தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday 9 May 2018

கறுப்பும் காவியும் - 6

முத்தலாக்



பொதுக் குடிமைச் சட்டம் (Uniform Civil Code) என்பது, எந்த ஒரு மதத்தினரும், தங்கள் நம்பிக்கை, தங்கள் மார்க்கம் ஆகியனவற்றைப் பொருத்திப் பார்க்க இயலா வண்ணம், ஒரே சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்னும் ஆணை. குறிப்பாக, திருமணம், மணமுறிவு, தத்து எடுத்தல், வாரிசுரிமை ஆகியனவற்றில் மதத்திற்கு மதம் மாறுபட்ட வழிமுறைகள் உள்ளன. அவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், ஒரே சட்டத்தை, அதாவது இந்துக்களின் சட்டத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று மறைமுகமாகச் சொல்வதுதான் அது. பொதுவெளியில் பொதுக் குடிமைச் சட்டம் என்று கூறினாலும், இந்துக் குடிமைச் சட்டம் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு, மற்றவைகளை ஒழித்து விடுவதே உள்ளார்ந்த நோக்கமாகும்.


மத மறுப்புத் திருமணங்கள் நடைபெறுமானால், அவற்றிற்கான பொதுச் சட்டம் இப்போதும் இருக்கத்தான் செய்கிறது. 1954 ஆம் ஆண்டு சிறப்புத் திருமணச் சட்டம் (Special Marriage Act, 1954) என்று அதற்குப் பெயர். ஜம்மு காஷ்மீர் தவிர, இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் இச்சட்டம் பொருந்தும். இச்சட்டத்தின் கீழ் மணம் புரிந்து கொள்வோர், எந்த மதச் சடங்கையும் விழாவில் பின்பற்ற வேண்டியதில்லை. இது ஒருவிதத்தில் பொதுக்குடிமைச் சட்டம். ஆனால் இதனை எப்படி, மதத்தை ஏற்றுக்கொண்டு, ஒரு மதத்திற்குள்ளேயே திருமணம் செய்து கொள்வோருக்குப் பொருத்திப் பார்க்க முடியும்?

எல்லோருக்கும் பொதுவான குடிமைச் சட்டம் என்பது, இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கே எதிரானது. அவரவர் நம்பிக்கையின்படி, அவரவர் மத வழிமுறைகளைப் பின்பற்றும் உரிமை உண்டு என்று அரசமைப்புச் சட்டம் சொல்லும்போது அதனை யார் மறுக்கமுடியும்?

இந்திய அரசியல் சாசனத்தின் 25வது பிரிவு இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் தாங்கள் விரும்பிய மதத்தை ஏற்க, பின்பற்ற, பரப்ப உரிமையளித்துள்ளது. இந்த அடிப்படையில் இந்தியாவில் உள்ள பல்வேறு மதத்தினரும் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை ஆகியவற்றில் தத்தமது தனியார் சட்டங்களைப் பின்பற்றுகிறார்கள். அதன் காரணமாகச் சில வேற்றுமைகள் இருக்கவே செய்யும்.

இஸ்லாமியர்கள் மட்டும் நான்கு பெண்களைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்பது என்ன நியாயம் என்று சிலர் கேட்கின்றனர். அவர்களுக்கு அந்த அனுமதி உள்ளது என்பது உண்மையே. என்றாலும், நடைமுறையில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு முஸ்லீம் ஆணும், நான்கு நான்கு பெண்களையா மணந்துள்ளனர்? நடைமுறையில் அனைத்து முஸ்லிம்களும் நான்கு மனைவியரோடு வாழவும் இல்லை. அனைத்து இந்துக்களும் ஒரே ஒரு மனைவியோடுதான் வாழ்கின்றனர் என்று சொல்வதற்கும் இல்லை.

நபிகள் காலத்தில், அது ஒரு போர்க்காலச் சமூகமாக இருந்ததன் விளைவாகவும், போரில் ஆண்கள் மட்டுமே ஈடுபட்டதாலும், ஆண்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து, பெண்களின் எண்ணிக்கை கூடுதலாகி விட்ட நேரத்தில், இந்தச் சமமின்மையை எப்படிக் கையாளுவது என்ற எண்ணவோட்டத்தில் இந்தத் தீர்வு எட்டப்பட்டிருக்கலாம்.

இந்துக்கள் போரில் ஈடுபடவே இல்லையா, இங்கும் ஆண்களின் எண்ணிக்கை குறைந்திருக்காதா என்ற வினா நியாயமானதே! அன்றைய சமூகத்தில் எல்லா மதங்களிலும் ஆண்களின் எண்ணிக்கையும், பெண்களின் எண்ணிக்கையும் சமமற்றே இருந்தன. இதற்கு இந்து மதமும் ஒரு தீர்வைக் கண்டது.

அந்தத் தீர்வுதான் 'ஸதி' என்னும் உடன்கட்டை ஏறுதல். கணவன் இறந்தவுடன், அவன் மனைவி அல்லது மனைவியரை, அவனை எரிக்கும் சிதை நெருப்பிலே இட்டு எரித்து விடுவது என்பதே, ஆண் பெண் எண்ணிக்கையைச் சமப்படுத்தும் தீர்வாக இந்து மதத்தில் இருந்தது.

கூடுதல் பெண்களை மணப்பது அல்லது கூடுதல் பெண்களை எரிப்பது - இவற்றுள் எது மனித நேயம் உடையது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டாமா?

ஆனால் நான்கு பெண்களை மணந்துகொள்ளும் சட்டத்தை, நடைமுறையில் அவ்வளவாக இல்லையென்றாலும், ஏன் இன்னும் இஸ்லாமியர்கள் வைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்னும் வினா சரியானதே. அதே போல, மணமுறிவு என்று வரும்போது, தலாக், முத்தலாக் என்பவை பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி இல்லையா என்ற வினாவும் ஏற்கத்தக்கதே!

1985 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் விவாதிக்கப்பட்ட வழக்கு ஷா பானு வழக்கு. மத்தியப் பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த அஹமத் முஹம்மத் கான் என்னும் வழக்கறிஞருக்கும், ஷா பானு என்னும் பெண்ணுக்கும் 1932இல் நிக்காஹ் (திருமணம்) நடைபெற்றது. 46 ஆண்டுகளுக்குப் பின், 1978இல், ஐந்து குழந்தைகளுக்குத் தாயான தன் மனைவி ஷா பானுவைத் தலாக் சொல்லி மணமுறிவு செய்துவிட்டார். ஷா பானுவிற்கு அப்போது வயது 62. அவருக்குக் கொடுக்க வேண்டிய தொகையினையும் (ரூ 200/) கணவர் நிறுத்தி விட்டார். இந்தக் கொடுமையை எதிர்த்து, ஷா பானு உச்ச நீதி மன்றம் சென்றார். நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, வழக்கை விசாரித்து, 1985 ஆம் ஆண்டு ஷா பானுவுக்கு ஆதரவாகத் தீர்ப்பு அளித்தது.

ஆனால் முஸ்லீம் பழமைவாதிகள் அத்தீர்ப்பைக் கடுமையாக எதிர்த்தனர். உடனே, அன்று ஆட்சியில் இருந்த ராஜிவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி, '1986 ஆம் ஆண்டு முஸ்லீம் பெண்களின் உரிமைப் பாதுகாப்புச் சட்டம், என்ற ஒன்றை நிறைவேற்றி, மணமுறிவு செய்யப்பட்ட இத்தா காலமான 90 நாள்களுக்கு மட்டும் தொகை வழங்கினால் போதும் என்று ஆக்கிவிட்டது. இது எப்படி முஸ்லீம் பெண்களுக்குப் பாதுகாப்பு என்று தெரியவில்லை.

ஆனால் இந்தச் சட்டத்தை, முற்போக்கு எண்ணம் கொண்ட கவிஞர் இன்குலாப் போன்ற முஸ்லீம் தோழர்கள் சிலரே எதிர்த்தனர். எனினும் எதிர்ப்பு எடுபடவில்லை.

அதே போல தலாக், அதிலும் முத்தலாக் போன்றவைகள் மாற்றப்பட வேண்டும் என்பதில் பொதுவானவர்களுக்குக் கருத்து வேறுபாடு இல்லை. ஆண்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் தலாக் சொல்லி மணமுறிவை அறிவிக்கலாம் என்பது போல, பெண்களும், ஜமாத் சென்று குலாஃ சொல்லி, ஒரே முறையில் மணமுறிவு பெற்றுவிடச் சட்டத்தில் இடமிருக்கிறது. ஆனால் பெண்களுக்கு அந்த உரிமை அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை என்பதுதான் வழக்கில் உள்ள உண்மை.

முத்தலாக் என்பது இஸ்லாமிய பெண்களின் மீது தொடுக்கப்படும் மிகப் பெரிய அச்சுறுத்தல் என்பதில் ஐயமில்லை. அதனை இஸலாமியப் பெண்களே இன்று வெளிப்படையாக எதிர்ப்பதோடு, அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லவும் துணிந்து விட்டனர். எனவே இஸ்லாமிய மக்களே, இந்தப் பெண்ணடிமைத் தனத்தை ஒழித்திட முன்வர வேண்டும். இதனைக் காட்டித்தான், கடந்த உ.பி. சட்டமன்றத் தேர்தலில், இஸ்லாமியப் பெண்களின் வாக்குகள் கூட, பாஜக விற்கு ஆதரவாக விழுந்துள்ளன என்னும் கருத்தை நாம் புறந்தள்ளிவிட முடியாது.

இஸ்லாம் மதத்திலும், கடந்த 20 ஆண்டுகளில் பல சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன என்பது உண்மை. முன்னைக் காட்டிலும் பல மடங்கு இஸ்லாமியப் பெண்கள் கல்வி நிலையங்களுக்கும், அலுவலகங்களுக்கும் வரத் தொடங்கியுள்ளனர் என்பது வெளிப்படை. இந்நிலை மேலும் வளர வேண்டும். மதம் எதுவாக இருந்தாலும், பாலின சமத்துவம் என்பதில் இனி வரும் காலம் சமரசம் செய்து கொள்ளாது, கொள்ளவும் கூடாது.

என்றாலும், இதனை முன்னிறுத்தும் பாஜக விற்கு மிகப் பெரிய உள்நோக்கம் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. முஸ்லீம் பெண்களின் மீது பரிவு கொண்டு முத்தலாக் தடை போன்றவற்றை பாஜக ஆதரிக்கவில்லை. இவைகளைக் காரணம் காட்டி, சிறுபான்மையினர் மீதான ஒரு வெறுப்பை வளர்த்துத் தன் வாக்கு வங்கியை உயர்த்திக் கொள்ள முடியுமா என்பதே இன்றைய மத்திய அரசின் நோக்கமாக உள்ளது.

இஸ்லாம். கிறித்துவ, சீக்கிய, பார்சி உள்ளிட்ட அனைத்து மதத்தினருக்கும் பொதுவான ஒரே குடிமைச் சட்டம் வேண்டும் என்று உரக்க முழக்கமிடும், இந்துத்வ வாதிகள், இந்து மதத்திற்குள் ஒரேமாதிரியான சமத்துவ நிலையைக் கொண்டு வந்து விட்டார்களா?

எல்லோருக்கும் ஒரே குடிமைச் சட்டம் என்பது இருக்கட்டும், இந்து மாதத்தில் உள்ள எல்லா சாதியினருக்கும் ஓரே சுடுகாடு உண்டா? எல்லாச் சாதியினரும் கோயில் கருவறைக்குள் செல்ல அனுமதி உண்டா? ஊரில் வாழ்வோர், சேரியில் வாழ்வோர் இருவருமே இந்துக்கள்தானே ...ஏன் ஒன்றாக வாழ முடியவில்லை?

எல்லா மதங்களிலும் சீர்திருத்தம் தேவைப்படுகிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் அதனைக் காரணம் காட்டி, சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்க முயல்வது ஏற்கத் தக்கதன்று. இதே நோக்கத்துடன்தான், இந்து முன்னணி, தன் நோக்கங்களில் ஒன்றாக, பசு வதைத் தடைச் சட்டம் என்பதையும் முன்வைத்தது. ஆனால் அதுவும் இங்கு எடுபடவில்லை.

1960களிலேயே வடநாட்டில் பசுவதைத் தடைச் சட்டத்திற்குப் பெரும் ஆதரவு இருந்த நிலையில், தமிழ்நாட்டில் இந்து முன்னணி முன் நிறுத்திய அதே திட்டத்திற்கு ஆதரவு கிடைக்கவில்லை.

காவிகளின் திட்டங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமைக்கு என்ன காரணம்? இங்கு ஏற்கனவே காலூன்றியிருந்த கறுப்புதான் காரணம்!

(தொடரும்)

நன்றிஒன் இந்தியா


2 comments:

  1. இரத்தினவேல்9 May 2018 at 15:35

    பேராசிரியர் சுப.வீ. அவர்களின் தெளிவான பார்வை.

    ReplyDelete
  2. முனைவர் சுபவீ அவர்களே, உங்கள் கருத்து மிக விரைவாக மக்களுக்குள் பரவவேண்டும்....
    இல்லை என்றால் தமிழ் நாட்டில் சீக்கிரமே முட்செடிகள் புதர்களாக மாறிவிடும் அபாயம் உள்ளது..... எனவே தயவுகூர்ந்து இளைஞர்களிடம் விரைவாக கருத்துக்களை கொண்டு செல்லுங்கள்.....
    நன்றி.

    ReplyDelete