தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 17 January 2015

கைகோத்துக் களம் காணட்டும் கருஞ்சட்டைகள்!


திராவிடர் கழகம் சார்பில், சென்னை, பெரியார் திடலில், மூன்று நாள்கள் திராவிடர் திருவிழா இந்த ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. திரும்பும் திசையெல்லாம் மக்கள் வெள்ளம். பறை முழக்கம், உரி அடித்தல், சிலம்பாட்டம், கானுயிர் கண்காட்சி எனத் தமிழர் பண்பாட்டின் அனைத்து அடையாளங்களோடும் அவ்விழா நடைபெறுகின்றது.

ஆனாலும் திராவிடர் என்ற சொல் இடம் பெற்றுவிட்டதால், அது தமிழர்க்கு எதிரானது என்றும். திராவிடக் கூச்சல் என்றும் சிலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். திராவிடம் என்பது ஆரியத்திற்கு எதிரான சொல்லே அன்றி, தென் இந்தியாவிற்கு மாற்றுச் சொல் அன்று எனப் பலமுறை விளக்கிய பின்னும், சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வதற்குத்தான் கூச்சல் என்று பெயர். 

சென்ற ஆண்டு விழாவில், நெய்தல் நிலத்தின் தோற்றம் அங்கு உருவாக்க்கப்பட்டிருந்ததைப் போல, இவ்வாண்டு ஒரு முல்லை நிலத்தையே அங்கு பார்க்க முடிந்தது. முல்லை நில உயிரினங்கள், வனத்தின் அமைப்பு, காடு சார்ந்த பொருள்கள் என ஒரு தமிழ் மண்ணை இளைஞர்கள் கண் முன் கொண்டுவந்து நிறுத்தியிருந்தனர். இவற்றை எல்லாம் பாராட்ட மனம் இல்லையானாலும், இழிவு படுத்தாமலாவது இருக்கச் தமிழ்த் தேசியர்கள் சிலர் கற்றுக் கொள்ள வேண்டும்.

திராவிடத்தை எதிர்த்துப் பார்ப்பனர்களும், தமிழ்த் தேசியர் எனத் தம்மை அழைத்துக் கொள்வோர் சிலரும் வரிந்து கட்டி நிற்கின்றனர். இன்னொரு பக்கம், கருத்துரிமையை மறுக்கும் வன்முறையாளர்களின் கை ஓங்கியுள்ளது. பெருமாள் முருகனைத் தொடர்ந்து, துறை குணா சாதியவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்.  சாதி, மத  வெறியர்களின் ஆதிக்கப் போக்கு மீண்டும் தலை தூக்குகிறது.

இந்நிலையில் கருஞ்சட்டைப் படையினர் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டிய மிகப் பெரும் தேவை எழுந்துள்ளது. ஒரே கட்சியாக இணைய வேண்டும் என்பதில்லை. திராவிட இயக்கத்தினரின் பெரும் கூட்டமைப்பு ஒன்றினை உருவாக்கிட வேண்டிய உடனடித் தேவை எழுந்துள்ளது. ஆசிரியர் ஐயா வீரமணி, அண்ணன் கொளத்தூர் மணி, நண்பர் கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரும் இக்கருத்தினை ஏற்றிட வேண்டும் என்பது திராவிட உணர்வுள்ள தமிழர்கள் அனைவரின் விருப்பமுமாகும்! ஏற்கனவே, அனைத்துத் திராவிடர் இயக்கங்களையும் சேர்ந்த இளைஞர்கள் ஒருங்கிணைந்து இளம் திராவிடர் இயக்கம் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது நமக்குப் பெரும் மகிழ்வைத் தருகிறது.


இவ்வாண்டு, நாம் முனைந்து பணியாற்றிட வேண்டிய ஆண்டு. சமூக மாற்றத்திற்குத் திராவிடர் கழகங்களும், அரசியல் எழுச்சிக்குத் திராவிட முன்னேற்றக் கழகமும்  களத்தில் இறங்கிப் பணியாற்றவில்லை  என்றால், காவியும், இருளும் நம் நாட்டைச் சூழ்ந்து கொள்ளும்! 

8 comments:

 1. உண்மை அய்யா ! கருஞ்சட்டைகள் இனைந்து செயலாற்ற வேண்டிய காலம் இது !

  ReplyDelete
 2. unmayai adharathodu sonnalum makkal namba thayarai illaye
  yen?

  ReplyDelete
 3. ஒன்று பட வேண்டிய காலகட்டம்தான் ஐயா

  ReplyDelete
 4. நூற்றுக்கு நூறு உண்மை ...ஒன்றுபடுவோம் உரிமையை மீட்க ...ரவிச்சந்திரன் -மும்பை பகுத்தறிவாளர் கழகம்

  ReplyDelete
 5. ஆசிரியர் ஐயா வீரமணி, அண்ணன் கொளத்தூர் மணி, நண்பர் கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரும் இக்கருத்தினை ஏற்றிட வேண்டும் என்பது திராவிட உணர்வுள்ள தமிழர்கள் அனைவரின் விருப்பமுமாகும்!
  Please try hard for this ayya!!! you only can do this as you're in good books of all these leaders. All the best

  ReplyDelete
 6. முயற்சி திருவினை ஆக்கும்

  ReplyDelete
 7. Yaralum mudiyathathu nammal mattumay mudiyum.

  ReplyDelete
 8. அவசியம்! அவசரம்!

  ReplyDelete