தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday, 25 November 2011

டேம் 999


சில திரைப்படங்கள் வெளிவந்தபின் பரபரப்பை ஏற்படுத்தும். ஆனால் டேம் 999 என்னும் படமோ வருவதற்கு முன்பே, பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

ஆங்கிலப் படம், கேரள இயக்குனர், தமிழர்களுக்கு எதிரான சதிஇவையே டேம் 999.

வெளிநாட்டில் நடப்பதைப் போலக் கூறப்பட்டிருந்தாலும், பெரியாறு அணையைக் குறிவைத்தே காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்னும் உண்மை வெளிவந்துவிட்டது. எந்தப் பழுதும் இல்லாத பெரியாறு அணை உடைந்துவிடக் கூடும் என்னும் பீதியைக் கிளப்புவதே படத்தின் நோக்கம். பெரியாறு அணை தாண்டி, இன்னும் பள்ளத்தில் இன்னொரு புதிய அணையைக் கட்டுவது, கேரள அரசின் நோக்கம். அப்படி ஒரு புதிய அணை வந்துவிட்டால், தமிழகத்திற்கு ஒரு சொட்டு, நீரும் கிடைக்காது. கம்பம், தேனி, மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வயல்களில் இனி ஒரு நெல் மணியையும் நாம் பார்க்க முடியாது.


1815இல் வெள்ளைக்காரர்கள், அணை கட்டும் திட்டம் பற்றி முன்மொழிந்தனர். 60 ஆண்டுகளுக்குப் பிறகு அப் பணி தொடங்கியது. இடையில் 1890இல் வந்த வெள்ளம், பாதி முடிவடைந்த நிலையில் இருந்த அணைக்குப் பெரும் சேதம் உண்டாக்கியது. அதன்பின் அதற்கு நிதி ஒதுக்க அரசு முன்வரவில்லை.

அத்திட்டத்தின் பொறியாளராக நியமிக்கப்பட்டிருந்த பென்னி குக், தன் சொந்த நாடான அயர்லாந்திற்குச் சென்று, தனக்குச் சொந்தமான வீட்டையும், பண்ணை நிலத்தையும் விற்றுக் கொண்டுவந்த பணத்தில், அணையைக் கட்டி முடித்தார். கூர்ந்து பார்த்தால், பெரியாறு அணையில் இருந்து வரும் தண்ணீரின் ஒவ்வொரு துளியிலும் பென்னி குக்கின் முகம் தெரியும். அதனால்தான், நன்றியுணர்ச்சி மிகுந்த கம்பம், தேனிப் பகுதி மக்கள் பலர், தங்கள் பிள்ளைகளுக்குப் பென்னி குக் என்றே பெயர் வைத்துள்ளனர். அங்கே அவருக்குச் சிலையும் வைத்துள்ளனர்.

நம் மண் மீது எங்கோ பிறந்த ஒரு வெள்ளையருக்கு இருந்த பற்றுதல் கூட, இங்கு தேசியம், சர்வதேசியம் பேசும்  பலருக்கு இல்லாமல் போய்விட்டது.

ஒரே ஒரு ஆறுதல் !
டேம் 999 படத்தை எதிர்த்து, இங்குள்ள அனைத்துப் பெரிய, சிறிய கட்சிகளும் ஒரே அணியாக நின்றன. தமிழக அரசு அந்தப் படத்தைத் தடையும் செய்துள்ளது !

No comments:

Post a Comment