தமிழர் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் யாரோ சிலரால் தாக்கப்பட்டுத் தஞ்சை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற செய்தி கிடைத்தபோது, அமெரிக்காவிலிருந்த நான் பதறிப் போனேன். உடனடியாகத் தோழர் புலவர் செல்லக் கலைவாணனைத் தொடர்பு கொண்டு, மருத்துவமனை சென்று, தோழரின் உடல்நிலை குறித்து அறிந்து வரச் சொன்னேன். அப்போது இந்தியாவில் இரவு பத்து மணிக்கு மேலாகிவிட்டது.
மருத்துவமனையிலிருந்து அழைத்த புலவர், அச்சப்பட ஒன்றுமில்லை என்ற செய்தியைக் கூறியதோடு, மணியரசனிடமே தொலைபேசியைக் கொடுத்துப் பேசச் சொன்னார். அதன்பிறகே நெஞ்சில் ஒரு நிம்மதி ஏற்பட்டது.
அருகிலிருந்த தோழர் வெங்கடராமன் நடந்ததை விளக்கிச் சொன்னார். இரு சக்கர ஊர்தியில் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும்போது, யாரோ சிலர் அவரைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளியிருக்கின்றனர். நல்ல வாய்ப்பாகத் தலையில் அடிபடாமல், கால் கைகளில் அடிபட்டுள்ளது. அவர்கள் யார், அவர்களின் நோக்கம் என்ன என்று தெரியவில்லை என்றார்.
ஏறத்தாழ அது ஒரு கொலை முயற்சி போலவே தெரிகின்றது. கொலை செய்ய முயன்றவர்களைத் தமிழகக் காவல்துறை உடனே கைது செட்யய வேண்டும். எஸ்.வி.சேகரையே கைது செய்யத் துப்பும், துணிவும் இல்லாத இன்றைய அரசு, மணியரசனைக் கொலை செய்ய முயன்ற சமூக விரோதிகளைக் கண்டுபிடித்துக் கைது செய்யும் என்று நம்புவது கடினமாகத்தான் உள்ளது. 'மணியரசன் ஒரு சமூக விரோதி, எனவே அவரை யாரோ தாக்கியுள்ளனர்' என்று கூறி வழக்கை முடித்தாலும் முடித்து விடுவார்கள்.
வன்முறையாளர்கள் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் என்பது நம் அழுத்தமான கோரிக்கை. அது ஒருபுறமிருக்க, இது போன்ற நிகழ்வுகள் இன்று மிகுதியாகிக் கொண்டே போவது கவலைக்குரியதாக உள்ளது. அரசியல் வேற்றுமைகளை எதிர்க் கருத்துகளால் எதிர்கொள்ளாமல் தடி கொண்டு தாக்கும் பாசிசம் ஒடுக்கப்பட்ட வேண்டும். பன்மைத்துவத்திற்கோ, கருத்து வேற்றுமைக்கோ இடமே இல்லை என்று கூறும் பாசிச அரசு மத்தியில் இருப்பதும், அதற்கு ஏவல் வேலை செய்யும் கையாலாகாத அரசு தமிழ்நாட்டில் இருப்பதும்தான் இந்நிலை வளர்வதற்குப் பெரும் காரணமாக உள்ளது.
1980களின் தொடக்கத்தில் அய்யா நெடுமாறன் அவர்களோடும், 1980களின் இறுதியில் தோழர்கள் தியாகு, மணியரசன் ஆகியோருடனும் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. ஈழ விடுதலைப் போராட்ட ஆதரவாளனாக நான் உருவெடுத்ததற்கு அய்யா நெடுமாறன் காரணம் என்றால், தமிழ்த் தேசியக் கோட்பாட்டில் நான் காலூன்ற விரும்பியமைக்குத் தியாகுவும், மணியரசனும் காரணம். மூவரிடமிருந்தும் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். அந்த நன்றியுணர்வு எப்போதும் என் நெஞ்சில் உண்டு! எனினும், மூவரிடமிருந்தும், நான் பிற்காலத்தில் பிரிய நேர்ந்தது. என் ரத்த அணுக்களில் ஊறியிருந்த திராவிட இயக்கப் பற்றும், அதே போல அவர்களிடம் காணப்பட்ட திராவிட இயக்க எதிர்ப்புணர்வும் எங்கள் பிரிவுக்கு காரணமாக இருந்தது என்றே சொல்ல வேண்டும்.
பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) யிலிருந்து பிரிந்து வந்த மணியரசனும், தோழர்களும், எம்.சி.பி.ஐ. என்னும் கட்சியைத் தொடங்கியபோது அவர்களோடு எனக்கு நட்பு ஏற்பட்டது. அவர்கள் வழிகாட்டலில், 1990 பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற தமிழ்த் தேசத் தன்னுரிமை மாநாட்டில் நானும் ஒரு தொண்டனாகப் பணியாற்றினேன். அது, தமிழ்த் தேசியத்தின் தந்தை பெரியார்தான் என்று மணியரசன் ஏற்றுக் கொண்டிருந்த காலம். பிறகு அவர்களின் பார்வை மாறியது அல்லது மாற்றிக் கொண்டனர். இன்று பெரியாரையும், திராவிட இயக்கத்தையும் எதிர்ப்பதே தங்கள் வாழ்நாள் நோக்கம் என்பதுபோலத் தோழர் மணியரசனும் அவரது இன்றைய அமைப்பான தமிழ்த் தேசியப் பேரியக்கமும் இயங்கி வருகின்றனர்.
எனவே இன்றய சூழலில், நன் சார்ந்திருக்கும் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் கோட்பாடு, தோழர் மணியரசன் அமைப்பின் கோட்பாட்டிற்கு நேர் எதிரானது. ஆனாலும் என்ன... கருத்தைக் கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும் என்பதில் இருவருக்குமே உடன்பாடு உள்ளது.
வால்டேரை நினைவுபடுத்திச் சொல்கிறேன் - மணியரசனின் இன்றைய கருத்தை நான் சாகும்வரை எதிர்ப்பேன். ஆனால் அதனை வெளியிடும் உரிமைக்காகச் சாகும்வரை போராடுவேன். தானாடா விட்டாலும் சதை ஆடும் என்பார்கள். மணியரசன் தாக்கப்பட்ட செய்தியறிந்து அப்படித்தான் எனக்குள் பதற்றம் ஏற்பட்டது.
வன்முறை நம் அத்தனை பேருக்கும் எதிரி. அதனை எதிர்த்து அனைவரும் ஒன்றுபட வேண்டிய நேரம் இது.
மணியரசன் பரப்பும் கருத்தே என் முதல் எதிரி. ஆனால் அவர் என்றும் என் தோழர்!
ஐயா பெ.ம.வின் மீது நடந்த தாக்குதல், கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்ள முடியாத கயவர்களின் செயலாகத்தான் தோன்றுகிறது. தோழமை மீது நீங்கள் காட்டும் அக்கறை பாராட்டுக்குரியது.
ReplyDeleteஅய்யா அவர்கள் இதனை சுருக்கமாக பதிவிட்டிருக்கலாம். இந்த ஒரு கையறு நிலையிலும் திராவிடத்தை தூக்கிப்பிடித்து பெ.மணியரசன் அவர்கள் முன்வைக்கிற தமிழ்த் தேசியத்தை நிலைப்பாட்டு ரீதியாக தாழ்த்தி எழுத வேண்டிய அவசியமும் இந்நிலையில் ஏன் என்று தெரியவில்லை. எனினும் உங்களுள் சுரந்த அந்த தோழமை நினைவுக்கு நன்றி.
ReplyDeleteநீங கள் சொல்வது மிகவும் சரி. சுருக்கமாகவெம் உருக்கமாகவும் வந்திருக்க வேண்டியப்பதிவு இது.
Deleteஅன்பர் சுப.வீ யின் கருத்தை பின்தொடரவதுடன்.எதிரிகளின் நடவடிக்கைகளில் தோழர்கள் கவனமுடன் இருக்கவேண்டும் எனவேம் வேண்டுகிறேன்.
ReplyDeleteKuberan தமிழ் தேசியம் பற்றி எங்கேயும் மோசமாக குறிப்பிடப்படவில்லை
ReplyDeleteஅருமையான பதிவு ஐயா. இன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற நாகரீகமான அரசியல் அறிக்கைகளை பார்ப்பது மிகவும் அரிதாக இருக்கின்றது. ஐயா பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும் மற்றும் தலைவர் கலைஞரையும் அரசியல் முன்னோடிகளாக ஏற்றுக்கொண்டவர்களிடம் இதுபோன்ற நற்பண்புகள் இயற்கையாகவே அமைந்துவிடும் என்பது மறுக்கமுடியா உண்மை.
ReplyDelete