தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 30 November 2013

நதியோடும் பாதையில்...(23)

சங்கரராமனும் நீதியும்
சவப்பெட்டியில் ஒன்றாய்…!


2004ஆம் ஆண்டு, காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன், கோயில் வளாகத்திலேயே பட்டப்பகலில் வெட்டிக்கொல்லப்பட்டார். அந்த வழக்கில் 9 ஆண்டுகளுக்குப் பின், புதுவை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 27.11.2013 அன்று வழங்கப்பட்ட அத்தீர்ப்பின்படி, குற்றம் சாற்றப்பெற்ற அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, சங்கரராமன் தன்னைத் தானே அரிவாளால் பலமுறை வெட்டிக்கொண்டு, தற்கொலை செய்துகொண்டுவிட்டார் போலும் என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர்.இந்த வழக்கில் முதன்முதலாக 5 பேர் தாங்களாகவே வந்து சரண் அடைந்தனர். தில் பாண்டியன், ஆறுமுகம், சதீஷ், அருண், தேவராஜ் ஆகிய அந்த ஐவரையும் விசாரித்த அன்றைய மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் பிரேம்குமார், அவர்கள் போலிக் கொலையாளிகள் என்பதைக் கண்டுபிடித்தார். அத்துடன் நில்லாமல், ஜெயேந்திரர், விஜயேந்திரர் என்னும் இரண்டு சங்கரன்களின் தூண்டுதலில், அப்பு, ரவிசுப்பிரமணியம், கதிரவன் ஆகியோர் கூலிப்படைகளின் மூலம், சங்கரராமனைக் கொலை செய்துள்ளனர் என்று வழக்கைப் பதிவு செய்து, அதன் அடிப்படையில் 11.11.2004 அன்று, ஐதராபாத் மெஹபூப் நகரில் இருந்த சங்கராச்சாரியைக் கைது செய்தார். வழக்கு சூடு பிடித்தது. பிரேம்குமாரின் திறமையையும், துணிவையும் நாடே போற்றியது. அன்றைய ஜெயலலிதா அரசுக்கும் அதனால் ஒரு பாராட்டுக் கிடைத்தது.
அந்த மாவட்டக் கண்காணிப்பாளர் பிரேம்குமாரைதான், இன்றைய புதுவை நீதிமன்றம் கண்டித்துள்ளது. அவர் விசாரணையில் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகக் கூறிக் கண்டனம் செய்துள்ளது! (அடடா, பாண்டிய நெடுஞ்செழியனுக்குப் பிறகு, இப்போதுதான் நம் நாட்டில் நீதியின் ஆட்சி செம்மையாக நடைபெற்று வருகிறது!).
கைது செய்யப்பட்ட சங்கராச்சாரி, சிறையில் இருந்தபடி ஏராளமான ஒப்புதல் வாக்குமூலங்களை அள்ளிக் கொட்டினார். அவற்றை ஆதாரங்களுடன் நக்கீரன் வார இதழ் வெளியிட்டது.
ஆனாலும், காலப்போக்கில் வழக்கின் தன்மைகள் மாறின. கடந்த ஒன்பது ஆண்டுகளாக அந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டது. இடையில் 2010ஆம் ஆண்டு, குற்றப்பத்திரிகை தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில், கண்காணிப்பாளர் பிரேம்குமார் இறந்து போய்விட்டார்.
எல்லாவற்றையும் தாண்டி, ஒப்புதல் வாக்குமூலம் (அப்ரூவர்) அளித்த ரவி சுப்பிரமணியன் உட்படப் பலர் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட அரசு சாட்சியங்களில் 83 பேர் பிறழ் சாட்சிகளாகமாறிவிட்டனர். இதற்கிடையே, ஒரு நீதிபதியுடன், சங்கராச்சாரி பணப்பரிமாற்றம் குறித்துத் தொலைபேசியில் உரையாடல் நடத்தியதை ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. ஆனால் அது குறித்த உண்மைகள் பிறகு சட்டென்று அமிழ்ந்து போயின.
இப்போது பிறழ் சாட்சிகளின் அடிப்படையில்தான் தீர்ப்பு அமைந்துள்ளது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அவற்றுள்ளும், அரசுக்குச் சார்பாக மாறிய ஒரு பிறழ் சாட்சியை நீதிமன்றம் ஏற்கவில்லை. அரசு சாட்சிகள் சிலவற்றையும் கூட நீதிபதி ஏற்கவில்லை. அப்போது தலைமைக் காவலராக இருந்து, இப்போது சார்பு ஆய்வாளராக இருக்கும் கண்ணன் மற்றும் கதிரவன், சின்னா ஆகியோரின் சாட்சிகள், சங்கராச்சாரிக்கு எதிராக இருந்தன. அவையெல்லாம், காவல்துறையின் அச்சுறுத்தலின் விளைவுகளாக இருக்கலாம் என்று நீதிபதி கூறியுள்ளார்.
சங்கராச்சாரிக்கு ஆதரவாக மாறியுள்ள சாட்சிகள் எவரையும் நீதிமன்றம் சந்தேகப்படவில்லை. ஆசைகாட்டியோ, அச்சுறுத்தியோ அவர்கள் மாற்றப்பட்டிருக்கக் கூடும் என்னும் ஐயத்திற்கே, மேதகு நீதிபதி அவர்கள் இடமளிக்கவில்லை.
சங்கரராமனின் மகன் ஆனந்த சர்மா, நாங்கள் அச்சுறுத்தப்பட்டதால்தான் பிறழ் சாட்சியாக மாறினோம் என்றும், கொலையாளிகளை நீதிமன்றத்தில் அடையாளம் காட்ட அஞ்சினோம் என்றும் கூறுகின்றார். சங்கரராமனின் மனைவியிடம், “புருஷனை இழந்த மாதிரி, மகனையும் பலி குடுக்கணுமா?” என்று கேட்டுத் தொலைபேசியில் மிரட்டியதை ஆனந்த சர்மா ஒரு தொலைக்காட்சியில் கூறினார்.
இன்னொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், புகழ்வாய்ந்த, பெருமை மிகுந்த சங்கரமடத்தைப் பார்த்து மிரட்டினார்கள்என்று எப்படிச் சொல்லலாம் என்று நடிகர் எஸ்.வி.சேகர் கேட்க, எதிரிலிருந்த அய்யநாதன் என்பவர், “தவறுதலாகச் சொல்லிவிட்டதாகவும், செல்வாக்குச் செலுத்தியுள்ளனர் என்று சொல்ல வந்து, மிரட்டினர் என்று சொல்லிவிட்டதாகவும் கூறிப் பதுங்கினார்.
ஏன்...சங்கர மடத்திற்கு மிரட்டல் பழக்கமில்லாத ஒன்றா? மாலி என்பவர் நடத்திய நாடகத்தின் இறுதிக்காட்சியில், தாழ்த்தப்பட்ட ஒருவர் சங்கராச்சாரியாக ஆக்கப்படுவதை இதே எஸ்.வி.சேகர் மூலம் கேள்விப்பட்டு, அந்த மாலியைச் சங்கரமடம் மிரட்டியதாக மாலியே குறிப்பிட்டுள்ளார். இவ்வளவுக்கும் அந்த மாலியும் பார்ப்பனர்தான்.
இப்போதிருக்கிற சங்கராச்சாரி, மடத்தின் மரபுகளை மதித்தவருமில்லை. கையில் உள்ள தண்டத்தைக் கீழே வைத்துவிட்டு, சங்கராச்சாரிகள் மடத்திற்கு வெளியிலேயே வரக்கூடாது என்பது மரபு. ஆனால் இவரோ, தண்டத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு, யாரிடமும் சொல்லாமல், மடத்தை விட்டே போய்விட்டார். அவரைத் தேடிக் கண்டுபிடிப்பதே பெரும்பாடாகிவிட்டது. குடியரசுத் தலைவராக இருந்த வெங்கட்ராமன், தன் வேலைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு, ஓடிப்போனவரைத் தேடிப்பிடிப்பதிலேயே குறியாக இருந்தார். இறுதியில் நேபாளத்தில், கங்கைக் கரையோரம், ஒரு பெண்ணுடன் அவர் இருப்பதைக் கண்டறிந்தார்கள். அனைத்துச் சங்கரமட மரபுகளையும் மீறி, மீண்டும் அவர் சங்கர மட அதிபராக ஆக்கப்பட்டார்.
புகழ்பெற்ற தமிழ்ச் சிறுகதை, நாவல் எழுத்தாளர் அனுராதா ரமணன், தன்னிடம் அவர் எவ்வாறு தவறாக நடக்க முயன்றார் என்பதை ஓர் இதழிலேயே வெளிப்படையாக எழுதியிருந்தார்.
எனவே, இந்தப் பின்புலங்களையெல்லாம் கூட, நீதிமன்றம் கணக்கில் கொண்டதா என்று தெரியவில்லை. பிறழ் சாட்சியங்களை மீறியும் பல உண்மையான தீர்ப்புகள் இதற்கு முன்னால் வழங்கப்பட்டுள்ளன. பிரேமானந்தா வழக்கிலும், ஏராளமான பிறழ் சாட்சியங்கள் இருந்தன. ஆனால் அவ்வழக்கின் நீதிபதி பானுமதி அவற்றைக் கணக்கில் கொள்ள மறுத்து, அவருக்குத் தண்டனை வழங்கினார்.
கொலைக்கான நோக்கம் தெளிவாக இல்லை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதுவும் ஏற்கத்தக்கதாக இல்லை.
2001ஆம் ஆண்டிலிருந்தே, கொலையுண்ட சங்கரராமனுக்கும், சங்கராச்சாரிக்குமிடையே மோதல்கள் இருந்துள்ளன. கடல் தாண்டிச் சங்கராச்சாரிகள் போகக்கூடாது என்னும் மரபை மீறி, சீனாவிற்குச் செல்ல முயன்றார். அதனைச் சங்கரராமன் கடுமையாக எதிர்த்தார். சங்கரமடத்திற்குள் பெண்கள் நடமாட்டம் கூடுதலாக ஆவதையும் அவர் எதிர்த்தார். இவைபோன்ற அவரின் போக்குகள், சங்கராச்சாரியிடம் கடும் சினத்தை உருவாக்கின. இந்த மனிதன் தன் சொந்த சுகங்களுக்கெல்லாம்தடையாய்க் குறுக்கே நிற்கிறானே என்று அவர் மனம் எண்ணியிருக்கலாம்.
இவ்வழக்கில் தமிழக அரசு மேல்முறையீட்டிற்குச் செல்லுமா, அங்காவது சங்கரராமனைக் கொன்றவர்கள் கண்டறியப்பட்டுத் தண்டிக்கப்படுவார்களா என்பனவெல்லாம் கேள்விக்குறிகளாகவே உள்ளன.

(சனிக்கிழமைதோறும் சந்திப்போம்)

5 comments:

 1. தாங்கள் சொல்வதுபோல்,சங்கரராமன் தன்னைத் தானே அரிவாளால் பலமுறை வெட்டிக்கொண்டு, தற்கொலை செய்துகொண்டுவிட்டார் போலும்

  ReplyDelete
 2. Mr.Su Ba Vee you can cheat few people for few times and few more people for few more times but not all people at all times!, this great SP Premkumar [SC] was suspended during your great leader Kalaignar M.Karunanithi for mishandling [this case] and all witness turned hostile during the same your great leader and all arrest were carried out during Jayalalitha regimen [as a vengeance for some issues / deals with him] even when she took over in 2011 she asked for change of judge by exposing phone deal for his favour, If you are honest man publish this and post your reply.

  ReplyDelete
  Replies
  1. I don't find your reply sir (for all active things were done as vengeance by Jayalalitha with the help of a Dalit SP and all exit routes were opened by Dr.Kalaignar including many turned hostile witnesses, suspending SP for his over enthusiastic dealings in a fraud way in this case and subsequent death of SP [? due to mental agony of suspension] )

   Delete