தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 19 May 2018

உணர்வில் உயிரில் கலந்த உடன்பிறப்புகளுக்கு ஒரு திறந்த மடல்!


தொடங்கிய காலம் தொட்டே திராவிட இயக்கம் பல்முனை எதிர்ப்புகளைச்  சந்தித்து வருகிறது.  'பல்முனை எதிர்ப்பு' என்பதை அடிக்கோடிட்டுப் படிக்க வேண்டும். அவை குறித்த சிறு விளக்கமும், ஒரு எச்சரிக்கையுமே இம்மடலின் நோக்கம்

ஆரிய - திராவிடப் போராட்டம் கூர்மையடைந்த நிலையில் உருவானதே திராவிட இயக்கம். தமிழினத்தின் அடையாள அரசியலாகவும், சாதி, ஆணாதிக்கம், மூடநம்பிக்கை, சமற்கிருத-இந்தி மேலாதிக்கம் ஆகியனவற்றின்  எதிர்ப்பு அரசியலாகவும் திராவிட இயக்க அரசியல் உருப்பெற்றது. எனவே சாதி, மத வெறியர்கள், ஆணாதிக்கப் போக்குடையோர், வடமொழி ஆதிக்க விரும்பிகள் திராவிட இயக்கத்தை எதிர்த்தது இயல்பானதுஇன்றும் அவர்கள் எதிர்த்தே வருகின்றனர்.


ஆனால், வேறு திசைகளிலிருந்தும் திராவிட இயக்க எதிர்ப்பு திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. குறிப்பாக, மூன்று முனைகளை  நாம் குறிப்பிடலாம்தமிழ்-திராவிடப் போராட்டமாகவும், தலித்-திராவிடப் போராட்டமாகவும், ஈழம்-திராவிடப் போராட்டமாகவும்  திசைதிருப்பும் வேலைகள் நடந்தன. இன்றும் நடந்து கொண்டிருக்கின்றன.

தமிழ்த் தேசியம் என்னும் கோட்பாட்டை முன்வைத்து, திராவிட இயக்கத்தை அன்று எதிர்த்தவர்கள் .பொ.சி., ஆதித்தனார், .வி.கே. சம்பத் ஆகியோராவர். அவர்களுள் முதல் இருவர் பிற்காலத்தில், திமுக வில் இணைந்து விட்டனர். மூன்றாமவர் காங்கிரசில் இணைந்தார். எனினும் அந்த முயற்சிகள் நின்றுவிடவில்லை. இன்றும் தமிழ்த் தேசியம் பேசுவோரில்  சிலர், திராவிட இயக்க வெறுப்பை வளர்ப்பதில் கவனமாக உள்ளனர்.

பிறகு பெங்களூரு குணா 1995இல், 'திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்ற சிறுநூலை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து தலித்தியத்திற்கு எதிரானது திராவிட இயக்கம் என்னும் கருத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் நடைபெற்றன.   
அந்த முயற்சியில் இன்றும் பலர் ஈடுபட்டுள்ளனர்

2009 முதல், ஈழமக்களின் அழிவிற்குத் திமுக தான் காரணம் என்பதுபோல் ஒரு பரப்புரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஈழப் போராட்டத்தில் ஒரு பின்னடைவு ஏற்பட்ட 
காலத்தில், திமுகதமிழகத்தில் ஆட்சியில் இருந்ததால், அந்தப் பழியைத் திமுக வின் மீது சுமத்துவது மிக எளிதாகப் போய்விட்டது.

தழிழீழப் போராட்டத்திற்கும், திமுக விற்கும், விடுதலைப் புலிகளுக்கும் திமுக விற்கும் இடையிலான உறவைத் துல்லியமாக நாம் புரிந்துகொண்டால், எவராலும் அவதூறு பரப்ப முடியாது.

தமிழீழப் போராட்டம் தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பல கட்டங்களாகப் பிரிக்கலாம்

1. 1987 வரையில் - தமிழகம் முழுவதும் ஈழப்போராட்டத்தை ஆதரித்தது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்னும் வேறுபாடு இல்லாமல், கட்சிகளும், மக்களும் ஈழப் போரை ஆதரித்தனர். இந்திய அரசு அனைத்துப் போராளிக் குழுவினருக்கும் ஆயுத உதவி வழங்கியது. தமிழக மக்கள் நிதியுதவியும் அளித்தனர்.

2. 1987இல் இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டு, இந்திய ராணுவம், இந்திய அமைதிப்  படை என்னும் பெயரில் ஈழ மண்ணில் கால் வைத்த பிறகுதமிழக ஆதரவில் பிரிவுகள் ஏற்பட்டன

3. 1991 மே மாதம் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட  பிறகும், 1992 மே மாதம், விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில்  தடை செய்யப்பட்ட பிறகும், ஈழ ஆதரவு என்பது ஆபத்தானதாகத் தமிழகத்தில் ஆக்கப்பட்டது.

4. 2009 ஆம் ஆண்டிற்குப் பிறகு, ஈழ ஆதரவு, புலிகள் ஆதரவு ஆகியவை குழப்பத்திற்கு உள்ளாயினஈழத்தில் போராளிகள் நிலைமை  என்ன   என்பதில் இங்கு குழப்பம் இருந்தது. அதே நேரத்தில், ஈழ ஆதரவு ஆபத்தானது என்னும் நிலையம் மாறி விட்டது.

இதில் ஒவ்வொரு காலகட்டத்திலும், திமுக என்ன நிலை எடுத்தது என்பதை நாம் பார்க்க வேண்டும். 1987 வரையில் எந்தச் சிக்கலும் இல்லை. 87 இல் இந்திய அமைதிப்படை அங்கு சென்றபிறகு இங்கு பல கட்சிகளின் நிலை மாறிவிட்டது. ஆனால், திமுக ஈழப் போராட்டத்தையும், போராளிகள் அமைப்பையும் தொடர்ந்து  ஆதரித்தது. 1987 நவம்பரில் தமிழகம் முழுவதும்  பொதுக்கூட்டங்கள் நடத்தி, ஈழ விடுதலையை ஆதரித்த இயக்கம் திமுக தான். முதன்முதலாக, ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உயிர்த் தியாகம் செய்த ஸ்ரீமுஷ்ணம் என்னும் ஊரைச்  சேர்ந்த உதயசூரியன் என்னும் இளைஞன்  திமுக உறுப்பினன். ஈழத்திற்கு ஆதரவாகப் பொய்ச் செய்திகளை பரப்பிய அரசுத் தொலைக்காட்சியை எதிர்த்து, பொது இடங்களில் தொலைக்காட்சிப் பெட்டிகளை உடைக்கும் போராட்டம் தலைவர் கலைஞர் தலைமையில் நடந்தது.

1991இல் ராஜிவ் கொலைக்குப் பிறகு நிலைமைகள் மாறின. அதன்பிறகு, திமுக புலிகளை ஆதரிக்கவுமில்லை, எதிர்க்கவுமில்லை. அதே போல, விடுதப்பைப் புலிகளும், திமுக வை ஆதரிக்கவுமில்லை, எதிர்க்கவுமில்லை.

1987 ஜூலை வரையில் எம்ஜிஆர் விடுதலைப் புலிகளை ஆதரித்தார். பெரிய நிதியுதவியும் செய்தார். அமைதிப்படை ஈழம் சென்றபிறகு தன் ஆதரவு நிலையை அவர் வெளிப்படுத்தவில்லை என்பதுடன், அதனை நியாயப்படுத்திச் சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்திலும் அவர் ராஜிவ் காந்தியுடன் சேர்ந்து கலந்து கொண்டார்.  1991 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபின், ஜெயலலிதா, புலிகள் அமைப்பை மிகக் கடுமையாக எதிர்த்தார். அந்த அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்பதில் பெரும் முனைப்பு காட்டினார். தேசியத் தலைவர் பிரபாகரனை இங்கு அழைத்துவந்து தூக்கில் போட வேண்டும் என்று சொல்லும் அளவிற்குச் சென்றார்.

எனினும் இங்குள்ள சில குழுவினர், ஜெயலலிதாவை எதிர்க்கவில்லை. தேர்தலில் ஆதரிக்கவும் செய்தனர். இலை  மலர்ந்தால் ஈழம் மலரும் என்றும் கூறினர்.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இன  அழிப்பை ஆட்சியில் இருந்த திமுக தடுத்து நிறுத்தவில்லை என்னும் குற்றச்சாற்று இங்கு வைக்கப்பட்டது. இந்தியாவில் ஒரு மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பில் உள்ள திமுக, சர்வதேசச் சிக்கலாகிவிட்ட ஈழப்போரை ஒருநாளும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை நன்கு அறிந்தே இந்தக் குற்றச்சாற்றை வைத்தனர்.

இதுகுறித்த மேலும் விரிவான பல செய்திகள், உரிய சான்றுகளுடன், நான் எழுதியுள்ள "ஈழம், தமிழகம், நான் - சில பதிவுகள்" என்னும் நூலில் இடம்பெற்றுள்ளன. அந்நூலைப் படித்துப் பாராட்டிய தலைவர் கலைஞர் அந்த நூலைத் திமுக தலைமைக் கழகத்தின் வெளியீடாகவே கொண்டுவந்தார். இன்றும் அந்த நூல், சென்னை, அறிவாலயத்தில் விற்பனைக்கு உள்ளது.

நண்பர் திரு கே.எஸ். ராதாகிருஷ்ணனும் இதே போல ஓர் அரிய நூலை  வெளியிட்டுள்ளார்

தலைவர் கலைஞர் அவர்கள் ஒருநாளும் ஈழப்போராட்டத்தையோ, புலிகளையோ குறைத்துப் பேசியதில்லை. தமிழ்ச்செல்வன் மரணத்திற்கு அவர் எழுதிய இரங்கல் கவிதையைக் கூட ஒரு பிரச்சினை ஆக்கியவர்களை ஆதரித்தவர்கள்தான், திமுக வைச் சாடுகின்றனர்

2009 ஆம் ஆண்டுக்குப் பிந்திய ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில், 'புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா?' என்று கேட்கப்பட்டபோது, "போராளிகள் சாவதில்லை" என்று விடை சொன்னவர் கலைஞர்.

எனவே கலைஞர்  போற்றிப் பாராட்டிய ஒரு தலைவரை, நம் உடன்பிறப்புகள் உணர்ச்சிவயப்பட்டு, எதிர்மொழி என்று கருதித் தாக்குவது சரியானதாக இருக்காது.

புலிகளின் ஆதரவாளர்கள் என்னும் பெயரில் சிலர் திமுக வையும், கலைஞரையும் தாக்குவது, எதிர்த்திசையில் நம்மைத் தள்ளி விடுவதற்காகவே! இது ஒரு சதித்திட்டம்! இதற்கு நம் உடன்பிறப்புகள் பலியாக வேண்டியதில்லை.

அன்று முதல் இன்று வரையில், புலிகளின் வீரத்தை, தியாகத்தை மதிக்கின்றவர்களில் நானும் ஒருவன். புலிகளின் ஆதரவு என்று சொன்னாலே, கைது செய்து விடுவார்கள் என்ற நிலை இருந்த போது, ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில்,  'புலிகளின் ஆதரவாளர் என்று உங்கள் மீது ஒரு முத்திரை குத்தப்பட்டுள்ளதே?' என்று கேட்கப்பட்ட வேளையில், "அது முத்திரையல்ல,  என் முகவரி" என்று விடை சொன்னவன் நான். புலிகளை ஆதரித்தமைக்காக எட்டு முறை சிறை சென்றவன். எட்டாவது முறை, பொடா சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்டு, ஒன்றரை ஆண்டு காலம் சிறையில் இருந்தேன்

இவற்றை எல்லாம் இங்கு குறிப்பிடுவது, நான் வீரன் என்றோ, தியாகி என்றோ பதிவு செய்து கொள்வதற்காக இல்லை. 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு, 'ஆபத்தில்லாதபோது கோபத்துக்குப் பஞ்சமில்லை" என்று  வீரம் பேசுகிறவர்கள், நம்மையெல்லாம் துரோகிகள் என்று பரப்புரை செய்துகொண்டிருக்கும்போது, அடுத்த தலைமுறையினருக்கு உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகவே பதிவு செய்கிறேன்.

திமுக வில் உள்ள அனைவரும் புலிகள் ஆதரவாளர்களாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. அது அவரவர் பார்வை சார்ந்தது. ஆனால் அதனை இப்போது விவாதித்துக் கொண்டிருப்பது தேவையற்றது என்பது மட்டுமில்ல, அது திமுக விற்கு கேடு விளைவிக்கக்கூடியதும் ஆகும்ஆங்கிலத்தில் provoking என்று ஒரு சொல் உண்டு. உணர்ச்சிவயப்படுத்தல் அல்லது தூண்டுதல் என்று பொருள் கொள்ளலாம்


உள்நோக்கத்துடன் செய்யப்படும் அதுபோன்ற தூண்டுதலுக்கு யாரும் ஆளாகி  விட வேண்டாம் என்பதை நட்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றேன்அதற்காகவே இந்தத் திறந்த மடல்!

7 comments:

 1. //ஈழத்திற்கு ஆதரவாகப் பொய்ச் செய்திகளை பரப்பிய அரசுத் தொலைக்காட்சியை எதிர்த்து, பொது இடங்களில் தொலைக்காட்சிப் பெட்டிகளை உடைக்கும் போராட்டம் தலைவர் கலைஞர் தலைமையில் நடந்தது// வார்த்தைப் பிழை அண்ணே. "ஈழத்திற்கு எதிராக".

  சரியான நேரத்தில் மிகத்தேவையான பதிவு. நன்றி!

  ReplyDelete
 2. தற்போது இதனை பதிவிடுவதால் எந்த ஒரு தாககமும் ஏற்பட போவதில்லை; தேவையும் இல்லை. இப்போது,
  காவிரி பிரச்னை, தமிழகத்தின் பொருளாதார மந்தகதி நிலை, வருமுன் காப்போம் போன்றவகளுக்கு சரியான வலுவான திட்டங்கள் தீட்டி சமூக சமத்துவத்தை கலந்து தருவதே தேவையினும் தேவை.

  ReplyDelete
 3. இரத்தினவேல்20 May 2018 at 14:39

  சரியான நேரத்தில் எழுதப்பட்டுள்ள சரியான மடல்.

  ReplyDelete
 4. திராவிட காழ்ப்புணர்வுகொண்டு, திரவிடத்தின் மீது புழுதி தூற்றும் கயவர்களுக்கும், புலிகளின் போராட்டங்களை தான் தான் முன்னின்று நடத்தியது போன்று பிதற்றி திரிபவர்களுக்கும், புலிகளால் ஆட்சியே இழந்த தலைவரை விமர்சனம் செய்யும் அரைவேக்காடு அரசியல் ஞானிகளுக்கும் தக்க பதில் இதான் அண்ணா. தக்கநேரத்தில் பதிவிட்டமைக்கு நன்றி. இதை படிக்கும் அனவரும் பரப்புங்கள்.

  ReplyDelete
 5. குழப்பங்களுக்கு தீர்வாக அமைந்த பதிவு.நன்றி.

  ReplyDelete
 6. அமைதிப்படை ஈழம் சென்ற பின் எம்ஜிஆர் நிலைப்பாடு மாறியது என்ற உங்கள் கருத்து முற்றிலும் தவறு.அமைதிப்படையுடன் போராடிய காலத்திலும் புலிகளுக்கு ஆயுதம் வாங்க கிட்டு மூலமாக பண உதவி செய்தார் எம்ஜிஆர் என பிரபாகரன் தொலைக்காட்சி பேட்டியில் தெளிவாக சொல்லியிருக்கிறார்.மேலும் அவர் எப்போதும் பிரபாகரனிடம் இந்திய அரசின் நிலைப்பாடு என் நிலைப்பாடு அல்ல.நீங்கள் தொடர்ந்து போராடுங்கள் என்று பிரபாகரனை ஊக்கப்படுத்தி இருக்கிறார். இதையும் பிரபாகரன் அந்த பேட்டியில் தெளிவாக குறிப்பிடுகிறார். அந்த பேட்டி வலைதளத்தில் இப்போதும் இருக்கிறது. கண்டிப்பாக நீங்களும் பார்த்திருப்பீர்கள். ஆனாலும் திமுக வை உயர்த்தி பிடிக்கவேண்டும் என்பதனால் எம்ஜிஆர் அவர்களை தாழ்த்தி எழுதுகிறீர்கள். உங்கள் தகுதிக்கு இது அழகல்ல.

  ReplyDelete