தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday, 27 March 2018

ராகவன் கோபம் நியாயம்!



பாஜக செயலாளர்களில் ஒருவரான திரு கே.டி. ராகவன் அவர்கள், தொலைக்காட்சிகளில் பேசும்போது, தந்தை பெரியார் அவர்களை, .வி. ராமசாமி என்றுதான் குறிப்பிடுவார். கலைஞரைக் கூட, கலைஞர்  என்று குறிப்பிடுவார். ஆனால் பெரியாரை மட்டும் அப்படிக் கூறவே மாட்டார். திரு ஹெச்.ராஜாவும் அப்படித்தான்அது குறித்து நம் நண்பர்கள் சிலர் தேவையில்லாமல் கோபப்படுகின்றனர். இது தேவையற்றது. அய்யாவின் பெயர் ராமசாமிதானே! அவர் பெயரைச் சொல்லி அவரை அழைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

அப்படியானால், சங்கராச்சாரியார்களைஜெயேந்திரன், விஜேயேந்திரன் என்று அவர் பெயர் சொல்லி அழைப்பதில்லையே என்கின்றனர். தேவையில்லை, அது அவரவர் விருப்பம்நாம் பெரியாரால் பயன் பெற்றோம். அதனால் அவரை அப்படி அழைக்கின்றோம். அவர்கள் சங்கராச்சாரியார்களால் பயன் பெற்றார்கள். எனவே அவர்கள் அப்படி அழைக்கின்றனர்.


அவர்கள் பெரியாரால் பயன் பெறவில்லை என்பது மட்டுமில்லை. தாங்கள் பெற்றிருந்த சமூக அதிகாரத்தையும், பாவம்இழந்தார்கள். அந்தக் கோபம் அவர்களுக்கு  இருக்கத்தானே செய்யும். நினைத்துப் பாருங்கள் என் தாத்தா அவர் தாத்தாவைச் 'சாமி' என்றுதான் அழைத்திருப்பார். அவர் தாத்தாவைப் பார்த்ததும் என் தாத்தா, துண்டை எடுத்துக் கக்கத்தில் வைத்திருப்பார்.

ஆனால் இன்றோ, நான்  அவரைச் சாமி என்று அழைப்பதில்லை. நண்பர் ராகவன் என்று அழைக்கிறேன். அவருக்குச் சமமாக ஒரே இருக்கையில் அமர்கிறேன். இதுவெல்லாம் அவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தத்தானே செய்யும்! பெரியார் மாதிரி ஒருவர் பிறக்காதிருந்தால், திரு ராகவன் சோபாவில் அமர்ந்திருக்கஇந்நேரம் நானும், அருள்மொழி போன்றவர்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தரையில் அமர்ந்துதானே வாய்பொத்திப் பேசியிருப்போம். தொலைகாட்சி நெறியாளரும், அவாளாக இல்லையென்றால்,    எங்கள் பக்கத்தில் தரையில்தான் அமர வேண்டியிருக்கும்!

அந்தக் காலமாக இருந்தால், ராகவன் என்னைப்  பார்த்து, வயது வித்தியாசம் எல்லாம் ஒரு பொருட்டென்று கருதாமல், "என்னடா அம்பி வீரபாண்டியன்,எப்படியிருக்கே?' என்றுதானே கேட்டிருப்பார். இப்போது 'அண்ணன் எப்படியிருக்கீங்க?' என்று அன்போடு (?) கேட்கிறாரே! இத்தனை மாற்றங்களுக்கும் இந்தப் பெரியார்தான் காரணம் என்கிறபோது, அவருக்குக் கோபம் வரத்தானே செய்யும்? அதில் என்ன தவறு

இவ்வளவு சமூகப் பெருமைகளையும் தாங்கள்  இழப்பதற்குக்   காரணமாக இருந்த ஒருவரைப் போய் அவர் பெரியார் என்று அழைக்க வேண்டும் நாம் எதிர்பார்ப்பது வன்முறை இல்லையா? ஆனாலும் என்ன ஒரு பெரிய இடைஞ்சல் என்றால். நம் அய்யாவின் பெயரிலேயே 'சாமி' இருக்கிறது. அதனால் வேறு வழியின்றி. நம் அய்யாவை அவர்கள் இப்போது சாமி, சாமி என்று அழைக்க வேண்டியிருக்கிறது. அதனையும் விட்டுத் தொலைக்க ஏதேனும் வழி கண்டு பிடித்து விடுவார்கள்.

ராகவன் கெட்டிக்காரர், புத்திசாலி. எப்படியாவது இந்தப் பெயரை ஒலிக்காமல் இருக்க ஒரு வழி கண்டுபிடித்து விடுவார். இல்லையானால், சாமி என்று அழைப்பதை விட, பெரியார் என்றே  சொல்லித் தொலைத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தாலும் வந்துவிடுவார்

அவர் உடல்மொழியில் ஓர் ஆணவம் இருக்கிறது. கேலியும், கிண்டலுமாகப் பேசுகின்றார் என்கின்றனர்எல்லாவற்றையும் இழந்துவிட்ட பிறகு, அவைகளைக் கூட அவர்  வைத்துக் கொள்ளக் கூடாதா? இதெல்லாம் என்ன நியாயம்? அவர் மனநிலையை, அவர் கோபத்தை, அவர் பக்கம் உள்ள நியாயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தங்கள் தாத்தா காலத்தில் இருந்த நிலைமை, மீண்டும் தங்கள் பேரன்கள் காலத்திலாவது வந்துவிடாதா என்று அவர்கள் ஏங்குகின்றனர். அந்த ஏக்கம் அவர்களுக்கு இருக்கக் கூடாதா என்ன?

சரி, ராமரவி என்று ஒருவர் வேறு ராமசாமி நாயக்கர் என்று தொலைக்காட்சிகளில் பேசுகிறாரே, அது ஏன் என்று கேட்கின்றனர். ஐயோ அவர் ஒரு அப்பாவி, நம் பிள்ளை அவர். நாய்க்கர் என்பது ஆள் பெயரா, சாதி பெயரா என்று கூடத் தெரியாமல், விவாதங்களில் விழிக்கின்றார். அவர் விழிப்பதில் இருந்தே தெரியவில்லையா, அவர் நம் பிள்ளை என்று. நண்பர் ராகவனிடம் இருப்பது போல, ராமரவியிடம் அந்த எள்ளல், ஏகடியம் எல்லாம் இருக்கிறதா பாருங்கள். ஏதோ உணர்ச்சி வயப்பட்டு அல்லது வயப்பட்டதைப் போல ஒரு தோற்றம் இருக்கும், அவ்வளவுதான். உண்மையில் ராகவன் கோபத்தில் இருக்கும் நியாயம், ராமரவி கோபத்தில் இல்லை.அதில் ஒரு நன்றியுணர்ச்சி மட்டும் குறைகிறது. மற்றபடி தப்பு ஏதும் இல்லை.

"கணவனை இழந்ததாலே கண்ணகி கோபம் நியாயம்" என்பார் கவிஞர் தணிகைச் செல்வன்அனைத்தையும் இழந்ததால், ராகவன் கோபம் நியாயம், நியாயம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

இருக்கட்டும், சங்கராச்சாரியார் போன்றவர்களால்தானே நாம் சமூக இழிவைப் பெற்றோம். அப்படியிருக்க, நண்பர் ராகவனைப் போலநீங்களும் அவர்கள் பெயர்களைக் குறிப்பிடும்போது, சங்கரன், விஜேயேந்திரன் என்று குறிப்பிட வேண்டியதுதானே, பாரதியார் என்று ஏன் சொல்ல வேண்டும், அவர்களைப் போலவே கவிஞர் சுப்பிரமணி என்று சொல்ல வேண்டியதுதானே என்று நண்பர்கள் கேட்கின்றனர். அது எப்படி முடியும்? நாம் நாகரிகம் தெரிந்தவர்களாயிற்றே!


6 comments:

  1. அருமை

    ReplyDelete
  2. Periyar is such a great leader bramins will always oppose him.All dravidians must realize the fact that Thanthai periyar did a great job for the dravids.If Thanthai Periyar had the media what we have today,the whole world would have become nathists. no religion could survive as his questions are of raw thought.very rare to see such a leader in this world.

    ReplyDelete
  3. அருமை. இப்படி வாழைப்பழத்தில் ஏற்றும் ஊசியை விட மென்மையாக அழுத்தமாக எழுதியதற்கு நன்றி.

    ReplyDelete
  4. ஒரு படத்தில் வடிவேல் மீது பஞ்சாயத்து நடக்கும். அதில் சத்தமாக பேசி மற்றவர்களைப் பேசவிடாமல் விரட்டி விட்டு தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களிலிருந்து தப்பிவிடுவார்.

    அதுபோல தொலைக்காட்சி விவாதங்களில் ராகவன், நாராயணன், ஆசிர்வாதம் போன்றவர்கள் குரலை உயர்த்திப் பேசி மற்றவர்களை பேசவிடாமல் செய்து விவாதத்தை நடத்தவிடாமல் செய்வதில் திறமைசாலிகள்.

    அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் உங்கள் நிதானமான பேச்சும் அறிவார்ந்த பதிலும் அதில் உள்ள கருத்தும் பல கோடி மக்களைப் போல என்னையும் வெகுவாகக் கவரும்.

    அந்தச் சிறப்புத் தன்மையை இந்தக் கட்டுரையிலும் பார்க்கிறேன். சரியான பதில்களை மட்டுமல்ல, அதை நகைச்சுவையோடு சொன்ன விதமும் அருமை. உங்கள் சேவை இந்த தமிழ்ச் சமுதாயத்துக்குத் தேவை. நன்றிங்க ஐயா.


    நீங்கள் மேலே கொடுத்துள்ள படத்தில் ஒரு குறை இருக்கிறது. சமிபத்தில் எச் ராஜோவோடு நடந்துவரும் ராகவன் நெற்றியில் பெரிய நாமம் இருப்பதைப் பார்த்தேன். அந்த படத்தை இங்கு போட்டிருக்கலாமே! அது அவருக்குப் பிடித்த விஷயம்தானே!

    ReplyDelete
  5. இறுதி வரிகள் சரியான பதிலடி வரிகள் ஐயா...!

    ReplyDelete