தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 29 July 2017

தேச ஒற்றுமையைக் குலைக்கும் வந்தே மாதரம்!


தேசிய கீதம் ஜன கண மன என்றும், தேசியப் பாடல் வந்தே மாதரம் என்றும் சொல்கின்றனர். வந்தே மாதரம், தேசியப் பாடல் இல்லை, தேசிய ஒற்றுமையைக் குலைக்கும் பாடல்! 

19ஆம் நூற்றாண்டில் வங்கத்தில் வாழ்ந்த பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதி, 1882 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஆனந்த மடம்'  என்னும் நாவலில் அந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. அவர் நடத்தி வந்த  'பங்கதர்ஷன்'  என்னும் ஏட்டில் 1871 முதல் அவ்வப்போது அவர் எழுதிவந்த தொடர்தான் பிறகு, நூலாக வெளியாயிற்று. 


அவர் வாழ்ந்த காலத்திற்கும் ஒரு நூற்றாண்டிற்கு முன்பு நடைபெற்ற வைஷ்ணவ சந்நியாசிகள் கலவரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட நாவல் அது. அதனை ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தை ஊக்குவிக்கும் நாவலாக உருவகப்படுத்தினர். ஆனால் அந்தப் பொய் நெடுநாள் நிலைக்கவில்லை. 

அதனை அந்நாவலாசிரியரே மறுத்துவிட்டார். மறுக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. அவர் பிரிட்டிஷ் அரசின் கீழ் அதிகாரியாகப் பணியாற்றியவர். முதலில் துணை ஆட்சியராகவும், பிறகு துணை நீதிமன்ற நடுவராகவும் (Deputy Magistrate) இருந்தவர். அரசிடம் இருந்து நெருக்கடி வந்தவுடன், பதறிப்போய், இரண்டாவது பதிப்பில் மீர் ஜாபர் என்னும் நவாபுக்கு எதிரான நாவல் என்று கூறிவிட்டார். அது மட்டுமின்றி, ஆங்கிலேயர்கள் எப்போதும் நமக்கு நண்பர்கள், முஸ்லிம்கள்தான் நம் எதிரிகள்  என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அந்த வந்தே மாதரம் பாடலே, முஸ்லிம்களை எதிர்த்துப் பாடிச் செல்லும் பாடல்தான். வந்தே மாதரம் என்றால், தாயை வணங்குவோம் என்றல்லவா  பொருள் என்றால், ஆம், அதுதான் அதன் பொருள். ஆனால் எந்தத் தாயை என்பதில்தான் சிக்கல் இருக்கிறது. பாரதத் தாயைக்  கூட அன்று, ஜெகதீஸ்வரி, காளி, துர்கை ஆகிய மூன்று வடிவங்கள் கொண்ட இந்துக் கடவுளான தாயைத்தான் அப்பாடல் வணங்குகின்றது. இந்தக் கருத்தினை அந்தப் பாடலுக்கு இசையமைத்த  கவிஞர் ரவீந்திரநாத் தாகூரே தெளிவாகச்  சொல்லியிருக்கிறார்(The Hindu, 22.06.2015).

இதனை எப்படிப்  பிற மதத்தினரும், கடவுள் நம்பிக்கை அற்றவர்களும் ஏற்க முடியும்? இது எப்படித் தேசியப் பாடல் ஆகும்? 


நாட்டில் எவ்வளவோ சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு அரசு ஏன் இதுபோன்ற சிக்கல்கல்களை முன்னெடுக்கிறது? மக்களின் கவனத்தைத் திசை திருப்பத்தான்!

4 comments:

 1. ஒரு தப்பை திசைதிருப்ப இன்னொரு தப்பு.இது ஆதிக்க சக்திகளின் ஆலோசனைப்படி எம்ஜிஆர் கையாண்ட தந்திரம். இப்போது அவா.

  ReplyDelete
 2. மட்டுமல்ல உயர்நீதிமன்றம் தன்னிடம் ஒரு மதிப்பெண் கேட்டு வந்தவருக்கு உரிய தீர்ப்பை மட்டுமே கொடுத்திருக்க வேண்டும். தொடர்பேதுமின்றி வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக்கி இருக்கிறது. எதிர் கருத்து ஆட்செபனை ஏதுமுண்டா என ஒப்புக்கு கூட யாரையும் ஒரு சொல் கூட கேட்காமல் வந்துள்ள இந்ததீர்ப்பை அடாவடியானது என்றுதான் சொல்ல வேண்டும்

  ௮௦ ஆண்டுகளுக்கு முன்பே இதை பாட முடியாது என முசுலிம்கள் எதிர்ப்பு தெரிவித்தது நீதியரசருக்கு தெரியாதா?

  கடந்த பிப்ரவரியில் தேசிய பாட்டு என்ற ஒன்றே கிடையாது என உச்ச நீதி manram ஆணையிட்டிருப்பது அவருக்கு தெரியாதா

  நியாயமாக பார்த்தால் அவர் மீது நீதிமன்ற அவமமதிப்பு வழக்கு போட வேண்டும்.

  ReplyDelete
 3. திரு சுபவீ அவர்களே,

  தாங்கள் எழுதி இருப்பதில் கடைசீ வரியில் ஒரு பிழை இருக்கிறது. வந்தே மாதரம் பாட வேண்டும் என்ற நிபந்தனையை கொண்டு வந்தது அரசாங்கம் அல்ல, மதராஸ் உயர் நீதி மன்றத்தின் ஒரு நீதிபதியின் உத்தரவு.

  இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை இன்று பலர் சரியாக புரிந்துகொள்ளவில்லை, மேலோட்டமாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பது என் பார்வை. 'வந்தே மாதரம்' என்ற பாடலை விடுதலைப் போராட்டத்தில் பலர், குறிப்பாக மிதவாதிகள் என்று அழைக்கப்பட்ட காங்கிரஸ்-காரர்கள் (அவர்களும் விடுதலைப் போராளிகள் தான்)ஏற்கவில்லை என்பதெல்லாம் இன்று பலருக்கு தெரியாது. இதைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள பலருக்கு விருப்பம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இது ஒரு பெரிய சப்ஜெக்ட் என்பதால் நான் இதற்குள் இங்கு விரிவாக போக விரும்பவில்லை.

  ஆனால் இந்த 'வந்தே மாதரம்' இன்று மீண்டும் தலைதூக்கி இருக்கிறதென்றால் அதை ஹிந்துத்வா கொள்கையின் ஒரு வெளிப்பாடாகவே நான் பார்க்கிறேன்.

  ஹிந்துத்வா என்ற கொடிய நஞ்சு பலரை பாதித்திருக்கிறது. ஏன், உங்களையே பாதித்திருக்கிறது. பல முறை மேடைகளில் "கடவுளை வேண்டுமானாலும் நம்பி விட்டுப் போங்கள், சாதியை விட்டு விடுங்கள்" என்று சொல்லி இருக்கிறீர்கள். இது எவ்வளவு பெரிய compromise என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு பெரியார் வழிச் சிந்தனையாளரே அப்படிச் சொன்னால் மற்றவர்கள் கடவுளை நம்புவதில் என்ன வியப்பிருக்கிறது. திரு சுபவீ அவர்களே, ஒரு வேண்டுகோள். இனிமேல் பெறுந்தன்மையாய் concession கொடுப்பது போல் அப்படிச் சொல்லாதீர்கள். கடவுள் இல்லை என்றால் இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாய் நிற்க வேண்டாமா? இதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்வதா?

  ReplyDelete
 4. Country faith is far far better than God faith.
  The hand that serve for others are holier than the lips that pray for oneself.
  The existing India became one Nation only after the British unified the princely states by common convenient Tool of English language.
  The National Anthem is more than sufficient for this country.
  Bringing any song other than National Anthem might be dangerous to the integrity of the country.
  People who are willfully introducing and forcing others should think as Ceaser's wife should be away from the suspicion.

  ReplyDelete