தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 5 August 2017

'வீணை வித்வானா' அப்துல் கலாம்?ஒருவரின் அடையாளத்தை அழிப்பதென்பது அவரது வாழ்வின் பொருளையே அழிப்பதற்குச் சமம். அதுதான் அப்துல் கலாம் மணிமண்டபத்தில் நடந்திருக்கிறது! 

மறைந்த இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது, என் போன்றவர்களுக்கு பெரிய மாயை ஏதும்  இல்லை. அவர் பல சமரசங்களைச் செய்து கொண்டார் என்ற வருத்தமும் உண்டு. ஆனாலும், அவருக்கென்று ஓர் இடமிருக்கிறது. அந்த  உரிய இடம் கூட இப்போது மறுக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னால் குடியரசுத் தலைவர் பதவி வகித்த  எவருக்கும் இல்லாத செல்வாக்கு, அப்துல் கலாமுக்கு மக்களிடையே இருக்கிறது. குறிப்பாக, இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவரிடம் அப்படி ஓர் அன்பு வைத்திருக்கின்றனர். அவர் பெயரைக் குறிப்பிட்டால் போதும், மாணவர்கள் துள்ளி எழுந்து கைதட்டுகின்றனர். அப்படி ஒரு புகழ் அவருக்கு உள்ளது.

அதனால்தான், அவர் இறந்துபோன அன்று, எல்லாத்  தரப்பு மக்களும் வருந்தினார்கள். கடைகள். பல ஊர்களில், தாமாகவே அடைக்கப்பட்டன. இவையெல்லாம் வியப்பான செய்திகள்தான். அதே நேரத்தில், இறந்துபோன  ஒரு மனிதருக்காக ஏழை, பணக்காரர், நல்லவர், கெட்டவர்  எல்லோருமே வருத்தப்படுவதும்,  அனைத்துக் கட்சியினரும்,  மதத்தினரும் துயரம் கொள்வதும் ஒரு விதத்தில் ஆபத்தானது. எந்த ஒரு மனிதரும் எல்லோருக்கும் நல்லவராக இருக்க முடியாது. அப்படி இருந்தால், அவர் யாருக்குமே உண்மையாக இருக்கவில்லையா என்று ஐயம் கொள்ள இடம் உள்ளது.

இவையெல்லாம் ஒரு புறமிருக்க, இயல்பாகவே இஸ்லாமியர்களின் மீது பகை கொண்டுள்ள பாஜக, பிறப்பால் இஸ்லாமியரான அப்துல் கலாமை மட்டும் இப்படிக் கொண்டாடுவது ஏன் என்ற வினா எழுகிறது.

இப்போது கொண்டாடுவது இருக்கட்டும், அன்றே  எப்படி அவரைக் குடியரசுத் தலைவர் ஆக்கினார்கள் என்னும் கேள்வியும் இருக்கிறது.  அன்று அவர் பாஜகவினருக்குத் தேவைப்பட்டார். 2002 பிப்ரவரி குஜராத் படுகொலைகள் நடந்து முடிந்த நேரம் அது. அதே ஆண்டு ஜூலை மாதம்தான் அப்துல் கலாம் பதவி ஏற்கிறார். இஸ்லாமியர்களுக்குத் தாங்கள் எதிரானவர்கள் என்ற கறையைக் குறைத்துக் கொள்ள அன்று அவர் தேவைப்பட்டார்.  "பாருங்கள் ஒரு இஸ்லாமியரை நாங்கள், நாட்டின் மிக உயர்ந்த பதவியில் அமர்த்தியிருக்கிறோம்" என்று சொல்வதற்கு அது பயன்பட்டது.

அவர்களின் தேவையைக் கலாம் மிகப் பொருத்தமாக நிறைவேற்றினார் என்பதையும் நாம் ஏற்க வவேண்டும். பதவி ஏற்பதற்கு முன், நேர்காணலில் அவர் சொன்ன வரிகள் "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது...." என்று தொடங்கும் வரிகள்தாம்! கீதையின் வரிகள் என்று மக்களால் நம்பப்படும் வரிகள் அவை! குஜராத்தில் நடந்தவைகள் எல்லாம் நன்றாகவா நடந்தன என்று நம்மில் பலரும் கேட்கத் தவறிவிட்டோம்.

பதவிக்காலம் முடிந்த பின்னரும், ஈழச்  சிக்கல், அணு உலை எதிர்ப்பு ஆகியனவற்றில் அவர் மக்களுக்கு ஆதரவாக இல்லை. வெகு மக்களின் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை எதிர்த்து, அரசுக்கு ஆதரவாகவே அவரின் குரல் ஒலித்தது.

எனவே, அப்துல் கலாம் என்னும் மனிதரைக் கொண்டாடுவது பாஜகவிற்குப் பல வகையிலும் உதவியாக இருந்தது, இருக்கிறது. அதனால்தான் மணிமண்டபம் கட்டி, அதனைத் திறக்க பிரதமர் மோடியே நேரில் வருகின்றார். அந்த மண்டபத்திலாவது, அவரின் முதன்மை அடையாளத்தைக் காட்ட வேண்டாமா? ஒரு குடியரசுத் தலைவரின் அல்லது  அறிவியல் அறிஞரின் தோற்றம்தானே  அங்கு இடம் பெற்றிருக்க வேண்டும்? 

வீணை வாசிப்பது போன்ற ஒரு தோற்றம், அருகில் பகவத் கீதை புத்தகம் என்றால், எவ்வளவு பெரிய மோசடி இது! அவர் என்ன வீணை வித்வானா?? கேட்டால், அவருக்கு வீணை மீட்டத் தெரியும் என்றும், அதில் அவருக்கு ஈடுபாடு உண்டு என்றும் கூறுகின்றனர். அது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் அதுவா அவரது அடையாளம்?

ஒரு வேளை,  ராஜாஜிக்குப் புல்லாங்குழல் இசைப்பதில் பயிற்சியும், ஈடுபாடும் உண்டென்று வைத்துக் கொள்வோம்.  அதற்காக அவர் புல்லாங்குழல் வாசிப்பது போல எல்லா இடங்களிலும் சிலை வைப்பது பொருத்தமானதாக இருக்குமா? பெரியாரைப் பெரியாராகவும், ராஜாஜியை ராஜாஜியாகவும் காட்டுவதுதானே நேர்மை? யாருடைய அடையாளத்தையும் அழிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை.

கடைசியாக மோடியின் அறிவிப்பைப் பாருங்கள். ராமேஸ்வரத்திலிருந்து அயோத்திக்குத் தொடர்வண்டி விடப்படுமாம். அதாவது, இஸ்லாமியர்களே, நீங்கள் இனிமேல் உங்களின் மெக்கா, மதீனா பயணத்தைக் கைவிட்டுவிட்டு, காசி ராமேஸ்வரம் பயணத்திற்குத் தயாராகுங்கள் என்கிறார் மோடி!  


6 comments:

 1. மீனவர்கள் சுடப்படடபோதும், சென்னையில் வெள்ளம் வந்தபோதும், கூடங்குளம் அனு உலை எதிர்ப்பதாகவும், காஷ்மீர், குஜராத் கலவரங்களுக்காகவும் அவர் கொடுத்த அறைகூவல்கள் மறக்கவே முடியாது! அட போங்கப்பா!அவர் இன்னொரு ரப்பர் ஸ்டாம்ப்பா இருந்தார்.

  ReplyDelete
 2. திரு சுபவீ அவர்களே,

  ஹிந்துத்வா என்ற விஷத்தை பல மறைமுகமான வகையில் தந்திரமாக மக்கள் மனதில் புகுத்த பார்க்கின்றன ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜா.கா; இந்த அப்துல் கலாம் நிகழ்வு ஒரு உதாரணம். அவர்கள் ஏதோ அரசியல் சாசன சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பது போலவும், ஹிந்துத்வா அரசியல் சாசன சட்டத்தின் கட்டமைப்புக்குள் அடங்கியது என்பது போலவும் பொய்யான தோற்றத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். இதை வானதி ஸ்ரீநிவாசன் சமீபத்தில் ஒரு விவாதத்தில் சொன்ன பொது நீங்கள் மறுத்து பேசவில்லை; நேரமின்மைக் காரணமாக இருக்குமென்று நினைக்கிறேன். அந்த வாதத்திற்குள் ஒளிந்திருக்கும் சூட்சமத்தை நீங்களே புரிந்துகொள்ள தவறி விட்டீர்கள் என்று நான் நினைக்கவில்லை.

  ஒரு நாளும் ஹிந்துத்வாவும் மதச்சார்பின்மையும் இணக்கமானவைகள் அல்ல. அவை இரண்டும் நேர் முரணான சித்தாந்தங்கள்.

  மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக ஹிந்து மத நம்பிக்கை இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் ஹிந்துத்வத்துக்குள் ஒளிந்திருக்கும் தந்திரத்தை புரிந்துகொள்ளவேண்டும். மத நம்பிக்கை அவர்களுடைய கண்களை மறைத்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஹிந்துத்வா என்ற சாகச வலையில் சிக்கிக்கொள்ளாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

  அன்புடன்,

  சுரேஷ்

  ReplyDelete
 3. 80,000 போர்வீரர்களை கொண்ட தென் அமெரிக்க அரசரை வெறும் 160 ஸ்பானியர்கள் போரில் வெல்கிறார்கள்.
  பல லட்சம் போர்வீரர்கள் நிறைந்த நிலையான படை கொண்ட திராவிட போர்வீரர்களை (அசுரர்களை)வெறும் ஆயிரம் போர்வீரர்கள் கொண்ட நாடோடி ஆரியப்படை வெல்கிறது.
  இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியது... இரும்பு ஆயுதங்கள்,வில் அம்புகள்,குதிரைகள், எதிரிகளிடம் விதைத்த இதிகாச புராண நம்பிக்கைகள்.
  இன்று எல்லா காரணிகளும் அசுரருக்கும், ஆரியருக்கும் சமமாக ஆகிவிட்டது.
  ஆனாலும் ஆரியர் ஆள்பவர்களாகவும்,அசுரர்கள் அடிமைகளாகவும் உள்ளனர்.காரணம்..... ஆரியரின் இதிகாச புராண நம்பிக்கைகள் இன்றுவரை அசுரர்களை அடிமையாக வைத்துள்ளது.திராவிடர்களின் கைகளுக்கு அல்ல மூளைக்கு விலங்கிட்டுவிட்டார்கள்.இதுவும் அதில் ஒரு வகையறா.

  ReplyDelete
 4. கலாமுக்கு கறி வெட்ட தெரியும் என்று கத்தியோடு சிலை அமைக்காமல் விட்டார்களே அய்யா !. மோடி என்னும் மாய நதி ஒன்று இன்னும் எங்கெல்லாம் பாய போகிறதோ...

  ReplyDelete
 5. "கலாம் மீது, என் போன்றவர்களுக்கு பெரிய மாயை ஏதும் இல்லை. அவர் பல சமரசங்களைச் செய்து கொண்டார் என்ற வருத்தமும் உண்டு"...எனக்கும்.
  ஊர்சுற்றும் பிரதமராலோ இல்லையோ போர் வரும் அபாயமுள்ளது. அவ்வாறுவந்தால் அணுகுண்டெல்லாம் தேவையில்லை, சும்மா ஒரு சாதாரண குண்டை அனஊலைமேல் போட்டால் போதும் தமிழத்தை அழிக்க. அணு உலைகளையும் என்னை கிணறுகளையும் ஏன் தமிழ்நாட்டில் அமைக்கிறார்கள் என்று தெரிகிறதா? இதில் பாஜக வுக்கும் காங்கிரசுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இரண்டுகட்சிகளுக்கும் தமிழன் என்றால் இளக்காரம், ஓரவஞ்சனை. இவர்களை மிரட்டி பணியவைத்து காரியம் சாதிக்க இன்று வலிமையான மாநில அரசு இருந்தும், முதல்வரும் மந்திரிகளும் அடிமைகளாக உள்ளனரே. மோடியிடமும் பேடியிடமும் சிக்கி சீரழியவேண்டியதுதான் தமிழனின் தலைவிதியோ.
  மாட்டுக்கு வெகுண்டெழுந்த மக்கள் நீட் மற்றும் இன்னபிற அநீதிகளுக்கு எதிராக வெகுண்டெழாததற்கு காரணம் என்ன ? பாதுகாப்புடன் சகல சௌகரியங்களுடன் செய்வதல்ல புரட்சி, தடையை மீறி போராடுவதே புரட்சி.

  ReplyDelete