தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday, 7 October 2016

பழைய சாமி புதிய சதி


சுப்ரமணிய சுவாமியால் சும்மா இருக்க முடியாது. ஏதேனும் ஒரு சிக்கலை உருவாக்கிக் கொண்டே இருப்பதும், அதன்மூலம் மலிவான விளம்பரம் தேடி,  தன் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதும் அவர் வழக்கம்.  தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்னும் புதிய வெடிகுண்டுடன் புறப்பட்டுள்ளார் இப்போது.


கடந்த 22ஆம் தேதி சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா இன்னும் அங்குதான் உள்ளார். இன்று இரவோ, நாளையோ வீடு திரும்பி விடுவார் என்றுதான் முதலில் சொன்னார்கள். பிறகு, "உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம், இன்னும் சில நாள்களில் வீடு திரும்புவார்" என்று மருத்துவர்கள் ஒவ்வொரு நாளும் எழுத்து மாறாமல் அதே "உண்மைச் செய்தியை"க்  கூறிக் கொண்டிருந்தனர். இப்போது கொஞ்சம் மாற்றம் தெரிகிறது. சுவாசக் கோளாறு, இருதய சிகிச்சை, நோய்த் தொற்று, சர்க்கரை நீர் முதலிய சிக்கல்கள் இருப்பதால், மருத்துவமனையில் நீண்ட நாள்கள் தங்க வேண்டியிருக்கும் (needs a longer stay) என்று மருத்துவர்களிடமிருந்து  செய்திகள் வருகின்றன.

உடல் நலமின்றிப் போவது யார் ஒருவருக்கும் இயற்கைதான். ஆனால் அதற்காக தமிழக அரசும், அரசின் செயல்பாடுகளும் நிலைகுத்தி நின்றுவிட முடியாது. மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பது மிகச் சரியான கருத்தே ஆகும். பொறுப்பு முதல்வராக ஒருவரைத் தேர்ந்தெடுப்பதன்  மூலமோ, அமைச்சர்கள் குழு ஒன்றிடம் பொறுப்புகளை ஒப்புவிப்பதன் மூலமோ அந்த மாற்று ஏற்பாட்டினைச் செய்ய முடியும், செய்ய வேண்டும்.

ஆனால் இந்த இடைவெளியில் சு.சாமி உள்ளே புகுந்து குழப்பம் செய்ய முயற்சிக்கிறார். குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட வேண்டுமாம். இது என்ன ஜனநாயகம்? ஒரு முதலமைச்சருக்கு உடல் நலம் கெடுமானால், உடனே ஆட்சியைக் கலைத்து    விடலாமா?   பிரதமருக்கு உடல் நலிவு ஏற்படுமானால் அதற்கு என்ன செய்வது?

ஜெயலலிதா ஆட்சியின் குறைபாடுகள் குறித்து நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் உண்டு. ஆனாலும் 356 ஆம் பிரிவைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைப்பதற்கு என்றும் நாம் எதிரிகள். அந்த ஜனநாயக எதிர்ப் போக்கை ஒருநாளும் நம்மால் ஆதரிக்க முடியாது. 

ஆட்சியைக் கலைக்கச் சொல்லும் சு.சாமிக்குத் தமிழ்நாட்டைப் பற்றி அப்படி ஒன்றும் கவலை கிடையாது. இச்சூழலைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில், பா.ஜ.க ஆட்சியைக் கொண்டு வருவதே அவரின் நோக்கம்.

காவிரிச் சிக்கலில் தமிழ்நாட்டுக்குப் பச்சைத் துரோகம் செய்த மத்திய  அரசும், பா.ஜ.க.வும் கொல்லைப்புற வாசல் வழியாகத் தமிழக ஆட்சிக்கு வர முயல்வதைத் தமிழ்மண் தடுத்தே தீரும்.

அ.தி.மு.க. நம் இன்றையப் பகை. பார்ப்பனியமோ நம் பரம்பரைப் பகை! .


4 comments:

  1. சுப்பிரமணியன் இந்த சாக்கில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதித்து விட்டதாகவும்,தி.கழகம் மற்றும் சில குழுக்கள் ஆலோசித்து கலகங்களை ஏற்படுத்த முனைவதாகவும் ஆகவே ஆயுதமேந்திய
    இராணுவ படையை தமிழ்நாட்டில் நிறுத்தவும்,ஆட்சியை கலைத்து குடியரசு தலைவர் ஆட்சியை அமலாக்கவ வேண்டும் எனவும் கூறியுள்ளன்.
    காவிரி பிரச்சனையில் பெங்களூரூ கலவரத்தால் பற்றி எரிந்த போது தமிழகம் அமைதி காத்தது. ஏன் அப்போது சட்டம் ஒழுங்கு பாதித்தது என்று கர்நாடக அரசை கலைக்கவில்லை.
    இப்போதும் தமிழகம் அமைதிபூங்காவாக உள்ளது.இதில் எங்கே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது ஆட்சியை கலைக்க.
    பார்ப்பானியம் தன் முகத்தை மெல்ல காட்டுகிறது.

    ReplyDelete
  2. Media should not give importance to the comments made by Subramania swamy. I don't understand why he opposes JJ who is from the same community, but supports MK Stalin.

    ReplyDelete
  3. சர்க்கஸ் கூடாரத்தில் ஒரு சாகசம் முடிந்து அடுத்த சாகசம் தொடங்கும் முன் சில விசித்திர மனிதர்கள் தோன்றி பார்வையாளர்களை யாருக்கும் புரியாத மொழியில் வித்தியாசமான பாணியில் பேசி மகிழ்விப்பர். அவர்களின் பேச்சு பேச்சாக மட்டுமே இருக்கும்; செயலாகாது. அவர்களில் ஒருவருக்கு இணையானவர் இந்த ஆசாமி.

    ReplyDelete
  4. ஆம். எத்துனை முறை குத்துப் பட்டாலும் '' அவமானம் '' என்றால் என்னவென்றே தெரியாதவர் !

    ReplyDelete