தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday, 19 February 2017

நடந்ததும் நடந்திருக்கக் கூடாததும்!


 நேற்று (18.02.2017) தமிழ்நாடு சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற வேண்டிய நேரத்தில், ஒரு பெரிய துயரம் நடைபெற்று முடிந்திருக்கிறது. அது அனைத்துக்கும்  தி.மு.. மட்டுமே காரணம் என்பது போலச் சில டகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. அது குறித்த விரிவான நம் பார்வையை இங்கு பதிவிட வேண்டியுள்ளது.


தொடக்கத்திலேயே ஒன்றை ஒளிவு  மறைவின்றிக்  குறிப்பிட்டு விடுகின்றேன்.  நேற்று சட்டமன்றத்தில் தி.மு. உறுப்பினர்கள் சிலர் நடந்துகொண்ட விதம் விரும்பத்தக்கதாக இல்லை. அவைத்தலைவரிடம் நடந்துகொண்ட முறையும், அவர் இருக்கையில் உறுப்பினர்கள் இருவர் அமர்ந்ததும் நம் கழகத்தின் கண்ணியத்திற்கு ஏற்றதில்லை.   நாட்டு மக்களிடையே தி.மு.. அண்மைக்காலமாகப் பெற்றுவந்த மிகப் பெரும்  நற்பெயருக்கு ஊறு  விளைவிப்பதாகவே அவை அமைந்து விட்டன. குறிப்பாக, செயல்தலைவர் தளபதி அவர்களின் மிக நாகரிகமான நடவடிக்கைகளும், கண்ணியமான அறிக்கைகளும் அவருடைய புகழையும், அதன் வழிக் கழகத்தின் பெயரையும் பேரளவில்  உயர்த்தின. அதனைத் தொடர்ந்து கட்டிக் காத்துக் காப்பாற்றி, வளர்த்தெடுத்திட வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. 

அவைத்  துணைத் தலைவர் இருக்கையில் ஒருமுறை சசிகலா அமர்த்தப்படவில்லையா என்றும், அ.தி.மு.க.வினர் இதுபோன்ற கலவரச் செயல்களில் பலமுறை ஈடுபட்டதில்லையா என்றும் நண்பர்கள் கேட்கின்றனர்.  கண்டிப்பாக அவை உண்மைதான். எனினும், ஒரு தவறு இன்னொரு தவற்றை ஒருநாளும் நியாயப்படுத்தாது. அடுத்து, அவர்களின் தரத்திற்கு நாம் என்றும் இறங்கிப் போய்விடவும் கூடாது.

இக்கருத்துதான் தளபதிக்கும் ஏற்பட்டிருக்கக்கூடும். அதனால்தான் உடனடியாக அவைத்தலைவர் அறைக்குச் சென்று  வருத்தம் தெரிவித்துள்ளார்.  "தெரிந்தோ தெரியாமலோ, தவறுகள் நடந்திருந்தால்,அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்றுக்கொண்டு, அதற்காகத் திராவிட முன்னேற்றக்  கழகத்தின் சார்பில் மன்னிப்புக் கேட்பதாக" தளபதி அவைத்தலைவரிடம் கூறியது, முரசொலி (19.02.2017 - பக்.12) நாளேட்டில் இடம்பெற்றுள்ளது.  இது அவருடைய பெருந்தன்மையையும், நாகரிகத்தையும் காட்டுகின்றது.

ஆனால் இது குறித்து மட்டுமே பெரிதாகப் பேசும் சில ஊடகங்கள், மற்ற செய்திகள் குறித்து வாய் திறக்காமல் இருப்பது என்ன நியாயம்? நேற்று நடந்த அனைத்து நிகழ்வுகளையும் விரிவாகப் பார்த்தால்தான் உண்மை விளங்கும்!

(1)  சட்டமன்றம் தொடங்கிய பிறகுதான் சிக்கல்கள் தொடங்கின என்று கருதுவது உண்மையன்று. அதற்கு  முன்பே ஆளும் கட்சி தேவையற்ற செயல்களைத் தொடங்கி விட்டது. சட்டமன்றம் வந்த எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைவரையும்,  போர் நினைவுச் சின்னம் அருகிலேயே நிறுத்தி அனைத்து  மகிழுந்துகளையும்  சோதனையிட்டுள்ளனர். அது மட்டுமின்றி, அங்கிருந்தே நடந்துதான் போக வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனை அனைவரும் கண்டிக்க வேண்டாமா? 
ஒருவேளை, பாதுகாப்புக்  காரணம் கருதி அவ்வாறு செய்யப்பட்டது என்றால், அந்த விதி அனைவருக்கும் பொருந்த வேண்டாமா? ஆளும் கட்சியினரின் ஊர்திகள்  மட்டும் உள்ளே அனுமதிக்கப் பட்டனவே, அது எப்படி? அதுவும் அந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள், தொடக்கப்பள்ளி மாணவர்களைச் சுற்றுலா அழைத்துக் கொண்டு போவதைப்  போலல்லவா அழைத்து  வரப்பட்டனர். இப்படி ஆளுக்கு ஒரு விதி என்றால் யாருக்குத்தான் கோபம் வராது? 

(2)  மூடிய அவைக்குள் வாக்கெடுப்புக்கான கூட்டம் தொடங்கியது. ஊடகவியலாளர்கள், பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதியில்லை. அப்படியானால், உடனடியாகக் காணொளிப் படங்களைத் தொலைக்காட்சிக்காக யார் எடுத்தார்கள்? ஜெயா தொலைக்காட்சிதான்!  அவர்களுக்கு மட்டும் எப்படிச் சிறப்பு அனுமதி?  அவர்கள் எடுத்துத் தொகுத்த படம்தான் edited version) அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் ஓடியது. ஓரிரு தொலைக்காட்சிகள் தவிர ஏனையோர், "நன்றி - ஜெயா தொலைகாட்சி" என்று கூடப் போடவில்லை.  அவர்களிடமிருந்து வந்த படம் என்பதை வெளிட்டால்தானே, அது ஒருபக்கச் சார்புடையது என்பது மக்களுக்கு விளங்கும்!  

(3)  ரகசிய வாக்கெடுப்பு கோருவது எதிர்க்கட்சிகளின் உரிமை. இதுவரையில் அப்படி ரகசிய வாக்கெடுப்பு நடைபெறவில்லை என்பது சரியே. ஆனாலும், அசாதாரண நிலையில் அதற்கு அவைத்தலைவர் அனுமதி அளிக்கலாம். அந்த உரிமை அவருக்கு உள்ளது. அதனைத்தான் எதிர்க்கட்சியினர் கோரினர். அதனை ஏற்க மறுத்து, எதிர்க்கட்சியினர் எல்லோரையும்  வெளியேற்றிவிட்டு, வாக்கெடுப்பு நடத்தியது ஜனநாயகம் அன்று. ஆளும்  கட்சியினர் மட்டும் வாக்களிப்பதற்குச் சட்டமன்றம் எதற்கு? கூவத்தூர் விடுதியே  போது மல்லவா?


(4)  தான் தாழ்த்தப்பட்டவர் என்பதால்தான் தி.மு.க. அப்படி நடந்து கொண்டது என்று அவைத்தலைவர் தனபால் சொல்வது முற்றிலும் உண்மைக்கு மாறான ஒன்று. சமூக நீதிக்  கொள்கையில் எப்போதும் உறுதியாக இருக்கும் கட்சி தி.மு.க. என்பது அனைவரும் அறிந்த ஒன்று.  மேலும் இந்தக் குற்றச்ச்சாற்றை அவைத்தலைவர் இரண்டாவது முறையாகக் கூறுகின்றார் என்பதை நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.  

அ.தி.மு.க.வின் சார்பில் அவர் வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிட்ட நேரத்தில், அவர் கட்சிக்காரர்கள்  மீதே அவர் முதல் முறை அந்தக் குற்றச்ச்சாற்றை முன்வைத்தார். ."இவர் எங்களைக்  கவனிப்பதே இல்லை. வேலை செய்யும் எங்களுக்கு உணவு கூடக்  கொடுப்பதில்லை" என்று ஜெயலலிதாவிடம் அன்று அ.தி.மு.க.வினர் குறை கூறினர். உடனே அவர் தனபால் அவர்களை அழைத்து விசாரித்தார். அதற்கு அவர் சொன்ன விடை, "அம்மா, நான் தாழ்த்தப்பட்டவன் என்பதால், என் வீட்டில் உணவு உண்ண இவர்கள் தயங்குகின்றனர். என்னைத் தாழ்வாகப் பார்க்கின்றனர்" என்பதுதான். எனவே சாதியை  ஓர் ஆயுதமாக இவர் பயன்படுத்துவது தெரிகிறது.

அருந்ததியர் சமூக மக்களுக்கு, சில எதிர்ப்புகளையும் மீறி, உள் ஒதுக்கீடு கொடுத்தது தி.மு.க. ஆட்சிதான். அத்தகைய கட்சியை  இவர் குறை சொல்வதை அரசியல் பார்வை உடையவர்கள் நம்ப மாட்டார்கள். 

(5)  தங்கள் உறுப்பினர்கள் சிலரின் செயல்களுக்காகத் தளபதி ஸ்டாலின் வருத்தம் தெரிவித்தார். ஆனால் இப்போது வரையில், தி.மு.க. உறுப்பினர்களிடம், சட்டமன்றத்தில் சட்டத்திற்குப் புறம்பாகவும், வன்முறையாகவும் நடந்து கொண்டதற்கு ஆளும் கட்சியிடமிருந்து ஒரு வருத்தமும் வெளிப்படவில்லை.   

இத்தனை உண்மைகளையும் மறைத்துவிட்டு, தி.மு.க. மீது மட்டும் பழிபோடுவது உள்நோக்கம் உடையதாகத்தானே இருக்க முடியும்?.  
11 comments:

 1. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு நமக்கு மட்டும்தானா ்
  கடமை மறக்கும் பத்திரிகை, செய்தி சானல்கள்,
  கண்ணியம் மறக்கும் நெறியாளர்கள், கட்டுப்பாட்டை இழந்த சபாநாயகர் அனைவரும் குற்றவாளிகளே.

  ReplyDelete
 2. மரியாதைக்குரிய மாண்புமிகு சட்டபேரவை தலைவர் அவர்கள், தன பதவியைபயன்படுத்தி ஊரார் சொத்தை கொள்ளையடித்த A1 ஜெயலலிதாவை இதயதெய்வம் புரட்சி தலைவி என்று புகழ்வதைவிட கேவலம் எதுவுமில்லை.

  ReplyDelete
 3. மிகச்சரியாகச் சொன்னீர்கள் அய்யா.ஊடகங்களின் செயல்பாடும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதாகவே உள்ளது.அதே கட்சியைச்சார்ந்தவரே நடுவராக செயல்பட்டால் எப்படி நேர்மை இருக்கும்,நீதி கிடைக்கும்.அதிமுகவின் நாடகம் பகிரங்கமாக அரங்கேற்றப்பட்டது என்பதே முற்றிலும் உண்மை. தங்களின் இந்த அறிக்கை மக்களுக்குச்
  சில உண்மைகளைப் புரியவைக்கும்.

  ReplyDelete
 4. Good article. Justice common for all. When heard about the winning of EPS, I got depression mentally. We have another four years. People should not forget anything. We want to see Thiru. M.K.Stalin as CM of TN.

  ReplyDelete

 5. ஒரு ஒழுக்கமற்ற அராஜக அரசு அமைந்திருக்கிறது ! நாகரீகமற்ற அவைத் தலைவர் தமிழ்நாட்டைத் தலை குனிய வைத்திருக்கிறார் !

  ReplyDelete
 6. ஸ்டாலின் கடைசியாக நேற்றைக்கு சொதப்பினார் என்றே சொல்ல வேண்டும்.
  //”அவர்கள் நாடாளுமன்றத்துக்கு போன போது வீதியில் போராடுவது போல பேசினார்கள்;மறுபுறம் வீதிக்கு விரட்டப்பட்ட போதோ நாடாளுமன்ற கண்ணியத்துடன் நடந்து கொண்டார்கள்”// மார்க்சின் வார்த்தைகள் இவை.இது ஸ்டாலினுக்கு எப்படி அருமையாக பொருந்தி வருகிறது பாருங்களேன்.

  கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டு நேரடியாக சட்டசபைக்கு பட்டியிலிருந்து வந்த ஆடுகளைப்போல அழைத்து வரப்பட்ட அதிமுகவின் எம் எல் ஏக்கள் சுய புத்தியோடு எந்த அச்சுறுத்தலுமின்றி வாக்களிக்க வேண்டும் என்பது தான் ஜனநாயகமாக இருக்க முடியும்.அதற்கு ரகசிய வாக்கெடுப்பு தான் வழி என்பது திமுகவின் கோரிக்கை எனும் போது மக்களின் எண்ணமும் அதுவாகவே இருந்தது.ஆக நீங்கள் சொன்ன ஒரு சில எல்லை மீறலை தாண்டி மக்கள் திமுகவுடன் மனதால் ஒன்றுபட்டனர். அதிமுகவின் அடிமைத்தனமான ’அமைதியை’ விட திமுக செய்த அமளியை மக்கள் ஏற்றுக் கொண்டனர்.நான் பேசிய பல திமுக எதிர்ப்பாளர்கள் கூட திமுகவின் அத்து மீறலை ஆயாசத்துடன் வரவேற்றனர்.ஏனெனில் சசி என்கிற குற்றவாளியின் பினாமி ஆட்சி வேண்டுமா இல்லையா என்ற போரட்டத்தில் ’எல்லை’ மீறல் பற்றி யாருக்கும் கவலை கிடையாது.யாராவது எதையாவது செய்து சசிகலாவை பதவிக்கு வரவிடாமல் செய்ய வேண்டுமே என்கிற தவிப்பு, அதற்காகவேனும் அவர் சிறைக்கு போக வேண்டுமென்கிற நிலையில் தீர்ப்பை எதிர்பார்த்தது, அதே நிலையில் சற்றும் தளராமல் சசிகலாவின் பினாமி ஆட்சி நிலை பெற்றுவிடக்கூடாது என்று வேண்டுதல் என அதிமுக தொண்டர்கள் உள்ளிட்டு மக்கள் மனம் விரும்பிய திசையில் தான் திமுக சென்றது.(ஆக சட்டமன்ற நிகழ்வுகள் ‘நாகரீகம்’ இல்லாமல் சிலர் நடந்து கொண்டதாக ஸ்டாலினும்,நீங்களும் வருத்தம் தெரிவிக்கும் ‘பண்பை’ மக்கள் கோரவில்லை.அதுபோகட்டும்)
  இந்த பிரச்சினை முடிந்து கவர்னரை பார்த்தது அரசியல் நடைமுறை. அதற்கப்புறம் யாரும் எதிர்பாராத வகையில் ஸ்டாலின் மெரினாவில் போய் உட்கார்ந்தார்.ஒரு மாதத்திற்கு முன் மாணவர்கள் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என எழுச்சி கண்ட மெரினா,தமிழகம் முழுவதும் ஒரு உணர்வெழுச்சி பரவ காரணமாக இருந்த அதே மெரினாவில் போய் உட்கார்ந்தார்.சில நிமிடங்களிலேயே மக்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே சென்றதை தொலைக்காட்சிகள் நேரடியாக காட்டின. திமுக கட்சிகாரர்களைத்தவிர பொதுமக்கள் அணிதிரண்டதையும் அவை அறிவிக்க தயங்கவில்லை.காவல்துறை கையை பிசைந்து ஸ்டாலினை கைதாகும் படி கிட்டத்தட்ட கெஞ்ச ஆரம்பித்தனர்.இப்போது ஸ்டாலின் மக்களுடன் சங்கமித்து அவர்களுடன் போராடும் அருமையான ஒரு வாய்ப்பு தன் கண்முன்னே தெரிந்த நிலையில் மார்க்சு சொன்ன பாரளுமன்ற கண்ணியத்துடன் ஒரு கனவானாக காவல்துறைக்கு ஒத்துழைப்பு தந்து வேனில் போய் உட்கார்ந்து கொண்டார்.அவர் வேனை முற்றுகையிட்டு கட்சியினர் மறியல் செய்யத்துவங்கினாலும் அவர் ‘அரெஸ்ட்’ என்கிற வார்த்தையே போதுமானது என்று மக்களுக்கு எதிர் திசையில் பயணிக்க முனைந்தார்.இப்படியாக மக்களுடனும் இளைய தலைமுறையோடும் கூடி கலக்கின்ற தன் மடி மீது விழுந்த அருமையான வாய்ப்பை கடற்கரை மணலை தட்டுவது போல தட்டி விட்டு போய் விட்டார்.
  நல்ல முக ஒப்பனையுடன் ரயில் நிலையத்தில் காவல்துறை உயரதிகாரிகள் பணிந்து கொடுக்கும் வரவேற்பை ஏற்று மகிழ்தல், அப்படியே சில முழக்கங்கள், போட்டோ, வீடியோ சடங்குகள் என்று ஒரு கண்ணியமான ‘அரெஸ்ட்’ ல் போய் ஒரு நல்ல கல்யாண மண்டபத்தில் சில மணி நேர கலந்துரையாடல் பின் வீடு திரும்பல்……… இந்த நடைமுறையில் போராடுவதை மக்கள் பார்த்து ரசிக்க வில்லை என்பதை மெரினா எழுச்சிக்கு பின்னரும் அவர் உனரவில்லையே?


  ReplyDelete
 7. அமெரிக்காவைப் பார் ; பிரிட்டனைப் பார் ; ஜெர்மனியைப் பார் ; பிரான்சைப் பார் என்பது போலக் காலமெல்லாம் எழுதியும் பேசியும் புலம்பியும் தீர்ப்பவர்கள் , உத்திரப்பிரதேச சட்டமன்ற ( கல்யாண்சிங்- ஜகதாம்பிகா பால்) நினைவினை/ நிகழ்வினை மறந்தது ஏனோ? திமுக எது செய்தாலும் குற்றம் என நினைப்பவர்கள் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் மறு கண்ணில் வெண்ணையும்( இரண்டுமே வேண்டாம்என்பது வேறு விடயம் )வைப்பவர்க்குச் சமம்.

  ReplyDelete
 8. தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களின் குரலை பிரதிபலித்த திமுக விற்கு மக்கள் மன்றத்தில் மதிப்பு உயர்ந்துள்ளது அதை ஜீரணிக்க முடியாததால் சில ஊடகங்கள் நஞ்சு கக்குகிறது

  ReplyDelete
 9. Tamilnadu MLAs were elected by public through the secret voting.The ruling party MLAs were kept secretly in a resort for ten days and that is the reason for opposition party to demand secret voting in the assembly.
  Even before inventing the paper we Tamilians practiced Kudavolai in electing village leader and the excavated items are quite evidence of this practice in Uthiramerur 1300 years ago.Our speaker conducted mockery of democracy in assembly

  ReplyDelete
 10. மதிப்புமிக்க பேராசிரியர் ஐயா அவர்களுக்கு வணக்கம். திமுக சார்பில் தாங்கள் செயல்பட்டாலும், திமுகவின் சட்டமன்ற செயல்பாடுகளை கண்டித்திருக்கும் தங்களின் நேர்மையை நான் வெகுவாக மதிக்கின்றேன். அருந்ததியர் அமைப்புகளே கூட, திமுக தாங்கள் சார்ந்திருக்கும் கட்சி என்பதால் துளி கூட மனசாட்சி இல்லாமல், ஒரு வார்த்தை கூட சட்டமன்றத்தில் நடந்ததை கண்டிக்காமல் முற்றும் முழுவதும் சபாநாயகரை கண்டித்தே அறிக்கைகைகள் வெளியிட்டிருக்கும் தருணத்தில், தாங்கள் அவற்றை கண்டித்திருக்கும் நேர்மையை உண்மையிலேயே வணங்குகின்றேன். ஐயா, இவ்விடயம் குறித்து நேற்று என்னுடைய முகநூலில் பதிவினை தங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புகின்றேன் (அவற்றை இங்கே பதிவிட்டால் நீளமாகிவிடும்). அப்பதிவில் யூகமாக ஒரு விடயத்தை குறிப்பிட்டிருந்தேன், அதாவது, “அவ்வளவு ஏன், அதிமுக கட்சிக்குள்ளேயே கூட அவருக்கு சாதி வெறி அவமரியாதைகள் இருந்திருக்கலாம். யாருக்குத் தெரியும்?” என்று. இதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று நீங்கள் பதிவு செய்திருக்கும் அதிமுக கட்சிக்குள் நடைபெற்ற சம்பவம் அமைந்திருக்கின்றது. ஆனால் அச்சம்பவத்தை ஐயா அவர்கள் முரணாக முடித்திருப்பதுதான் வியப்பாக இருக்கின்றது!! சாதியக்கொடுமை எத்தகையது என்பது பற்றியும், அதற்கான சம்பவங்களைப் பற்றியும் நான் சொல்லி ஐயா அவர்களுக்குத் தெரியவேண்டியதில்லை. பஞ்சாயத்து தலைவராக இருந்த பெண் அருந்ததியர் திருமதி. கிருஷ்ணவேணி அவர்கள் எத்தகைய சாதிய வெறிக்கு உள்ளாக்கப்பட்டார், எவ்வாறு அரிவாளால் வெட்டப்பட்டு ஒடுக்கப்பட்டார் என்பதெல்லாம் சாதி ஒழிப்பு சமூக நீதிப் போராளிகள் அனைவரும் அறிந்ததே. எவ்வளவு பெரிய பதவில் இருந்தாலும் அவர்கள் தலித்தாக இருந்தால் எத்தகைய அவமானங்களுக்கும், சாதி வெறி அவமரியாதைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர் என்பதும் தாங்கள் அறியாதது அல்ல. அப்படி இருக்கும் பொழுது, அப்படியான ஒரு சம்பவத்தை குறிப்பிட்டுவிட்டு அதற்கு நேர்மறையான “சாதியை ஆயுதமாக பயன்படுத்துகிறார்” என்ற முடிவுடன் அதை எழுதியிருப்பது எப்படி நியாயமாகும் ஐயா?

  ReplyDelete
  Replies
  1. நானும் இதை சுட்டிக்காட்டவேண்டும் என்று நினைத்தேன் நீங்கள் குய்ப்பிட்டுவிட்டீர்கள் . இந்த ஜாதிய கொடுமைகளை பொறுத்தவரை empathy அதாவது அவர்நிலையில் இருந்து பார்த்தால் தான் அந்த ஜாதிக்கொடுமை விலங்கும். அந்த வகையில் இது பற்றி நன்கு தெரிந்திருந்தும் சு ப வீ யின் அந்த கருத்து ஏற்புடையதல்ல. இன்றும் கூட எத்தனை திமுகக்காரன் தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டில் உணவருந்த முனைகிறான் என்று விரல்விட்டுகூட சொல்லிவிடமுடியாது

   Delete