தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 20 June 2018

இனிக்கும் துயரங்கள்!

அந்தக் குறுந்தொகைப் பாடல்களை நான் படித்திருக்கிறேன். ஆனாலும், அவை இசையில் நனைந்து வரும்போது, கேட்பவர்களைக் கிறங்க வைக்கின்றன.

நண்பர் ரவி சுப்ரமணியன் ஓரிரு நாள்களுக்கு முன்பு, "காதலர் உழையர் ஆக" எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடலை இசையமைத்து, என் புலனத்தின் (வாட்ஸ் அப்) வழி அனுப்பியிருந்தார். அவரே  மெட்டமைத்த அந்தப் பாடலுக்குத் திவாகர் சுப்பிரமணியம்   இசையமைக்க, அனுக்கிரகா ஸ்ரீதர் பாடியிருந்தார். ஒளிப்பதிவு இயக்குனர் செழியன் என்றிருந்தது. காணொளியாக இருக்கலாம். நான் வெறும் ஒலி வடிவில்தான் கேட்டேன்.சிவரஞ்சனி ராகத்தின் சாயலில் இசையமைக்கப்பட்டுள்ளது என்ற குறிப்பு இருந்தது.

எனக்கு இசையெல்லாம் தெரியாது. ஆனால் அந்த சங்கப் பாடல்  நெஞ்சை நெகிழ வைத்தது.பாடலைத் திரும்பத்  திரும்பக் கேட்டேன். அணிலாடு முன்றிலார் எழுதிய பாடல் அது. அந்தப் பெயர் இயற்பெயர் அன்று. பாட்டின் இடையில் 'அணிலாடு மூன்றில் புலப்பில் போலப் புல்லென்று அலப்பென்  தோழி"  என்று வரும். அந்த உவமையின் அழகில் மயங்கி,  அதனையே அவர் பெயராக ஆக்கிவிட்டனர். 

"காதலர் அருகில் இருந்தபோது, திருவிழா நடக்கும் ஊரைப் போல மகிழ்வாக இருந்தேன். அவர் பிரிந்தபின், திருவிழா முடிந்து மக்கள் எல்லாம் ஊரைவிட்டுச்  செல்ல, ஆளே இல்லாத முற்றத்தில் அணில்கள் விளையாடுவது போல, நானும் கேட்பாரற்றுப் புல்லென்று கிடந்தேன்" என்பது அப்பாட்டு!  

இதனைக் கேட்டு மகிழ்ந்த பிறகு, வேறு சங்கப்  பாடல்களை இப்படி இசையில் தோய்த்திருந்தால், அனுப்பி வையுங்கள் என்று ரவியிடம் கேட்டேன். "அருளும் அன்பும் நீங்கி" எனத்  தொடங்கும் கோப்பெருஞ்சோழன் பாடலையும், "முட்டுவேன் கொல் " எனத் தொடங்கும் அவ்வையாரின் பாடலையும் அனுப்பி வைத்தார். 

"அருளும் அன்பும் நீங்கி, துணையைத் துறந்து, பொருள் ஈட்டப் போகும் அவர் நெஞ்சுரம் உடையவர் என்றால், உரவோர் உரவோர் ஆகுக, நாம் பேதைகளாகவே இருந்துவிட்டுப் போவோம்" என்று கூறும் பாட்டும், "என் காமத் துயர் அறியாது தூங்கும் இவ்வூரை எப்படி எழுப்பிச் சொல்வேன்? முட்டிக்கொள்வதா, தாக்குவதா, ஆ, ஊ என்று அரற்றுவதா?"  என்று பெண் தன் காம உணர்வை வெளிப்படுத்தும் பாட்டும்,இசை கலந்து, துயர் தாங்கி ஒலித்தன. 

பெண் தன் காம உணர்வை இப்படி வெளிப்படுத்தல் சரியா என்று 'பாலியல் சமத்துவம்' பேசும் இக்காலத்திலும் கூடக் கேள்வி எழும். ஆனால் அன்றைய சங்க காலம் அதனை இயல்பாக ஏற்றுக் கொண்டுள்ளது.பெண்ணின் இத்தகு புலம்பல் குறித்து, "கிழவனை மகடூஉப் புலம்புபெரி தாகலின் ஊர்க்கே / அலமரல் பெருகிய காமத்து மிகுதியும்" என்று கூறித் தொல்காப்பியமும் கற்பியலில் ஏற்று  வரையறை செய்கிறது. 

காதளர்ப் பிரிவில் ஏற்படும் துயரம் எவ்வளவு கொடுமையானது என்று இப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன.  உண்மைக் காதலர்கள் பிரிந்தால், அந்த நினைப்பு நெஞ்சை நெருப்பாய்ச் சுடும். ஆனாலும் அது இலக்கியமாய் இனிக்கும். இலக்கிய உலகில், சோகத்தை விடச் சுகமான பதிவுகள் இருக்க முடியாது. 

கவிஞர்  ஷெல்லியும் இதனை உணர்ந்தே, வானம்பாடி பற்றிய தன் பாடல் ஒன்றில் (To a Skylark), 

         "Our sweetest songs are those 
           that tell a saddest thought" 

என்று எழுதுவான்.  ஆம், துயரச் சிந்தனையைத் தாங்கி வரும் பாடல்களே, ஆகச் சிறந்த இனிமையானவை என்பது அவன் கருத்து. 

நண்பர் ரவி சுப்பிரமணியமும் அக்குழுவினரும் தமிழுக்கு நல்லதோர் கொடையைத் தந்துள்ளனர். கேளுங்கள் தமிழர்களே....இது நம் தமிழ்,இது நம் வாழ்வு, இது நம் மரபு!

இனிக்கும் துயரங்களாய் வெளிவந்திருக்கும் இந்த சங்க இலக்கிய இசைப் பாடல்கள் எங்கும் ஒலிக்கட்டும்! 

3 comments:

 1. Dear Subavee
  Where is the song? You failed to upload?

  ReplyDelete
 2. இந்த பாடல்கள் இணையத்தில் எங்கு கிடைக்கின்றன?????

  ReplyDelete
 3. Super talaivaa,

  Ungal ganeer kural kekka romba arivam maa irku, no videos of late whats happening? are you all right?

  ReplyDelete