தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 8 February 2014

நதியோடும் பாதையில்...(32)

சங்கப் பாடல்களில்
நடத்தை உளவியல்

(செம்மொழித் தமிழாய்வு மைய உதவியுடன், 04.02.2014  அன்று, திருநெல்வேலி, ம.தி.தா. இந்துக் கல்லூரியில் நடைபெற்ற நடத்தை உளவியல் ற்றிய பத்துநாள் கருத்தரங்கின் தொடக்க விழாவில் ஆற்றிய சிறப்புரையின் ஒரு பகுதி)


நடத்தை உளவியல் என்பதை ஆங்கிலத்தில் Behaviour Psychology என்று கூறுகின்றனர். தமிழில் நாம் சுருக்கமாக நடத்தையியல்எனக் கூறலாம். இது குறித்துப் பல்வேறு ஆய்வுகள் வெளிவந்துள்ளன. உலக இலக்கியங்கள் ஒவ்வொன்றோடும், நடத்தையியல் என்பதைப் பொருத்திப் பார்க்கும் முயற்சிகள் நடைபெற்றுள்ளன. இலக்கியமும், உளவியலும் மிக நெருக்கமான தொடர்புடையன என்பதை நாம் அறிவோம்!

John B.Watson

1913ஆம் ஆண்டு, அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில், நடத்தையியல் குறித்து, ஜான் வாட்சன் தன் ஆய்வினை வெளிப்படுத்தினார். அதற்கு நடத்தையியல் அறிக்கை’ (Behaviour Manifesto) என்று பெயரிட்டார். பொதுவுடைமைக் கட்சி அறிக்கை, பார்ப்பனர் அல்லாதோர் அறிக்கை என்பன போல, நடத்தையியல் அறிக்கையை அன்று அவர் முன்வைத்தார்.
சங்க இலக்கியங்களில், அத்தகைய நடத்தையியல் பார்வையை நம்மால் செலுத்த முடியும். அதற்கு முன், சங்க கால சமூக அமைப்பு நிலை எவ்வாறிருந்தது என்பதை நாம் எண்ணிப் பார்க்கலாம். ஒரு தனிமனிதனின் நடத்தையியலை, அவன் வாழும் சமூகமே தீர்மானிக்கிறது. நம் அகச்சூழலை வடிவமைப்பதில், புறச்சூழலுக்கு என்றுமே ஒரு பெரிய பங்கு உள்ளது.
சங்ககாலம் என்பது குறித்துப் பேராசிரியர் தொ.பரமசிவன், மிகச் சுருக்கமாகவும், செறிவாகவும் விளக்குவார். இனக்குழுக்கள் கரைந்து, பாண்(பாணர்) நாகரிகம் வீழ்ச்சியடைந்து, அரசுகள் தோன்றத் தொடங்கிய காலமே, சங்க காலம்என்பது அவருடைய பார்வை. அப்பார்வை சரியானதென்றே நானும் கருதுகிறேன்.
சங்ககாலம் என்பது நெடியது. நூற்றாண்டுகளைத் தன்னுள் அடக்கியது. சங்க இலக்கியங்களான எட்டுத் தொகை, பத்துப்பாட்டு எழுதப்பட்ட காலமும், அவை தொகுக்கப்பட்ட காலமும் வேறு வேறானவை. கி.பி.5 அல்லது 6ஆம் நூற்றாண்டு வரை அக்காலம் நீள்வதாகவும், பரிபாடல் போன்ற இலக்கியம், காலத்தால் மிகவும் பிந்தியது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எனவே அக்காலப் பரப்பில், பல்வேறு சமூகப் பண்பாட்டு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். அதனையொட்டி நடத்தையியலிலும் மாற்றங்கள் உருவாகியிருக்கும். அவை சங்க இலக்கியத்திலும் பதிவாகியிருக்கும் என்ற எண்ணத்துடன் நாம் நம் தேடலைத் தொடங்கலாம்.
முதலில், அகம், புறம் என்ற பிரிவே, பழந்தமிழ்ச் சமூகத்தின் பொதுவான உளவியலை நமக்குக்  காட்டுகின்றது. ஆங்கில இலக்கியங்கள், தன்னுணர்ச்சிப் பாடல்கள் (Subjective), பொதுவுணர்ச்சிப் பாடல்கள் (Objective) என்றுதான் பகுக்கப்பட்டுள்ளன. ஆனால் நாமோ, தன்னுணர்ச்சியில் கூட, காதலை மட்டும் தனியே பிரித்தெடுத்துவிட்டு, பிறவற்றையெல்லாம் புறம் என்று கூறிவிட்டோம். அந்தி சாய்ந்தால் அகநானூறு, பொழுது விடிந்தால் புறநானூறுஎன்று உணர்ச்சிவயப்பட்ட ஒரு சூழல் நம்மிடம் இருந்துள்ளது-. அகம், புறம் என்பனவற்றிற்கான விளக்கத்தை, அறிஞர் அண்ணா அவர்கள் ஒற்றைச்சொல்லில் எளிமையாக விளக்குவார். அகம் என்றால் உணர்தல், புறம் என்றால் பகிர்தல்என்பார் அவர்.
இஃதோர் அருமையான விளக்கம். இனிமேல் எது அகம் என்று கேட்டால், நாம் தயங்க வேண்டியதில்லை. எவற்றையெல்லாம் நாம் பிறரோடு பகிர்ந்து கொள்ள முடியாதோ, அவற்றையெல்லாம் அகம் என்று எளிதில் கூறிவிடலாம்.
எனினும் இது குறித்த நடத்தையியல் விளக்கத்தை அறிய, புதுவையில் உள்ள பேராசிரியர் நலங்கிள்ளியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவரை நான் இன்றுவரை சந்தித்ததில்லையென்றாலும், அவர் இத்துறையில் ஈடுபாடும், ஆய்வு நோக்கும் உடையவர் என்பதைப் பேராசிரியர் மாதையன் மூலமாக அறிந்து, தொடர்பு கொண்டேன்.
தொடக்கத்திலேயே அவர், “நான் சொல்லிவரும் செய்தி, உங்களுக்கு அதிர்ச்சியைத் தரலாம். ஆனாலும் இதுவே என் பார்வைஎன்றார். நம் அனைவருக்கும் நனவு மனம், நனவிலி மனம் அல்லது உள்மனம் என இருவகை மனங்கள் உண்டு. நாம் குழந்தைகளாக இருக்கும்போது, நமக்குப் பாலூட்டித் தாலாட்டி வளர்க்கின்ற தாயின் மீது பேரன்பு கொள்கின்றோம். தாய் என்பவள் முழுமையாக நமக்குத்தான் என்று கருதுகிறோம். அதனால் தந்தை என்பவர் அடிக்கடிக் குறுக்கிட்டுத், தாயின் அன்பைப் பகிர்ந்து கொள்வது, நம்மை எரிச்சலடைய வைக்கின்றது. அதனால், குழந்தைகளின் நனவு மனத்தில், “ தாய்க் காதலும், தந்தைப் பகையும்உருவாகின்றது. எனினும், வளர வளர உலக உண்மைகள் புரிகின்றன. காதலும், பகையு-ம் மனத்தைவிட்டு அகல்கின்றன. ஆனால் அவை ஒரேயடியாக மறைந்து விடுவதில்லை. உள்மனத்தில் சென்று தங்கி விடுகின்றன. அந்த உள்மனத் தாக்கமே, உலகில் உள்ள அனைத்தையும், அகம் என்றும், புறம் என்றும் பிரித்துப் பார்க்கச் சொல்கிறது என்று உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டின் கருத்தைச் சங்க இலக்கியத்தோடு பொருத்தி, முனைவர் நலங்கிள்ளி கூறுகின்றார்.
இதனை முடிந்த முடிவாக அல்லாமல், உங்களின் சிந்தனைக்கு முன்வைக்கின்றேன்.

Sophocles

சிக்மண்ட் பிராய்டு கூறும், தாயின் மீதே காதல் கொள்ளும் ஈடிபஸ் சிக்கலைஇதனுடன் நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஏசுவுக்கு 500 ஆண்டுகளுக்கு முன் பிறந்தசோபாகிளிஸ் என்னும் கிரேக்க எழுத்தாளரின் உருவாக்கமே ஈடிபஸ். அவன் குழந்தையாய் இருக்கும்போது, தீய சகுனங்களுக்காக அஞ்சி காட்டில் விடப்பட்டவன். அதனால் அரசி ஜோகாஸ்டா தன் தாய் என்று அறியாமல் அவளைக் காதலிக்கிறாள். அவளும் இணங்குகிறாள். இருவரும் சேர்ந்து வாழ்கின்றனர். பிறகு உண்மை தெரிந்ததும், இருவரும் தங்களைத் தாங்களே தண்டித்துக் கொள்கின்றனர்.
இந்த ஈடிபஸ் சிக்கல்’ (Oedipus Complex) சங்க இலக்கியத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும், தமிழில் இல்லவே இல்லை என்று கூறிவிட முடியாது. 14ஆம் நூற்றாண்டில் பெரும்பற்றப் புலியூர் நம்பியும், 17ஆம் நூற்றாண்டில் பரஞ்சோதி முனிவரும் எழுதியுள்ள இரண்டு திருவிளையாடல் புராணங்களிலும்இந்தச் சிக்கலைக் காணமுடிகிறது. 12ஆவது இயலான மகாபாவம் தீர்த்த படலத்தில்இதனை நாம் எதிர்கொள்கின்றோம்.
குலோத்துங்க பாண்டியன் காலத்தில், அவந்தி என்னும் ஊரில், ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்த இளைஞன் ஒருவன் தான் தாயை விரும்பியதாகவும், தாயும் அதற்கு இணங்கியதாகவும், கண்டித்த தந்தையை மகன் வெட்டிக் கொன்றதாகவும் திருவிளையாடல் புராணம் கூறுகின்றது. கிரேக்கக் காப்பியத்தில் அவர்கள் தங்களைத் தாங்களே தண்டித்துக் கொண்டனர். திருவிளையாடல் புராணத்திலோ, மரபு மீறியவர்கள், பார்ப்பனர்கள் என்பதால், அவர்களுக்குச் சிவபெருமான் அருள் பாலித்துவிடுகிறார்.
இவற்றைத் தாண்டி, சங்க இலக்கியங்களில் காணப்படும் சில நடத்தையியல் செய்திகளை நாம் காணலாம். பல்வேறு நடத்தை உளவியல் கூறுகளைச் சுட்ட இயலும் என்றாலும், காலம் கருதி ஒரு சிலவற்றை மட்டும் நாம் இங்கு பார்க்கலாம்.
முதலில், பெண்களைப் பற்றிய உளவியல் என்னவாக இருந்துள்ளது என்பதை நோக்குவோம். சங்க காலத்தில், முப்பதுக்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் இருந்துள்ளனர் என்றபோதும், முழுமையான ஆண் - பெண் சமத்துவம் நிலவியிருக்கும் என்று கூற முடியவில்லை.
மனையுறை மகளிர்என்றுதான் பெண்கள் சுட்டப்படுகின்றனர். கடல் கடந்து செல்லும் வழக்கம் பெண்களோடு இல்லை என்பதே மரபாக இருந்துள்ளது. அச்சம், நாணம், மடம் ஆகியன பெண்களுக்கே உரியவை என்று கருதப்பட்டுள்ளது-.
அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற்கு உரிய
என்கிறது தொல்காப்பியம். பொருளதிகாரம், களவியலில் இவ்வரிகள் இடம் பெற்றுள்ளன என்று நினைவு.
புறநானூற்றில் ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்கும்போது, புலவர் பொத்தியார் தானும் உடனிருந்து உயிர்விடுகின்றேன் என்கிறார். அது கேட்ட மன்னன், “கருவுற்றிருக்கும் உன் மனைவி, ஆண் மகவு ஈன்றால், அதன் பின் வாஎன்கிறார். ஆண்தான் வாரிசு, ஆண் குழந்தையே குடும்பத்தைக் காப்பாற்றும் என்ற எண்ணங்களின், உளப்பாங்கின் வெளிப்பாடாகவே இதனைப் பார்க்கின்றேன்.
பூதப்பாண்டியனின் மனைவி, அரசி பெருங்கோப்பெண்டுவின், “பல்சான்றீரே, பல்சான்றீரேஎன்று தொடங்கும் புறப்பாடல், பெண்கள் உடன்கட்டை ஏறும் - இல்லை, ஏற்றப்படும் மரபு அன்றிருந்ததைக் காட்டுவதோடு, கைம்பெண்கள் எத்தனை கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர் என்னும் அவலநிலையையும் எடுத்துக் காட்டுகிறது.
இவ்வாறு ஆண் - பெண் உறவில் அன்றிருந்த, ஏற்றத் தாழ்வுகளை, சங்க இலக்கியத்தின் மூலம் நாம் அறிகின்றோம். பெண்ணைக் காட்டிலும், ஆணே உயர்ந்தவன் என்று கருதிய சங்ககால நடத்தை உளவியலாக இச்செய்திகள் அனைத்தும் நமக்குக் கிடைக்கின்றன.
எட்டுத் தொகை, பத்துப்பாட்டின் மூலம் பழந்தமிழர் உணவுப் பழக்கங்களை நாம் அறிகின்றோம். அவையும் கூட, அன்றைய நடத்தையியலுக்குச் சான்று பகிர்கின்றன.
புலால் உண்ணலும், மதுவருந்தலும் அன்று மிக இயல்பானவையாக இருந்துள்ளன. வேற்றுமை காணும் நாற்பால்அன்றே இருந்ததை அறிய முடிகிறது என்றாலும், அவ்வேறுபாடு, உணவுப் பழக்கத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. அந்தணர்என்று கூறப்படும் கபிலர் முதல் கடைக்கோடி மனிதன் வரை, மது அருந்தியும், புலால் உண்டும் மகிழ்ந்துள்ளனர். ஆண் - பெண் வேறுபாடு கூட, அல்லாமல் அனைவரிடமும் அவ்விரு பழக்கங்களும் இருந்துள்ளன. கடையெழு வள்ளல்களுள் ஒருவரான அதியமான் நெடுமான் அஞ்சி இறந்து போனபோது,
சிறிய கள் பெறினே எமக்கீயும் மன்னே
பெரிய கள் பெறினே யாம்பாடத் தாம்மகிழ்ந்து
உண்ணும் மன்னே
என்று பாடி அரற்றுகிறார் ஔவை. அப்பாடல், அவர்கள் இருவரும் சேர்ந்து கள் அருந்தியுள்ளனர் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. எனவே, கள்ளும், புலாலும் ஏற்கத் தகாதன என்றோ, விலக்கப்பட வேண்டியவை என்றோ கருதும் உளவியல் அன்று இல்லாமல் இருந்துள்ளது-.
எனினும், சமண, பௌத்த மதங்களின் வருகைக்குப் பின்னர், நடத்தையியல் மாற்றங்களை நம்மால் காண முடிகிறது-. குறிப்பாக, ‘அஹிம்சை பரமோத் தர்மாஎன்று கூறும் சமணமே, கடுந்துறவு, புலால் ம-றுப்பு, கள் உண்ணாமை ஆகிய கோட்பாடுகள் தமிழகத்தில் இடம்பெறக் காரணமாகின்றது.
சமண, பௌத்த மதங்கள் தமிழகத்தில் பரவும் முன்னரே, சாருவாகம், ஆசிவகம் போன்ற அவைதீக மதங்கள் இருந்துள்ளன. எனினும் சமண மதம்தான், புலால் மறுப்பை மிக அழுத்தமாக இங்கு பதிய வைத்துள்ளது.
வேடிக்கையைப் பார்த்தீர்களா, இங்கே சமணம்தான் சைவத்தைக் கொண்டு வந்துள்ளது. சைவம்என்னும் பெயர், மதத்தைத் தாண்டி, மரக்கறி உண்ணும் பழக்கத்தைக் குறிக்கும் சொல்லாகவும் இங்கு பயன்படுவதால், சமணம்தான் சைவத்திற்கு முன்னோடி என்று குறிப்பிடுகின்றேன். சமணம் வலியுறுத்திய புலால் மறுப்பைத்தான், பிற்காலத்தில், சமணத்தை வீழ்த்த, ஆதி சங்கரர் தன் கைகளில் எடுத்துக் கொண்டார். அதற்குப் பிறகுதான், மரக்கறி உண்போர் உயர் குடியினர் என்னும் மாயை இங்-கு கற்பிக்கப்பட்டது.
சங்க இலக்கியத்திலும், மரக்கறி உண்ணும் பழக்கமுடையவர்களை நம்மால் பார்க்க முடிகிறது. பெரும்பாணாற்றுப்படை நூலில், அப்படிப்பட்ட சில செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. தங்களை உயர்குடியினர் என்று கருதிக் கொண்ட பார்ப்பனர்களும், வேளாளர்களும், அப்பழக்கம் உடையவர்களாக இருந்துள்ளனர். அந்நூலில்,
மறைகாப் பாளர் உறைபதி சேப்பின்என்று தொடங்கி, அடுத்துவரும் ஏழெட்டு வரிகள், பார்ப்பனச் சேரியில் என்னென்ன உணவு வகைகள் கிடைக்கும் என்பதைப் கூறுகின்றன. பருப்புச் சோறு, பால்சோறு, நெல்சோறு ஆகியனவும், மாதுளம் பிஞ்சைப் பிளந்து, மிளகுப்பொடி தூவி, பசு வெண்ணெய்யில் வேகவைத்த பொரியலும், வடுமாங்காயும் அங்கே கிடைக்கும் என்கிறது, பெரும்பாணாற்றுப்படை.
உழைக்கும் மக்களின் வீடுகளில், மான்கறி, முயல்கறி, நண்டு விரவிய சோறு என்று பல்வகைப் புலால் உணவுகள் (பொருநராற்றுப்படை) சுவையானவையாக உள்ளன என்றால், பார்ப்பனர் வீட்டு மாதுளம் காய்ப் பொரியலும், பால், நெய், பருப்புச் சோறுகளும் இன்னொரு விதத்தில் சுவைமிக்கனவாகவே உள்ளன.
வேளாளர் வீட்டு உணவைப் பற்றிப் பேசும் அதே நூல்,
தண்டலை உழவர் தனிமனைச் சேப்பின்என்னும் வரியில் தொடங்கி, அரிய செய்திகள் பலவற்றைத் தருகிறது. இனிய பலாச்சுளைகள், இளநீர், யானைக் கொம்புகளைப் போல வளைந்து பழுத்திருக்கும் வாழைப்பழங்கள், சேப்பங்கிழங்கு வகைகள் என இயற்கை உணவுகளை வரிசைப்படுத்துகின்றது.
தமிழர்கள் வாழ்வில் மேலும் பல நடத்தையியல்களைச் சமணத்தின் வரவு உருவாக்கியுள்ளது. வணிகத் துறையின் வளர்ச்சியால், சாத்தான், சாத்தி ஆகிய பெயர்களைச்  சங்க இலக்கியப் புலவர்கள் வரிசையில் காண முடிகிறது. சமண வணிகக் கூட்டமே, ‘சாத்துஎன்று சுருக்கமாக அறியப்பட்டது.
அறிவைத் தானம் செய்வது, சமண, பௌத்த மரபே ஆகும். அதனால்தான் அம்மதங்கள் சார்ந்த பள்ளிகள் இங்கு உருவாயின. வடக்கிருந்து உயிர்விடுதலும் சமண வழித் தொடர்ச்சிதான்.
பாராட்டுகளையும், பரிசில்களையும் எதிர்நோக்கும் உளவியலும், அவற்றைப் புறக்கணித்துத் தன்மானத்துடன் தலைநிமிரும் உளவியலுமாக இரண்டையுமே அன்று நம்மால் காண முடிகிறது.
புலவர்கள் மட்டுமின்றி, இயல்பான மனிதர்களும் கூட, ஏற்பிசைவிலும், பாராட்டிலும் மகிழ்ந்துள்ளனர் என்பதைச் சில செய்யுள்கள் எடுத்துரைக்கின்றன.
முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடல் மிகப் புகழ்பெற்றது. சமையல் கலையே தெரியாத ஒரு பெண், மணமான புதிதில், தனக்குத் தெரிந்த அளவில் தீம்புளிப்பாகர்செய்து வைக்க, “இனிதெனக் கணவன் உண்டலின், நுண்ணிதின் மகிழ்ந்தன்று என்கிறார் புலவர். அவன் பாராட்டில் அவள் மகிழ்கிறாள்.
பாணர்களும், புலவர்களும் மன்னர்களிடம் பரிசில்களை வேண்டி நின்றுள்ளனர் என்பது வெளிப்படை. ஆனாலும் பரிசிலுக்காகத் தன்மானத்தை இழந்து நின்றவர்கள் என்று அவர்களைக் கூற முடியாது. பரிசில் மறுத்துத் திரும்பிய பெருஞ்சித்திரனார், சாத்தனார், பெருங்குன்றுக் கிழார் போன்ற புலவர்களையும் நம்மால் சங்க காலத்தில் காண முடிகிறது.
புகழ், பெருமை, புண்ணியம் ஆகியனவற்றைக் கருத்தில் கொண்டே மன்னர்கள் அனைவரும் கொடையளித்தனர் என்றும் கூறிவிட முடியாது.
இம்மை செய்தது மறுமைக் காமெனும்
அறவிலை வணிகன் ஆயலன்
என்கிறார் ஏணிச்சேரி முட மோசியார். இப்போது கொடுப்பதெல்லாம், மறுபிறப்பிற்குப் புண்ணியத்தைத் தேடித்தரும் என்று கணக்குப் போடும் அறவணிகன் அல்லன் அரசன் ஆய் அண்டிரன் என்று இவ்வரிகள் கூறுகின்றன.
இத்தகைய நூற்றுக்கணக்கான நடத்தை உளவியல்களை நாம் சங்க இலக்கியங்களில் காண முடியும். இத் தொடக்க விழாவில் சிலவற்றைத் தொட்டுக் காட்டிப் பேசும் வாய்ப்பினை எனக்குத் தந்தமைக்காக, மீண்டும் ஒருமுறை நன்றி கூறி அமைகின்றேன்.

(சனிக்கிழமைதோறும் சந்திப்போம்)


2 comments:

  1. //‘அகம் என்றால் உணர்தல், புறம் என்றால் பகிர்தல்’ //
    அண்ணா அண்ணாதான்.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  2. அருமை அய்யா

    ReplyDelete