தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday 19 September 2016

சுயமரியாதை - 21

வைப்பாட்டிகளிலும் இரண்டு  வகை 
                                 
1953 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பு, சுயமரியாதை இயக்கத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றே அன்று பலரும் கருதினர். ஆனால் அந்தத் தடைக்கல்லையே ஒரு படிக்கல்லாக மாற்றிக் காட்டினார் பெரியார்.  திருமணம் நடந்து 19 ஆண்டுகளுக்குப் பின் அத்திருமணம் செல்லாது என்று கூறிய  அத்தீர்ப்புக் குறித்தும், அத்திருமணம் குறித்தும் பல செய்திகளை நாம் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. 


1934ஆம் ஆண்டு கோட்டையூரைச் சேர்ந்த சிதம்பரம் என்பவருக்கும், திருவண்ணாமலையைச் சேர்ந்த ரங்கம்மாள் என்பவருக்கும், திருச்சியில் பெரியார் தலைமையில் ஒரு திருமணம் நடைபெற்றது.அது ஒரு சாதி மறுப்புத் திருமணம். இருவருமே தங்களின் வாழ்விணையர்களை ஏற்கனவே இழந்தவர்கள் என்பதால் அது ஒரு மறுமணமும் ஆகும். சடங்குகள், மந்திரங்கள் எவையுமில்லாத சுயமரியாதைத் திருமணமாக நடந்தது.

இத்திருமணம் முடிந்து பல ஆண்டுகளுக்குப் பின், சிதம்பரத்தினுடைய முதல் மனைவிக்குப் பிறந்த மகனை மணந்துகொண்ட தெய்வானை என்பவர் ஒரு வழக்குத் தொடுத்தார். அதாவது மாமனார் மீது மருமகள் தொடுத்த சொத்து வழக்கு அது! ரெங்கம்மாளுக்குப் பிறந்த பிள்ளைகள்  எந்தச் சொத்தையும்  பெற உரிமையற்றவர்கள்  என்றும், அவருடைய முதல் மனைவியின் வழிப் பிறந்த பேரன், பேத்திகளுக்கு மட்டுமே சொத்துகள் முழுமையாக வந்து சேர வேண்டும் என்றும் அவர் வழக்குத் தொடுத்தார். சிதம்பரத்தின் மகன் இறந்துவிட்டபடியால், அவருடைய மனைவியாகிய தான் வழக்குத் தொடுப்பதாக அவர் கூறியிருந்தார்.

வழக்குத் தொடுப்பதில் எந்த வியப்பும் இல்லை. சொத்து வழக்குகள் காலம் காலமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. மேலும், சிதம்பரத்திற்கு, மலேயாவிலும் (இன்றைய மலேசியா, சிங்கப்பூர் சேர்ந்திருந்த காலம்), இந்தியாவிலும் ஏராளமான சொத்துகள் இருந்தமையால் சொத்து வழக்குகள் வருவதற்கு வாய்ப்புண்டுதானே!  ஆனால் அவ்வழக்கில் நீதிபதிகள் கொடுத்த தீர்ப்புதான் பெரும் அதிர்ச்சியைத் தரக்கூடியதாக இருந்தது.

இவ்வழக்கில், நீதிபதி ராஜகோபாலன், நீதிபதி சத்தியநாராயண ராவ் (இருவருமே பாப்பனர்கள்) ஆகியோர் 26.08.1953 அன்று தீர்ப்பு வழங்கினர். "இந்து முறைப்படியோ, பாரம்பரிய முறைப்படியோ (customary marriage) நடைபெறாத சிதம்பரம்-ரங்கம்மாள் திருமணம் செல்லாது என்பதும், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்குச் சொத்துரிமை கிடையாது என்பதும்தான் தீர்ப்பின் சாரம்.

ஆனால் அதுகுறித்து அவர்கள் கூறியிருந்த பல விளக்கங்கள், சுயமரியாதை இயக்கத் தோழர்களைக் கொந்தளிக்க வைத்தது. "சப்தபதி, ஓமம் வளர்த்தல் போன்ற முக்கியச் சடங்குகளைக் கூட நடத்தாமல், யாரோ சிலர் கூடி, தங்கள் விருப்பத்திற்கேற்ப இத்திருமணத்தை நடத்தியுள்ளனர்" என்றனர் நீதிபதிகள்.  பெரியாரை "யாரோ" என்று கூறுவதில் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி! பிறகு, அது என்ன சப்தபதி? சப்த ஸ்வரங்கள் (ஏழிசை), சப்தகிரி (ஏழுமலை) என்றெல்லாம் சொல்வது போல சப்தபதி என்றால் ஏழு அடிகள் என்று பொருள். அக்னி(நெருப்பு)யைச் சாட்சியாக்கி, அந்த அக்னியை மணமக்கள்  ஏழு முறை சுற்றி வருவதே சப்தபதிச் சடங்கு. அது அவ்வளவு முக்கியமானதாம்.

இன்னொரு பெரிய அவமானத்தையும் அந்தத் தீர்ப்பு நமக்களித்தது. "இந்து மதத்தில் வைப்பாட்டிகள் வைத்துக் கொள்வதற்கு உரிமை உண்டெனினும்,  இந்தப் பிள்ளைகள் சட்டவிரோதமான வைப்பாட்டிக்குப் பிறந்தவர்கள் என்பதால் சொத்தில் உரிமை கிடையாது என்றது நீதிமன்றம்.

வைப்பாட்டிகளிலும் இரண்டு வகை என்று கூறி நம் இனத்தையே அந்த நீதிமன்றம் இழிவுபடுத்தியது. இழிவும், சொத்து மறுப்பும் வந்துசேரும் என்று தெரிந்த பிறகு, யாரேனும் அதற்குப் பிறகு  சுயமரியாதைத் திருமணம் புரிந்து கொள்ள முன்வருவார்களா? வந்தார்கள்! முன்னைவிடக் கூடுதலான எண்ணிக்கையில் முன்வந்தார்கள்!! சட்டம் என்ன சொல்கிறது என்பது குறித்து எந்தக் கவலையும் கொள்ளாமல், பெரியார் என்ன சொல்கிறார் என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டனர் மானமிகு சுயமரியாதைத் தோழர்கள்! 

 (தொடரும்)
                                                                                  


நன்றி: நக்கீரன்     

6 comments:

  1. அறியாத செய்திகள்
    தொடர்கிறேன் ஐயா

    ReplyDelete
  2. Well done SubaVee, Myself just like thousands out there are interested in your long discourse like 'vaaniyal vs ariviyal', 'pulaal vs marakari' and what exactly Hinduism's take on "soul" - branhman / paramatman and sub queues on those such as advaitam (non-duality), visishta advaitam etc.

    ReplyDelete
  3. அறியா செய்திகள் ஐயா தொடருங்கள்

    ReplyDelete
  4. அய்யா இன்று காவிரி பற்றிய உங்கள் பேச்சை தந்தி தொலைக்காட்சியின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் (YOUTUBE) பார்த்தேன். மிக அருமையான பேச்சு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete