தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday, 21 July 2016

சுயமரியாதை - 1


அறிமுகமாய்ச் சில சொற்கள் 

2000ஆம் ஆண்டில், "தமிழ் மண்ணே வணக்கம்". 2012இல் "இளமை என்னும் பூங்காற்று" தொடர்களுக்குப் பின், இப்போது மீண்டும் இத்தொடரின் மூலம் நக்கீரன் நண்பர்களைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கின்றேன்.  நீதிக்கட்சியின் நூற்றாண்டில், நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான பனகல் அரசரின் 150ஆவது பிறந்தநாளையொட்டி (1866 ஜூலை 9) இத்தொடர் தொடங்குவதில் மற்றுமொரு மகிழ்ச்சி இருக்கவே செய்கிறது.


பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர், மார்க்சியச் சிந்தனையாளர், யார்க்சயர் அப்சர்வர் (Yorkshire observer) என்னும் ஏட்டின் செய்தியாளர் கிறிஸ்டோபர் காட்வெல் (Christopher caudwell) தன்னுடைய தோற்றமும் உண்மையும் (illusion and reality) என்னும் நூலில் ஓர் அழுத்தமான கருத்தை வெளியிட்டிருப்பார். அந்த வரிகளே இந்தத் தொடரின் தலைப்பைத் தீர்மானித்தன என்று கூறலாம்.

ஒரு சொல்லுக்குப் பின்னால் ஒரு சமூகத்தினுடைய வரலாறு உறைந்திருக்கிறது" என்பது அவர் கூற்று. 

ஆழ்ந்த பொருளுடைய இத்தொடர், உலகின் பல்வேறு சமூகங்களுக்கும் பொருந்தக்கூடியது.  நம்மைப் பொறுத்தமட்டில், 'சுயமரியாதை'  என்னும் சொல்லுக்குப் பின்னால் தமிழ்ச் சமூகத்தின் இருபதாம் நூற்றாண்டு வரலாறு உறைந்து கிடக்கிறது என்று சொல்லலாம். 

ஆம்! சுயமரியாதை என்பது வெறுமனே ஒரு சொல் அன்று; அது ஒரு நூற்றாண்டின் சொல்!!


                                 1. சாதி துவேஷமா சுயமரியாதை?
                               



என் வலைப்பூவிற்கு, ஸ்ரீராம் அய்யர் என்னும் ஒருவரிடமிருந்து அவ்வப்போது விமர்சனக் கருத்துகள் வருகின்றன. அவர் யார், எங்கே இருக்கிறார், இது அவருடைய உண்மையான பெயர்தானா என்பன போன்ற விவரங்கள் ஏதும் எனக்குத் தெரியாது. எனினும், அண்மையில் அவர் அனுப்பியிருந்த ஒரு பதிவு என்னுள் படிந்தது. இதற்கு நேர்மையாக விடை சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அவர் அனுப்பியுள்ள செய்தியை அப்படியே கீழே தருகின்றேன்: 

         "பெரியாரிஸம் பிராமண எதிர்ப்போடு நின்றுவிட்டது. பெரியாரிஸ்ட் என்றால், பிராமணர்களை கடுமையாக சாடுபவர்கள் என்ற பொருள்தான் பொதுவாக உள்ளது. நான் பெரியாரை படிக்காமலே என் மனதில் பெரியார் எதிரியாக அமர்ந்துவிட்டார்.  அதற்கு காரணம் பெரியார் இல்லை. பெரியாரிஸ்ட்டுகள்."

ஸ்ரீராம் அய்யரின் கடிதத்தில் இரண்டு தொடர்கள் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை. "என்பதுதான் பொருள்" என்று கூறாமல், "என்ற பொருள்தான் பொதுவாக உள்ளது" என்கிறார். அடுத்ததாக, "நான் பெரியாரை படிக்காமலே...." என்று குறிப்பிடுகின்றார். 

இது யாரோ ஒருஅய்யரின்  கருத்தோ, அக்கிரஹாரத்தின் கருத்தோ மட்டுமில்லை.  அக்கிரஹாரத்திற்கு  வெளியிலும் ஏறத்தாழ இதே நிலைதான் நிலவுகிறது. 'பெரியாரியம்' 'சுயமரியாதை' போன்ற சொற்கள் பார்ப்பன எதிர்ப்புச் சொற்கள் என்று மட்டும்தான்  பலரும் கருதுகின்றனர். 'பெரியாரைப் படிக்காமலேதான்' அந்தக் கருத்துக்கு அவர்கள்  வந்தும் சேர்கின்றனர். அப்படியானால், உண்மையை அறிந்துகொள்ள  சுயமரியாதை இயக்கத்தின் வேர்களை நோக்கி நாம் பயணிக்க வேண்டியுள்ளது. 

நம் நாட்டிலும், உலகிலும் உள்ள எத்தனையோ இயக்கங்களைப்  போன்று, ஒரு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட இடத்தில் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்படவில்லை. அந்த விதை விழுந்த ஆண்டு என்று வேண்டுமானால் 1926 ஆம் ஆண்டைக் குறிப்பிடலாம். ஆனால் அந்த இயக்கம், கொஞ்சம் கொஞ்சமாகப் பரிணாம வளர்ச்சி பெற்று உருவான இயக்கம். 

1926 நவம்பர் இறுதியில், மதுரை தொடங்கி திருநெல்வேலி வரையில் பெரியார் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வேளையில், தம் கருத்து இயக்க  வடிவம் பெற வேண்டியது குறித்து அவர் குறிப்பிடுகின்றார். "சென்ற வருடம் காஞ்சிபுரத்தில் நடந்த தமிழ்நாடு அரசியல் மாநாட்டிலிருந்தே நமது சுயமரியாதையைக் காப்பாற்ற நமக்கு ஒரு தனி இயக்கம் வேண்டும் என்பதாகப் பல முறை பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன்" என்கிறார். அதனை மக்கள் ஏற்றுக்கொண்டதாலும், வரவேற்பதாகத் தெரிந்து கொண்டதாலும் அந்த எண்ணம் பலப்பட்டு உள்ளதாகக்  கூறுகின்றார்.  ஆக, 1926 இறுதியில்தான் இயக்கம் பற்றிய ஓர் இறுதி வடிவம் உருவாகாத்  தொடங்கியுள்ளது.

மறைந்த ஈ.வே.கி.சம்பத், ஒரு கூட்டத்தில் பேசும்போது, இது குறித்து வேடிக்கையாகச் சில செய்திகளைக் கூறுவார். சுயமரியாதை இயக்கத்தின் பெயர், நோக்கம், செயல்பாடுகள் எல்லாமே,எதிர்க்கருத்து உள்ளவர்களால் சிறிது சிறிதாக முடிவு செய்யப்பட்டது என்பார். "என்னய்யா இந்த நாய்க்க்கர் பிராமணாளையே எதித்துடுவார் போலிருக்கே" என்பார்கள். எதிர்த்தால் என்ன தப்பு என்று கேட்பார் பெரியார். 'போகப் போகச் சாதியே இல்லைன்னு சொன்னாலும் சொல்லிடுவார் போலிருக்கு" என்பார்கள். "சாதி இல்லதான். சாதி இருந்து யாருக்குப் பிரயோஜனம், இல்லாமலே போகட்டும்" என்று விடை சொல்லுவார் பெரியார்.  "என்ன ஓய், இந்த ராமசாமி நாய்க்க்கர் போற போக்கப் பாத்தால், கடைசியா கடவுளே இல்லைன்னு சொன்னாலும் சொல்லிடுவாரோ" என்று பீதி கிளப்புவதாக  எண்ணிக்கொண்டு பேசுவார்கள். பெரியார் நிதானமாக அடுத்த கூட்டத்தில் சொல்லுவார், "உண்மைதான்யா, இந்தக் கடவுளை வைத்துக் கொண்டுதான் மதம், சாதி எல்லாம் வருகிறது. கடவுளே இல்லை போ!' .

பரிணாம வளர்ச்சியின் இறுதிக்கட்டத்தில், திருவாரூருக்கு அருகில் உள்ள விடயபுரம், கண்கொடுத்தவனிதம் ஆகிய ஊர்களில் உரையாற்றும்போது "கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை"  என்னும் புகழ் பெற்ற தொடரை  அவர் வெளிப்படுத்தினார். அது 1967 ஆம் ஆண்டு. 

பிறகு அவருடைய சிலைகளுக்குக் கீழே  எல்லாம் அந்தத் தொடர் எழுதப்பட்டது. அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த, கடவுள் நம்பிக்கை உடைய நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் என்ன தீர்ப்பு வழங்கினார் தெரியுமா? 

                                                                                                          (தொடரும்)

நன்றி: நக்கீரன்


9 comments:

  1. இரத்தினவேல்21 July 2016 at 14:13

    பெரியார், பார்ப்பனியம் என்னும் கருத்தியலுக்குத்தான் எதிரியே தவிர,எந்தச் சாதிக்கும் எதிரானவர் அல்லர். சாதி, மதத்தின் பெயரால் சமூகத்தில் நிகழும் கொடுமைகளைக் கண்டித்தார். பெரியாரைப் படித்தால், அவர் மாந்த நேயம் மிக்கவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  2. இங்கே திரும்ப திரும்ப பிராமணர்கள் பற்றி மட்டும்தான் பேச படுகிறது. பட்ஜெட்டில் தமிழகத்தில் இருந்து மணலை கொல்லம் வழியாக கடத்தி சென்று வெளி நாடுகளுக்கு விற்பனை செய்ய எதுவாக நான்கு வழி சாலை போட போகிறார்கள் என்று இருக்கிறது. ஏற்கெனவே இந்த ரூட் வழியாகத்தான் மணல் கடத்த படுகிறது என்று தெளிவாக புதிய தலைமுறை ஆவண படம் காண்பித்தது. அந்த ரூட் எங்கு இருந்து எங்கு போய் மணலை ஸ்டோர் செய்து பின்பு கொல்லம் செல்கிறது என்று தெளிவாக காண்பித்தார்கள். தமிழர்களை, தமிழகத்தை, இயற்கை செல்வங்களை அழிக்கும் இந்த செயலுக்கு பிராமணர்கள் மூளையாக இருக்கிறார்கள் என்றால் தேவரும் கவுண்டரும் நாயுடுவும் செயல் வீரர்கள். குற்றத்திற்கு உடந்தையாய் இருப்பவர்கள் பற்றி நாம் என்று பேச போகிறோம்.

    ReplyDelete
  3. பார்ப்பனர்களை குறிப்பிடும் பொழுது, பார்ப்பனர்கள் மற்றும் அவர்களது கிளை ஜாதிகள் என்று கூறுவது சரியாக இருப்பதாக தோன்றுகிறது

    ReplyDelete
  4. உங்களை போல கட்சிகள் இணைந்து செயல் பட்டால் ஜெயலலிதாவின் எத்தனையோ இயற்கை அழிக்கும் தமிழக விரோத செயல்களை வெளியில் கொண்டு வந்து அதனை தடுக்க முடியும். ஈகோ வுடன் இருந்து கொண்டு,மக்கள் விரோத செய்லகளை கண்டும் காணாமல் இருந்து விடுகிறீர்கள்.என்று தமிழகத்தில் திமுகவும் பாமகவும் பாஜகவும் மற்றும் பல கட்சிகளும் இணைந்து என்று செயல் பட போகிறீர்கள். இந்த கட்சிகள் இணைந்து செயல் பட்டால் அதிமுகவின் எத்தனையோ ஊழல்களை எத்தனையோ மக்கள் விரோத செயல்களை எத்தனையோ இயற்கை அழிக்கும் செயல்களை வெளிச்சம் போட்டு காட்டி யார் தமிழக மக்கள் விரோத செயல்களை செய்கிறார்கள் என்று மக்களுக்கு புரிய வைக்கலாம். மக்கள் குழந்தை மாதிரி இருக்கிறார்கள். அவர்களுக்கு உங்களை விட்டால் ஆள் இல்லை. கட்சிகளை கர்வம் மறந்து மக்களுக்காக இணைத்து வைப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் அய்யா..பழைய விஷயங்கள் பிறகு அனைவரும் இணைந்து பேசலாம் என்று எனக்கு தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஜெயகுமார்23 July 2016 at 17:41

      நம்முடைய வரலாற்றை சொல்லிக்கொடுக்க மறந்ததன் விளைவுதான் இவை என்று இன்னமுமா புரியவில்லை

      Delete
  5. தொடர்க ! நல்வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  6. You are doing great job... @ subavee sir !

    ReplyDelete
  7. சாதி ரீதியான அடிமைத்தனம் மட்டும் இல்லாமல் போயிருந்தால், தந்தை பெரியார் சாமியைக் கூட கும்பிட்டு விட்டுப்போ,, என்று தான் சொல்லியிருப்பார்.

    ReplyDelete
    Replies
    1. சாதி,ஏற்றத்தாழ்வு இவைகள் மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் கற்பிக்கப்படுவதால் தான் அய்யா அவர்கள் கடைசி வரை இந்துமத கடவுளை எதிர்த்தார்.இது புரியாமல் சில திரிபுவாதிகள் ஏசுவை ஏன் எதிர்ப்பதில்லை அல்லாவை ஏன் எதிர்ப்பதில்லை என கேட்டு மக்களை திசைதிருப்புகின்றனர்.

      Delete