தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday, 16 October 2016

அணுஉலையும் ஆன்மீகமும்


அழிவது என்று முடிவான பிறகு அணுஉலையால் அழிந்தால் என்ன, ஆன்மீகத்தால் அழிந்தால் என்ன என்று அரசும், மக்களும் நினைக்கிறார்களோ என்று தோன்றுகிறது.

இன்று காலையில் வந்துள்ள இரண்டு செய்திகளும் பெரும் அதிர்ச்சியைச் சுமந்து வந்துள்ளன என்றே கூற வேண்டும். கூடங்குளத்தில் மேலும் இரு அணுஉலைகள், வாரணாசியில் பக்தர்கள் நெரிசலில் சிக்கி மரணம் என இரண்டு செய்திகள் நம் இந்தியாவின் நிலையை எடுத்துக்  காட்டுகின்றன.


கூடங்குளம் அணுஉலைகளை எதிர்த்தது அங்குள்ள மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.  அதனால் ஏற்படக்கூடிய எதிர்கால அழிவுகள்  குறித்துச்  சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் பல்வேறு சான்றுகளுடன் விளக்கியும் வருகின்றனர். எனினும் மத்தியில் ஆட்சியில் இருந்த நேற்றைய அரசும், இன்றைய அரசும் அணுஉலைகளைக் கொண்டு வருவதில் பிடிவாதமாக உள்ளன.



அணுஉலைகள் இல்லாமல் எதிர்கால மின்தேவைகளை நிறைவு செய்ய முடியாது என்பது அரசின் வாதம்.அது முழு உண்மையில்லை என்பதும், அணுஉலைகளுக்குப் பின்னால் வேறு நோக்கங்கள் உள்ளன என்பதும் அனைவரும் அறிந்த செய்திகளே.  எனினும்,  அறிவியல் வளர்ச்சியின்போது சில பக்க விளைவுகள் இருக்கவே செய்யும் என்ற அடிப்படையில், முதல் இரு அணுஉலைப் பணிகள் தொடங்கியுள்ளதையாவது புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இப்போது அதே பகுதியில் 3, 4 ஆவது அணுஉலைகளின் கட்டுமானப் பணிகளும்  தொடங்கியுள்ளன. 

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போல, மக்களின் எதிர்ப்புக்கு வழங்கும் பரிசாக, மேலும் இரண்டு அணுஉலைகள் என்பதும், அடுத்து 5, 6ஆவது அணுஉலைகளின்  பணி  விரைவில் தொடங்க உள்ளது என்பதும் அத்து மீறிய செயல்களாகவே உள்ளன. மக்களின் வரிப்பணத்தில் ஏறத்தாழ 40 ஆயிரம் கோடி ரூபாயில், மக்களுக்கு எதிரான திட்டத்தை அரசு நிறைவேற்ற முனைகிறது. அந்தப் பகுதி மக்களின் அச்சம், அழிவு பற்றியெல்லாம் எங்களுக்கு கவலையில்லை என்பதுதான் அரசு விடுத்திருக்கும் மறைமுகமான செய்தியாக உள்ளது. 

மக்கள் நலன் விரும்பும் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த மக்கள் விரோதக் செயலை எதிர்த்துப் போராட வேண்டிய காலம் நெருங்கியுள்ளது. இது வெறும் கூடங்குளம் பகுதிச் சிக்கலன்று. ஒட்டுமொத்த மக்களுக்கும் விடப்பட்டுள்ள அறைகூவல் என்று கொள்ள வேண்டியுள்ளது. 

அரசு மக்களை இப்படி அழிக்கிறதென்றால், மக்கள் தாங்களே அழிவதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொள்கின்றனர். ஆன்மீகத்தின் பெயரால் மக்கள் பெரும் கூட்டமாகக் கூடுவதும், நெரிசலில் சிக்கி இறந்து போவதும் இந்தியாவில் தொடர்கதையாக உள்ளது. வாரனாசி மாவட்டத்தில் உள்ள ராஜ்காட் பாலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாபா ஜெய் குருதேவ் என்பவரின் விழாவில் கலந்து கொள்ளக்  கூடியுள்ளனர் அல்லது கூட்டப்பட்டுள்ளனர்.  ஒருவர் மீது ஒருவர் மோதி, விழுந்து, ஓடி நெரிசலில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

என்று மடியும் இந்த அடிமையின் மோகம் என்று தெரியவில்லை. இறந்து போனவர்களுக்காகவும், காயம் பட்டவர்களுக்காகவும் கூட்டுப் பிரார்த்தனை செய்யும்படி பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். அதில் மறுபடியும் நெரிசல் ஏற்பட்டு எவரும் இறந்துபோய் விடாமல் இருக்க வேண்டும்!

பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடுதான்!


6 comments:

  1. World people appealed the Almighty about all rich minerals and intellectuals only given to India and God replied "do not worry and I will give Indian government to offset every thing"

    ReplyDelete
  2. ஊருக்கு சென்று விட்டு தாம்பரம் வந்து இறங்குகிறேன். பஸ் ஸ்டாண்ட் கடைசியில் பேருந்து நிற்கிறது. லேசான இருட்டு இருந்தாலும் எப்போதும் திங்கள் கிழமை காலை இருக்கும் கூட்டம் இருக்கிறது. இறங்கி நடக்கிறேன். சிறிது தூரம் நடந்த உடன் நான் கண்ட காட்சி என்னை உறைய வைக்கிறது. ஒரு ஐம்பது வயது மதிக்க தக்க ஒரு குடும்ப தலைவி சிறுநீர் கழித்து கொண்டு இருக்கிறார். தலையை திருப்பி கொண்டு மனம் பாரத்தோடு நடக்கிறேன். அவர் உடல் நிலை என்ன பிரச்சினையோ. இதனை பேர் வந்து இறங்கும் பேருந்து நிலையத்தில் கழிப்பிடம் கட்டாதது அதனை பற்றி பெரிதாக கவலை படாதது யார் தவறு. அரசின் தவறு மட்டும் அல்ல. மக்களின் தவறு. ஏனென்றால் அந்த வயதான பெண்மணியின் உடல் பிரச்சினை எல்லாருக்குமே இல்லை. அதனால் அவர்களுக்கு கவலை இல்லை. தனக்கு பிரச்சினை வரும்போதுதான் கழிப்பிடம் கட்ட வேண்டும் என்பது குறித்து பேச ஆரம்பிப்பார்கள் நம் மக்கள்.

    ஐயோ என்று பரிதவிக்கிற மனம் இந்தியர்களுக்கு எப்போது வரும். கூடங்குளம் அணு உலை அது அந்த ஏரியா காரர்களின் பிரச்சினை என்று மற்றவர்கள் ஒதுங்கி கொள்கிறார்கள். மீத்தேன் அது அந்த ஏரியா காரர்களின் பிரச்சினை.பிளாஸ்டிக் குப்பைகள் கொடுங்கையூரிலும் பெருங்குடியிலும் குவிகிறதே..அது அந்த ஏரியா காரர்களின் பிரச்சினை. எதை பற்றியும் யோசிக்காமல் அடுத்த தலைமுறை பற்றி யோசிக்காமல் பிளாஸ்டிக் உபயோகம் அதிகரித்து கொண்டே போகிறது, அது அடுத்த தலைமுறையின் பிரச்சினை.

    இம்மாதிரி பிரச்சினைகள் அடுத்தவருக்கு இருப்பதை தன சகோதரன் / சகோதரி துன்பப்படுகிறாரே அல்லது துன்ப பட போகிறாரே என்று சுயநலம் இன்றி அனைவரும் போராடினால் ஏதோ ஒரு தீர்வு கிடைக்கும். எனக்கு ஒன்று என்றால் யார் வருவார் என்ற ஏக்கம் இந்தியனாய் பிறந்த எல்லார் மனதிலும் இருக்கிறது. இதற்கு மூல காரணம் அனைவரையும் சுயநலவாதியாய் மாற்றிய நமது பழக்கம். ஒருவன் ஒரு பெண்ணை ரேப் செய்து கொண்டு இருந்தால் அப்பெண்ணை காப்பாற்றாமல் அதற்கும் ஒரு மந்திரம் இருக்கிறது அதை சொன்னால் எல்லாம் சரி ஆகி விடும் என்று எவராவது போகிற போக்கில் சொல்லி வைத்து இருந்தால் அப்பெண்ணை காப்பாற்றும் எண்ணம் இல்லாமல் மந்திரம் சொல்வார்கள். பரிதவிக்கிற மனம் அல்லாமல் இந்த சுயநலத்தைத்தான் மதம் மக்களுக்கு கற்று கொடுத்து இருக்கிறது.

    ReplyDelete
  3. அருமையான பகிர்வு ஐயா
    Aiyya,my opinion is that people are too exhausted in their lives- which makes any kind of "out of the box" thinking (rationalism/communism/discriminative knowledge in politics) ,unaffordable for them.
    Im talking about normal people like those died in varanasi and people in kudankulam

    ReplyDelete
  4. அய்யா சுபவீ அவர்களுக்கு வணக்கம்!
    தங்களின் அனைத்து உரைகளையும் கேட்டும் பார்த்தும் பயன் பெற்றேன் குறிப்பாக எதிரும் புதிரும்,உலக விடுதலை
    போராளிகள் போன்றவை எக்குள் புதிய வெளிச்சத்தை உண்டாக்கியது..
    தங்களின் பணி தொடர வாழ்துக்கள்!
    தங்களோடு தொலை பேசியில் பேச வாய்புகிடைக்குமா.
    நன்றிகளுடன்
    முருகன்

    ReplyDelete
  5. எதிர்த்து கேட்கும் எண்ணமே வரகூடாது என்கிற திட்டத்தில் தான் அரசு செயல்படுகிறது. மாவொயிஸ்டுக்ள் மேல் இருக்கும் வழக்குகளை விட இடிந்தகரை மக்கள் மேல் இருக்கும் தேச துரோக வழக்குகள் தான் அதிகம். சரி போகட்டும் என்று விட்டால், இந்த அணு கழிவுகளை பகிர்ந்து கொள்ள கர்நாடகாவும் கேரளாவும் முடியாது என்று கையை விரித்து விட்டது. இப்படி நம்மை நாமே அழித்து கொண்டு எல்லாவற்றையும் உருவாக்கினால் இவர்கள் நோகாமல் நொங்கு தின்பார்ககள். தண்ணீர் கேட்டால் தரமட்டார்கள்.

    ReplyDelete
  6. Impressive writing and sense of humour Sir !

    ReplyDelete