசிகலா நான்கே நாட்களில் சாதித்து விட்டார்.

    மன்னிக்கவும், ஆசிரியர் மற்றும் உங்கள் பேச்சுக்களை வாரம் ஒரு முறையாவது கேட்கும் எனக்கு ஆசிரியரின் கருத்தை ஏற்பதற்கு கசப்பாகதான் இருக்கிறது.

    ReplyDelete
  5. மக்களிடம் வெற்றிப் பெற்ற . அரசியல் தலைவர்கள், பின் வரும் இரு பெரும் பண்புகளை கொண்டிருப்பார்கள். அதனை உலக அரசியலிலும் காணலாம்.

    1.சிறந்த பேச்சாற்றல் – (Good Communication) – இதை தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி,ஆர், அம்மையார் ஜெயலலிதா – இவர்களிடம் காணலாம். இவர்கள், தான் கொண்டுள்ள கொள்கைகளை, மக்களுக்கு அறியும் வண்ணமும், எதிர் கருத்தாளிகளுக்கு புரியும் வண்ணமும் பேசுவதில் வல்லவர்கள். இதற்கு, அறிவு, நுண்ணிய நுட்பம், கடும் உழைப்பு தேவை.

    2.மக்கள் செல்வாக்கு: இதை உருவத்தையும், உள்ளத்து மாண்புகளையும் உறுதுணயாகக் கொண்டு பெறப்பட்டிருக்கும்.மேற் கூறிய தலைவர்கள், இதில் வல்லவர்களாக இருப்பதை உணர முடிகிறது.

    இந்த இரண்டிலும் சாதித்துள்ளவர்கள், நிர்வாகத் திறன் என்பது அவர்களின் Cup of Tea.

    அந்த பண்புகள் இல்லாத நிலையில், எவரெனும் கற்பிதங்கள் மூலம் தலைவரானால், வெகு விரைவில் விளைவுகள் தானாகவே வெளிப்படும். ஆக பொது தேர்தல் தானாகவே வந்து விடும்.

    ReplyDelete
  6. அய்யா.. உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிவு வந்தது மிகவும் அதிர்ச்சியைத் தருகிறது. இந்த அரசுக்கு ஐந்து ஆண்டுகள் ஆள மக்கள் வாக்களித்துள்ளார்கள். அப்படி இருக்கும்போது ஆறு மாதங்கள் மட்டுமே சென்றுள்ள நிலையில் மறு தேர்தல் என்பது சரியா? எத்தனை காரணங்கள் சொன்னாலும் மறு தேர்தல் என்பது சரியான தீர்வாகி விடாது. இதே நிலைமையில் தற்போது திமுக ஆட்சியில் இருந்திருந்தால் இப்படி மறு தேர்தல் தேவை என்று சொல்லியிருப்பீர்களா?

    ஒரு கட்சிக்கு யார் தலைமை என்பதை அந்தக் கட்சிதான் எடுக்குமே ஒழிய மற்றவர்கள் கருத்து சொல்வது சரியாகாது. அவர் இதுவரை தேர்தலை சந்திக்கவில்லை என்று சொல்வது எப்படி நியாயமாகும்? தேர்தலில் போட்டியிடாமல் கட்சித் தலைமைப் பொறுப்பை மட்டுமே வகிக்கும் வேறு யாரும் இல்லையா?

    இது சரியில்லை..தேவையற்றது தேர்தல்..அது முறையும் இல்லை.
    முதல்வரை தேர்ந்தெடுப்பது மக்கள் இல்லை. கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள்
    தகுதி இல்லாதவர்கள் முதல்வராக வந்தது சானகி மட்டுமல்ல.
    நிறைய பேர் உள்ளனர். அவர் கணவரும் தகுதியில்லாதவரே..
    பதவிக்கு வந்த பின் தகுதி திறமைகளை வளர்த்துக் கொள்வர்.
    பதவியும் அவர்களுக்கு தானாகவே வளர்த்து விடும். (ராப்ரி தேவி..?? )
    நாம் இந்தக் கருத்தை சொன்னால் அது உள் நோக்கம் கொண்டது என்று வெகு எளிதில் எவரும் சொல்வர். இப்போது தேர்தல் வந்தால் அது அவர்களுக்கு பின்னடைவு என்றும் அதனால் யார் நன்கு பயனடைவர் என்றும் அனைவரும் அறிவர். மேலும் வீண் பணச்செலவு..
    தமிழ் நாட்டு நிதிநிலை முன்னெப்போதும் இல்லாத அளவில் மிக மோசம்..

    (சசிகலாவுக்கு தகுதியில்லை என்பதோ உண்மைதான் ஆமோதிக்கிறோம்.
    எம்ஜியாருக்கும், ஜெயலலிதாவுக்கும் என்னய்யா தகுதியிருந்துச்சுன்னும் கேளுங்கப்பா!
    திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார் திமுக மேடைகளில் இடம்பிடித்தார் எம்ஜியார்.
    இந்த தகுதியே அவரை முதல்வராக்கி நாட்டை சீரழித்தார்.
    அவருடன் கட்டிப்பிடித்து டூயட் பாடியதைத்தவிர ஜெயலலிதாவுக்கு என்னய்யா தகுதி இருந்துச்சி?
    வாக்களித்த மக்களுக்கான தகுதியும் கணக்கில் கொள்ளப்படவேண்டும்தான்.
    சந்தேகப்படு அத்தனையையும் சந்தேகப்படு. - - - -( ராஜா ராசா முக நூல் பதிவிலிருந்து.).

    திரு. சசிகலா..?? - திருமதி..
    கணம்?? - கனம் (பிழைகள்)

    வே. பாண்டி - தூத்துக்குடி

    ReplyDelete
  7. இந்த ஆட்சி நிச்சயம் நல்லது செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு இப்போது வந்து இருக்கிறது. ஆம் பேருந்து கட்டணம் குறைந்து உள்ளது. அநியாய பேருந்து கட்டணம் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தது. இன்று ஏற்று கொள்ள கூடிய வகையில் பேருந்து கட்டணம் குறைந்து உள்ளது.

    ReplyDelete