தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday 2 May 2018

கறுப்பும் காவியும் - 5 

இந்து முன்னணி  




தர்மம் காக்க, அதர்மம் அகற்ற என்னும் முழக்க வரிகளோடு கூடிய ஒரு கோயில் கோபுரமும், அதன் நடுவே இரண்டு வாள்களுமாய் அமைக்கப்பெற்ற முத்திரையுடன் இந்து முன்னணி தமிழக மண்ணில் பிறந்தது. இராம கோபாலன் அதன் நிறுவனத்  தலைவராக அறிவிக்கப்பட்டார்



தர்மம் என்பது வருணாசிரம தருமமே என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வருண தருமத்தை, ஆயுத வலிமை கொண்டு நிலைநாட்டுவோம் என்பதே அந்த முத்திரையின் அறிவிக்கப்படாத  உட்பொருளாக இருந்தது


வலதுசாரி இயக்கமான ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் பரிவாரங்கள் வன்முறையின்  மூலமே தம் கருத்தைக் கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கையுடையவை. அதன் தொடக்க காலத்திலிருந்தே அதற்கான ஆதாரங்கள் உண்டு. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கும் ஒரு தாய் இயக்கம் உண்டு. அதற்கு இந்து மகா சபை என்று பெயர். சாவர்க்கர், பி.எஸ்.மூஞ்சே போன்றவர்கள் அதன் தலைவர்கள்.1930 களில்  மூஞ்சே இத்தாலி  சென்று, அந்நாட்டின் அதிபராக இருந்த சர்வாதிகாரி முசோலினியைச் சந்தித்தார். அங்கிருந்த ராணுவப் பள்ளிகளைப்  பார்வையிட்டார். இந்தியாவிலும் இதேபோல, ராணுவ அமைப்புகளை உருவாக்க விரும்புவதாக மூஞ்சே முசோலினியிடம் கூறினார். இவை அனைத்தும் மூஞ்சேயின் நாட்குறிப்பில் உள்ள செய்திகள். முசோலினியைத் தான் சந்தித்தது பற்றித் தன் நாட்குறிப்பில் 13 பக்கங்கள் அவர் எழுதியுள்ளார்

இவ்வாறு ஆயுதங்களின் துணையுடன், உயர்வு தாழ்வு கற்பிக்கும்  இந்து மதத்தை இந்தியாவில் நிலைநாட்டப் பிறந்த ஆர்.எஸ்.எஸ்., தன் பரிவாரங்களாகப் பல துணை அமைப்புகளை உருவாக்கியது. அவற்றுள் ஒன்றுதான் தமிழ்நாட்டில் உண்டாக்கப்பட்ட இந்துமுன்னணி.

இந்து முன்னணியின் நோக்கங்களாகப் பல கோட்பாடுகள் வெளியிடப்பட்டன. அவற்றுள் முதன்மையானவை என்று கீழ்க்காணும் ஐந்தினைக் குறிக்கலாம்
   
   1. தமிழ்நாடு அறநிலையத் துறையைக் கலைத்துவிட்டு, இந்துக் கோயில்களை                                             இந்துக்களிடம் கொடுக்க வற்புறுத்துவது 

          2. இந்தியா முழுவதும் பொதுக் குடிமைச் சட்டம் (uniform civil code)  
              கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துவது  

           3. மத மாற்றத்  தடைச் சட்டத்தைத் தமிழகத்திலும் 
               கொண்டுவர அரசை வலியுறுத்துவது 

           4. பசுவதைத் தடுப்புச் சட்டம் கோருவது 

           5. காஷ்மீருக்குத் தனிச் சலுகைகள் தரும்  370 ஆவது பிரிவை நீக்கப்  போராடுவது 

மேற்காணும் நோக்கங்களை வெளிப்படையாக அறிவித்த இந்து முன்னணி, தன்னுடைய முதன்மைச் செயல் திட்டமாகப் பிள்ளையார் ஊர்வலத்தை நாடெங்கும் நடத்தத் திட்டமிட்டது

இந்து முன்னணியின் நோக்கங்களைக் கூர்ந்து கவனித்தால், அவற்றின் அடிப்படையிலேயே தமிழக அரசியலை அடுத்தடுத்த கட்டங்களுக்கு அவர்கள் நகர்த்த முயற்சி செய்தது  தெளிவாகத் தெரியும்இன்று பாஜக வின் தேசியக் செயலர்களில் ஒருவரான ஹெச். ராஜா அறநிலையத் துறைக்கு எதிராக அணி திரட்டுவது, இந்து முன்னணியின் பழைய வேலைத்  திட்டமே ஆகும்

மேலோட்டமாகப் பார்க்கும்போதுஇந்துக் கோயில்களை இந்துக்களிடம் கொடுங்கள் என்று கேட்பது நியாயம்தானே என்று தோன்றும். ஆனால் உண்மை அதுவன்றுஇந்தியாவிலும், தமிழகத்திலும் மிகப் பெரும்பான்மையினராக உள்ள இந்துக்களின் சொத்தாகிய கோயில்களை இந்துக்கள் என்ற பெயரில், வெறும் மூன்று விழுக்காடு  மட்டுமே உள்ள பார்ப்பனர்கள் அபகரிக்கும் திட்டமே இதுகோயில் என்று வந்துவிட்டாலே, கருவறை வரை செல்லக்கூடிய சமூக அதிகாரம் அந்தச் சாதியினருக்கு மட்டுமே உரியதாக உள்ளது. (இப்போது வந்து கொண்டிருக்கும் மாற்றங்களை அன்றைய நிலையுடன் ஒப்பிட முடியாது). எனவே கோயில்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டால் அவர்களின் ஆதிக்கமே  தலைதூக்கி நிற்கும்அரசின் பொறுப்பில் இருக்கும்போது கோடிக்கணக்கான மக்களுக்கும் பொதுவாக இருக்கக்கூடிய சொத்து, தனியாரிடம் சென்றபின், வெறும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு உரியதாகிவிடும். எனவே இந்தக் கோரிக்கை ஆபத்தானது.

பொது சிவில் சட்டம் என்பதும் நியாயம் போலத்  தோற்றம் அளிக்கக் கூடியது. ஆனால் அதுவும் ஒருதலைப் பட்சமானதே. குற்றவியல் சட்டம் இங்கு எல்லோருக்கும் பொதுவானதாகத்தான் இன்றும் உள்ளது. ஒரு கொலையை இந்து செய்தால் அதற்கு  தண்டனை இதுமுஸ்லீம் செய்தால் அதற்கு தண்டனை இது என்று எந்தப் பாகுபாடும் நம் குற்றவியல் சட்டத்தில் இல்லைஅப்படி ஒரு பாகுபாடு மனு நீதியில்தான் உள்ளது. சாதிக்கு ஒரு நீதி சொல்லும் சட்டம் அது. ஆனால் குடிமைச் சட்டத்தில் வேறுபாடு இருப்பதற்கு நியாயமான காரணங்கள் உண்டு. வெவ்வேறு மதத்தினர் வெவ்வேறு பண்பாடுகளைப்  பின்பற்றக் கூடியவர்கள். அப்படி இருக்கும்போது பொதுக் குடிமைச் சட்டம் என்பது எப்படிச் சாத்தியமாகும்

இது குறித்து இன்னும் விரிவாக நாம் பேச வேண்டியுள்ளது.

                                                                               (தொடரும்)


நன்றி: ஒன் இந்தியா

4 comments:

  1. Informative...awaiting next episode...

    ReplyDelete
  2. Please write an article on "what is social justice (samuga meethi)" as many people belonging to and benefited don't know the meaning. In particular students don't aware of it. Students are against reservation policy.

    ReplyDelete