தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 7 December 2013

நதியோடும் பாதையில்...(24)

பாலியல் சிக்கலும்
பண்பாட்டுக் காவலர்களும்

தம்மிடம் பணியாற்றுகின்ற, தம்மிடம் பயில்கின்ற, அக்கம் பக்கத்தில் வசிக்கின்ற பெண்களுக்குப் பாலியல் தொல்லைகள் கொடுப்பதாகப் பலர் மீதும் இன்று வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளி ஆசிரியர், பத்திரிகை ஆசிரியர் தொடங்கி, உச்சநீதி மன்ற நீதிபதி வரையில் இக்குற்றச்சாட்டு தொடர்கிறது-. அண்மையில் இவை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் புகழ்பெற்ற இருவரில் ஒருவர் தெஹல்கா புலனாய்வு இதழின் ஆசிரியர் தருண் தேஜ்பால், இன்னொருவர் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி.
நீதிபதி கங்குலியை இந்திய மக்கள், குறிப்பாகத் தமிழர்கள் அவ்வளவு விரைவில் மறந்துபோயிருக்க முடியாது. இருப்பினும் அவர் குறித்த சில செய்திகளை இப்போது நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது-.

2009 இறுதியில் தொடங்கி, இந்தியா முழுவதும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு வீசியடித்த புயல் ‘2ஜி அலைக்கற்றை’ வழக்கு. தலைமைக் கணக்காயர்(சி.ஏ.ஜி) அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அந்தப் புயல் வீசியது. அந்த அறிக்கையில், அலைக்கற்றைகளை ஏலம் விடாமல், நிறுவனங்களுக்குக் கொடுத்ததால் எவ்வளவு கோடி ரூபாய் அரசுக்கு நட்டம் என்னும் கணக்கு மட்டுமே சொல்லப்பட்டிருந்தது. லஞ்சம், ஊழல், கையூட்டு போன்ற எந்தச் சொல்லும் அந்த அறிக்கையில் இடம்பெறவில்லை. இந்திய அரசியல் வரலாற்றில் அந்த அறிக்கைதான் முதல் அறிக்கை என்றோ, முடிவான அறிக்கை என்றோ கூறமுடியாது. அதுபோல, அதற்கு முன்பும் பின்பும் பல அறிக்கைகள் வெளிவந்துள்ளன. பல நட்டக் கணக்குகள் காட்டப்பட்டும் உள்ளன.
இந்திரா காந்தியின் காலத்தில், ‘இந்தியக் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம்’ (Indian Rural Development Programme) என்னும் திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பசு மாடு வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அந்தத் திட்டத்தில் பல ஊழல்கள் நடந்ததாகப் பிறகு கூறப்பட்டது. ஒரே பசுமாட்டைப் பத்துக் குடும்பங்களுக்குக் கொடுத்துள்ளதாகக் கணக்குக் காட்டியுள்ளனர் என்று தலைமைக் கணக்காயர் அறிக்கை கூறியது. அதனால் அரசுக்கு ஏறத்தாழ 600 கோடி ரூபாய் நட்டம் என்னும் கணக்கையும் கொடுத்தது. உடனே அது குறித்து விவாதிக்கப்பட்டு அத்திட்டம் கைவிடப்பட்டது. அதனையொட்டி யார் மீதும் எந்தக் குற்றவியல் சட்டத்தின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை.
இப்படிப் பல்வேறு தருணங்களில் அந்த அறிக்கைகளை ஆராய்ந்து, திட்டங்களைத் தொடர்வதா, கைவிடுவதா என்பது முடிவாகியுள்ளது. சில நேரங்களில் நட்டத்தைத் தாண்டியும், மக்கள் நன்மை கருதித் திட்டத்தைத் தொடரவேண்டி வரும். மக்கள் நலத் திட்டங்கள் பலவும் அரசுக்கு நட்டத்தைத்தான் கொண்டு வரும் என்பது வெளிப்படையான செய்தி. அதற்காக லாப நட்டக் கணக்குகளை மட்டுமே ஓர் அரசு பார்த்துக் கொண்டிருக்க முடியாது. விலையில்லா அரிசி, விலையில்லா மிக்சி & கிரைண்டர், விலையில்லா மடிக்கணிணி அனைத்துமே அரசுக்கு நட்டச் செலவுதான் என்பதைக் கண்டுபிடிக்க ஒரு பெரிய கணக்காயர் தேவையில்லை. பொதுமக்களுக்கே அது நன்றாகத் தெரியும். ஆனாலும் அத்திட்டங்கள் தொடரவே செய்யும்.

அலைக்கற்றை வழக்கில் மட்டும்தான், அது ‘பூதாகரமாக’ ஆக்கப்பட்டது. அந்த வழக்கை நடத்திய உச்சநீதிமன்ற நீதிபதிகளிலே ஒருவர் மிகக் கடுமையாகக் கோபப்பட்டார். நீதிமன்றத்தில் அமர்ந்தபடி, ‘எனக்குத் தலையே சுற்றுகிறது, இவ்வளவு பெரிய ஊழல் வழக்கா?’ என்று கேட்டார்-. அதுமட்டுமின்றி, அந்த அமைச்சர் இன்னும் பதவியிலா இருக்கிறார் என்றும் கேட்டுச் சினம் கொண்டார். தன்னால் ஒரு சிறு ஒழுங்கீனத்தைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதுபோலச் சீறிச்சினந்தார். அதன் விளைவாகவே அன்று ஆ. இராசா தன் அமைச்சர் பொறுப்பிலிருந்து விலக நேர்ந்தது.
ஒரு சிறு ஒழுங்கீனத்தைக் கூடப் பொறுத்துக்கொள்ளவே முடியாத, அந்த நீதிபதியின் பெயர் கங்குலி. அவர்தான் இப்போது பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறார். இப்போது மேற்கு வங்கத்தின் மனித உரிமை ஆணையத் தலைவராக இருக்கும் அவர், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்காகப் பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்று அறிவித்து விட்டார். நம் காலத்தில் நாம் நேரில் கண்ட பண்பாட்டுப் பாதுகாவலர்களில் அவரும் ஒருவர்.
இதனைத் தாண்டி வேறு சில பாலியல் தொடர்பான பண்பாட்டுச் சிக்கல்களும், அதனைப் பொறுக்க முடியாத பண்பாட்டுக் காவலர்களும் இப்போது தோன்றியுள்ளனர்.


கனடாவைச் சேர்ந்த சன்னி லியோன் என்னும் நடிகை, தமிழ்ப் படம் ஒன்றில், ஒரு நடனக் காட்சியில் நடிக்க இருக்கிறாராம். அதனைக் கண்டித்தும், ஒரு நாளும் அதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கொதித்தெழுந்திருக்கிறார்-. என்ன காரணம்? அந்த நடிகை வெளிநாட்டில் தயாரிக்கப்படும் நீலப்படங்களில் நடித்துள்ளாராம். அதனால் அவர் இங்கு ஒரு நடனக் காட்சியில் இடம் பெற்றால், தமிழ்ப் பண்பாடு கெட்டுச் சீரழிந்து விடுமே என்று அர்ஜுன் கவலைப்படுகிறார்.


சன்னி லியோன் இந்தியத் திரைப்படங்களுக்குப் புதியவரில்லை. ஏற்கனவே இந்திப் படங்களில் நடித்துள்ளார், இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார்-. பாரதப் பண்பாடு பற்றி எப்போதும் பேசக்கூடிய இந்து மக்கள் கட்சி, இப்போது அதனை அப்படியே கைகழுவிவிட்டு, தமிழ்ப்பண்பாட்டை நோக்கி மட்டுமே தன்னுடைய கவனத்தைத் திருப்பியுள்ளது. இந்திப்படங்களில் சன்னி லியோன் நடித்த போது, ஏன் இந்து மக்கள் கட்சி அதனை எதிர்க்கவில்லை, தடுக்கவில்லை?
இந்து மக்கள் கட்சி முன்வைக்கும் இந்த நிபந்தனைகள் எல்லாம் பெண்களுக்கு மட்டும்தானா இல்லை ஆண்களுக்கும் பொருந்துமா என்று கேட்டு அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஊரறிய உலகறிய இரண்டாவது திருமணம் செய்துகொண்ட என்.டி.ராமாராவ், திரைப்படங்களில் ராமராக நடிக்கலாம் என்றால், நயன்தாரா சீதையாக நடிக்கும்போது மட்டும் எதிர்ப்புக் காட்டியது ஏன்? இன்று நாம் திரைப்படங்களில் பார்க்கும் அனைத்து ஆபாசக்காட்சிகளும் தணிக்கை செய்யப்பட்டுத்தானே வெளியே வருகின்றன. அவற்றை எல்லாம் அனுமதித்த தணிக்கைக் குழுவினரை என்ன செய்வது?.
நீலப்படங்களில் நடிப்பதையும், அவற்றைத் தயாரிப்பதையும் நாம் சரியானது என்று கூறவில்லை. அந்தந்த நாட்டுச் சட்டங்களை ஒட்டி அவை தடுக்கப்படுகின்றன அல்லது அனுமதிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அவை தடை செய்யப்பட்டுள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் ஏராளமாகப் புழக்கத்தில் உள்ளன என்பதை மறுக்க முடியுமா? சென்னை போன்ற மாநகரங்களில் உள்ள சில திரையரங்குகளிலேயே அவை இடையிடையேயும், இடைவேளைகளிலும் வெளியிடப்படுகின்றன என்பது காவல்துறை உள்ளிட்ட அனைவரும் அறிந்த ரகசியம்தானே! அரசியலில் இன்று மோடியை ஆதரிக்கும் இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் தமிழ்ப் படங்களில் ஆடியுள்ள ஆட்டங்களும், வெளிப்படுத்தியுள்ள அங்க அசைவுகளும் ஆபாசமே இல்லை என்று கருதுகிறாரா அர்ஜுன் சம்பத்? அவற்றை எல்லாம் ஏன் எதிர்க்கவில்லை?
திரைப்படங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும், கோயில் திருவிழாக்களில் நடைபெறும் ‘இரவு நேர நடனங்கள்’ பல எப்படி உள்ளன என்பது, இந்து மக்கள் கட்சிக்கும், அதன் தலைவருக்கும் தெரியாதா?
இப்படிக் குற்றங்கள் மலிந்து போயிருக்கிற ஒரு சமூகத்தில், அவைகளை எல்லாம் தடுப்பதற்கும் திருத்துவதற்குமான விழிப்புணர்வை ஏற்படுத்தாமல், ஒரே ஒரு நடிகையின் நடனத்தைத் தடுத்து விடுவதால் நாட்டில் எல்லாம் சரியாகிவிடும் என்பதுபோலக் கூறுவது எவ்வளவு பெரிய போலித்தனம்!
பாலியல் தொடர்பான இன்னொரு பெரிய விவாதமும் இன்று நாட்டில் எழுந்துள்ளது. திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழலாம் என்று நீதிமன்றமே அனுமதி கொடுத்திருக்கிறது-. இதனால் நம் பண்பாடு கெட்டுப்போய்விடும் என்று பலரும் பதறிப்போய் உள்ளனர். திருமணம் செய்துகொள்வதும், அந்நிகழ்வு இல்லாமலே சேர்ந்து வாழ்வதும், அவரவர் விருப்பம்தான். பழைய சங்க இலக்கியங்களில் கூட, களவுக் காலத்தில் & அதாவது திருமணத்திற்கு முந்தைய காதல் பருவத்தில் & மெய்யுறு புணர்ச்சி என்னும் உடல் உறவு நிகழ்ந்திருப்பதைக் காண முடிகிறது. அப்படியானால் அந்தப் பழந்தமிழ்ப் பண்பாட்டிற்கு என்ன பெயர்? நம்பிக்கையின் அடிப்படையில் சேர்தல், சேர்ந்து வாழ்தல் என்பதுதானே அதன் பொருள்.
இவை குறித்தெல்லாம் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றங்கள் தேவைப்படுகின்றன. பண்பாடு என்பதும், காலம் தோறும் மாறக்கூடியதுதான். அதனை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். இப்படிப்பட்ட கருத்துகளை முன்வைப்பதற்காக, நீதிபதி கங்குலி தொடங்கி, அர்ஜுன் சம்பத் வரையிலான பண்பாட்டுப் பாதுகாவலர்கள் நம்மை மன்னிப்பார்களாக!

 (சனிக்கிழமைதோறும் சந்திப்போம்)

2 comments:

  1. நீதியை நிலைநாட்ட வேண்டிய நீதிபதியே இப்படி என்றால்,

    ReplyDelete
  2. ஒரு தவறால்(நீதிபதி கங்குலி) இன்னொரு தவற்றை(ராசா) நியாயப்படுத்த முடியது என்ற அடிப்படையை உணர்வில்லாமல் எழுதுகீறீர்களே! இந்தியத்தண்டனைச்சடடத்தில் உள்ள ஓட்டைகளைப்பயன்படுத்தி மற்றும் நிதிபதிக்கு பணம் கொடுத்து ஜெயா,ராசா,கனி,அழகிரி,கலைஞர் டிவி அனைத்தும் 90% வெளியே வந்து விடும்! (பார்ப்போம் 10%வது கம்பி எண்ணுவார்களா என்று!) அவர்களோடு சேர்ந்து நீதிபதி கங்குலியும் கம்பி எண்ணிணால் எனக்கு இரட்டை மகிழ்ச்சியே!

    ReplyDelete