தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday, 5 October 2017

எழுமேடு தந்த எழுச்சி!



நாம் எதிர்பார்ப்பது போலவே எல்லாம் நடப்பதில்லை. சில நிகழ்வுகள் நமக்கு அதிர்ச்சி தரும். சில நிகழ்வுகளோ நமக்குப் புதிய எழுச்சியைத் தரும். எழுச்சியை மட்டுமின்றி உள்ளத்தில் ஒரு நெகிழ்ச்சியையும் எனக்குத்  தந்த நிகழ்வு ஒன்று அண்மையில் நடந்தது. 


அக்டோபர் 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு அந்த நிகழ்வு தொடங்கியது. எழுமேடு -  பண்ருட்டிக்கு அருகில் உள்ள அண்ணா கிராமம் ஒன்றியத்தில் உள்ளடங்கி உள்ள ஒரு சின்ன கிராமம் அது. ஒரு நூறு இளைஞர்களைச் சந்திக்க வேண்டும் என்ற என் ஆவலை ஏற்று, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் கடலூர் மாவட்டச் செயலாளர் முரளியும், திமுக வின் முன்னாள் ஒன்றியச்  செயலாளர் பலராமன் அவர்களும் இணைந்து அந்த ஏற்பாட்டைச் செய்திருந்தனர். பலராமன் ஒரு செயல்வீரர். 100 பேர் கேட்டால் 200க்கும் மேற்பட்ட பெண், ஆண்  இளைஞர்களைக் கொண்டுவந்து சேர்த்திருந்தார். 

என்னுடன் தொ.மு..வின் நெய்வேலி நகரச் செயலாளர் சுகுமார், தி... பேரவையின் முகிலன், சிதம்பரம் 'சொல் புதிது' நிறுவனர் அருணேஸ்வரன் ஆகியோரும் வந்திருந்தனர்.  இளைஞர்களில்  பல்வேறு வயதினரும், பல்வேறு கல்வித் தகுதி உடையவர்களும் கலந்திருந்ததால் எங்கிருந்து தொடங்குவது என்ற குழப்பம் எனக்குள் எழுந்தது. 

என்னைத் தெரியுமா, பார்த்திக்கிறீர்களா என்று கேட்டபோது, "தெரியும், தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறோம்" என்று பலரும் விடை கூறினர். அது ஒரு நுழைவுச் சீட்டாக அமைந்தது.

"கடந்த ஓரிரு மாதங்களில் உங்கள்நெஞ்சில் பதிந்து கிடக்கிற பெயர் ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டு உரையாடலைத் தொடங்கினேன். நான் எதிர்பார்க்கவில்லை. பல திசைகளிலிருந்தும் 'அனிதா, அனிதா'  என்னும் பெயர் அலைமோதிற்று.

அந்தப் பெயரைப் பற்றிக் கொண்டு அந்த இளைஞர்களிடம் உட்புகுந்தேன். ஏன் அனிதா இறந்தார், நீட் என்றால் என்ன, நீட் தேவையா என்று உரையாடல் விரிந்தது.அடுத்தடுத்த பகுதிகளுக்குள் நானும் அவர்களும் பயணித்தோம். தாய் மொழியின் சிறப்பு, ஆதிக்க எதிர்ப்பின் தேவை, கௌரி லங்கேஷ் படுகொலை என்று பல்வேறு செய்திகள் பேசப்பட்டன.  அவர்கள் நிறையச் செய்திகளைத் தெரிந்து வைத்திருந்தனர்.  கிராமத்துப் பிள்ளைகள் என்று எளிமையாக எடைபோட்டு விடக் கூடாது என்பதை அவர்கள் உணர்த்தினர். 

ஒன்றே ஒன்றுதான்,  சற்று வருத்தமாக  இருந்தது. தினமும் நாளேடுகள் படிப்பவர்கள் யார் யார் என்று கேட்டேன். சட்டென்று பிள்ளைகள் மௌனமாகி விட்டனர். நான் மீண்டும் மீண்டும் கேட்ட பிறகு, ஏறத்தாழ 250 இளைஞர்கள் கூடியிருந்த அந்த இடத்தில் இரண்டே இரண்டு கைகள்தாம் மேல் உயர்ந்தன. இருவரும் தினத்தந்தி படிப்பதாகக் கூறினார்கள். 

எந்தச் செய்தித்தாளை வேண்டுமானாலும் படியுங்கள். ஆனால் செய்தித்தாள் படிப்பது என்பதைக் கட்டாயமாக ஒரு பழக்கமாக்கிக்கொள்ளுங்கள் என்று அன்புடன் வேண்டினேன். பள்ளிகளுக்கு  வெளியிலும் பாடங்கள் விரிந்து கிடப்பதை விளக்கினேன். 

நேரம் ஓடியது தெரியாமல் இரண்டு மணி நேரம் கடந்து விட்டது. இனி வினாக்களை நீங்கள் கேளுங்கள் என்றேன். பல்வேறு வினாக்கள் எழுந்தன. இட  ஒதுக்கீடு ஏன் வேண்டும் என்று ஓர் இளைஞர் கேட்டார். அவர் இடஒதுக்கீட்டால் பயன் பெற்றவர் என்பது ஒரு வேடிக்கையான முரண். ஒரே அமர்வில் எல்லாவற்றையும் விளக்கி விட முடியாது என்றாலும் இயன்றவரையில் எடுத்துச் சொன்னேன். 

ஒரு மாணவர் சொன்னார், "அய்யா, நீங்கள் பேசத்  தொடங்கிய சிறிது நேரத்த்தில், நான் என் கடிகாரத்தைக் கழற்றிப் பையில் போட்டுக் கொண்டேன்" என்றார். எனக்குப் புரியவில்லை. ஏன் என்று கேட்டேன். "என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. பள்ளியிலோ, பொது இடத்திலோ யாரேனும் பேசத் தொடங்கினால்,  கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இருப்பேன். இவர் எப்போது முடிப்பார் என்பதிலேயே என் கவனம்  இருக்கும். இன்று உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடித்தது. கடிகாரம் வேண்டாம் என்று கழற்றி விட்டேன்" என்றார். 

எனக்கே வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. பிள்ளைகள் பலரும் 'நீங்கள் பேசியது  பிடிக்கிறது'  என்றனர். இனி நாங்கள்  செய்தித்தாள் படிப்போம் என்றனர். "மீண்டும்  வருவீர்களா?"  என்று கேட்டனர். இறுதியாக, "என் பேச்சு உங்களுக்கு எதனால் பிடிக்கிறது?" என்று கேட்டேன். ஒரு மாணவி சொன்ன விடை என்னை நெகிழ வைத்தது. "நீங்க உண்மை பேசுறீங்கன்னு எங்களுக்குத் தோணுது. அதனால பிடிக்குது" என்றார்

போதும், இது போதும், இதனை விட இனி நான் என்ன சொத்துச் சேர்த்துவிடப் போகிறேன் என்ற எண்ணம் எழுந்தது. 

மீண்டும் உங்களை வந்து சந்திப்போம்  என்ற உறுதி மொழியோடு அனைவரும் அங்கிருந்து விடைபெற்றோம்!


அந்த நாளை இனி என்னால் எந்நாளும் மறக்க முடியாது.

12 comments:

  1. உண்மைக்கு எதிராக நடப்பவர்கள் சுயநலவாதிகள். உண்மைதான் சமூகத்தை சீர்தூக்கி விடும். தனது தேவைக்காக சொல்லப்படும் பொய்கள் தன்னை மட்டும் அல்லாமல் தன் சார்ந்த சமூகத்தையே அழிக்கிறது.

    நீங்கள் உண்மை பேசுவதால்தான் உங்களை நோக்கி இளைஞர்கள் வருகிறார்கள். இதைத்தான் ஆர் ஜே பாலாஜி நீயா நானாவில் சொன்னார். இக்கால இளைஞர்கள் நல்லவர்கள். தான் அடுத்தவர்களுக்கு செய்யும் பெரிய உதவிகளை கூட சட்டை செய்யாமல் போய்க்கொண்டே இருப்பார்கள்.

    அதிமுக வினை கட்டியாளும் கொங்கு மண்டலக்காரர்கள் ஏதாவது சொன்னாலும் அவர்கள் பல்வேறு தொழில்கள் அவர்கள் ஈடுபடுவதால் பயன் இருக்கிறது. அந்த மணி குழுமம் கொங்கு மண்டலத்தை கட்டியாளுவதை எல்லா சானல்களும் உறுதி படுத்துகின்றன. அதனால் அவர்கள் ஆட்சியில் நீடிப்பது அவர்களுக்கு பயன் தரக்கூடியது.

    ஆனால் சிலரது பொய்களோ வரலாற்றில் இடம்பெறும். அப்படி ஒருவர்தான் சபாநாயகர் தனபால் என்று எனக்கு தோன்றுகிறது. இவரது செயல்களால் இவருக்கோ இவர் சார்ந்த சமூகத்துக்கோ மக்களுக்கோ நன்மை இருப்பதாக எனக்கு தோன்ற வில்லை. இவர் வரலாற்றில் எட்டப்பர் போல அறியப்படுவார் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  2. "நீங்க உண்மை பேசுறீங்கன்னு எங்களுக்குத் தோணுது. அதனால பிடிக்குது"

    ReplyDelete
  3. கிராமப்புறங்களிலும் மக்கள் விழிப்புணர்வோடு உள்ளனர் என்பது விளங்குகிறது.
    தங்களைப் போன்றவர்களின் பேச்சின் உண்மை அணைவரையும் ஈர்ப்பதில் வியப்பில்லை.

    ReplyDelete
  4. இரத்தினவேல்5 October 2017 at 15:05

    எல்லா ஊரும் எழுமேடானால், தமிழ்நாடு எழுச்சி பெறும்.

    ReplyDelete
  5. உங்கள் பேச்சும், எழுத்தும் வீரியம் மிக்க விதைகளைப் போன்றது. இணையதளம் அதற்கு நீர் ஊற்றுகின்றது 
    இயற்க்கையாய் விதைகள் முளைக்கின்றது, கடல்களுக்கு அப்பாலும்.

    ReplyDelete
  6. இது போல அனைத்து ஊர்களிலும் நடைபெற வேண்டும்.

    ReplyDelete
  7. மு. சந்தோஷ் குமார்5 October 2017 at 18:52

    நல்ல முயற்சி
    முயற்சி திருவினையாக்கும் ...
    தொடரட்டும் இப்பணி

    ReplyDelete
  8. iravanin oppataru karuvi manidha chamaudhayathi nalvazhipattithita
    um muyrichigal ennalum verriyadai vazhathagal

    ReplyDelete
  9. அய்யா நீங்கள் உண்மையை பேசுவது மட்டுமல்ல மேலிருந்து கீழ்நோக்கி பேசாமல் பக்கத்திலமர்ந்து பேசுகிறீர்கள்.அதுதான் கூடுதலாக வசீகரிக்கிறது.

    ReplyDelete
  10. உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் என்றென்றும் நினைவு கொள்ளும்.

    தெளிவான, தீர்க்கமான, சரியான மொழிநடையில் கருத்துக்களை எடுத்து சொல்ல உண்மைதான் அடிப்படை. அதில் தாங்கள் சிறந்து விளங்குகிறீர்கள் என்பதில் அய்யமில்லை. இதன் மூலம் தங்களுடைய முன்னோடிகளுக்கும், குருமார்களுக்கும் பெருமை சேர்க்கிறீர்கள்.

    ReplyDelete
  11. அய்யா இன்றைய சூழலில் படித்தவர்கள் கூட பெரும் மூட நம்பிக்கையில் மூழ்கித் திளைகிறார்கள்.தமிழ் நாட்டின் பகுத்தறிவின் வரலாறு என்ன என்று புரியாமல் இருக்கிறார்கள்.ஆனால் உங்கள் பேச்சுக்கு அனைவரிடமும் மதிப்பு இருக்கிறது.எனவே தாங்கள் இன்னமும் அதிகமாக செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete