தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 7 September 2016

சுயமரியாதை - 17

வரலாற்று அதிசயம் 
                                   
         
இவ்வளவு எதிர்ப்புகள் ஒரு புறம் இருந்தாலும், பெரும் ஆதரவும் பெரியாருக்கு இருந்தது.  உலகில் எவ்வளவோ பகுத்தறிவாளர்கள் இருந்தனர். இன்றும் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் அறிவாளர்கள் என்றும், சிந்தனையாளர்கள் என்றும் போற்றப்படுகின்றனரே அல்லாமல், மக்கள் தலைவர்களாகப் பார்க்கப்படுவதில்லை.  ஆனால், மிகப் பெரும்பான்மையான மக்களால் ஏற்க முடியாத கருத்தைச் சொல்லி, அந்தப் பெரும்பான்மை மக்களாலேயே தங்களின் தலைவராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே உலகத் தலைவர் பெரியாராக மட்டும்தான் இருக்க முடியும்.  இது ஒரு வரலாற்று அதிசயம் என்றே சொல்ல வேண்டும்.


இன்று தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளும், பெரியாரிடமிருந்துதான் தங்கள் அரசியல் வரலாற்றைத் தொடங்கியுள்ளனர்.  அவற்றுள் ஒன்றான ஆளும் கட்சி, உள்மனத்தில் பெரியாரை ஏற்கிறதோ இல்லையோ, வெளியே  ஏற்பதாகத்தான் சொல்கிறது. சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. அவ்விரு பெரும் கட்சிகள்  மட்டுமின்றி, பெரியாரை, அண்ணாவை மறுத்துவிட்டு எந்த ஒரு கட்சியும் தமிழக மக்களிடம் செல்வாக்குப் பெற முடியவில்லை. ஈடுபாடு இருக்கிறதோ இல்லையோ, 'திராவிட' என்னும் சொல்லைத் தங்களின் கட்சியின் பெயரில் சேர்த்துக் கொள்ள வேண்டிய தேவை தமிழ்நாட்டில் உள்ளது. அந்த அளவிற்கு வெகு மக்கள் பெரியாரை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இன்னொரு பக்கம், பெரியார் இறந்துபோய், 43 ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும், இன்னும் அவரை ஒரு சிறு கூட்டம் மிகக் கடுமையாக எதிர்த்துக் கொண்டுள்ளது.  அவர்  வாழ்ந்த காலத்தில் தொடங்கிய அந்த எதிர்ப்பு இன்றுவரை தொடர்கிறது. இறந்தபிறகும் எதிர்க்கப்படும் மிகச் சில தலைவர்களில் ஒருவராகப் பெரியார் உள்ளார். அதுவே அவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்குமான சான்றாகவும் உள்ளது.

காலம் கடந்தும் வாழ்வதற்கு அவரின் நுண்மாண் நுழைபுலமே காரணம். தன்னுடைய கொள்கைகளை வெறும் சித்தாந்தமாக மட்டும் சொல்லிவிட்டுப் போய்விடாமல், அவற்றை நடைமுறை வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளோடும் இணைத்ததே அவ்வெற்றியின் பின்புலம். வாழ்வியல் நிகழ்வுகள் (சடங்குகள்) ஒவ்வொன்றையும் கேள்வி கேட்டு, அவற்றுள் பகுத்தறிவுக்குப் புறம்பானவைகளை அம்பலப்படுத்தி, நூற்றாண்டுக் களைகளை அகற்றத் துணிந்த பெரியாரின் செயலே அவரைப் புறக்கணிக்க இயலாதவராக ஆக்கியுள்ளது.

குழந்தையின் பிறப்பில் தொடங்கி, பெயர் சூட்டுதல், காது  குத்துதல் , பூப்பு நீராட்டுதல், திருமணம் என்று இறப்பு வரையில் சாதி மதச் சடங்குகள் நம்மைத் தொடர்கின்றன. அவை அனைத்தும் பார்ப்பனமயமாக உள்ளன. நம்மை அடிமைப்படுத்துகின்றன. நம் சுயமரியாதையைக் கேலி செய்கின்றன.  எனவே அனைத்திலும் சுயமரியாதை இயக்கம் தலையிட்டது. மற்ற மற்ற கட்சிகள், இயக்கங்களைப்  போல அரசியலை வீட்டுக்கு வெளியே தொடங்காமல், சுயமரியாதை இயக்கம் தன் அரசியலை வீட்டுக்குள் இருந்து தொடங்கியது.  அதனால் அவ்வியக்கத்தின் கொள்கை பொது இடங்களில் மட்டுமின்றி, ஒவ்வொரு வீட்டிலும் விவாதிக்கப் படக்கூடிய  ஒன்றாக மாறியது.

ஒவ்வொரு குடும்பத்திலும் காலம் காலமாய்ப் பின்பற்றப்பட்டு வந்த சடங்கு, சாங்கியங்களை இளைய தலைமுறை கேள்வி கேட்கத்  தொடங்கியது. எங்கள் திருமணத்திற்கு ஐயரும், ஆடம்பரமும், சமஸ்க்கிருத மந்திரமும், புகையும், நெருப்பும் ஏன்? இரண்டு மாலைகளும், இணைந்த நெஞ்சங்களும்  போதும் என்று சொன்னபோது, மூத்தவர்களுக்கு மூச்சடைப்பே வந்துவிட்டது.

'கலிகாலம், கலிகாலம் இந்த நாயக்கர் நம் பிள்ளைகளை எல்லாம் கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார்' என வீட்டுக்கு வீடு புலம்பல்கள் கேட்டன.

புரோகிதர் இல்லாமல், புரியாத மந்திரங்கள் இல்லாமல், சடங்கு சாங்கியங்கள் இல்லாமல் தந்தை பெரியார் தலைமையில், அருப்புக்கோட்டைக்கு  அருகில் உள்ள சுக்கிலநத்தம் என்னும் கிராமத்தில், 1928 மே 5 ஆம் நாள் ஒரு சீர்திருத்தத் திருமணம் நடைபெற்றது. பட்டுக்கோட்டை அழகிரிசாமி, கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் அம் மணவிழாவில் கலந்து கொண்டனர்.

அந்தத் திருமணம் தமிழகப் பண்பாட்டு வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை உருவாக்கியது.  

                                                                                                              (தொடரும்)
                                                                                  

நன்றி: நக்கீரன்

9 comments:

  1. தொடருங்கள் ஐயா
    அறியாத செய்திகள் பலவற்றை அறியக் காத்திருக்கிறேன்
    நன்ற ஐயா

    ReplyDelete
  2. அய்யா வணக்கம். மிக அரிதான -பெரும்பாலோர் அறியாத, மற்றும் மறந்துபோன- நிகழ்வுகளை நினைவூட்டி, இளைய தலைமுறை அறிந்திருக்க வேண்டிய செய்திகள் நிரம்பிய தொடராக வருவது மகிழ்ச்சியளிக்கிறது. நன்றியும் வணக்கமும். அப்படியே பெரம்பலூரில், அய்யா முகுந்தன் அவர்களின் முயற்சியில் நிறுவப்பட்டுள்ள மிகப்பெரிய தந்தைபெரியார் சிலை, பெரியார் பூங்கா பற்றியும் தாங்கள் எழுதி, பேசி உலகோர் அறியச் செய்ய வேண்டும் என்பது எனது தோழமை வேண்டுகோள். நான் போய்ப் பார்த்து வந்தது பற்றி எனது வலையில் எழுதி அதனைப் பல்லாயிரம்பேர் பார்த்துள்ளனர். தங்கள் தகவலுக்காக அந்த இணைப்பு இது- http://valarumkavithai.blogspot.com/2016/09/blog-post.html. மீண்டும் நன்றி, வணக்கம்.

    ReplyDelete
  3. ம.கண்ணப்பன்8 September 2016 at 00:17

    பெரியாரின் செயலே அவரைப் புறக்கணிக்க இயலாதவராக ஆக்கியுள்ளது என்பது புரட்டு வாதமாகும்.அவர் பல வருடங்கள் பரப்புரை செய்த பின்பும் அவர் ஆதரித்தும் 1967ல் காங்கிரஸ் ஆட்சியை காப்பாற்றவும் முடியவில்லை,எவ்வளவு எதிர்த்தும் திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்கவும் முடியவில்லை.அதே போல எம்ஜிஆர் திமுகவை உடைத்து வெளியேறி புது கட்சி தொடங்குவதை பெரியார் எவ்வளவோ முயன்றும் தடுக்க முடியவில்லை. இதுபோன்ற முக்கிய கால கட்டங்களில் அவர் பல வருடங்கள் பரப்புரை செய்து,அவர் உயிரோடு இருந்த போதே அவரின் சொல்,கருத்து எடுபடவில்லை!. அவர் மறைந்து இப்போது அவரின் கட்சிக்காரர்கள் அதன் தலைவர் நினைத்தாலும் கொள்கைகளை,கருத்துக்களை விவாதிக்க அல்ல முதல்வரின் நிழலை பார்க்க கூட முடியாது!.இதுதான் அவர்களின் செல்வாக்கு.

    ReplyDelete
  4. 43 ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும்,இன்னும் அவரை ஒரு சிறு கூட்டம் மிகக் கடுமையாக எதிர்த்துக் கொண்டுள்ளது.அவர் வாழ்ந்த காலத்தில் தொடங்கிய அந்த எதிர்ப்பு இன்றுவரை(<100 ஆண்டுகள்) தொடர்கிறது.இறந்த பிறகும் எதிர்க்கப்படும் மிகச் சில தலைவர்களில் ஒருவராகப் பெரியார் உள்ளார்.அதுவே அவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்குமான சான்றாகவும் உள்ளது என்று பிரமிக்கிறிர்களே இந்து மதம் 3000 ஆண்டுகளாக ஒரு சிறு கூட்டம் அல்ல புத்தர் தொடங்கி பல பெரிய கூட்டங்கள் மிகக் கடுமையாக எதிர்த்துக் கொண்டுள்ளது[அவைகளில் பல அழிந்து போயுள்ளது அதுபோல இதுவும் அழிந்து போகலாம்]அதுவே இந்து மதம் இன்னும் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்குமான சான்றாக உள்ளது என்று சொன்னால் உங்களால் மறுக்க முடியுமா?

    ReplyDelete
  5. பெரியார்
    90-வது வயதில் 180 கூட்டம்.
    91-வது வயதில் 150 கூட்டம்.
    93-வது வயதில் 249 கூட்டம்.
    94-வது வயதில் 229 கூட்டம்.
    வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்) 42 கூட்டம்.
    இத்தனையும், கடும் நோயின் வலிகளுடன். ஹெர்னியா பிரச்னையினால் சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேசச் சென்றார். சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப்போட்டு குழாய் செருகப்பட்டிருந்தது.
    அவர்தாம் பெரியார் !!!

    ReplyDelete
  6. தந்தை பெரியார் பற்றி நான் உணர்வுபூர்வமாக அறிந்தது இது:
    என்னுடைய மிக சிறிய வயதிலே, என் தந்தையார் வேலை பார்த்த நிறுவனத்தில் உள்ள காலனி குடியிருப்பில், மிக சிறிய வீடு ஒன்று வாடகைக்கு கொடுத்தார்கள். நாங்கள் குடிபுகுந்த வீட்டிற்கு நேர் எதிர் வீட்டில் நடுத்தர வயதுள்ள திராவிடர் கழக தலைவர் இருந்தார். அவருடைய இரண்டு மகள்களின் திருமணங்களும் தந்தை பெரியார் தலைமையில் நடந்துள்ளது.

    அந்த காலனியின் உள்ளேயே மனமகிழ் மன்றம் (Recreation Club) அமைந்திருந்தது. அதை திருமண மண்டபமாகவும் மாற்றப்பட்டு வாடகைக்கு விடப்படும்.

    இரண்டாவது மகளின் திருமணம் நாங்கள் குடிபுகுவதற்கு சிறிது காலம் முன்பு மனமகிழ் மன்றத்தில் நடந்துள்ளது. இரண்டாவது மகளின் திருமணத்தின்போது, தந்தை பெரியார் அவர்கள், என் தந்தையாருக்கு ஒதுக்கப்பட்டு காலியாக இருந்த அச்சிறிய வீட்டில் தங்கி, திருமணத்தை நடத்தி கொடுத்துள்ளார்கள். எப்பேர்பட்ட பணக்காரர் தந்தை பெரியார்; அவர் தன் தொண்டருக்கு மிக்க மதிப்பு அளிக்ககூடியவர் என்பதை அந்நிகழ்ச்சி வாயிலாக புரிந்து கொண்டேன்.

    நான், அண்ணாமலை பல்கலைக்கழத்தில் பட்டப்படிப்பு முடித்தபின், காரைக்குடி – பள்ளத்தூரை அடிப்படையாக கொண்ட குழுமத்தில் சேர்ந்து பணியாற்றியபோது, என்னுடைய மேலதிகாரி மிக்க ஆன்மீகவாதி. அவருடன் தந்தை பெரியார் பற்றி பேசக்கூடிய சூழ்நிலை ஏற்படின், அந்த மேலதிகாரி மிகுந்த மரியாதையுடன் தந்தை பெரியாரை குறிப்பிடுவார். தந்தை பெரியார் அவர்கள் ஆன்மீகவாதிகளிடமும் நன்மதிப்பு பெற்றிருந்தார் என்பதை என்னால் புரிந்து கொள்ளமுடிந்தது.

    ReplyDelete
  7. பெரியாரை பார்த்து நான் சந்தேகம் கொண்டது உண்டு.காரணம் தற்போதைய சூழ்நிலை. பிராமணர்கள் சலுகையை கொடுத்து நாயுடு சாதியை கைக்குள் வைத்து கொள்கிறார்கள். இதனை தமிழகத்தில் எந்த துறையிலும் பார்க்க முடிகிறது. அவர்களும் தன்னை தெலுங்கு பேசும் இனம் என்று சுருக்கி கொண்டு தலித்துகள் அல்லாத சாதிகளோடு நல்ல நட்புகளை வளர்க்க வில்லை. இதனால் பெரியாரை உண்மை போல ஒரு பொய் என்று நான் நினைத்தது உண்டு. இன்று அய்யாவின் எழுத்துக்கள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது பெரியார் உண்மையாக வாழ்ந்தவர் என்று. என்றும் வாழ்க வளர்க பெரியார் புகழ்.

    ReplyDelete
  8. aam periyar oru vindai manithar athanalthan indrum thannai yetravarkaliyum, yethipavarkalaiyum vaazha vaithu kondirikinrar.

    ReplyDelete
  9. Nagaraj Muralidharan9 September 2016 at 07:29

    அய்யா சமசுகிருதம் தமிழில் இருந்து வந்த மொழி தான். மாயோன் தான் கிருஷ்ணன். அவன் தமிழன். கிதையில் வருணத்தை பற்றி சொன்னதும் மாயோன் (கிருஷ்ணன்) தான் என்று சில தமிழ் தேசிய ஆய்வாளர்கள் கூற தொடங்கியுள்ளார்களே. அதை பற்றி உங்கள் கருத்து என்ன?

    ReplyDelete