தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday 24 July 2018

நண்பர்கள் யார், பகைவர்கள் யார்?




எந்தக் கடல்கரையில் நின்று பார்க்கும்போது அழகை அள்ளித் தருகிறதோ, அதே கடல், நடுக்கடலில் தத்தளிப்பவனுக்கு அளவில்லா அச்சத்தைத் தருகிறது. எந்தக் காற்று, தென்றலாய் வரும்போதும், நம்மை வருடும்போதும் நாம் மகிழ்கின்றோமோ, அதே காற்று புயலாய் வரும்போது, அஞ்சி நடுங்கி அறைக்குள் ஒதுங்குகின்றோம்அப்படித்தான் பனியும் பார்ப்பதற்கு எத்தனை அழகு! ஆனால் அந்தப் பனிவெளிக்குள் திசைதெரியாமல் சிக்கிக் கொண்டால் எத்தனை கொடூரம்!

Into the White எனும் ஆங்கிலப்படம், இரண்டாம் உலகப் போரின் பொதுநார்வே பனிவெளியில் சிக்கிக்கொண்ட ஐந்து இராணுவ வீரர்களைப்  பற்றிப்  பேசுகிறது. உண்மைக்கதை ஒன்றே இப்படிப் படமாக்கப் பட்டிருக்கிறது. இந்தத் தலைப்பில் உள்ள ஒயிட் என்பது பனியைக் குறிக்கிறது என்பதால், பனிவெளியில் என மொழிபெயர்க்கலாம் என்று நினைக்கிறேன்


நான் ஆங்கிலப்படங்கள் மிகுதியாகப் பார்ப்பதில்லை. அவர்களின் பேச்சு மொழி  எனக்குப் புரியாது என்பதுதான் காரணம். இப்போது என் மருமகன் சுரேஷ் உதவியோடு, டெட்ரோய்ட்டில் அமர்ந்து சில ஆங்கிலப் படங்களைப்  பார்த்தேன். அவற்றுள் ஒன்றுதான் இந்தப் "பனிவெளியில்".

இரண்டாம் உலகப்போர் எத்தனையோ கதைகளுக்குக் கருவைத் தந்திருக்கிறது. இந்தப் படத்திற்கும்!

எந்தப்பக்கம் திரும்பினாலும் பனி கொட்டிக்கிடக்கும் நார்வே வடதுருவத்தின் மீது பறந்துகொண்டிருந்தபோது, ஜெர்மன் விமானம் சுட்டு வீழ்த்தப்படுகிறது. விமானம் சிதைந்து போனாலும், உள்ளிருந்த மூன்று போர் வீரர்களும் தப்பி விடுகின்றனர். அவர்களை சுட்டு வீழ்த்திய பிரிட்டன் விமானமும் ஒரு மலையில் மோதி, சற்றுத் தள்ளி விழுந்து விடுகிறது. அதிலும் உள்ளிருந்த மூவரில் இருவர் பிழைத்துக் கொள்கின்றனர்.

பனியின் குளிரிலிருந்து தப்பிக்க, பனிக்குள் போய்விடுவதுதான் சிறந்த வழியாம். எனவே பனிக்குகை (snow cave) உருவாக்கி ஒருநாள் இரவைக் கழிக்கின்றனர். தம் கைவசமிருந்த உணவு வகைகளையும் இழந்தபின், மறுநாள் தங்கவும், தப்பிக்கவும் வழி தெரியாமல் அலைகின்றனர்.  அப்போதுநார்வே இராணுவத்தினரால் கைவிடப்பட்ட ஒரு குடிலைச் சென்றடைகின்றனர். பனிவெளியில் மரத்தாலான ஒரு சிறு குடில். அதே குடிலுக்குப் பிரிட்டன் விமானத்திலிருந்து தப்பித்த இருவரும் அன்று மாலை வந்து சேருகின்றனர்.

களத்தில்  எதிர் எதிராக நின்றவர்கள், இங்கே ஒரே குடிலில் வாழ வேண்டிய தேவை ஏற்படுகின்றது. இதுதான் கதையின் மையம்கையில் உள்ள துப்பாக்கியால் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொள்ளவே முதலில் முயற்சிக்கின்றனர். ஆனாலும் ஆளரவமில்லாத இந்தப் பனிவெளியில் உயிர் பிழைப்பதே கடினம் என்ற சூழலில், துப்பாக்கிகளைத் தூர எறிந்துவிட்டு, நட்பும் இல்லாமல், பகையும் இல்லாமல் வாழ முடிவு செய்கின்றனர்

சில நாள்களுக்குப் பின்பனிவெளிக்குள் வந்த நார்வே ராணுவம் அனைவரையும் கைப்பற்றி அழைத்துச் செல்கிறது. நார்வே  பிரிட்டனின் நேச அணி, ஜெர்மனின் பகை அணி. பிரிட்டன் வீரர்களை இராணுவ அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.  "ஏன் எதிரிகளைச்  சுட்டுக் கொல்லவில்லை?" என்று கேட்கின்றனர். "அந்தச் சூழலில் எங்களால் அது முடியவில்லை" - இது விடை.

ஜெர்மன் வீரர்கள் கனடா நாட்டுச் சிறைக்குப் போர்க் கைதிகளாக  அனுப்பப்படுகின்றனர். பிரிட்டன் வீரர்கள் மீண்டும் போருக்கு அனுப்பப்படுகின்றனர்.

இரண்டாம் உலகப் போர் முடிந்து பல ஆண்டுகளுக்குப் பின், 1977இல், முனிச்சில் இருக்கும் ஜெர்மன் தளபதிக்கு  ஒரு தொலைபேசி வருகிறது. 37 ஆண்டுகளுக்கு முன், அந்தப் பனிக்குடிலில் ஒன்றாக வாழ்ந்த பிரிட்டன் தளபதி பேசுகிறார் - "லண்டனுக்கு வாருங்கள்".

அந்தப் படத்தின் இறுதியில், திரையில் ஆங்கிலத்தில்  ஒரு வரி இடம்பெறுகிறது.   அந்த வரியுடன் அந்தப் படம் நிறைவடைகிறது. அந்த வரி இதுதான்---

       SOON AFTER THE ENEMIES MET, AS FRIENDS 

      (மிக விரைவில் அந்த எதிரிகள் சந்தித்தனர், நண்பர்களாக!) 


இந்த உலகில் நமக்கு நண்பர்கள் யார், எதிரிகள்  யார்? காலமும் சூழலும்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது!

8 comments:

  1. நல்ல படம் பார்க்க ஆவல்

    ReplyDelete
  2. அருமை அய்யா..... வா.நேரு,மதுரை

    ReplyDelete
  3. இதையத்தைத் தொட்டது. உலகத்தின் இதையத்தை மீட்டவேண்டும்!

    ReplyDelete
  4. நன்பரே இதேபோல் Death of Stalin என்ற படத்தையும் பாருங்கள். அரசியலில் யார் நன்பர் யார் பகைவர் என்று புரியும்.

    ReplyDelete
  5. அருமையாக உள்ளது

    ReplyDelete
  6. Super tala,
    Yennga anbu tholai ilai maa neriyaa padikaa time keidkethu pola...

    ReplyDelete
  7. சமீபத்தில் நான் பார்த்த The Railway Man என்ற படமும் அருமையாக இருந்தது...

    ReplyDelete