தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday, 29 September 2016

மோசடிக்குத் துணை போகும் தமிழ்த் தேசியர்கள்


ஈழச் சிக்கலுக்காக இந்து மக்கள் கட்சி, கடந்த செப்.23 அன்று, சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் ஓர் உண்ணாவிரதத்தை நடத்தியுள்ளது. ஈழத்தின் சிவ பூமியைப் , புத்த பூமியாக மாற்ற முயற்சி நடப்பதாகவும், அந்தப் பௌத்த மயமாக்கலைக்  கண்டித்துப் போராட்டம் என்றும்  அறிவித்துள்ளனர். இனச்  சிக்கலை, மதச் சிக்கலாக மாற்றும்  'ரசவாத வித்தை' இது!

இந்த  மோசடிக்குத் துணை போகும் விதத்தில், அய்யா நெடுமாறன் அவர்களும், கவிஞர் காசி ஆனந்தன் அவர்களும் மேடையில் அமர்ந்திருப்பது பெரும் அதிர்ச்சி தருவதாக உள்ளது. நாம் தமிழர் கட்சியும் இதில் பங்கேற்றுள்ளது.


ஈழம் என்பது சிவ பூமி என்றால், பிற மதங்களுக்கு அங்கு இடமில்லையா? சிங்களர்கள் நவாலியில் குண்டு வீசினார்களே அங்கே சிவன் கோயிலா இருந்தது? மாதா கோயிலின் மீதுதானே விமானத்திலிருந்து குண்டு வீசப்பட்டது. கிறித்துவ மதத்தைச் சேர்ந்த எத்தனையோ பேர், பாதிரியார்கள் உட்பட விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார்களே, அவர்கள் எல்லோரும் சிவ மதத்தைக் காப்பாற்றத்தான் போராடினார்களா? இஸ்லாமிய மக்களுக்கு அந்த மண்ணில் இடமில்லையா? சிவ பூமி என்று சொன்னால் வைணவர்கள் கூட இரண்டாம் தர மக்கள் ஆகி விடுவார்களே! 

அந்த உண்ணாவிரதப் போராட்டத்தை இங்கு நடத்தியர்கள் யார் என்று கூடப் பார்க்க வேண்டாமா? இந்து மக்கள் கட்சி, அனுமான் படை, பாரதமாதா இந்து சபை போன்ற அப்பட்டமான மதவாத அமைப்புகள்தாமே அதனை நடத்தியுள்ளன.இங்கே அவர்கள் முன்னின்று நடத்தும் மதக் கலவரங்கள், வன்முறைகள் அந்த மண்ணிலும் பரவ வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படலாம். அதற்குத் தமிழ்த் தேசியம் பேசுவோரும் துணை போகலாமா?


அண்மையில், கோவையில் இந்து மத அமைப்பைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். யார் ஒருவர் கொலை செய்யப்பட்டாலும் அதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். கொலையும், வன்முறையும் எதற்கும் தீர்வாக மாட்டா. அந்தக் கொலையைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதே நம்முடைய வேண்டுகோள். இதில் எந்தக் கட்சிக்கும், அமைப்புக்கும் வேறு கருத்து இருக்க முடியாது. ஆனால் அந்தக் கொலையை வைத்துக் கொண்டு, கோவையில் எத்தனை வன்முறைகள் நடந்தேறின! 

அவரை யார் கொன்றார்கள்,  அதற்கு என்ன காரணம் என்பன போன்ற செய்திகள்  எவையும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பலரும் பல காரங்களைக் கூறிக் கொண்டுள்ளனர். எந்த முடிவும் தெரிவதற்கு முன்பே, கலவரம் தூண்டி விடப்பட்டது. இறந்துபோன சசிகுமாரின் இறுதி ஊர்வலம் நடைபெற்ற நாளில், கோவையில் எத்தனை கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. எத்தனை பேருந்துகள் கொளுத்தப்பட்டன. குறிப்பாக, இஸ்லாமியர்களின் கடைகளை பார்த்துப் பார்த்து அடித்திருக்கிறார்கள். பள்ளி வாசல்களில் கல் வீசியுள்ளனர்.  வன்முறையே தங்களின் வடிவம் என்பதை மீண்டும் ஒருமுறை கோவையில் அவர்கள் மெய்ப்பித்துள்ளனர். 

அடித்து நொறுக்கியதோடு மட்டுமல்லாமல், பல கடைகளில் இருந்த பொருள்களை எல்லாம் திருடிச் சென்றுள்ளனர். ஒரு கைபேசி விற்பனைக் கடையில் பொருள்களைக் கொள்ளையடித்துச் செல்லும் காட்சி, ஊடகத்தில் படமாகவே வெளிவந்தது. கொள்ளையடிப்பதும், பொருள்களைத் தூக்கிச் செல்வதும்தான், துக்கத்தை வெளிப்படுத்தும் முறையா?

திண்டுக்கல், பழனி சாலையில் வசித்துவரும், பா.ஜ .க.வைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் தன் வீட்டில் யாரோ பெட்ரோல் குண்டு வீசிவிட்டதாகக் காவல் துறையில் புகார் கொடுத்தார். அதுகுறித்துக் காவல்துறை விசாரணை நடத்தியபோது, திடுக்கிடும் செய்தி வெளியானது. விளம்பரம் தேடுவதற்காகவும், காவல்துறையின் பாதுகாப்பைப் பெறுவதற்காகவும், அவரும், அவருடைய நண்பர் கமலா கண்ணன் என்பவரும் சேர்ந்து தங்கள் வீட்டிலேயே குண்டு வீசிக் கொண்டதாக இப்போது அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இருவரும் கைது செய்யப்பட்டுள்ள செய்தியை ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

கலவரங்களைத் தூண்டுவது, பிற மத அடையாளங்களை அழிப்பது, வன்முறைகளின் மூலம் வாக்குகளைப் பெற முயற்சிப்பது - இவையே இங்குள்ள இந்துமதவாத அமைப்புகளின் நோக்கம் என்பதை நாடு அறியும். இவர்களுடன் 'நாம் தமிழர்களும்', தமிழ்த் தேசியத் தலைவர்களும், உலகறிந்த கவிஞர்களும் சேர்ந்து அமர்வதே அவமானம் இல்லையா?

திராவிட இயக்கத்தை எதிர்ப்பதே தங்களின் வாழ்நாள் நோக்கம் என்று கொண்டுள்ள தமிழ்த் தேசிய இயக்கங்களின் பாதை எங்கே சென்று முடியும் என்பதைப் பலமுறை நாம் கூறியுள்ளோம். திராவிட இயக்க எதிர்ப்பு பார்ப்பனிய ஆதரவிலும்,  இந்துத்துவ ஆதரவிலும்தான் சென்று முடியும்  என்பதை இந்தக் காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன.


16 comments:

  1. கீழே உள்ள இந்த கருத்தை ஒரு வெப் ஊடகத்தில் நான் பார்த்தது. அதிமுகவினர் ஆட்சியில் இந்துக்கள் அதிகமாக கொல்லப்படுவதாக தளபதி அவர்கள் சொன்னதாக ஒரு செய்தி. அதற்கு ஒரு கருத்து கீழே இருந்தது. இந்த கருத்தை ஒரு முஸ்லீம் சகோதரர் எழுதிய மாதிரித்தான் தெரிகிறது. அந்த கருத்து..

    1989 கோவை கலவரத்தை சரிவர அடக்க ஒடுக்க தெரியாத கலைஞர் மற்றும் அதன் சகாக்கள் மறைமுக RSS ஆதரவு கொடுத்தது அணைத்து முஸ்லீம் மக்களுக்கும் தெரியும் அதன் விளைவு இன்று வரை முஸ்லீம் ஒட்டு DMK விட்டு திசை திரும்பி ADMK பக்கம் சென்று பல வருடம் ஆகிறது ... 1000 திற்கும் அதிகமா மான முஸ்லீம் மக்கள் குற்றம் நிரூபிக்க படாமல் சந்தேகதின் பேரில் பல வரும் சிறையில் வாடும் பிரச்னை ஏற்பட்டது இதற்க்கு முழு பொறுப்பு கலைஞர் தான் என்பதை அணைத்து முஸ்லீம் மக்களும் அறிவார்கள் நடு நிலை ஹிந்து மக்களும் புரியும் ... ஒரு ரௌடி பய போலீசை கத்தியால் குத்தினால் அதற்க்கு முஸ்லீம் மக்கள் அனைவரும் பொறுப்பா .. இதை திசை திருப்பு முஸ்லீம் மக்களின் சொத்துக்களை கொள்ளை அடித்த RSS காரர்கள் இன்று வரை தண்டிக்க பட வில்லை கலைஞர் மற்றும் ஸ்டாலினை மறக்க முடியாது ... இந்த பிரச்சனையில் அன்றே நாங்கள் MGR பின்னல் இருந்து இருந்தால் MGR எங்களோடு விசுவாசமே இருந்து இருப்பர் கலைஞர் போல முதுகில் குத்தி இருக்க மாட்டார் அதன் எங்கள் ஓட்டு admk ஜெய விற்கு தான் ...இப்படி சொல்ல பட்டு இருக்கிறது.

    முஸ்லிம்கள் இந்து மதத்தினர் ஆனாலும் கூட பார்ப்பனர்களோடு ஒன்றாக கலந்துதான் காணப்படுகின்றனர். அவர்களுக்கு வேறு வழி இல்லை என்பது போல ஒரு நிலை ஏற்படுத்த படுகிறது. இதனை பல இடங்களில் பார்க்க முடிகிறது. இதனைத்தான் திருமாவளவன் சொன்னார். காங்கிரஸ் கட்சி தனது பிற்படுத்தப்பட்ட மக்கள் வாக்குகளை இழந்து விட்டது. அவர்கள் சிறுபான்மையினர் ஓட்டுகளையும் தலித்துகள் ஓட்டுக்களையும் நம்பித்தான் இருக்கின்றனர் . ஆக காங்கிரஸ் என்ற பார்ப்பனர் கட்சி போல, தமிழகத்திலும் அதிமுக என்ற பார்ப்பனர் கட்சி இவர்கள் ஓட்டுகளைத்தான் நம்பி இருக்க போகிறது. அதனை மற்றவர் உணர சிறிது நாட்களாகும்.

    ReplyDelete
  2. Dear Sir,

    I would like to be part of your team, please send me the contact details

    ReplyDelete
  3. நெடுமாறன் அவர்களே,நீங்கள் தவறு செய்தபோதெல்லாம் எங்கள் பேராசிரியர் சுப.வீ உங்களை விடாமல் எச்சரித்துக்கொண்டே இருந்தார் என்பதை வரலாறு குறித்துக்கொள்ளும்.

    சீமான் வகையாறா பற்றியெல்லாம் பேசுவது நமக்கு அவமானம் என்பதால் அவர்களை விட்டுவிடுவோம். அவர்களே நேராக சென்று குழியில் விழும் கோமாளிக்கூட்டமது.

    ReplyDelete
  4. Tami chauvinism never challenges and questions Hinduism, Hindi,Sanskrit even against Brahminocracy..It will speak only against Dravidian culture to prove their existence. They all fake Tamil Lovers and real DMK haters.

    ReplyDelete
  5. Subavee sir, Now India is boycotting SAARC meet. Nepal, Afghanistan and Bangladesh are with India against Pakistan. But Sri Lanka is cunningly remaining silent and supporting Pakistan. Why is the Indian govt. not understanding that Sri Lanka was/is against India?

    ReplyDelete
  6. இரத்தினவேல்30 September 2016 at 11:53

    2009ல் ஈழத்தில் இன்ப்படுகொலைக்கு உள்ளானோரில் பெரும்பாலோர் இந்துக்கள் என்பது அப்போது இந்து மக்கள் கட்சிக்குத் தெரியவில்லையா? தமிழ்த் தேசியர்கள் திசைமாறிச் செல்வது வேதனை அளிக்கிறது.

    ReplyDelete
  7. சிவ பூமி என்று சொல்வதனால் மட்டுமே மற்ற மதத்தினருக்கு இடமில்லை என்று எப்படி பொருள் கொள்ள முடியும்? அப்படியானால் பெரியார் பூமி என்று தமிழகத்தை சொல்வதும், அதே பொருளில், பெரியாரை ஏற்காதவர்களுக்கு இங்கே இடமில்லை -அவர்கள் இரண்டாம் தரக் குடிமக்கள்- என்று அந்த அமைப்பினர் சொல்வதாக கொள்ளலாமா?

    2013ல் நடந்த திண்டுக்கல் சம்பவத்தை, தேதி குறிப்பிடாமல் , ஒரு நிகழ் கால சம்பவத்தோடு தொடர்பு படுத்தி எழுதுவது முறையா? அப்படி நாடகம் ஆடுபவர்கள் எல்லா அமைப்புகளிலும் இருக்கிறார்களே!

    45 ஆண்டுகளுக்கு முன்பு குடமுருட்டி பாலத்தில் குண்டு வைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது நினைவிருக்கிறதா? 2006ம் ஆண்டு சனவரி மாதம் அப்போதைய அமைச்சர் ஒருவரை கத்தியால் தாக்க முயற்சி நடந்ததாகவும், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ரயில் நிலையத்தில் இருந்தும் யாரும் அந்த தாக்குதல் நடத்தியவரை பார்க்கவில்லை - அவர் தப்பி விட்டார் என்று சொல்லபட்டது எந்த வகையின் பாற்பட்டது. இந்த நாடகங்களை நடத்தியது எந்த அமைப்பை சேர்ந்தவர்கள்?


    ReplyDelete
  8. அன்பு பேராசிரியர் சுப.வீ அவர்களுக்கு நான் உங்கள் மாணவன்
    அய்யா உங்களது mail id தந்தால் என்னை போன்ற மாணவர்கள் உங்களுடன் உரையாட, உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வசதியாக இருக்கும். எனது mail id rajeshlifescience@gmail.com

    ReplyDelete
  9. Through out the world the lands are identified and marked on the basis of language but on the religion.

    ReplyDelete
  10. இரா. உமா30 September 2016 at 19:42

    தமிழீழ விடுதலைப் போரின் ஆழத்தை என் போன்றவர்கள் பெரும்பான்மையும் அறிந்துகொண்டது ...அய்யா நெடுமாறன், அவர்களின் பேச்சுக்கள்..எழுத்துகள் மூலம்தான்...கவிஞர் காசி ஆனந்தனின் கவிதைகள் ஈழ விடுதலை உணர்வை மங்கவிடாமல் தட்டி எழுப்பிக் கொண்டே இருந்ததால்தான் அவரை உணர்ச்சிக் கவிஞர் என்று கொண்டாடினோம்...அய்யா நெடுமாறன் அவர்கள் திராவிட இயக்கத்திற்கு எதிராகப் பேசியும் எழுதியும் வந்தாலும்..அவருடைய ஈழ ஆதரவு நிலையை என்றைக்கும் என் போன்றவர்கள் குறைத்து மதிப்பிட்டதில்லை...ஆனால் மத வெறிகளோடு இணைந்து அமர்ந்து அந்த மாவீரர்களுக்கு அவர்களின் தியாகத்திற்கு இழி வை த் தேடித்தருவார் என எதிர்பார்க்கவில்லை...லட்சக்கணக்கான விடுதலைப் போராளிகள் உயிரைக் கொடுத்து கால் நூற்றாண்டுக்கும் மேலாகப் போராடியது கேவலம் மதத்தைக் காக்கவா...தங்கள் தாய் மண்ணை மீட்க அல்லவா அவர்கள் போராடினார்கள்...இன்றுவரை தேசியத் தலைவர் இருக்கிறாரா இல்லையா என்கிற ஊசலாட்டத்திலும்...இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும் கோடிக்கணக்கான தமிழர்கள் தவித்து வருகின்றனரே...எதற்காக? எப்படியாவது ஈழத்தை மீட்டுவிட வேண்டும் என்ற தீராத தாகத்தால்தானே தவிர ...மனிதனை மிருகமாக்கும் மத வெறியைக் காக்க அன்று...... இன்று மத வெறியர்களோடு இணையாக அமர்ந்து...ஈழத்தின் மாவீரர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட ,இவர்களை வரலாறு மன்னிக்காது...பேரா. சுபவீ சுட்டிக் காட்டியதை போல. திராவிட இயக்கத்தை எதிர்க்கும் தமிழ்த் தேசியர்களின் பயணம். ..பார்பனியத்திடமும். .இந்து மதத்திடமும்தான் போய்ச் சேரும் என்பது...தமிழ்நாட்டுக்கும் பொருந்தும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்...

    ReplyDelete
  11. அய்யா, உங்கள் சொந்த உறவினர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் போது இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் உதவ முன் வந்தால் நீங்கள் ஏற்று கொள்ள மாட்டீர்களா ....

    ReplyDelete
    Replies
    1. சரியான கேள்வி..........

      Delete
  12. இது உதவும் மனப்பாண்மை அல்ல, ஈழத்தையும் ஈழ மக்களையும் சைவர்களாக நிறுவும் முயற்சி. மதமாற்றம் மட்டுமே நடப்பது போலவும், படுகொலைகளும் மற்ற கொடுமைகளும் நடக்காத போலவும் உள்ளது, இவர்களது போராட்டத்திற்கான காரணம்

    ReplyDelete
  13. உங்களுக்கு ஆயிரம் பிச்சனை. எங்களுக்கு ஒரு பிரச்சனை மட்டும்தான். எனது தாய் நிலத்தை ஆக்கிரமித்தவனை சும்மா விடிவதில்லை என்பது. எதிரிக்கு எதிரி நண்பநென்றவகையில், நெடுமாறன், சீமான் போன்றோரையும் அரவணைத்தே செல்வோம். எமது இலக்கை அடைந்த பிற்பாடு, இவர்களை என்னசெய்வது என்பதை அப்போது முடிவு செய்வோம். ஆனால், அதற்காக ஈழத்தமிழன், யாரிடமும் மண்டியிட மாட்டான். இது கதை அல்ல. நாம் இரத்தத்தினால் இன்றுவரை தொடராக எழுதிக்கொண்டிருக்கின்ற சரித்திரம். மேடை பேச்சு வீரர்களுக்கெல்லாம் இது விளங்காது......

    ReplyDelete