"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்" என்பார் கண்ணதாசன்.
தேர்தல் என்றால் இன்னும் பல்லாயிரம் இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது - எங்கள் பயணம்
தந்த அனுபவம்.
கடந்த இரண்டாம் தேதி தொடங்கி 14ஆம் தேதி மாலை வரை, தி.மு.கழகக்
கூட்டணியை ஆதரித்து நடைபெற்ற எங்கள் தேர்தல் பயணத்தில் மக்களுக்குச் சொன்னதை விட, மக்களிடமிருந்து
நாங்கள் பெற்றவைகள் மிகுதி! வேட்பாளர்கள் அறிவிப்புக்குப் பின் வடக்கிலும், கிழக்கிலும், மேற்கில் சில மாவட்டங்களிலும் எங்கள் பயணம்
அமைந்தது. தெற்குப் பகுதிக்கு நாங்கள் செல்லவில்லை. தோழர் பொள்ளாச்சி உமாபதி அவர்களின்
பேருதவியோடும், பேரவைத் தோழர்களின் முழு ஈடுபாட்டோடும் நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.
எங்கள் பயணத்தின் அடிப்படையில், தெற்கையும் உட்படுத்தி, தேர்தல்
முடிவுகள் எப்படியிருக்கும் என்று எங்களுக்கு ஒரு கணிப்பு உள்ளது. அதனை இங்கு பதிவு
செய்து விடுகிறேன். இன்னும் 36 மணி நேரத்திற்குள் எங்கள் கணிப்பு உண்மைக்கு அருகில்
உள்ளதா, அல்லது விருப்பத்தின் அடிப்படையில் வெகு தூரம் விலகி நிற்கிறதா என்று தெரிந்துவிடும்!
ஐந்து அல்லது ஆறு தொகுதிகளைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளையும்
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகள் மட்டுமே பகிர்ந்து கொள்ள இருக்கின்றன
என்று நாங்கள் கருதுகின்றோம். காட்டுமன்னார்கோயில், உளுந்தூர்ப்பேட்டை, பெண்ணாகரம்,
ஜெயங்கொண்டம், சிவகாசி, குமரி மாவட்டத்தில் ஒரு தொகுதி ஆகியன மட்டுமே அந்த ஆறு தொகுதிகள்.
இவற்றில் மட்டுமே மும்முனைப் போட்டி நிலவுகின்றது. மற்ற அனைத்து இடங்களிலும் இருமுனைப்
போட்டியே!
கடலூரில் சீமான் நான்கு அல்லது ஐந்தாவது இடத்தில்தான் நிற்கிறார். தி.மு.க. அணி பெரும்பான்மை
இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்புகள் தெரிகின்றன.
தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 28 லட்சம் ரூபாய்க்குள்தான் செலவுகள்
அடங்குகின்றன என்பதை யாராலும் நம்ப முடியாது - தேர்தல் ஆணையம் உட்பட! தமிழகத் தேர்தல்களில்
பணம் ஒரு பெரிய பங்கை வகிக்கின்றது என்னும் உண்மையை வெட்கத்துடன் ஒப்புக் கொள்ள வேண்டியுள்ளது.
மக்களில் ஒரு பகுதியினரும் பணத்தை எதிர்பார்க்கின்றனர் என்பதும் அவமானகரமான உண்மையே!
எனினும் ஒரு "தருமம்" மாறியுள்ளது. கைநீட்டிக் காசு வாங்கிட்டோம்,
மாத்திப் ஓடுவது தருமமில்லை என்ற எண்ணம் போய்விட்டது. கொடுப்பவர்களிடம் வாங்கிக் கொண்டு,
பிடித்தவர்களுக்கு வாக்களிப்போம் என்ற மனநிலை பலரிடம் உள்ளது. எனவே பணம்தான் வெற்றி
தோல்வியை முழுமையாகத் தீர்மானிக்கிறது என்று சொல்ல முடியவில்லை. அதற்கும் ஒரு பங்கு
உள்ளது என்பதையும் மறுக்க இயலவில்லை.
சாதியின் பெயரால் சத்தியம் வாங்கிக் கொண்டு வாக்குக் கேட்டுள்ள
நிகழ்வைத் தருமபுரி போன்ற மாவட்டங்களில் கேள்விப்பட்டோம். ஊத்தங்கரைத் தொகுதியில் ஒரு சிற்றூருக்கு
நாங்களும், மாவட்டச்
செயலாளரும், வேட்பாளரும் சென்றிருந்தோம். மக்கள் கூடி நின்று கேட்டனர். ஆனால் ஒரு அம்மா, மாம்பழம் தவிர வேறு யாரும் இங்கே ஒட்டுக் கேட்க
வரக் கூடாது என்று சத்தமாக எதிர்ப்புத் தெரிவித்தார். அதனைப் பொருட்படுத்தாமல் நான்
பேசிக் கொண்டிருந்தேன். சற்று நேரத்தில், அந்த ஊர் மக்களே, " சும்மா இருக்க மாட்டியா
நீ, அவுங்க என்ன பேசுறாங்கன்னு கேளு" என்று அதட்டினர்.
அந்த ஊரின் அடுத்த பகுதிக்குச் சென்றோம். அந்த மக்கள் எங்களை வரவேற்று,
"அந்தப் பக்கத்துல இருக்கவுங்க எல்லாம் ஒங்களுக்குப் போட மாட்டாங்க. அதுக்காகவாவது
நாங்க உங்களுக்குத்தான் போடுவோம். உதய சூரியனுக்குத்தான் எங்க ஒட்டு" என்றனர்.
சாதிப் பகைமை கிராமங்களில் வேரூன்றி நிற்கிறது, வெளியிலும் தெரிகிறது.
இந்தத் தேர்தலில் பல கட்சிகளும் போட்டியிடுகின்றன என்பது உண்மைதான்.
ஆனால் ஒரு சில கட்சிகளைத் தவிர, மிகப் பலரால் வாக்குச்சாவடிக் குழுக்களையே (பூத் கமிட்டி)
அமைக்க முடியவில்லை. ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 250 முதல் 300 வாக்குச்சாவடிகள்
உள்ளன. ஒரு சாவடிக்குப் பத்துப் பேர் என்றால், 2500 முதல் 3000 பேர் வரை ஒரு தொகுதிக்குத்
தேவைப்படும். பல கட்சிகளுக்கு அந்தத் தொகுதியில் மொத்த வாக்குகளே அவ்வளவு இல்லை.
எனவே தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் பணபலத்தால் மட்டுமே வலிமையாக
உள்ளன என்ற கூற்று உண்மையில்லை. அது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் இவ்விரு கட்சிகளுக்கும்
மிகப் பெரிய அமைப்பு வலிமை உள்ளது என்பதை நேரில் சென்றால் அறிந்து கொள்ளலாம்.
பா.ம.க.வின் பலமும், பலவீனமும் சாதிதான் என்றால், மக்கள் நலக் கூட்டணியின்
பலமும் பலவீனமும் விஜயகாந்த்தான். கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த
போதே, தே.மு.தி.க.வுடன் கூட்டணி வேண்டாம் என்றும், உதயசூரியன் சின்னம் 200 இடங்களிலாவது
போட்டியிட வேண்டும் என்றும் நான் விரும்பினேன். பதிவும் செய்திருந்தேன். இப்போது அது
மிகவும் சரியானது என்ற
கருத்து உறுதிப் பட்டுள்ளது. ஒரு வேளை அவர்களுடன் கூட்டணி ஏற்பட்டிருந்தால், தி.மு.க.வின்
வெற்றியை அவர்கள் முழுமையாகச் சொந்தம் கொண்டாடியிருப்பார்கள்.
ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள வலிமை என்ன என்பதை அனைவரும் அறிந்து கொள்ள
இந்தத் தேர்தல் கண்டிப்பாய் உதவும்.
ஊத்தங்கரை தொகுதியில் தேர்தல் நிறைவு பிரச்சாரத்தில் தங்களுடன் கலந்து கொண்டது என் வாழ்வில் மறக்க இயலாது .நன்றி அய்யா !
ReplyDelete// “மக்களில் ஒரு பகுதியினரும் பணத்தை எதிர்பார்க்கின்றனர் என்பதும் அவமானகரமான உண்மையே!” //
ReplyDeleteபணம் வாங்கி கொண்டு மக்கள் ஓட்டு போடுவார்கள் என்பது ஒரு பகுதி உண்மை என்பதை சொல்லியிருக்கிறீர்கள். அது பகுதி உண்மைதான் என்பதை நடப்பு செய்தி ஒன்றை ஆதாரமாக கொண்டு உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.அது உங்களை விடவும் திமுக தலைமைக்கு அதிக புரிதலை தந்து தம்மை சுய விமர்சனம் செய்து கொள்ள முடிந்தால் நன்று. அது தமிழகத்தின் ‘பலம்’ வாய்ந்த அமைச்சரின் தொகுதி. ஜெ தோற்றால் கூட அந்த அமைச்சர் வெற்றி பெற்றுவிடுவார் என்பது உள்ளூர் ர ர ங்களின் நம்பிக்கை. அதை திமுக தலைமையும் உணர்ந்தே அதே அளவு ‘பலம்’ வாய்ந்த முன்னால் மத்திய அமைச்சரின் தம்பியை (அவர் கேட்காமலேயே) அந்த தொகுதியில் ஒரு போராடி தோற்கும் மன நிலையில் நிறுத்தியது. தொகுதியை நன்றாக ‘கவனித்து’ வந்த அந்த அமைச்சரிடம் தோற்றுப்போவோம் என்பதை உடனே உணர்ந்த அந்த தம்பி தப்பினால் போதும் என்று தலைமையிடமே சொல்லி விலகிக் கொண்டார்.அந்த திடீர் நெருக்கடியை திமுக தலைமை எதிர்பார்க்கவில்லை. என்றாலும் கடைசி நேரத்தில் சும்மா பணம் கட்டியிருந்த ஒரு முன்னால் எம் எல் ஏவை நிற்க பணித்தது.இந்த முன்னால் எம் எல் ஏ ஒரு ‘அப்பாவி’ மனுசன். சொன்னவுடன் போய் பணம் கட்டி தொகுதிக்கு போய் நின்று விட்டார்.அந்த மனுசன் பணம் எதுவும் சம்பாதித்து வைக்காதவர் என்பதைத் தான் அப்பாவி என்று சொன்னேன்.ஆனால் அவர் நிறைய நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருந்தார்.மருத்துவமனைகளில் ஊர் மக்களை சென்று பார்ப்பதும், நல்லது, கெட்டது என அனைத்திலும் தலையை காட்டுவதும், தாழ்த்தப்பட்ட மக்களின் மடியில் இருக்கிற வெற்றிலை சீவலை உரிமையுடன் எடுத்து போடுவதும் என அவர் மக்களில் ஒருவராக இருந்திருக்கிறார்.அவர் தொகுதிக்குள் போய் சேர்ந்த அந்த நிமிடம் முதல் திமுகவில் இருந்த பல குழுக்கள் ஒன்றாகின, அந்த அமைச்சரே எதிர் பாராத பல திருப்பங்கள் நிகழ்ந்தெறின.இப்போது அமைச்சர் தேறுவாரா என்ற சந்தேகம் அவருக்கே வந்துவிட்டது. இன்னும் இரண்டு நாளில் முடிவு தெரியப்போகிற தமிழகம் முழுமைக்கான தேர்தலில் நான் இந்த தொகுதியைத்தான் மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.ஏனென்றால் எல்லோரையும் தலைகுனிய வைக்கும் பண நாயகத்திற்கு இவர் மிரட்டலாக இருக்கிறார். இந்த தொகுதியிலும் திமுக பொன் வைக்கிற இடத்தில் பூ வைக்க ஆரம்பித்தது.ஆனால் மக்களில் பலர் வாங்க மறுக்கின்றனரென்றும், வாங்கிய சிலர் திருப்பி அளிக்கின்றனர் என்றும் செய்தி வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். அடடே எல்லாவற்றையும் சொல்லி விட்டு அந்த முன்னால் எம் எல் ஏ யாரென்று சொல்லாமல் விட்டேனே? அந்த முன்னால் எம் எல் ஏ மற்றும் இந்நாள் வேட்பாளர் பெயர் எம்.ஆர் எனப்படும் எம்.ராமச்சந்திரன்.அவர் எதிர்த்து நிற்கும் அமைச்சர் நால்வர் அணியின் இன்றைக்கும் தலைமையின் நம்பிக்கைக்கு உரிய ஒரு அமைச்சர்.
இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் வென்றால் திமுக தன்னை சுய பரிசீலனைக்கு ஆளாக்கி கொள்வது அந்த கட்சிக்கு நல்லது. இப்படி மக்கள் பணியில் நாட்டமுள்ளவர்கள் தான் எந்த ஒரு இயக்கத்திற்கும் பலமாக இருக்க முடியும்.பணம் பலமாக இருக்க ஆரம்பித்தால் எம் எல் ஏவை கொன்றால் இடைத் தேர்தலில் நல்ல பணம் பார்க்கலாம் என ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை காட்சி வைத்திருப்பார்களே அது உண்மையாகி விடும்.
இன்றைய தேர்தல் முடிவை வைத்துப் பார்க்கையில், உங்களின் கள ஆய்வு வியக்க வைக்கிறது. இன்றுங்கூட சில திமுக தலைவர்கள் பணநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி எனக் கூறுவது வருத்தத்தை அளிக்கிறது. அந்தத் திமுக தலைவர்கள் உங்களின் நேர்மையான ஆய்வைப் படித்தேனும் திருந்தினால், அது திமுகவுக்கு நல்லது. சிந்திக்குமா திமுக தலைமை
Deleteஅய்யா மிகவும் பயனுள்ள தகவல்கள். தாங்களும் பேரவை தோழர்களும் ஆற்றிய தேர்தல் பணிகள் காலத்தால் செய்த அரும்பணியாகும். அது ஞாலத்திலும் மிகவாகும்.
ReplyDeleteகருத்து கணிப்புக்களை மட்டும் அல்ல தேர்தல் முடிவுகளையும் தாண்டி சிந்திக்கும் முதிர்ச்சி திமுக ஆதரவாளர்களுக்கு உண்டு. தேர்தல் அரசியலில் ஏராளமான வெற்றிகளையும் தோல்விகளையும் தாண்டி திமுக வளர்ந்து கொண்டுதான் வருகிறது. திமுக ஒரு சமுதாய மறுமலர்ச்சி இயக்கம். தேர்தல் வெற்றிகள் ஒரு உந்து சக்தியாக இருக்கும் ஆனால் அவற்றையும் தாண்டி திமுகவின் தேவை மக்களுக்கு இருக்கிறது. உலகின் எந்த ஒரு மூலையிலும் ஒரு திமுககாரன் இருப்பான். அவன் சுயமரியாதையிலும் சமுகநீதியிலும் திராவிட பாரம்பரியத்திலும் நம்பிக்கை உள்ளவனாகவும் இருப்பான். இதுதான் திமுகவின் பலம். எத்தனை புயலிலும் இடிமின்னளிலும் அதன் ஆணிவேர்கள் உயிர்த்துடிப்போடுதான் இருக்கும். அதுதான் திமுகவின் வெற்றி.
திமுகவை வெறுப்பவர்கள் எல்லாரும் ஒரு விசித்திரமான இடத்தில் ஒன்றாக சந்திக்கிறார்கள். திமுகவின் எதிரிகள் யார் யார் என்று அடையாளம் கண்டாலே போதும் திமுகவின் கம்பீரம் எதுவென்று புரிந்து விடும்.
முற்றிலும் உண்மை ராதா மனோகர்
Deleteநன்றி திரு.வீரமணி அய்யா
Deleteசுப வீ ஐயா,
ReplyDeleteஉங்களின் பயணம் என்றுமே எங்களுக்கு ஒரு உந்து சக்திதான்!
ராதா மோகன்,
மிக சரியான பகிர்வு...
நன்றி
சுதாகர் (IT)
திமுகவும் பணம் கொடுக்கிறது என்ற எண்ணத்தை வலுவிழக்கசெய்வதற்காக மக்களும் இங்கு பணம் எதிர்பார்க்கிறார்கள் என்ற கூற்று அநியாத்தின் உச்சம் மக்களை லஞ்சத்திற்கு பழக்கபடுத்திவிட்டது இந்த திமுக அதிமுக தான் என்பது தங்களுக்கு தெரியாமல் இல்லை. அந்த உண்மை உரைக்க திமுக மீதான தங்களின் ஆதரவு நிலைப்பாடு தங்கhளுக்கு தடையாக இருக்கிறது என்பது நன்றாக தெரிகிறது. இங்குதான் நீங்கள் தோற்றுப்போகிறீர்கள்.
ReplyDeleteகுறிப்பாக சீமான் கடலூரில் பின்தங்கியுள்ளார் எனும் தங்களின் கூற்று. சீமான் மீதுள்ள தங்களுக்குள்ள வன்மம் நன்றாகவே புலப்படுகிறது. இந்த கூற்றின் மூலம் நீங்கள் மறைமுகமாக சீமான்தான் உங்களுக்கும் திமுகவிற்கு தற்ப்போது முதல் எதிரி என்பதை ஒத்துக்கொண்டுள்ளீர்கள். உண்மையும் அதுவே.
அண்ணா தங்களது இந்த பதிவும் அதில் உள்ள நடையும் என் ஞாபகத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு நான் படித்த மாவோவின் ஹுனான் மாகான களநிலவர அறிக்கை புத்தகத்துக்கு கொண்டு சென்றுள்ளது என்று பாராட்டினால் மிகையாகாது. இதில் காணப்பட்ட பதிவு நடையில் அண்ணா நீங்கள் இருப்பதற்க்கு மகிழ்ச்சி.
ReplyDeleteமதிப்பிற்குரிய சுபவீ ஐயா,, நான் உங்களிடம் ஒரு மாணவன் ஆகா ஆசைப்பட்டு உங்களின் வலைப்பூ பில், தினமும் செய்திகள் படித்து பதில் அளிக்கிறேன், இந்த மாணவன் வுக்கு ஒரு சிறிய சந்தேகம் கண்டி நாயக்கர் என்று ஒரு ஆவன படம் வந்திருக்கு,, அதில் திராவிடம் மிகவும் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது, கலைஞர், பேரறிஞர், ஆசிரியர்,மற்றும் தந்தை பெரியார் ஐ பற்றி மிகவும் தவறாக சித்தரிக்கிறார்கள்,, இலங்கை இல் தமிழர்களை கொன்றது சிங்களவர்கள் இல்லை ஆம், தெலுங்கர்களாம்,, திராவிடனும் பார்பணனும் கூட்டு காலவனியாம்,,நீங்கள் பார்த்துவிட்டு பதில் கூறுங்கள் ஆவன படம் பெயர் கண்டி நாயக்கர்.
ReplyDeleteஅந்த ஆவணப்படத்தை நானும் பார்த்தேன். அதில் சில தகவல்கள் இலங்கையில் உள்ள kaaraava.Org என்ற இணையத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே பதிவில் இருப்பவையாகும். என்னை பொறுத்தவரை சாதிக்குள் ஒழிந்திருக்கும் தமிழ் தேசியவாதிகளின் ஒரு விகார வெளிப்பாடுதான் அந்த பரப்புரை. திராவிடர் என்ற பதம் சாதிகளற்ற ஒரு தேசிய இனத்தின் குறியீடு. தமிழ் தேசியவாதிகள் என்போர் சாதியை மனதிற்குள் வைத்துகொண்டு வெளியே கவுரமாக காட்டி கொள்வதற்கு தமிழ்தேசியத்தை கையில் எடுத்துள்ளார்கள்.
Deleteமாற்றம் எதிர்பார்த்த தமிழக மக்களுக்கு ஏமாற்றம் காத்திருக்கிறது என்பதை உங்களின் அக கணிப்பு வெளிப்படுத்துகிறது!.தமிழக மக்களுக்கு இன்றைய அவசிய அத்தியாவசமான தேவை அரசியல் மாற்றம் தானே தவிர ஆட்சி மாற்றமல்ல(கட்டுவிரியனுக்கு மாற்று கண்ணாடிவிரியனாக இருக்க முடியாது!).திமுக ஒருபோதும் அறம் சார்ந்த ஆட்சியை நடத்தாது என்பதை மீண்டும் மீண்டும் மீண்டும் ஏற்கனவே நிருபித்துள்ளது!.உங்களின் அக கணிப்பு சரியானால் இப்போதும் அதை மீண்டும் நிருபிக்கும்! பாவம் போக்கத்த தமிழக மக்கள்!!
ReplyDeleteஇன்று தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. தாங்கள் குறிப்பிட்டுள்ளதில் மூன்று செய்திகள் மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று, மூன்று தொகுதிகளைத் தவிர மற்ற எல்லா தொகுதிகளையும் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் பங்கு போட்டுக் கொண்டுள்ளன. இரண்டு, தேர்தல் வெற்றியில் பணம் ஒரு முக்கிய பங்காற்றியிருக்கிறது. மூன்றாவதாக, தே.மு.தி.க.வுட்ன் தி.மு.க. கூட்டணி சேராதது அறிவார்ந்த முடிவு என்பது.
ReplyDeleteசுப வீ அவர்களே!!நான் சொன்ன அந்த ராமச்சந்திரன் ஒரத்தநாடு தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்.அது எளிதான காரியமல்ல.ஒரு பணமலையை தகர்த்திருக்கிறார்.எனக்கு அதில் மகிழ்ச்சி.நான் சொன்னபடி தொகுதிக்கு ஒரு பத்து ராமசந்திரன்கள் இருக்கிறார்கள்.அவர்களை கண்டறியும் வழிகளை தலைமை தேடிக் கண்டறிந்தால் நல்ல அரசியல் போக்கை வளர்க்கும் முயற்சியாக இருக்கும்.
ReplyDeleteஇன்னொரு நல்ல செய்தி ஆட்சியமைக்கும் முயற்சியில் பின்னடைவாக இருந்தாலும் கூட தேதிமுக என்கிற குடும்ப கம்பெனி கலைப்பிற்கு தயாராகும் நிலையை எட்டியுள்ளது.அந்த கம்பெனியை எந்த காரணத்திற்கும் உயிர் கொடுக்கும் வேலையை திமுக செய்யக்கூடாது.
நான் உங்களது மற்றொரு பதிவில் திமுக வெற்றிக்கு ஏதோ ஒரு விஷயம் குறைவதாக எனக்கு தோன்றுகிறது என எழுதியிருந்தேன்.அவ்வகையில் திரு.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளர் என அறிவித்திருந்தால் ‘மாற்றம்’ விரும்பும் சிலரை அது ஈர்த்திருக்கும்.அது நடக்காமல் போனதில் வருத்தமே!!
மக்களுக்கு ஏற்றவாறு, நன்றாக உணர தேர்தல் முடிவுகள் வந்துள்ளன.
ReplyDeleteபார்ப்பதற்கு அம்மையார் வெற்றி பெற்றது போல் தோன்றும்; ஆனால் தோல்வியை தழுவியுள்ளார். எப்படியெனில் கடந்த தேர்தலில் 203 இடங்களில் பெற்ற வெற்றியில் இருந்து 72 இடங்களை இழந்துள்ளார். கிட்டத்தட்ட 35% தோல்வி.
பார்ப்பதற்கு திமுக தோல்வி அடைந்தது போல் தோன்றும்; ஆனால், வெற்றி பெற்றுள்ளது. . எப்படியெனில் கடந்த தேர்தலில் 31 இடங்களில் பெற்ற வெற்றியில் இருந்து 100 இடங்களை பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 300% வெற்றி.
எதிர்வரும் காலங்களில் அம்மையாருக்கு ஆட்சி நடத்த வரும் சிக்கல்கள் எதிர் கட்சிகளால் அல்ல; தன் கட்சியினாலேயே.
ஆகவே மீண்டும் ஒரு சட்டமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு முன்பே நடக்க கூடும்.
"anonymous" என்பவர் பதிவு செய்திருக்கும் கருத்தை நான் உறுதியாக வழிமொழிகிறேன். இந்தப் பதிவை படித்த பின் இதே கருத்தை பதியவே முற்பட்டேன். வேறு யாரேனும் இதே கருத்தை எழுதிவிட்டார்களா என்று பார்த்துவிட்டு பதிவிடலாம் என்று நினைத்தேன். அதாவது ஊழலில் பிறப்பிடமாக, ஓட்டுக்கு பணம் என்ற விசத்தை இத்துனை ஆண்டுகள் உரம் போட்டு வளர்தெடுத்திருக்கும் திமுக வைப் பார்த்து பேராசிரியர் அவர்களால் கேள்வி கேக்க முடியுமா? விமர்சனம் செய்ய முடியுமா? உண்மையான பெரியார் தொண்டராக, கருப்புச்சட்டை அணிந்தவராக இருந்தால் இந்நேரம் திமுகவை விட்டு தேர்தல் அரசியலை விட்டு விலகியிருக்க வேண்டுமே? ஆனால் பணம் பெரும் மக்கள் தருமம் இல்லாமல் நடக்கிறார்கள் என்று கூற பேராசிரியருக்கு எப்படி மனம் வந்தது என்று தெரியவில்லை. பணம் கொடுக்கபடுவதை வெட்கத்துடன் ஒப்புக்கொண்டால், அதற்குப் பிறகு மக்களை விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? பேராசிரியர் போன்றவர்கள் பணநாயகத்திற்கு அடிப்படையாக இருக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எதிராகவல்லவா களம் காண வேண்டும். அதைவிடுத்து மக்களை குறை கூறுவது சிறிதும் நியாயமல்ல. மேலும் பொதுவாகவே தலித் மக்கள்தான் பணத்தை எதிர்பார்த்து, பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடுகிறார்கள் அல்லது தர்மம் இல்லாமல் ஓட்டு போடுகிறார்கள் என்று அனைவரும் தொடர்ந்து கூறி வருகிறார்கள். நான் என்ன சொல்கிறேன் என்றால், ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பதினெட்டு முதல் இருபது சதம் தான் தலித் மக்கள். அவர்களை தேர்தல் நேரத்தில் முற்றிலும் புறக்கணித்துவிடுங்கள். மீதமிருக்கும் என்பது சதவீத மக்களிடம் பிரச்சாரம் செய்யுங்கள். இலவசங்கள் அறிவிக்க வேண்டாம். ஆயிரம் கோடிகள் அளவில் ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டாம். தலித் மக்கள் ஓட்டு போட்டாலும் போடாவிட்டாலும் என்ன கெட்டுவிடப் போகிறது. பணத்தை எதிர்பார்க்காத மக்கள்தான் என்பது சதம் இருக்கிறார்களே, அவர்கள் அரசை தீர்மானிக்கட்டும். எதற்காக ஆயிரம் கோடிகள் செலவு செய்ய வேண்டும், பிறகு எதற்கு அவர்களை குற்றம் சொல்ல வேண்டும்? வேண்டுமென்றால் பேராசிரியர் இந்தக் கருத்தை திமுக தலைமைக்கு வலியுறுத்தலாம். தலித் மக்கள் மீது வைக்கப்படும் இன்னொரு குற்றச்சாட்டு அவர்களுக்கு போதிய அரசியல் அறிவு இல்லை என்பது. இது மேதாவிகளின் கருத்து. இந்தத் தேர்தலில் மெத்தப் படித்த மேதாவிகள் வாழும் சென்னையில்தான் தமிழகத்திலேயே மிகக்குறைந்த ஓட்டு எண்ணிக்கை. அதுமட்டுமல்ல, அதிலும் பாதி பேர் NOTA வுக்கு ஓட்டுப் போட்டு அம்மையாரையே மீண்டும் அரியணையில் அமர வைத்திருக்கிறார்கள் இந்த அறிவுஜீவிகள். NOTA ஓட்டு மட்டும் பதினாறு தொகுதிகளில் அதிமுக வின் வெற்றியை தீர்மானித்திருக்கிறது. அரசியல் மாற்றம் அல்ல, ஆட்சி மாற்றத்திற்கு கூட ஓட்டுப்போட வக்கில்லாதவர்கள்தான் இந்த அரசியல் அறிவு பிதுங்கி வழியும் அறிவு ஜீவிகள். வேண்டுமென்றால் இனிமேல் அரசியல் அறிவு மிகுந்த அறிவு ஜீவிகள் தலித் மக்கள் குறை சொல்லவதை விட்டுவிட்டு படித்த மேதாவிகளிடம் தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு அவர்களை திருத்த முயற்சிக்கலாம். அவர்களுக்கு அரசியல் அறிவை ஊட்டலாம். மேலும், தலித் மக்களுக்கு அரசியல் அறிவு இல்லை என்பது எவ்வளவு பெரிய பிதற்றுவாதம் என்றால், அன்றாடம் தலித் மக்களின் அடிப்படை தேவைகளுக்காகவும், அடிப்படை வசதிகளுக்காகவும் தினம் தினம் அரசு அதிகாரிகளிடமும், அப்பகுதியின் அரசியல் வாதிகளிடமும், நேரடி அரசியலில் அன்றாடம் கலந்திருப்பது தலித் மக்கள்தான். இதை யாராவது மறுக்க முடியுமா? தலித் மக்கள் அல்லாத பிறருக்கு (பெரும்பாலானவர்களுக்கு) அந்தப் பகுதி மேயர் யாரு, கவுன்சிலர் யாரு, இன்ஸ்பெக்டர் யாரு, மாவட்ட ஆட்சியர் யாரு என்று கூட தெரியாது. இவர்கள் அனைவரையும் அன்றாடம் சந்திக்க வேண்டிய தேவையும் அவசியமும் இவர்களுக்கே அதிகம் உள்ளது. மேலும், தேர்தல் காலம் தவிர அனைத்து காலங்களிலும் அரசியல் கூட்டங்களில் மணி கணக்கில் உக்கார்ந்து கேட்பவர்களும் இவர்களே. பணம் கொடுத்துத்தான் வரவழைக்கப்பட்டிருந்தாலும் அரசியல்வாதிகள் பேசுவதை அதிகம் கேட்பது இவர்கள்தான். தலித் மக்களுக்கு அரசியல் அறிவில்லை என்று கூறுபவர்கள்தான் வெறும் நுனிப்புல் மேயும் புத்தகம் சார்ந்த அரசியல் அறிவு கொண்டவர்களாக இருக்கிறார்கள். எனவே தலித் மக்களை அரசியல் சார்ந்து எந்த வகையிலும் குறை கூற தமிழகத்தில் யாருக்கும் எந்த யோக்கியதையும் கிடையாது என்பதே உண்மை.
ReplyDeleteநண்பர் திரு.சக்தி கவுதம் அவர்களே, நான் “(யாரோ - anonymous) ” வழியிலேயே என்னுடைய சில கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன்.
ReplyDelete1.இந்த வாக்குக்கு பணம் கொடுக்கும் வழக்கம் / பழக்கம் 1960 – களிலேயே உள்ள ஒன்றாகும். இது குறித்து வேதனையான பேரறிஞர் அண்ணாவின் பேச்சு பதிவினை வலைதளங்களில் கேட்கலாம். இது ஒன்றும் புதிதல்ல.
2.ஏற்கனவே ஆரிய மாயையால் மக்கள் பிளவுண்டு ஏற்றதாழ்வோடு உள்ளோம். தற்போது நிலைமை சிறு சிறு மாற்றங்களால் முன்னேருகிறது. பல முறை ஒரு இனத்தின் பெயரைச் சொல்லி ஏன் தாழ்த்திக் கொள்ள வேண்டும். அரசியல் கட்சிகளும் இதை பின்பற்றுவது ஏற்புடையதல்ல.
அறிவு என்பது பொதுவானது. புத்திசாலித்தனம் என்பது தனிப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் மனதை தந்தை பெரியார், காமராஜர் போன்ற புத்திசாலிகள் அதிகம் வென்றுள்ளார்கள்.
அறிவுக்கு அறிவோடும், புத்திசாலித்தனதிற்கு புத்திசாலித்தனமாகவும் தமிழக மக்களின் இதயங்களை நேரிய வழியில் வென்றவர் பேரறிஞர் அண்ணா.
வழக்கம் போல் "anonymous" அவர்கள் தனக்கேயுரிய பாணியில் திறமையாக, சிறப்பாக விளக்கம் அளித்துள்ளார். என் கேள்வி ஒன்றே ஒன்றுதான். பணம் கொடுத்து மக்களை "corrupt" செய்யும் கட்சியை சாடாமல், "மக்கள் பணத்தை எதிர்பார்கிறார்கள்" என்றும், "பணத்தை பெற்ற பிறகு தர்மம் கடைபிடிப்பதில்லை" என்றும் மக்களை குறை சொல்வது சரியா? இதற்கு நேரடியான பதில் வேண்டும்.
Deleteசமூக நீதி அரசியலின் முன்னணியில் நின்று போராடும் பேராசிரியர் போன்றவர்கள் இத்தகைய கருத்தை கூறும்பொழுது தான் மிகுந்த வருத்தமாக இருக்கின்றது. இதுபோன்ற கருத்து கூறுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டிய பேராசிரியர் அவர்களே இப்படி ஒரு கருத்தை பதிவு செய்யலாமா?
Delete