தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday, 17 May 2018

கறுப்பும் காவியும் - 7

பசுவதை 


                         
இந்தியா முழுவதும் தங்கள் கட்சியைப் பரப்புவதற்குக் காவிகள் கைக்கொண்ட இன்னொரு ஆயுதம் பசுவதைத் தடை. நெடுங்காலமாகவே பசுவதைத் தடைச் சட்டம் வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்குத் தாய் அமைப்பான இந்து மகா சபை, அதற்கும் முந்திய அபிநவ பாரத் சமிதி (புத்திளைஞர் இந்திய சங்கம்), மித்ர மேளா (நண்பர்கள் கழகம்) ஆகிய அனைத்து அமைப்புகளும், இந்தப் பசுப் பாதுகாப்பு, பசுவதைத் தடை ஆகியனவற்றைத் தங்களின் வேலைத்  திட்டத்தில் தவறாமல் கொண்டிருந்தன


19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே, இந்துத்துவவாதிகள் இதனைத் தொடங்கிவிட்டனர். இந்துக்கள் தாயாகவும், தெய்வமாகவும் பசுவை வணங்குகின்றனராம்ஆனால்    கிறித்துவர்கள் மாட்டிறைச்சி உண்ணுபவர்கள், இஸ்லாமியர்களோ, மாட்டினை வெட்டுபவர்கள் என்று சொல்லி இரு மதத்தினர் மீதும் வெறுப்பை வளர்ப்பதற்கே பசுவதைத் தடையை  அவர்கள் கோரினர்.  

ஆனால் இந்துமதம் மாட்டுக் கறி  உண்பதைத் தன் வேதங்களிலோ, உபநிடதங்களிலோ தடை செய்யவில்லை. கூடாது என்று கூடச் சொல்லவில்லை. மாறாக, பிருகதாரண்ய உபநிடதம், "உங்கள் பிள்ளைகள் அறிவும், நீண்ட ஆயுளும் பெறுவதற்கு, நெய்யில் வாட்டிய மாட்டுக்கறி உணவை ஊட்டுங்கள்" என்று சொல்கிறது

இந்து மதத்தை உலகெலாம் பரப்பிய வீரத் துறவி என்று இந்துக்களால் போற்றப்படும் விவேகானந்தரே, பசுப் பாதுகாப்புச் சங்கம் (கோ ரக்ஷன் சமிதி) போன்றவைகளை எள்ளி நகையாடியுள்ளார். 1890 களில், விவேகானந்தருக்கும், கோ ரக்ஷன் சமிதி உறுப்பினர் ஒருவருக்கும் நடந்த, பதிவு செய்யப்பெற்றுள்ள ஓர் உரையாடல் கீழே உள்ளது:-

விவேகானந்தர்:  உங்கள் சங்கத்தின் நோக்கம் என்ன

சமிதி உறுப்பினர் : நம் நாட்டின் தாய்ப் பசுக்களைக் கொலைகாரர்களிடமிருந்து (from the butchers) காப்பாற்றுவதுதான்.

விவே: அது மிக நல்லதுதான். சரி, உங்கள் அமைப்பிற்குப் பணம் எங்கிருந்து வருகிறது

.: மார்வாரி வணிகர்கள் பெரும் ஆதரவாக உள்ளனர். அவர்கள்தாம் நிறையப் பண உதவி செய்து வருகின்றனர்.

விவே: ...அப்படியாஇப்போது, மத்திய இந்தியாவில் கொடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளதே, ஏறத்தாழ 9 இலட்சம் பேர் பசி பட்டினி காரணமாக இறக்கும் தருவாயில் உள்ளதாக அரசாங்கம் அறிக்கை விடுத்துள்ளதே, அவர்களுக்கு உங்கள் சங்கம் என்னென்ன உதவிகளைச் செய்துள்ளது?

..: இல்லை, நாங்கள் அவற்றிற்கு எல்லாம் உதவுவதில்லை. பசுக்களை பாதுகாப்பது மட்டும்தான் எங்கள் நோக்கம். பஞ்சம், பசி, பட்டினி என்பதெல்லாம் அவரவர் செய்த கருமாவின் பயன் என்றுதானே நம் வேதங்கள் சொல்கின்றன.

விவே: (கடுமையான சினத்தை அடக்கிக்கொண்டு) தம் சொந்த சகோதர, சகோதரிகள் கண்ணுக்கெதிரே சாவதைக் கண்டும், அவர்களுக்கு ஒரு பிடி அரிசியையும் கொடுக்க மனமில்லாமல், எல்லாம் கருமாவின் பயன், விதிப்பயன் என்று சொல்லும் அமைப்புகளின் மீது எனக்குச் சிறு பரிவு கூட இல்லை. எல்லாம் விதிப்பயன் என்றால்பிறகு  மக்களுக்கான நம் முயற்சி, போராட்டம் எல்லாம் வீண்தானே! அது மட்டுமில்லாமல், உங்கள் மொழியிலேயே சொல்ல வேண்டுமானால், கொலைகாரர்களின் வாளுக்குப் பசுக்கள் இரையாவதும் அவற்றின் விதிப்பயனாகத்தானே இருக்க முடியும்

இதற்கு விடை சொல்ல முடியாமல் சமிதி உறுப்பினர் சற்றுத்  தடுமாறினார். பிறகு வேதங்களைத் தன் துணைக்கு அழைத்தார்

.: பசு நம் தாய்என்றுதானே வேதங்கள் கூறுகின்றன?

விவேகானந்தர் அளித்த இறுதி விடை சமிதி உறுப்பினரை நிலைகுலைய வைத்துவிட்டது

விவே: உண்மைதான். நம்மைப் போன்ற புத்திசாலிகளை வேறு யார் ஈன்றிருக்க முடியும்?

விவேகானந்தர் இஸ்லாமியர் இல்லை. இந்துமத விரோதி இல்லை. பகுத்தறிவாளர்கள் ஏற்றுக்கொள்ளாத இந்துமதப் பரப்புரையாளர். ஆனால் நியாய உணர்வின் காரணமாக அவர் இப்படிப் பேசியிருக்கக்கூடும்  என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

இந்துமதம், வருணாசிரமம் ஆகியனவற்றில் மீது நம்பிக்கை கொண்டவராக இருந்த  காந்தியாரும், பசுவைப் போற்றுகின்றவராக, பசு வதையை எதிர்ப்பவராக இருந்தாலும், பிற மதத்தினர் மீது வெறுப்பை வளர்ப்பதற்கு இதனை ஒரு கருவியாகப் பயன்படுத்தக் கூடாது  என்பதில் உறுதியாக இருந்தார்.  

'இந்திய சுயராஜ்யம்' என்னும் தன் நூலில் (1909 ஆம் ஆண்டு), பசுவதை குறித்து அவர் இவ்வாறு எழுதியுள்ளார்:

      "நான் பசுவுக்கு மதிப்பளிப்பதைப் போலவே, என் 
       நாட்டிலுள்ள சகோதரர்களுக்கும் மதிப்பளிக்கின்றேன்
      அப்படி இருக்கும் போது, ஒரு பசுவைப் பாதுகாப்பதற்காக
      ஒரு முஸ்லிமுடன் சண்டை இடுவதோ, அவரைக் கொல்வதோ சரியா?
      எனக்குத் தெரிந்த ஒரே வழி, பசுவைப் பாதுகாப்பதற்கு 
      என்னுடன் ஒத்துழைக்கும்படி, என் முஸ்லீம் 
      சகோதரர்களைக் கேட்டுக் கொள்வதுதான்."

நேரு, இந்திரா காந்தி ஆகியோரும், பசுவைக் காப்பாற்ற மக்கள் சாகக்கூடாது என்ற கருத்திலேயே இருந்தனர். ஆனால், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தத்துவாசிரியரான எம்.எஸ். கோல்வால்கர் இஸ்லாமியருக்கு எதிராக ஒரு வெறுப்பை வளர்ப்பதற்கு இதுவே ஏற்ற சாதனம் என்று கருதினார். "சிந்தனைக் கொத்து" (Bunch of thoughts) என்னும் அவருடைய  கருத்துகளின் தொகுப்பு நூலில்
" வெளிநாட்டு ஊடுறுவல் மதத்தினரால்தான், பசுவதை தொடங்கியது.இந்துக்களின் சுயமரியாதை அடையாளங்கள் அனைத்தையும் அழிப்பது என்னும் முடிவுக்கு அவர்கள் வந்தார்கள் இந்துக் கோயில்கள், மடங்கள் ஆகியனவற்றை இடிப்பது போன்ற காட்டுமிராண்டி வேலைகளில் இறங்கினார்கள். அவற்றுள் ஒன்றே இந்தப் பசுவதை" என்கிறார்.

ஓர் உணவுப் பழக்கத்தைக் காரணமாக்கி, மத மோதலை ஏற்படுத்தி, அதில் தாங்கள் குளிர் காய்வது என்பதே உள்ளார்ந்த நோக்கமாக இருந்தது.

இஸ்லாமியர் மீதான வெறுப்பை, இந்து முன்னணித் தலைவர் இராம. கோபாலன் வெளிப்படையாகவே கூறுகின்றார். 27.07.2013 அன்று தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் (கேள்விக்கென்ன பதில்?),  "இஸ்லாம் கால் வைத்த நாளிலிருந்தே இங்கு பயங்கரவாதம் (தோன்றியது)" என்று நா கூசாமல் ஒரு செய்தியைக் கூறுகின்றார்

பசுவதையின் அடிப்படையில், இப்படி வளர்த்தெடுக்கப்பட்ட இஸ்லாமிய வெறுப்புணர்வு வடநாட்டில் பாஜக விற்கு ஒரு குறிப்பிட்ட ஆதரவைப் பெற்றுத் தந்ததுஎன்பது உண்மையே.  18 ஆம் நூற்றாண்டு  இறுதிவரையில் வடநாட்டில் பரவலாக இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சி நடந்து வந்ததால், ஆட்சியாளர்களின் மீதான ஒரு எதிர்ப்பு இயல்பாகவே மக்களுக்கு இருக்கும். அதனையும் பாஜக மிக நேர்த்தியாகப் பயன்படுத்திக் கொண்டது.

மராத்திய மன்னன் சிவாஜியை இந்து மன்னர்களின்  அடையாளமாகவும், அவ்ரங்கசீபை இஸ்லாமிய வில்லனாகவும் சங் பரிவாரங்கள் கட்டமைத்தன. அவர்கள் இருவரும் போரிட்டுக் கொண்டது உண்மைதான். எந்த இரண்டு மன்னர்களுக்கும் இடையில் நடக்கக்கூடிய போரைப் போன்றே அதுவும் நடந்ததுமத அடிப்படையிலான போர் எதுவும் நடக்கவில்லை. அப்படியிருந்திருக்குமானால், சுட்டுக் கொல்லப்பட்ட, கோவிந்த் பன்சாரே தன் 'சிவாஜி' என்னும் நூலில் சான்றுகளுடன் எடுத்துக் காட்டியிருப்பது போல், சிவாஜியின் படையில்  பல்வேறு படைத்தலைவர்களாக இஸ்லாமியர்கள் இருந்திருக்க மாட்டார்கள். அவ்ரங்கசீபும், குமரகுருபரர் காசியில்சைவ மடம்  கட்டுவதற்கு நிதியுதவி செய்திருக்க மாட்டார்.  

பகை இலக்கைக் கட்டமைப்பதில்தான் அரசியலே உள்ளது என்னும் அடிப்படையில், இஸ்லாமியர்களையும், கிறித்துவர்கள் உள்ளிட்ட பிற மதத்தினரையும், பொதுவுடைமையாளர்கள்பகுத்தறிவாளர்களையும் இந்துக்களின் பகை இலக்காகச் சங் பரிவாரங்கள் புனைந்து காட்டின.

உண்மைக்கு மாறான அந்த சித்தாந்தத்தை விளக்க முற்படும் ஒவ்வொருவரையும், மதச் சிறுபான்மையினரிடம் காசு வாங்கிக்கொண்டு செயல்படுவோர் என்றும், இந்து மக்களின் எதிரிகள் என்றும் சித்தரிக்கும் முயற்சிகள் இன்றுவரை தொடர்கின்றன. தங்களை இந்துக்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் அப்பாவி மக்கள் பலர் அதனை நம்பவும் செய்கின்றனர்.

உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டிய கடமை நம்முன் இருக்கிறது.

                                                                               (தொடரும்)


நன்றி: ஒன் இந்தியா

2 comments: