தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday, 15 May 2018

இரும்புக் குதிரைஇன்று காலை இறந்துபோன எழுத்தாளர் பாலகுமாரனை எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்த பாலகுமாரனை நான் பார்த்தது  45 ஆண்டுகளுக்கு முன்பு

1973 ஆம் ஆண்டாக இருக்கக்கூடும்.  'புதுக் தென்றல்'; என்ற பெயரில் நாநும், நண்பர் செம்பை சேவியரும் சேர்ந்து எழுதிய ஒரு சிறு கவிதை நூல் வெளிவந்த நேரம். சென்னை வானொலி நிலையத்தில், இளைஞர்களுக்கான கவியரங்கம் ஒன்றில் பங்கேற்க அழைத்திருந்தார்கள். அங்குதான் அவரை முதன்முதலில் பார்த்தேன். இன்றைய கவிப்பேரரசு வைரமுத்துவும், வேறு இளைஞர்கள் சிலரும் வந்திருந்தனர். அப்போது வைரமுத்து பச்சையப்பன் கல்லூரி மாணவர். நான் அதே கல்லூரியில் மாலை நேர மாணவன்.


சென்னை வானொலியில், இளைஞர்கள் பகுதியை இருவர் நடத்தி வந்தனர். ஒருவர்பெயர்  அப்துல்  ஹமீது என்று நினைவு. இன்னொருவர் லீலா அம்மா. இருவரும் இளைஞர்களிடம் மிகுந்த அன்பு காட்டி, ஊக்குவிக்கும் குணம் உடையவர்கள்

அன்று அனைவரும் அய்யா ஹமீது அறையில் அமர்ந்திருந்தோம். ஒவ்வொருவருக்காய் அவர் தலைப்புகளைச் சொன்னார். பாரதியாரின் ஒரு பாடலை எடுத்துக் கொண்டு, அதில் உள்ள ஒவ்வொரு வரியையும் ஒவ்வொருவருக்கும் தலைப்பாகக் கொடுத்தார். ஒளி படைத்த கண்ணினாய் என்பது ஒருவருக்கு, உறுதி கொண்ட நெஞ்சினாய் என்பது இன்னொருவருக்கு. இப்படி அந்தப் பாடலின் பல வரிகளைத் தலைப்பாக்கினார். எல்லோரும் குறித்துக் கொண்டோம். பாலகுமாரன் மட்டும் எதனையும் குறித்துக் கொள்ளவில்லை

'என்ன தம்பி, தலைப்பை நல்லா கேட்டுக்கிட்டீங்களா?' என்றார்இல்லை என்று சொன்ன பாலகுமாரன், நான் இப்படி மற்றவர்கள் கொடுக்கும் தலைப்புகளில் எழுதுவதில்லை என்று விடை கூறினார். மற்றவர்களுக்கு எப்படியிருந்ததோ, எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது.  "என்ன இது, வந்த வாய்ப்பை இப்படித் தவற விடுகிறாரே, கொஞ்சம் திமிரான ஆள் போலிருக்கிறது" என்று நினைத்துக் கொண்டேன். அப்போது என் அறிவுக்கு அது, 'திமிராகத்தான்' பட்டது.

ஆனாலும் அய்யா கோபப்படவில்லை. "அப்படியா, அப்புறம் எப்படி?' என்று மட்டும் கேட்டார். நான் எழுதி வைத்துள்ள  கவிதைகளில் சிலவற்றைப்  படிக்கச் சொன்னால் படிக்கிறேன் என்றார் பாலகுமாரன். அதற்கும் சரி என்று ஒப்புக்கொண்ட ஹமீது அய்யா, அப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்போது மீண்டும் அழைக்கிறோம், கண்டிப்பாக வந்து உங்கள் கவிதைகள் சிலவற்றைப் படியுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அன்று நான் பார்த்த பாலகுமாரன் என்னும் செருக்குமிகு இளைஞனை ஏறத்தாழப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வேறொரு தளத்தில் சந்தித்தேன். இடைப்பட்ட காலத்தில் அவர் ஒரு பெரிய எழுத்தாளர் ஆகியிருந்தார். எங்கள் குடும்ப உறுப்பினர்கள் பலரும் பணம் போட்டுக் 'கனிமுத்துப் பதிப்பகம்' தொடங்கியிருந்த நேரம் அதுஅப்பதிப்பகத்தின் சார்பில் மூன்று நூல்களை ஓரே நேரத்தில் வெளிக்கொண்டு வரத் திட்டமிட்டோம். என் அண்ணன், திரைப்பட இயக்குனர் எஸ்பி. முத்துராமன் கவிஞர்  வாலியிடம் "பெரும் புள்ளிகள்" என்னும் தலைப்பில் கவிதைகளையும்எழுத்தாளர் அனுராதா ரமணனிடம் "சிறை" என்னும் தலைப்பில் ஒரு நாவலையும்  பெற்றுத் தந்தார். மூன்றாவதாக ஒரு நூலைப் பெறும்  நோக்கில்தான் அப்போது பாலகுமாரனைச் சந்தித்தேன்.

கவிஞர் மு.மேத்தா, சென்னை, ராயப்பேட்டையிலிருந்த பாலகுமாரன் இல்லத்திற்கு என்னை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது அந்த வானொலி நிகழ்ச்சியை நினைவு படுத்தினேன். வென்று சிரித்தார். அன்று நீங்களும் இருந்தீர்களா என்று கேட்டார்பிறகு நாவல் ஒன்று கேட்கச் சென்ற என்னிடம், நாம் கவிதை வழியாகத்தானே அறிமுகமானோம். இதுவரை வெளிவராத என் கவிதைகளைத் தரட்டுமா, நூலாக்கிக் கொள்கின்றீர்களா என்று கேட்டார். சரி என்றேன், அந்த நூல் "விட்டில் பூச்சிகள்". சின்னச் சின்னதாய்ப் பல கவிதைகள். ஒன்றிரண்டு கவிதைகள் இன்னும் என் நினைவில் உள்ளன.  "ஒண்டுக் குடித்தனக் கூட்டுக குடும்பி/ கண்டு பிடித்தது ரப்பர் வளையல்" என்று அதில் ஒரு கவிதை உண்டு.

அந்தக் கால கட்டத்தில் அவருடன் சற்று நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. மறுபடியும் தொடர்பு விட்டுப்போய் விட்டது. இடையிடையே பொது நிகழ்ச்சிகளில்  பார்க்கும்போது வணக்கம் சொல்லிக் கொள்வதோடு சரிஒருமுறை, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக, எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் என்று பல்வேறுதுறையினரிடமும்  கையொப்பம் வாங்கிக்  கொண்டிருந்தோம். இசைஞானி இளையராஜா, இயக்குனர் பாலு மகேந்திரா என்று பலரும் கையொப்பம் இட்டனர். பாலகுமாரனிடம் கையொப்பம் வாங்க நான்தான் சென்றிருந்தேன். மறுத்தாலும் மறுத்துவிடுவார் என்றுதான் எண்ணியிருந்தேன். படித்துப் பார்த்துவிட்டு, "சரியான நேரத்துல சரியான வேலை இது சுபவீ" என்று சொல்லி உடனே கையொப்பம் இட்டுத் தந்தார்.  

இடையில் அவர் நாவல் உலகில் புகழ் பெற்று விளங்கியதோடு விசிறி சாமியாரின் பக்தராகி, ஆன்மிகத் தளத்தில் தன் பயணத்தைத் தொடர்ந்தார். திரை உலகிலும் புகழ் பெற்று விளங்கினார். நான் முழுக்க முழுக்க அரசியல், பகுத்தறிவு என்று பயணப்பட்டேன். இருவரும் சந்தித்துக் கொள்ளும் பொதுமேடைகள் கூட இல்லாமல் போயிற்று.

இறுதியாய் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், சென்னை விமான நிலையத்தில் சந்தித்தேன். இருவரும் காலை நேர விமானத்தில் திருச்சிக்குப் புறப்பட்டுக்  கொண்டிருந்தோம். அவர் ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். அருகில் அவர் துணைவியார் நின்றிருந்தார்பார்த்தவுடன் அருகில் சென்று, "வணக்கம்" என்றேன். கையைப் பிடித்துக் கொண்டு, "சுபவீ எப்படி இருக்கீங்க? தொலைக்காட்சியில விவாதங்கள்ல பாக்குறேன். நல்லா பொறுமையா பேசுறீங்க" என்றார்

கைபிரித்து விமானத்தில் ஏறினேன். அது கடைசியாய்ப் பிரியும் கை  என்று அப்போது எனக்குத் தெரியாது

எழுத்துலகின் அந்த  இரும்புக் குதிரை இன்று காலை இறந்துவிட்டது


7 comments:

 1. இப்போது தான் அறிகிறேன் உங்கள் இருவருக்கும் இடையே உள்ள நட்பு பற்றி. படிக்கையில் நெகிழிச்சியாக இருந்தது. 80ளில் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும், அவர் எழுதிய சிறுகதைகளையும், நாவல்களையும், விரும்பி படித்தனர். சிறிதளவே புதுக்கவிதைகள் எழுதிருந்தாலும் எல்லாம் சிறப்பானவை, எப்பொழுதும் பாராட்டப்படுபவை. நினைவில் இருந்தே எழுதுகிறேன் அந்த புதுக்கவிதையை -
  "நீல குழல் விளக்கில் முட்டி முட்டி
  பால் குடிக்கின்றேன விட்டில் பூச்சிகள்".

  ReplyDelete
 2. சில மனிதர்கள் மட்டும் இந்த உலகில் மரணிபதில்லை ....தான் செய்த செயல்களால் எப்பொழுதும் வாழ்வர்... அது போல இவர் தன் கவிதைகளால் இந்த உலகில் எப்பொழுதும் பயணிக்கப்படுவார்...

  ReplyDelete
 3. What happened to ondre sol nandre sol? Have you stopped the series?

  ReplyDelete
  Replies
  1. நான் வெளிநாட்டில் இருப்பதால் இடைவெளி ஏற்பட்டு விட்டது.மீண்டும் ஆகஸ்ட் 15 முதல் வெளிவரும். இடைவெளிக்குப் பொருத்திடுக!

   Delete
 4. ஜெயகாந்தன் எழுத்துக்கு பிறகு பாலகுமரனால் வெகுவாக ஈர்க்கப்பட்டேன்
  சென்னையில் அவரைத் தேடி நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறேன்.இருப்பினும் அவர் ஒருமுறை சினிமா இயக்குனர்கள் பற்றி மிகவும் இழிவுபடுத்தும் வகையில் இதயம் பேசுகிறது என நினைக்கிறேன் பதிவிட்டதன் அடிப்படையில் இயக்குனர் சேரன் சீமான் அய்யா சுபவீ ஆகியோர் தலைமையில் வடபழனியில் கூடி அவருக்கு எதிர்வினை ஆற்றுவது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது அந்த கூட்டத்தில் நானும் இருந்தேன் அதிலிருந்து பாலகுமாரனையும் பிடிக்கவில்லை அவர் எழுத்துக்களையும் படிக்கவில்லை..
  இருப்பினும் மிகச் சிறந்த எழுத்தாளர் ஆளுமை செய்யக்கூடிய எழுத்து எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. ஆம், எனக்கும் நினைவிருக்கிறது. 'மஞ்சள் பை' என்ற தலைப்பில் எழுதினர் என்று நினைக்கிறேன். அது ஒரு தவறான கட்டுரைதான். என்ன செய்வது, "சில நேரங்களில் சில மனிதர்கள்".

   Delete