ஜாதி ஒழிப்பில் மூன்று வகையினர்
9 - 10 ஆம் நூற்றாண்டுகளில் திடீரென எழுந்த இடங்கை-வலங்கைப்
பிரிவுகள், 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் தாமாகவே ஓய்ந்துவிட்டன. ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள்
இம்மண்ணில் ஆட்சி செலுத்திய அப்பிரிவுகளின் தோற்றம், மறைவுக்கான காரணத்தை இன்றும் வரலாற்றாசிரியர்களால்
வரையறுத்துக் கூற முடியவில்லை. இன்றும் அது புரியாத புதிராகவே உள்ளது என்றுதான் டாக்டர்
கே.கே. பிள்ளை போன்றவர்களே சொல்கின்றனர்.
அப்பிரிவுகள் மறைந்தாலும்,
ஜாதிச் சண்டைகள் மறையவில்லை. நாகரிகமும், அறிவியலும் வளர்ந்துள்ள இன்றைய நூற்றாண்டிலும்
மேலும் மேலும் அவை இறுக்கம் பெற்றே திகழ்கின்றன.
19, 20 ஆம் நூற்றாண்டுகளில் ஜாதி மோதல்கள் கூடிக் கொண்டுதான் போயின. அவற்றிற்கான எதிர்வினைகளும் தொடர்ந்து நடந்து
வந்துள்ளன. எனினும், ஜாதிக்கு எதிரான போக்குகளில் மூன்று வகைகள் உள்ளன என்று கூற வேண்டும்.
ஜாதி பிரிவினைகளால் இந்துமதம்
வலுவிழக்கின்றது என்று கருதியவர்கள், அவற்றுக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, இந்து
மதத்தைக் காப்பற்ற முயன்றனர். ஆரிய சமாஜம், பிரும்ம சமாஜம் போன்றவை இந்த வகையைச் சேர்ந்தவை.
பாரதியாரிடம் கூடச் சில வேளைகளில் இப்போக்கைக் காண முடியும்.
"ஜாதி மதங்களைப் பாரோம்" என்று எழுதிய பாரதியார், அடுத்த பத்தியிலேயே
"ஈனப் பறையர்களேனும்" என்கிறார். "ஈன" என்னும் அடைமொழி இங்கு கவனிக்கத்
தக்கது. ஜாதிகளைத் தாண்டி வந்தாலும், பாரதத்தாய், "வேதங்கள் பாடுவள் காணீர்"
என்கிறார். "ஜாதி மத விநோதங்கள்" என்னும் அவரது கட்டுரையிலும் இப்போக்கைக்
காண முடியும். இவ்வாறு இன்னும் பலரை எடுத்துக் காட்டலாம்.
1828இல் ராஜா ராம் மோகன்
ராயினால் தொடங்கப்பெற்ற பிரம்ம சமாஜமும், 1875இல் தயானந்த சரஸ்வதியால் தொடங்கப்பெற்ற
ஆரிய சமாஜமும் தமிழ்நாட்டிலும் பரவின. ராஜா ராம் மோகனின் சீர்திருத்தக் கருத்துகளுக்கு
இங்கு ஓரளவு வரவேற்பும் இருந்தது. விதவைகள் மறுமணம், குழந்தை மண எதிர்ப்பு ஆகியனவற்றில்
அவ்வியக்கம் முனைப்புக் காட்டியது. பெண் கல்விக்கு ஆதரவாகவும், மூட நம்பிக்கைகளுக்கு
எதிராகவும் கருத்துகளை வெளியிட்டது. ஆனாலும், திருமணம், ஈமச் சடங்குகள் ஆகியனவற்றில்,
இந்து சமய உணர்விற்கு ஊறு தேட விரும்பாமல் பின்பற்ற
வழிகாட்டியது.
இந்துமதம், பார்ப்பனியம்
ஆகியனவற்றை எதிர்க்கும் அதே வேளையில், இன்னொரு மதத்தையும், இன்னொரு ஜாதியையும் உயர்த்திப்
பிடித்தவர்கள் இரண்டாம் வகையினர். ஈழத்தின் ஆறுமுக நாவலர் தொடங்கி, தமிழகத்தின் மறைமலை
அடிகள் வரை அத்தகையோர் பலரை அவ்வரிசையில் காட்ட முடியும். சைவ மதமும், வெள்ளாளர்
என்னும் சமூகப் பிரிவும் அவர்களால் உயர்த்திப் பிடிக்கப்பட்டன.
ஜாதி மதம் எல்லாவற்றையும்
புறக்கணித்துச் சமத்துவத்தை முன்னெடுத்தோர் வரிசையில், 19 ஆம் நூற்றாண்டில் வள்ளலார்
முன் நிற்கின்றார். அவரைத்
தொடர்ந்து மயூரம் வேதநாயகம் பிள்ளை, அயோத்திதாசப் பண்டிதர், ரெட்டைமலையார், சிங்காரவேலர், பெரியார் என்று அவ்வரிசை நீள்கிறது.
வள்ளலார் ராமலிங்க அடிகளின்
தொடக்க நிலைக்கும், இறுதிக்கால நிலைக்கும் பெரும் வேறுபாடு இருக்கிறது. 1823ஆம் ஆண்டு பிறந்த
வள்ளலார், 1865இல், கருங்குழி என்னும் ஊரில், சமரச வேத சன்மார்க்க சங்கத்தையும், பிறகு
சமரச வேத தருமச் சாலையையும் நிறுவினார். சைவ மதத்திலே பிறந்து, சிவபெருமான் மீது ஆழ்ந்த
பற்றுக் கொண்டவராகவே அவர் இருந்தார். முருகனின் மீது ஏராளமான துதிப் பாடல்களை
அவர் பாடியுள்ளார்.
ஆனால் அவருடைய இறுதிக்
காலம் வேறுபட்டதாக இருந்தது. 'வேத' என்று இருந்த சொற்களையெல்லாம் மாற்றினார்.
சமரச வேத சன்மார்க்க சங்கம், சமரச 'சுத்த' சன்மார்க்க சங்கம் ஆயிற்று. தருமச் சாலையின்
பெயரும் அவ்வாறே மாற்றப்பட்டது. இவை போன்ற பெயர் மாற்றங்களைத் தாண்டி, சமயம், சடங்குகள்
பற்றிய அவருடைய ஒட்டுமொத்தப் பார்வையும் இறுதியில் மாறிவிட்டன என்பதற்குச் சான்றுகள்
உள்ளன. அவற்றை முழுமையாக உள்வாங்கிக் கொண்டால்தான், சுயமரியாதை இயக்கத்தின்
தோற்றத்திற்கான பின்புலத்தை நாம் நன்கு அறிந்து கொள்ள முடியும்.
எனவே வள்ளலாரின் பிற்காலம்
பற்றி நாம் சற்றுக் கூடுதலாகப் பார்க்க வேண்டியுள்ளது.
(தொடரும்)
நன்றி: நக்கீரன்
நன்றி
ReplyDeleteSAATHEE SATHI NOI ?
ReplyDeleteஅய்யா வள்ளலாரின் பிற்கால கொள்கை கோட்பாடுகளை பலரும் வசதியாக மறந்து அவரையும் ஒரு வழிபடும் தெய்வமாக்கும் முயற்சிதான் தற்போது நடக்கிறது. வள்ளலார் போதித்த சமரச சுத்த சன்மார்க்கம் பற்றி மக்களுக்கு அதிகம் தெளிவு இல்லை.
ReplyDeleteஈழத்திலும் கூட வள்ளலாருக்கு மிகப்பெரும் மண்டபம் கோவில் எல்லாம் கட்டி அதையும் ஒரு வழிபாட்டு தளமாக மாற்றி பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்கிறார்கள்.
ஆறுமுக நாவலர் வருகைக்கு முன்பு ஈழத்தில் உள்ள கோவில்களில் பார்பனர் அல்லாதவர்களே பூஜை செய்து வந்தனர். தென்னிந்தியாவில் இருந்து பார்பனீயத்தை இறக்குமதி செய்தவர் இந்த ஆறுமுக நாவலர்தான். இதற்கு தமிழக மடாதிபதிகள் பெரும் பக்க பலாமாக இருந்தனர்
இதில் அவருக்கு ஏன் அக்கறை இருந்தது என்ற காரணம் மிகவும் கவனத்துக்கு உரியது.
அவரது வெள்ளாள சாதியை சேர்ந்தவர்கள் அந்த காலகட்டத்தில் எந்த ஒரு கோவிலிலும் பூசாரிகளாகவோ தர்மகர்தாக்களாகவோ இருக்கவில்லை.
பல சாதிகளை சேர்ந்தவர்கள் கோவில் அதிகாரம் பெற்றவர்களாக இருந்தது அவரின் சாதி மனப்பான்மைக்கு மிகபெரும் சவாலாக இருந்தது.
அதிலும் குறிப்பாக அவர் வழிபாடு செய்த நல்லூர் கந்தசாமி கோவில் செங்குந்த சாதியினரிடமும், செல்வசந்நிதி முருகன் கோவில் பரதவ குலத்தினரின் கையிலும் இது போன்று ஏறக்குறைய எல்லா கோவில்களும் ஓரளவு சாதி பாகுபாடு இல்லாமல் இயங்கிய காலமது. இதனால்தான் பார்பனர்களை இறக்குமதி செய்து முதல் ஸ்தானத்தை அவர்களுக்கு வழங்கி விட்டு இரண்டாவது ஸ்தானத்தை தனது சாதிக்கு உருவாக்கி கொடுத்துவிட்டார்,
அவருக்கு வெள்ளைக்கார பாதிரியார்களிடம் இருந்த செல்வாக்கினால் தனது உத்தியோக நிதி நிலைகளையும் பெருக்கி கொண்டார். பைபிளையும் தமிழில் மொழிபெயர்த்து அவர்களை மகிழ்வுற செய்தார்
நாவலர் தனது வெள்ளாள சாதியின் பால் கொண்ட அபிமானத்தினால் அவர் எழுதிய பள்ளிகூட சைவ போதினி போன்ற நூல்களில் எல்லாம் தவறாது உயர்குடி வெள்ளாள சமுகத்தை சேர்ந்த அடியார் அல்லது நாயனார் அல்லது அரசர் எனற பதங்களை உபயோகித்து முழு சமுதாயத்தையுமே சாதி வெறி பிடித்த சமுதாயமாக உருவாக்கி விட்டார். அவரோடு சேர்ந்து ஏராளமான பள்ளிகூடங்களை உருவாக்கிய இந்துபோட் ராஜரத்தினம் என்பவரும் சைவமும் தமிழும் வளர்க்க என்று கூறிக்கொண்டே வெள்ளாள சாதி மனப்பான்மையை பரப்பி விட்டார்கள்.
சிங்களவர்கள் கல்வி கூடங்களை எரிக்க முன்பாகவே இந்த வெள்ளாளர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் கல்விக்கூடங்களை எரித்த வரலாறுகள் உண்டு. யாழ் நூலகம் எரிக்கப்படுவதற்கு பல ஆண்டுகள் முன்பாகவே தமிழர்களின் நூலகம் சனசமுக நிலையங்கள் தமிழர்களாலேயே எரிக்கப்பட்ட சாதிவெறி விளைச்சல் எல்லாம் வரலாற்றில் உண்டு
இன்றும் கூட நாவலரை தூக்கி பிடிக்கும் படித்த அறிஞர் குழாம் தப்பி தவறியும் வடலூர் வள்ளலார் பெயரை உச்சரிக்க மாட்டார்கள்.
இதில் மிகவும் சோகம் தரும் விளைவு என்னவென்றால் ஆறுமுக நாவலரால் கட்டமைக்க பட்ட யாழ் மையவாத வெள்ளாள சிந்தனைகோட்பாடு இதர சாதிகளிடமும் பரவி விட்டது.
பிரபாகரனால் கொல்லப்பட்ட இதர தமிழர்களில் அவரது சாதியை சேர்ந்தவர்கள் குறைவு என்ற ஒரு கருத்தை இலகுவில் யாரும் புறம் தள்ளிவிட முடியாது.
அய்யா குஜராத்தில் பசு பாதுகாவலர்கள் தலித்துகளை தாக்கியதற்கே(யாரும் கொலை செய்யப்படவி்லை) நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெறுகிறது ஆனால் சாதி ஒழிப்பு மற்றும் சமூக நீதியின் முன்னோடி மாநிலம், பெரியார் வாழ்ந்த மண் என்றெல்லாம் பெருமைப்பட்டுக்கொள்ளும் தமிழகத்தில் இளவரசன், கோகுல்ராஜ்,சங்கர் போன்ற பல தலித்துக்கள் சாதி மறுப்பு காதல் அல்லது திருமணம் செய்து கொண்டதிற்காக வன்னியர்,கவுண்டர்,தேவர் போன்ற ஆதிக்க சாதிகளால் படுகொலையே செய்யப்பட்ட போதும்,தற்சமயம் பல கோயில்களில் திருவிழா,வழிபாடு போன்றவைகளின் போதும் தீண்டாமை தலைவிரித்தாடுகிறபோதும் வெறும் கண்டன அறிக்கைகள்(அது கூட முக்கிய திராவிட அரசியல் கட்சிகளிமிருந்து வரவில்லை),உண்மைகளை கண்டறியும் குழு,வீடு சென்று துக்கம் விசாரிப்பு போன்றவைகளோடு நின்றுவிடுகிறதே!. தாக்குதலுக்காகவே குஜராத் போல நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெறவிட்டாலும் பரவாயில்லை திக,திவிக,தபெதிக மற்றும் உங்களின் திஇத பேரவையினரால் படுகொலைகளுக்காக தமிழ்நாடு தழுவிய போராட்டங்கள் கூட நடைபெறவில்லையே ஏன்?.
ReplyDeleteதோழர் பொய்யாமொழி உங்களின் திராவிட எதிர்ப்பு மனோபாவமும்,பார்ப்பனிய ஆதரவு குதற்க வாதமும் தெளிவாக தெரிகிறது.தி.இ.த.பே வையின் பத்திரிக்கையான "கருஞ்சட்டைத்தமிழர்" வாங்கி படியுங்கள்!தி.இ.த.பே.வையின் செயல்பாடுகள் உங்களுக்கு தெரியும்! போகிறபோக்கில் அள்ளித் தெளிக்கும் பார்ப்பனி கோட்பாட்டை விட்டொழித்து உண்மையான ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை உணர்வுடன் களமாடுங்கள்!உங்களுக்கு தெரியவில்லையென்றால் ஐயா சுபவீ யின் மாணவன் நான் உங்களுக்க சொல்லித்தருகிறேன்.
ReplyDeleteஆதிக்க சாதிகளால் தலித்துகள் படுகொலையே செய்யப்பட்ட போதும்,தற்சமயம் பல கோயில்களில் திருவிழா,வழிபாடு போன்றவைகளின் போதும் தீண்டாமை தலைவிரித்தாடுகிறபோதும் நீங்கள் சொல்வது போல வெறும் கண்டன அறிக்கைகள்(அது கூட முக்கிய திராவிட அரசியல் கட்சிகளிமிருந்து வரவில்லை),உண்மைகளை கண்டறியும் குழு,வீடு சென்று துக்கம் விசாரிப்பு போன்றவைகளோடு நின்றுவிடுகிறதே தமிழ்நாடு தழுவிய போராட்டங்கள் கூட நடைபெறவில்லையே என்பதுதான் எனது ஆதங்கம்.
Delete