தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday 15 October 2013

தியாகுவின் பட்டினிப்போர் - நடந்தது என்ன?


                               
13.10.2013 அன்று காலை, சென்னையில் நடைபெற்ற திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைமைச் செயற்குழு முடிவடைந்த நிலையில், உறுப்பினர்கள் அனைவரும் தோழர் தியாகுவைக் காணச் சென்றோம். நான், கயல் தினகரன், மா.உமாபதி, எழில் இளங்கோவன், சிங்கராயர், சிற்பி செல்வராஜ், மாறன், குமரன் ஆகியோர் புரசவாக்கத்தை அடைந்தபோது, தியாகு சற்று கண் அயர்ந்திருந்தார். மெலிந்து போயிருந்த அவர் உடல் கண்டு நாங்கள் கலங்கினோம். ஆனாலும் அவர் உறுதியுடன் இருப்பதை அவர் கண் விழித்தபின் அறிந்தோம்.
. 
அடுத்து என்ன செய்யலாம் என்று போராட்டக் குழுவினருடன் பேசினோம். எந்த நிலையிலும் தோழர் தியாகுவை  நாம் இழந்துவிடக் கூடாது என்னும் கருத்தை எடுத்து வைத்தோம். மத்திய அரசு அசையவே இல்லையே என்ற கவலையை அவர்கள் வெளிப்படுத்தினர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று விரும்பினர். அது குறித்து அவர்கள் ஒரு மடல் தயார் செய்திருந்தனர். உடனே திரு டி.ஆர்.பாலு அவர்களைத் தொடர்பு கொண்டேன். காத்திருக்கிறேன், வாருங்கள் என்றார். அடுத்த அரை மணி நேரத்தில் அவரிடம் அந்த மடல் சேர்க்கப்பட்டது.


அதன் தொடர்ச்சியாகத் தலைவர் கலைஞரையும் சந்திக்கும் நோக்குடன், 14.10.2013 காலை, கோபாலபுரம் சென்றேன். நானும், நாடாளுமன்ற உறுப்பினர், நண் பர் டி.கே.எஸ். இளங்கோவனும் தலைவரின் மாடிக்குச் சென்றபோது, நாங்கள் கண்ட காட்சி எங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. காலை  அசைக்க முடியாத கடும் வலியுடன் தலைவர் படுக்கையில் படுத்திருந்தார். முழங்காலுக்கு மேல் சதை இறுகிப்போய் உள்ளதாகவும்,  மெதுவாக அசைத்தால் கூடக் கடுமையாக வலிக்கிறது என்றும் கூறினார்.

இந்த நிலையில் தியாகு பற்றி எப்படிக் கூறுவது என்று தயக்கமாக இருந்தது. ஆனாலும், 'நேற்று தியாகுவைப் பார்த்தேன்' என்று தொடங்கினேன். எப்படியிருக்கிறார் என்று கேட்டுவிட்டு, முழுச் செய்திகளையும் கேட்டறிந்தார். அவருக்கு சர்க்கரை இருக்கிறதா, என்ன வயது அவருக்கு என்றும் பல கேள்விகளைக்   கேட்டார்.  அவற்றுக்கு விடை சொல்லிவிட்டு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார் என்றேன்.

அந்த வலியோடு சற்றுத் திரும்பிப் பார்த்து, இளங்கோவனை அருகில் அழைத்தார். பாலுவுக்கு உடனே பேசு, அமைச்சர்களைப் பார்க்கச் சொல் என்றார். ஆனால் அப்போது டி.ஆர். பாலு, தில்லிக்கு விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்ததால் பேச இயலவில்லை. சரி, மதியம் நான் அவருடன் பேசி வேண்டியதைச் செய்கிறேன் என்றார். நன்றி கூறிவிட்டு நான் வீடு வந்தேன்.

மாலை 5 மணிக்கு, தில்லியிலிருந்து அண்ணன் டி.ஆர்.பாலு என்னிடம் தொலைபேசியில் பேசினார். "தம்பி, அமைச்சர்கள் இருவருமே (ஷிண்டே, குர்ஷித்) ஊரில் இல்லை. என்ன செய்வதென்று புரியவில்லை. தலைவரிடம் மீண்டும் பேசுகின்றேன்" என்று கூறினார். எனக்கும் புரியவில்லை. நாள் ஆக ஆக தியாகுவின் உடல்நிலை மேலும் சீர்கெடுமே என்று கவலையாய் இருந்தது.

 நான் எதிர்பார்க்கவே இல்லை. இரவு 9 மணி அளவில், நண்பர் டி.கே.எஸ். இளங்கோவனிடமிருந்து தொலைபேசி வந்தது. "சுபவீ, தலைவரின் முயற்சியால் பிரதமரிடமிருந்தே கடிதம் வந்துவிட்டது. பாலு அவர்கள் பிரதமரைச் சந்தித்துக் கடிதம் பெற்றுள்ளார்" என்றார். கடிதத்தின் சாரத்தையும் கூறினார். மகிழ்ச்சியாக இருந்தது.

 கடிதம் தியாகுவிடம் கொடுக்கப்பட்டுவிட்டது. நாளை காலை அவர் நல்ல முடிவை அறிவிக்கக்கூடும். 

 90 வயதிலும், கடுமையான உடல் துன்பத்திற்கு இடையிலும் ஒரு மனிதரால் இவ்வளவு விரைந்து செயல்பட முடியுமா என்று எண்ணிப் பார்த்தபோது வியப்பாக இருந்தது. எத்தனை பேர் தூற்றினால் என்ன, கலைஞர் என்னும் மாமனிதரைக் காலம் போற்றும். 

 அன்று தூக்குமேடையில் நின்ற தியாகுவைக்  காப்பாற்றிய கலைஞர், இன்று அதே தியாகுவை இரண்டாவது முறையாகவும் காப்பாற்றியுள்ளார்!    


12 comments:

  1. We can make sleeping people to wake up and not who pretend to. People who survive and make their lively hood by critizising Dr.Kalaignar have no choice but to keep continuing what they are doing. Even truth has to told loudly and boldly to register these facts in history. I appreciate & adore you sir for registering such events on record.

    ReplyDelete
    Replies
    1. நன்று அயயா, தோழர் தியாகுவின் உரமும் அய்யா முத்தமிழறிஞர் கலைஞரின் திறமும் போற்றுதற்குரியது.

      Delete
  2. தன் மீதான அவதூறுகளை மறந்து தமிழீழ விடுதலை மீதும், அம்மக்களின் வாழ்வுரிமை மீதும் அக்கறை கொண்டு தன் துன்பம் மறந்து தள்ளாத வயதிலும் தம்மாலான முயற்சிகளை மேற்கொள்பவர் தலைவர் கலைஞர். ஆனால் அவரை இவ்விடயத்தில் குறை கூறுபவர்கள் வெறும் வாய்ச் சொல் வீரர்களே. அவர்களுக்கு இனியும் தலைவர் கலைஞரைப் பற்றியும், அவரோடு இணைந்து பணியாற்றும் தங்களைப் போன்ற தலைவர்கள் பற்றியும் பேசிட அருகதை இல்லை என்பதை பொட்டில் அடித்தார்ப் போல் சொல்கிறது இந்தப் பதிவு...

    ReplyDelete
  3. Thanks for conveying this message Sir....

    ReplyDelete
  4. mmmm nambalaam !!

    ReplyDelete
  5. once t.r baalu met rajapakse in colombo with smiling face ...hav u seen that foto sir?if no.pls see...!thanks.........

    ReplyDelete
    Replies
    1. Mr. Anonymous. Have u seen, even Our Leader Prabhakaran had a smile face when even he met Srilankan leaders & even Indian Prime minister Rajiv Gandhi. if not please see. Sophisticated people will react in the similar way but their response will be strong to the enemies. They were not rowdy(ies) or road side guys to react in a different way. You should understand the difference between the react and respond. Having a smile is his reaction & reaching prime minister for saving
      Mr,Thiyagu is his reaction. Thanks. Please mark your name when ever you post comments. Dont hide yourself. We are against Rajabakse.... he is our enemy we stand by that and we have to...

      Delete
    2. befitting reply to The Anonymous

      Delete
  6. தோழர் தியாகுவின் முயற்சி வெல்லட்டும்

    ReplyDelete
  7. நடந்தனவற்றை உங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து சொல்ல வேண்டும் அய்யா. நன்றி.ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து தொன்னூறு வயதிலும் உழைக்கும் தலைவர் கலைஞருக்கு வணக்கங்கள். நன்றிகள்

    ReplyDelete
  8. நல்ல முயற்சி ஐயா.

    நீங்கள் கலைஞரை பற்றி கூறக் கூற , அவர் மீது மதிப்பு கூடுகிறது .

    சற்று சிந்திக்கவும் தோன்றுகிறது - "இந்த 90 வயதில் கூட ஒரு மனிதரால் எப்படி இவ்வளவு வேலைகள் செய்ய முடிகிறது? நாம் 70 வயதிலாவது இப்படி இருக்க முடியுமா?" என்று

    உங்கள் அனைவரின் முயற்சியும் முழு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!

    வாழ்க மனித நேயம்.

    ReplyDelete
  9. உரக்கச்சொல்லுங்கள்,செவிட்டுத் தமிழனுக்குகேட்க்கும்வரை தங்கள் பணி தொடரட்டும்.

    ReplyDelete