தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 13 June 2018

கறுப்பும் காவியும் -10

இந்துமத ஒருங்கிணைப்பு  ஆன்மிக அரசியல் தமிழ்நாட்டிற்குப் புதியதன்று. ஆனால் அது தமிழ்நாட்டில்  வெற்றி பெறாத அரசியல்  தமிழ்நாட்டு மக்கள் ஆன்மிக உணர்வுடையவர்கள், மத நம்பிக்கை கொண்டவர்கள், கடவுள் வழிபாட்டாளர்கள். ஆனால் அந்த அடிப்படையில் அரசியலை அவர்கள் மேற்கொண்டதில்லை என்பது ஒரு பெரும் வியப்பு!


இரண்டு முறை ஆன்மிக அடிப்படையில் தமிழக அரசியலைக் கைப்பற்றக்  காவிகள் முனைந்தனர். இரண்டு முறையும் அவர்களுக்குப் பிள்ளையாரே துணை நின்றார். எனினும் இறுதியில் அவர்களின் முயற்சி தோல்வியில்தான் முடிந்தது.  

1970 அக்டோபர் மாதம் சென்னை, தியாகராயர் நகர் பகுதியில் தோன்றிய ஒரு "திடீர்ப் பிள்ளையாரும்", 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் "பால் குடித்த பிள்ளையாரும்" தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். திடீர்ப் பிள்ளையார் செய்தியாவது இந்தியா வரைதான் பரவிற்று. ஆனால் ஊடக வளர்ச்சி காரணமாக, பால் குடித்த பிள்ளையார் உலகப் புகழ் பெற்றார். இரண்டு பிள்ளையாரையும் மக்கள் கண்டு வியந்தார்கள்,  கொண்டாடினார்கள். ஆனால் அதனை அரசியலுக்குப் பயன்படுத்த நினைத்தோருக்குத் துணை போகவில்லை.

இந்த நிகழ்ச்சிகள் குறித்து விரிவாகப் பார்ப்பதற்கு முன், இந்துமத வழிபாட்டு முறை பற்றிச் சற்று அறிந்துகொள்வது பயன்தரும்

இந்துமதம் பல தெய்வ வழிபாட்டையும், உருவ வழிபாட்டையும் ஏற்றுக்கொண்ட மதம். எனினும், சாந்தோக்கிய உபநிடதம், பிருகதாரண்ய உபநிடதம் ஆகியனவற்றில் இடம்பெற்றுள்ள சில குரு - சிஷ்ய உரையாடலைக் காட்டி, ஒன்றே பலவாய் உருவெடுத்துள்ளதென்பர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்  போன்ற தத்துவத் துறைப் பேராசிரியர்கள்.

பலதெய்வ வழிபாடு உள்ளது என்பதை விட, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு கடவுள் கூடுதலாகப் பேசப்படுவதும், வழிபடப்படுவதும், இந்து மதத்திற்கே உரிய விந்தையான மரபு என்றே கூற வேண்டும்.இந்து மதத்தின் அடிப்படை வேத, உபநிடதங்களே  ஆகும். அந்த நான்கு வேதங்களில் எங்கும் இன்றுள்ள, இன்று மக்கள் வழிபடும் கடவுளர்கள் யாரையும் பார்க்க முடியாது

வேதங்களில் பெரிதாகப் பேசப்படும் தேவதேவன் இந்திரனே ஆவான். பிறகு, சோமன், வாயு, அக்கினி ஆகிய தேவர்களைப்  பார்க்க முடிகிறது. இவர்கள் யாரும் இன்று எந்தக் கோயிலிலும் இல்லை. யாரும் இவர்களை வணங்குவதும் இல்லை.

பிறகு வரும் புராணக் கதைகளில் இந்திரன் மதிப்பு குறைந்து போகிறது. ஏறத்தாழ ஒரு காமுகனாக இந்திரன் ஆக்கப்படுகிறான். உபநிடதங்களில் - அதுவும் பிற்கால உபநிடதங்களில்தான் - சிவன், விஷ்ணு போன்ற கடவுளர்கள் வருகின்றனர். தொல்காப்பியத்தில், முருகன் (சேயோன்), திருமால் (மாயோன்), வருணன், இந்திரன் ஆகியோர் ஒவ்வொரு திணைக்கும் உரிய ஒவ்வொரு கடவுள்களாகக் காட்டப்படுகின்றனர். பிறகு, பார்வதி, லட்சுமி, சரஸ்வதிபிள்ளையார் என்று தொடங்கி அய்யப்பன் வரையில் புதிய புதிய கடவுள்கள் தோன்றிக்  கொண்டே இருக்கின்றனர்

இவர்கள் தவிர, உழைக்கும் மக்களின் கடவுளர் வரிசை ஒன்றும் உள்ளதுஅதனை நாட்டார் தெய்வ வழிபாடு என்று குறிப்பர். அதனை ஏற்காதவர்கள் அதனைச் சிறுதெய்வ வழிபாடு என்று கூறிச் சிறுமைப்படுத்துவர். நாட்டார் தெய்வ வழிபாட்டில், அம்மன்கள், சுடலை மாடன்கள், கறுப்பர்கள் என்று பல்வேறு வகையினர் உண்டு

சிவன், விஷ்ணுவை வணங்குபவர்கள் சுடலை மாடன், பதினெட்டாம் படிக் கருப்பு போன்ற தெய்வங்களை வணங்க மாட்டார்கள். அம்பாளை வணங்குவோர், மாரியம்மனை  வணங்குவதில் தயக்கம் காட்டுவர்சாமியாடுதல்பால் குடம் எடுத்தல், அக்கினிச் சட்டி ஏந்துதல், தீ மிதித்தல் போன்றவை எல்லாம் சிவ, விஷ்ணு கோயில்களில் பார்க்க முடியாத சடங்குகள்.  ஆனால் எல்லாம் இந்துக்  கடவுள்களே. எல்லோரும் இந்துக்களே

இந்தக் கடவுள்களின் வரிசையில் சற்று வேறுபட்டவர் பிள்ளையார். கி.பி. 7 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழ்நாட்டில் அறிமுகமானவர். அந்தக் கடவுள் பற்றிக் கூறும் கதைகள் பல உள்ளன. புராணங்களில் காணப்படும் பிள்ளையார் பற்றிய  ஆறு  விதமான  கதை வடிவங்களை எடுத்துக் கூறுவார் பேராசிரியர் . சிவசுப்ரமணியன்

மற்ற தெய்வங்களிலிருந்து பிள்ளையார் எப்படி வேறுபடுகிறார் என்றால், தொடக்கத்தில் அவர் சிவ, விஷ்ணு பக்தர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர் கோவிலுக்கு வெளியேதான் நிறுத்தப்பட்டிருந்தார். தெருமுனையில், குளத்தங்கரையில் என்று எங்கும் பிள்ளையாரைப் பார்க்க முடியும். ஆம், அவர் சூத்திரர்களின் கடவுளாகத்தான் முதலில் கருதப்பட்டார். பிறகுதான் சிவன் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக ஆக்கப்பட்டார்

முருக வழிபாடு தமிழர்களிடம் சங்க காலத்திற்குப் பிந்திய காலம்தொட்டே  இருந்து வந்துள்ளது. அதனால்தான், முருகன் எங்கள் முப்பாட்டன் என்று சொல்லித் தங்கள் அரசியலுக்கு அவரைப் பயன்படுத்திக் கொள்ள இயலுமா என்று இங்கு சில முயல்கின்றனர். சங்க இலக்கியமான பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகிய நூல்களில் முருகன் பேசப்பட்டாலும், அவ்விலக்கியங்கள் சங்க காலத்திற்கு  மிகவும் பிந்தியவை. திருமுருகாற்றுப்படைபிற்காலச் சைவத்  திருமுறை நூல்களின் வரிசையிலும் சேர்க்கப்பட்டுள்ளது என்பதே அதற்குச் சான்று

எவ்வாறாயினும், தமிழர்களுக்கு நெருக்கமான முருகனின் அண்ணன்  என்று பிள்ளையார் உருவகம் செய்யப்பட்டார். அதற்கு ஏற்ற வகையில், முருகனின் பெயர் சுப்பிரமணியன் என்று மாற்றப்பட்டது. சுப்பிரமணியன் என்றால், சு - பிராமணியன், அதாவது பிராமணர்களுக்கு நல்லவன் என்று பொருள்.  பிறகு அவர் பிள்ளையாரின் தம்பி என்பதால் 'பால'சுப்பிரமணியன் என்று ஆக்கப்பட்டார். இந்த அடிப்படையில்தான்இப்போதும் சுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன் ஆகிய பெயர்களைப்  பார்ப்பனர்கள் சூடிக் கொள்வார்களே தவிர, ஒருநாளும் முருகன் என்ற  பெயர்  அவர்களிடம் இருக்காது. முருகன் ஐயரோ, முருகன் அய்யங்காரோ எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டார்கள்.

முருகன் என்பது அழகிய தமிழ்ப் பெயர். முருகு என்றால் அழகு. முருகன் என்றால் அழகன். சுப்பிரமணியன் என்பது சமற்கிருதத் சொல். முருகன் பெயர் மட்டுமன்று, சமற்கிருதம் கலக்காத தூய தமிழ்ப் பெயர் எதனையும் பார்ப்பனர் சமூகத்தில் பார்க்கவே முடியாது. எங்கேனும் லட்சம்  பேரில் ஒருவர் விதிவிலக்காக இருக்கலாம். இங்குதான், மொழிக்கும் சமயத்திற்குமான உறவும், முரணும் தொடங்குகின்றன

எனவேதான், இன்றுவரையில், சமற்கிருத எதிர்ப்பு என்பது திராவிட இயக்கக கொள்கையின் மாறாத ஒரு பகுதியாக இருந்து வருகிறது. 'பெருந்தெய்வ' வழிபாடு, சமற்கிருத மேலாண்மை, வருண அடிப்படையிலான சமூகம் ஆகியனவற்றை மையமாகக் கொண்டு ஒரு புதிய மதத்தை வலிமையாகக் கட்ட ஆதி சங்கரர் முயன்றார்

தனித்தனி மதங்களாக இருந்த சைவம், வைணவம், சாக்தம், காணபத்யம், கௌமாரம், சௌரம் ஆகிய ஆறு மதங்களையும் ஒருங்கிணைக்க அவர் முயன்றார். அதன் காரணமாகவே அவர் 'ஷண்மத ஸ்தாபகர்' என்று அழைக்கப்பட்டார்.ஷண் என்றால் ஆறு என்று பொருள். (நம் வீட்டு ஆறுமுகங்கள் ஷண்முகங்கள் ஆன கதை இதுதான்). ஆனால் அவரால் அந்த முயற்சியில் இறுதி வெற்றியைப் பெற முடியவில்லை

அந்த வேலையை இறுதியாகச்  செய்து முடித்தவர்கள் ஆங்கிலேயர்களே. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில், சர் வில்லியம் ஜோன்ஸ் என்னும் ஆங்கில நீதிபதிதான், இந்து என்னும் சொல்லை  வழக்கிற்குக்  கொண்டுவந்தவர். அதனால்தான், மறைந்த சங்கராச்சாரியார், தன் 'தெய்வத்தின் குரல்' என்னும் நூலில், "ஆங்கிலேயர்கள் நம்மை இந்துக்கள் என்ற பெயரில் ஒன்றாகச் சேர்த்தார்களோ  நாம் பிழைத்தோமோ" என்று எழுதுகின்றார்

இவ்வாறு இணைப்பு ஏற்பட்ட பின்தான், பிள்ளையார் சூத்திரக் கடவுள் என்ற நிலையிலிருந்து மாறி, இந்துப் பெருந்தெய்வக் கடவுள் ஆகின்றார். அவரை வைத்து இரண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்ற செய்தியைப் பார்த்தோம்அவைகுறித்து விரிவாகப் பார்ப்போம்!

                                                                               (தொடரும்)

நன்றி: ஒன் இந்தியா

1 comment:

  1. சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் - ithai unku than bharathiyar yealthinar pola,yenna moo theiryaala Saraswathi ungal naval thavalugeral

    ReplyDelete