தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday, 4 September 2016

சுயமரியாதை - 16

அன்பிற்கும் உண்டோ....?
                             

                 

பகுத்தறிவு என்றாலே கடவுள் மறுப்பு மட்டும்தான் என்ற எண்ணம் மக்கள் மனங்களில் ஆழப் பதிந்து விட்ட காரணத்தினால்தான், அவ்விதமான கருத்துகளுக்கு இவ்வளவு எதிர்ப்பு நாட்டில் உள்ளது.

கடவுள் பக்தி என்பது வெறும் நம்பிக்கை மட்டுமன்று, அதற்குள் ஒரு விதமான அச்ச உணர்வும் கலந்திருக்கிறது அதனாலேதான் அதற்குப் பயபக்தி என்றே பெயர். கடவுளை நிந்தித்தால் அல்லது மறுத்தால் கூட தங்களுக்கு ஏதும்  ஆகிவிடும் என்ற அச்சம் வெகு மக்களிடையே விரவிக் கிடக்கிறது. கடவுளை நம்புதல் எளிமையானதாகவும், ஆறுதல் தருவதாகவும் உள்ளது. அவனன்றி ஓர் அணுவும் அசையாது, எல்லாவற்றையும் அவன் பார்த்துக் கொள்வான் என்பன போன்ற நம்பிக்கைகள், நமக்கு வசதியாக உள்ளன. யாரும் எதையும் பார்த்துக் கொள்ள மாட்டார்கள், நாம்தான் எல்லாவற்றிற்கும் பொறுப்பேற்க வேண்டும் என்றால் அது கடினமாக உள்ளது. எனவே கடவுள் மறுப்பு என்னும் எதிர்நீச்சலை விட்டுவிட்டுக் கடவுள் நம்பிக்கையைப் பலரும் ஏற்றுக் கொள்கின்றனர்.


கடவுள் மறுப்பாளர்கள் வீட்டிலும் சிறுபான்மை, நாட்டிலும் சிறுபான்மை. இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இதனைத் தாண்டி இன்னொரு உண்மை இருக்கிறது. கடவுள் மறுப்பாளர்கள் சிறையிலும் சிறுபான்மைதான். ஆம், உலகில் உள்ள எந்தச் சிறையை எடுத்துக் கொண்டாலும், அங்குள்ள கைதிகளில் நூற்றுக்குத் தொண்ணூறு  பேர் அல்லது அதற்கும் மேல்  கடவுள் நம்பிக்கை மிகுந்தவர்களாகவே இருப்பார்கள். தனக்கு கடவுள் நம்பிக்கை வந்தபின், கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலில், 

திருடனும் அரகரா சிவசிவா என்றுதான் 
   திருநீறு பூசுகின்றான்
சீட்டாடும் மனிதனும் தெய்வத்தின் பேர்சொல்லி 
   சீட்டைப் புரட்டுகின்றான் 
முரடனும் அரிவாளால் காரியம் பார்த்தபின்  
   முதல்வனை வேண்டுகிறான் 
முச்சந்தி மங்கையும் முக்காடு நீகையில் 
    முருகனைக் கூவுகின்றாள்  

என்று எழுதுவார். எனவே கடவுள் நம்பிக்கையும், பக்தியும் வாழ்வில் தவறு செய்பவர்களைத் திருத்தவில்லை என்பது தெளிவாகின்றது.நாட்டில் பக்தி கூடியுள்ளது என்பது உண்மைதான். ஆனால் அதன் விளைவாக ஒழுக்கமும், வாய்மையும் கூடியுள்ளனவா என்று கேட்டால் இல்லை என்பதுதானே விடை!  பக்தியும் கூடிக் கொண்டுள்ளது, கொலை, கொள்ளைகளும் கூடிக் கொண்டிருக்கின்றன என்பதுதானே நடைமுறை உண்மை. 

எனவே கடவுள் நம்பிக்கையோடு அச்சம், தன்னலம், ஆசை ஆகியனவும் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பது வெளிப்படை. 'எத்தனையும்  பேதமுறா தெவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி' இறைவனை வழிபடுவோர் எத்தனை பேர்? கடவுளின் மீது பாரத்தைப் போட்டுவிட்டுத் தான் துயரப்படாமல் இருக்கலாம் என்பதும், இறைவனை வழிபட்டால் எல்லா நன்மைகளும் நம்மை வந்தடையும் என்பதும் பொதுவான நம்பிக்கைகளாக இங்கு இருப்பதால் கடவுள் பக்தி இங்கு வாழ்கிறது.

இவ்வாறு மிக மிகப் பெரும்பான்மையினரின் கருத்தாக உள்ள கடவுள் நம்பிக்கையின் மீது கல் எறிவது அவ்வளவு எளிய செயலன்று. அதைத்தான் பெரியார் செய்தார். அதனால் அவர் காலம் முழுவதும் சொல்லடியும், கல்லடியும் பட நேர்ந்தது. மதுரை மாநாட்டுப் பந்தல் எரிக்கப்பட்டது. எத்தனையோ கூட்டங்களில் அழுகிய முட்டைகளும், பழங்களும் வீசப்பட்டன. கழுதைகளும், பன்றிகளும் கூட்டத்திற்க்கு நடுவே விடப்பட்டன. பெரியாரின் மீது செருப்பு வீசப்பட்டது. அனைத்தையும் தாங்கி கொண்டுதான் பகுத்தறிவுப் பனியைப் பெரியார் இம்மண்ணில் ஆற்றினார்.

"உங்களை புரிந்து கொள்ளாமல், உங்கள் தொண்டினை ஏற்றுக் கொள்ளாமல், உங்களை  அடித்தும்,இழிவு செய்தும் இன்பம் காணும் இந்த மக்களுக்காக ஏன் நீங்கள் இன்னும் உழைக்கின்றீர்கள்?" என்று ஒருமுறை அய்யா பெரியாரிடம், கால்நடை ஆய்வாளர்கள் கூட்டத்தில் அவர்பால்  அன்பு கொண்ட சிலர் கேட்டுள்ளனர். அதற்கு அவர் சற்றும் தயங்காமல் ஒரு விடையைச் சொல்லியிருக்கிறார்.

"நீங்களெல்லாம் ஆடு, மாடுகளுக்கு வைத்தியம் பார்க்கின்றீர்கள். அவற்றுக்கு  ஊசி போடுகின்றீர்கள். அவற்றின் நன்மைக்காக நீங்கள் பாடுபட்டாலும், அவை உங்களை உதைக்கத்தானே செய்கின்றன. உதைக்கின்றன என்பதற்காக நீங்கள் விட்டுவிடுகின்றீர்களா? திரும்பத்  திரும்ப வைத்தியம் பார்க்கின்றீர்கள் இல்லையா? ஐந்தறிவு விலங்குகளிடமே  நீங்கள் இவ்வளவு அன்பு காட்டும்போது, நம் சக மனிதர்களிடம் நான் அன்பு காட்ட வேண்டாமா?"

இவர்தான் தந்தை பெரியார்!! 


                                                                                                              (தொடரும்)
                                                                                  

நன்றி: நக்கீரன்

5 comments:

  1. Religion is for convenience and Periyaar's contribution to the society is impeccable. I am a rationalist and I weigh all the religion in the same scale but I have one issue with you and almost every other Periyaarist.

    Why only Hinduism and the spine is missing when dealing with other religions ? This is where I struggle... I condemn every religions flaw from oppressing women to their own version of inequalities but you are choosing Hinduism based on convenience (political convenience ?).

    I understand that Hinduism root based on caste segregation and always with a touch of Brahminism which propagates inequality in the society but every other religion has its own flaw - dont they kill fellow human being just because they worship a different god ?

    Now I know what your reply is going to be... no other religion is as evil to promulgate inequality in the society like Hinduism and it is the elephant in the living room or the bigger beast to slay but, a BIG BUT, turning a blind eye to other religion's atrocities and giving it a soft corner makes one, a dishonest rationalist !

    I have never seen one.. just ONE post, in your entire career condemning an Abrahamic religion !!

    - A honest rationalist.

    ReplyDelete
    Replies
    1. You draw a table and put 5 columns and compare it 5 main religion (hindu, christiam, islam, buddhist and no religion) with different characters. You write from your heart without considering you're from any religion and give mark 1 to 10 on following questions. Did these religion's created individuals who are

      1) confidence person
      2) person who likes equality
      3) merciful person
      4) accepts his mistakes and move ahead person
      5) Selfless person
      6) caring person
      7) cultural person not barbaric kind
      8) person who likes women freedom
      9) person who accepts better thing in other religion if found
      10) person who dislike opportunistic character at any time
      11) person who feels a lot than think about some one who is in trouble
      12) truthful person.not just truthful. One who realizes he is 100% truthful
      13) person who is ready to lead at times or take tough decision when it is really needed
      14) person who don't want to make others fearful
      15) person who likes clean,good environment and green society and trying to make the world towards the goal to achieve
      16) person who believe scientific inventions make the world better
      17) Person who does something for better living conditions for animal and its environment

      Delete
  2. இருட்டு உள்ளவரை கடவுளை நம்புவார்கள்,வெளிச்சம்தான் பெரியார்!!!!!!

    ReplyDelete
  3. தன்னுடைய பெயரைக்கூட வெளியிட நேர்மையில்லாத நபர் நேர்மையைப்பற்றிப் பேசுவதுதான் முரண்பாட்டின் உச்சம்.இருந்தாலும் நாங்கள் பதில் பதில் சொல்வோம் நாங்கள் பெரியாரின் பேரன்கள். நாங்கள் இந்து மதத்தைமட்டும்தான் எதிர்க்கிறோம் என்று விமர்சனம் வைத்துள்ளீர்கள்! தந்தை பெரியார் காலத்திலிருந்தே இதற்கு பதில் சொல்லியாகிவிட்டது.உங்கள் உளுத்துபோன வாதம் ரொம்ப பழசு இருந்தாலும் நீங்கள் எத்தனை முறை கேட்டாலும் உங்களுக்கு பதில் உள்ளது.ஆகப் பெரும்பாண்மையான மக்களை சூத்திரன்(வேசிமகன்)என்று உங்கள் இந்துமதம்தான் கூறுகிறது.இப்ப சொல்லுங்க அனாமதேய நண்பரே நாங்கள் எந்த மதத்தை குறிப்பாக எதிர்ப்பது.மற்ற மதங்களில் இருக்கும் பிற்போக்குத்தனமான காரியங்களை எதிர்ப்பது எங்களுக்கு இரண்டாம் வேலைதான்.திட்டமிட்டே எங்களை சூத்திரனாக வைத்திருக்கும் இந்துமதத்தை எதிர்ப்பதே எங்கள் முதல் வேலை...நாங்கள் பார்ப்பனர்களை மட்டும் எதிர்க்கிறோம் என்று கூறுகிறீர்கள்!இது தவறு நாங்கள் பார்ப்பனர்களை எதிர்க்கவில்லை அவர்களை அம்பலப்படுத்துகிறோம்.இன்றுவரை ஆவணி அவிட்டம் என்று ஒரு நாளை வைத்துக் கொண்டு பார்ப்பனர்கள் பூணூலை புதுப்பிக்கிறார்களே இதன் பொருள் என்ன? நாங்கள் சூத்திரர்களாகவே இருக்கவேண்டும்!பார்ப்பனர்கள் பிரம்மன் தலையில் பிறந்த பிராமணர்களாகவே இருக்கவேண்டும் என்பதுதானே? ஆவணி அவிட்டம் என்கிற ஒரு நாளை ஒழித்துவிட்டு வந்து எல்லா மதங்களையும் பொதுவாக பாருங்கள் அனாமதேய நண்பரே!

    ReplyDelete
  4. இன்றைய மதங்கள் கூறும் கடவுள்கள் எல்லாமே ஆகக்கூடி ஒரு சில நூறுகள் அல்லது ஆயிர வருஷங்கள்தான் பழமையானவை. இப்போது உள்ள எந்த மதமும் கடவுள்களும் தோன்ற முதல் இருந்தே இந்த உலகமும் ஏனைய கோள்களும் மிகவும் ஒழுங்காக இயங்கி கொண்டுதான் இருக்கிறது. அப்படியே ஏராளமான உயினங்களும் தோன்றி வாழ்ந்து மறைந்து ஒரு அழகான வாழ்வியல் கதையை கூறி சென்றிருக்கின்றன. எந்த கடவுளும் எந்த மதமும் இல்லாமலேயே அவற்றின் வாழ்வு மனித மனதுக்கு எட்ட முடியாத காலமாக சிறப்பாகவே இருந்திருக்கிறது. மதங்களின் தேவையோ கடவுளின் தேவையோ பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்களுக்கோ ஏனைய உயிரங்களுகோ தேவைபட்டிருப்பதாக தோன்றவில்லை. ஆனால் கடந்த சில நூறு அல்லது ஒன்றிரண்டு ஆயிரம் வருஷங்களாகத்தான் மதம் கடவுள் எல்லாம் உருவாக்க படுகிறது, காரணம் மிகவும் எளிது. அது ஒரு வியாபாரம். அது ஒரு அரசியல். அது ஒரு பொழுதுபோக்கு அவ்வளவுதான். பகுத்தறிவாளர்கள் இந்துமதத்தை தாக்கும் அளவு ஏனைய மதங்களை தாக்குவதில்லை என்ற வாதம் ஓரளவு சரிதான், ஏனெனில் சாதி என்ற ஒரு கொடிய நோய் இந்து மதத்தை பிடித்திருக்கிறது. அந்த நோய் நம் பிறப்போடு ஒட்டி வந்திருக்கிறது அது முதலில் குணப்படுத்த படவேண்டிய நோய். ஏனைய மதங்களின் நோய்களை அதனால் பாதிப்புற்றவர்கள் கண்டிப்பாக குணப்படுத்துவார்கள் அது காலத்தின் கட்டாயம்.

    ReplyDelete