தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday, 19 January 2015

மாதொருபாகனும் மகாபாரதமும்


படைப்புச் சுதந்திரம் எதுவரை நீளலாம் என்னும் வினாவிற்கு உடனடி விடை ஏதுமில்லை என்றாலும், அடுத்தவர் சுதந்திரத்தைப் பாதிக்காத வரை அல்லது பொது ஒழுங்கைக் கெடுக்காத வரை என்ற விடையே பெரிதும் கூறப்படுகின்ற ஒன்றாகும்! எனினும்,அடுத்தவர் சுதந்திரம் என்பது எதுவரை அல்லது பொது ஒழுங்கு என்றால் என்ன, அதனை யார் தீர்மானிப்பது என்னும் வினாக்கள் எழும்போது, மீண்டும் முதல் வினா விடையற்றே நிற்கிறது.  எவ்வாறாயினும், படைப்புச் சுதந்திரத்திற்கு எந்த எல்லையும் கிடையாது என்னும் கூற்றில் நம்மால் உடன்பட முடியவில்லை. அது பற்றிய ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்றே தோன்றுகிறது.


இப்போது 'பி.கே' என்னும் இந்திப் படமும், தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'மாதொருபாகன்' என்னும் நாவலும் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளன. உடனடி விளைவு யாதெனில், எண்ணிப் பார்க்க முடியாத வண்ணம்  இரண்டும் வெகு மக்களைச் சென்றடைந்துள்ளன என்பதுதான்.  பி.கே படம், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில், 600 கோடி ரூபாய் பணத்தை வசூல் செய்துள்ளது. மாதொருபாகன் நாவல், படிக்கும் பழக்கம் மிகுதியாக இல்லாதவர்களைக் கூடப் படிக்க வைத்துள்ளது. இன்று இணைய தளத்திலும் அந்நாவல் இடம்பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் மட்டுமே படித்திருக்கக் கூடிய அந்நாவல் இப்போது லட்சக் கணக்கானவர்களால் படிக்கப்படுகிறது!

 பெருமாள் முருகன் நாவலை முன் வரிசையில் நின்று எதிர்ப்பவர்கள் சாதி அமைப்பினர். பின்னால் நின்று இயக்குபவர்கள், இந்து மத அமைப்பினரும், சுயநிதிப் பள்ளி உரிமையாளர்களும். 30 வயதாகியும், குழந்தை இல்லாத பெண்கள், அர்த்தநாரீசுவரர் கோயில் திருவிழாவின் இறுதி நாளில், அன்று காவடி தூக்கி வரும் அனைவரும் 'சாமிகளே' என்பதால், அவர்களில் ஒருவரோடு கூடிப் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என்பதும், அப்படிப் பிறக்கும் பிள்ளைகள் 'சாமி கொடுத்த பிள்ளைகள்' என நம்புவதும், திருச்செங்கோடு பகுதியில் 100 ஆண்டுகளுக்கு முன் இருந்த ரகசிய மரபு என்று கூறப்படும் செவி வழிச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட நாவலே மாதொருபாகன்.  

இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்  இந்நாவலை எதிர்ப்பதில் எந்தப் பொருளும் இல்லை. ஏனெனில், இந்து மதம் போற்றுகின்ற மனு நீதியும், மகாபாரதமும்  இவற்றை எப்போதோ சொல்லிச் சென்றுள்ளன. இது குறித்து,  மனு நீதியின், 9ஆவது இயலில் இருந்து சில சுலோகங்களை  நாம் பார்க்கலாம். 

சுலோகம் 32: "கணவன் இரண்டு விதம் என்று கேட்டிருக்கிறோம்.அதாவது, சிலர் பிள்ளையை உண்டுபண்ணினவனைக்  கணவன் என்றும், சிலர் கலியாணம் செய்தவனைக் கணவன் என்றும் சொல்கிறார்கள்."

சுலோகம் 52: " ஒருவன் மனையாளிடத்தில் மனையாள் இல்லாத மற்றொருவன் பிள்ளையையும் உண்டுபண்ணலாம்."

சுலோகம் 51: "ஒருவன் மனையாளிடத்தில் மற்றொருவன் உண்டுபண்ணின பிள்ளை, உடையவனைச் சாருமேயன்றி, உண்டுபண்ணினவனச் சாராது." 

 எனவே குழந்தைக்காக, காம உணர்வு ஏதுமின்றி, இன்னொருவனைக் கூடலாம் என்னும் இந்த விதியை, இந்து மதம், 'நியோகா தருமா' என்று கூறுகின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டுதான், மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் பலரின் பிறப்பும் அமைந்துள்ளது. 

பாண்டு தன் மனைவியரோடு உறவு கொள்ள இயலா வண்ணம் அவருக்கு ஒரு சாபம் இருந்ததால், குந்தி, இந்திரன், வாயு முதாலோருடன் கூடிப் பிள்ளைகளைப் பெறுகின்றாள் என்றுதான் மகாபாரதத்தின் ஆதிபருவம் கூறுகின்றது. முதலில் தயங்கும் குந்தியை, பாண்டுவின் தாயான அம்பாலிகைதான், அதில் ஒன்றும் தவறு இல்லை என்று கூறி ஊக்கப் படுத்துகின்றாள். அப்போது அவள் குந்தியைப் பார்த்து, 'ஒன்றும் தயங்காதே, உன் கணவரான பாண்டு, அவரின் அண்ணன் திருதராஷ்டிரன் ஆகியோர் அவர்களின் பெரியப்பாவுக்குப் பிறந்தவர்கள்தானே' என்கிறாள். அதனைக் கேட்ட குந்தியும், படிக்கும் வாசகர்களும் அதிர்ச்சி அடையக் கூடும். ஆனால் அதுதான் அந்த இதிகாசக் கதை.அம்பை, அம்பாலிகை இருவரையும் மணந்து கொண்ட விசித்திர வீரியன் இறந்து போய்விட, அவனுக்கு அண்ணன் முறையான வியாசனுக்குத்தான் பாண்டு, திருதராஷ்டிரன்  இருவரும் பிறக்கின்றனர். பிறகு, வியாசனுக்கும், அம்பாலிகையின் வேலைக்காரப் பெண் ஒருத்திக்கும் பிறந்த குழந்தைதான் விதுரர்.

எனவே இந்து மதம் இவற்றை எல்லாம் ஏற்றுக்கொண்டுள்ள மதம்தான்.இவற்றை ஒழுக்கக் கேடு என்று கூறுவதும், பாலியல் சுதந்திரம் என்று கூறுவதும் அவரவர் பார்வை, வாழ்க்கை முறை சார்ந்தது. எவ்வாறாயினும், இந்நாவலில் சொல்லப்பட்டுள்ள செய்தியை இந்து மதத்தினர் எதிர்ப்பதில் பொருள் இல்லை.

சாதி அமைப்பினர், இந்நாவலை எதிர்ப்பதற்கு ஒரு காரணத்தை முன்வைக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட ஊரில் வாழும், ஒரு குறிப்பிட்ட சாதி மக்களை இந்நாவல் இழிவு படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர். ஒரு குறிப்பிட்ட இடத்தில் நாவலின் மையக் களம் உள்ளது என்றாலும், இது மானுட சமூகத்தின் பல்வேறு வளர்ச்சிப் போக்கில் நடைபெற்ற ஓர் அசைவினைக் குறிக்கிறது என்பதே உண்மை. குறிப்பிட்ட மக்கள் தங்களைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

அப்படியே அவர்கள் மனங்களைப் புண்படுத்தி விட்டது என்று கருதுவார்களேயானால், அதனை எதிர்த்து வன்முறையற்ற வழிகளில் போராடுவதற்கு அவர்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன.  மாறாக, ஓர் எழுத்தாளரை மிரட்டுவதும், அவர் குடும்பத்தினரை அச்சுறுத்துவதும், ஊரை விட்டே விரட்டுவதும், இவை அனைத்துக்கும் அரசு அதிகாரியே துணை போவதும், மிகக் கடுமையான கண்டனத்திற்குரியவை.

சாதி வெறியர்களின் போக்கு மிக மிக அநாகரிகமானது. அவர்களுக்குப் பின்னே ஒளிந்து  கொண்டு இந்துத்வ அடிப்படைவாதிகள் நடத்தும் நாடகம் அதனைவிட அநாகரிகமானது. கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஜனநாயகத்தில்  நம்பிக்கை உள்ள அனைவராலும் இது கண்டிக்கப்பட வேண்டியதாக உள்ளது.

ஊரில் உள்ள மக்கள் எல்லோரும் இந்நாவலைப் படித்துவிட்டு, மனம் குமுறித் திரண்டு எழுந்துவிட்டனர் என்று கூறுவதில் எந்த உண்மையும் இருக்க முடியாது. வெகுமக்கள், உழைக்கும் மக்கள் எல்லோரும் நூல்களைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையானால், நம்மை விட யார் மகிழ்ச்சி அடைவார்கள்? ஆனால் அப்படி ஒரு நிலை நம் நாட்டில் ஏற்படவில்லை. அதனால்தான், நூல் வெளிவந்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு யாரோ கிளப்பிவிட்ட கருத்துகளின் மையத்தில் போராட்டம் நடைபெறுகிறது. இதனைத் தன்னெழுச்சியான போராட்டம் என்று விவரம் அறிந்த எவரும் ஏற்க மாட்டார்கள்.

சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட, சாதி ஆதிக்கத்தை எதிர்த்துப் பல கருத்துகளைத் தன் படைப்பில் பதித்துள்ள, கல்விக் கொள்ளையை எதிர்த்து எழுத்துகள் பலவற்றைத் தந்துள்ள பெருமாள் முருகன் என்னும் எழுத்தாளரைக் காக்க வேண்டிய கடமை நம் அனைவரின் முன்னாலும் உள்ளது.


'ஒடுக்குமுறைகள் ஒருநாளும் வென்றதில்லை' என்னும் உண்மையை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திடவேனும், பெருமாள் முருகன் அவர்களே, தொடர்ந்து எழுதுங்கள்!  

தொடர்புகளுக்கு: (subavee11@gmail.com , www.subavee.com)

நன்றி: tamil.oneindia.in

16 comments:

 1. அய்யா,

  படைப்புச் சுதந்திரத்தின் எல்லை எது என்பது பற்றிய ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்ற தங்கள் கருத்து, ஒரு புது சிந்தனையை விதைத்துள்ளது என்பதில் ஐயமில்லை!

  மனு நீதியின் மறுபக்கத்தையும், மகாபாரதப் பாத்திரங்களின் 'உண்மையுருவை' யும் உலகிற்கு உணர்த்தியதற்கு நன்றிகள் பல !

  மகாபாரதத்தை தடை செய்யாமல் விட்டதே, கருத்து சுதந்திரத்தை மதிக்கும் தமிழர்களின் தன்மையை உலகிற்குப் பறை சாற்றும்.

  ReplyDelete
 2. என்ன கேவலம் இது இதைத்தான் வணங்கவேண்டுமா?

  ReplyDelete
 3. கருத்து சுகந்திரம் ஒரு எல்லைக்கு உட்பட்டது என்றால் ,அது எல்லா தளத்தில் இருப்பவர்களுக்கும் பொருந்துமா ?வேதங்களையும் ,கீதையும் விமர்சிக்கின்ற கருத்தும் எல்லைக்கு உட்பட்டதா ?.மத போதகர்கள் தங்களுடைய மதம் இவ்வளவு சிறப்பு வாய்ந்தது ,எங்கள் மதத்தில் தீண்டாமை இல்லை ,எங்கள் கடவுளை தொழுதால் உங்கள் பாவங்கள் நீங்கிவிடும் என்று விளம்பரம் செய்தால் ,உங்கள் மதத்தில் தீண்டாமை இருக்கிறது ,உங்கள் மதத்தில் பெண் அடிமைத்தனம் இருக்கிறது ,உங்கள் மதமும் சரியானது இல்லை என்று சொல்கிற உரிமையை எப்படி தவறானது ஆகும் .பால் தினகரனுக்கு இருக்கும் உரிமை ,ஏன் சார்லி ஹெப்டோ வுக்கு இருக்க கூடாது ?

  ReplyDelete
  Replies
  1. கருத்து சுதந்திரம் எந்த எல்லைக்கும் உட்படாதது. என்னுடைய கருத்தை முடிவு செய்ய வேண்டியது நான் தான், நான் மட்டும் தான்.

   என் கருத்தை மற்றவர்களின் மீது திணிக்காத வரை, எந்தச் சிக்கலும் இல்லை.

   சுபவீ அய்யா இந்த கட்டுரையில் சுட்டிக்காட்டுவது 'படைப்புச் சுதந்திரம்'.

   எந்த ஒரு படைப்பும், எவர் மீதும் திணிக்கப்படாத வரை, இங்கும் எந்தச் சிக்கலும் இல்லை. 'மாதொரு பாகன்' என்னும் படைப்பு, எவர் மீதும் திணிக்கப்பட்டதல்ல . பிடித்தவர்கள் மட்டும் படிக்கலாம் ! இந்நூல், இவருக்காக, இந்த இனத்துக்காக, இந்த மதத்துக்காக என பெருமாள் முருகன் யார் மீதும் திணிக்க வில்லை.

   ஆனால், தாங்கள் குறிப்பிட்ட 'வேதம்', 'கீதை' ஆகியவை, நான் விரும்பா விட்டாலும் என்மீது திணிக்கப்பட்ட படைப்புகள். ஒருவரை உயர்த்தியும், மற்றவர்களைத் தாழ்த்தியும், மனித சமூகத்தில் ஏற்றத்தாழ்வைக் கற்பித்த படைப்புகள். இதனால் பாதிக்கப்பட்டர்கள் , இதை எதிர்த்து கருத்து தெரிவிப்பது , எந்நாளும் எந்த எல்லைக்குள்ளும் வராது.

   Delete
 4. மிகச்சரியான வாதம் ! அய்ந்து நாட்களில் ஒரு பதிவு.பாராட்டுகள் ஐயா! உங்களின் வாழ்கால சமூகம் சார்ந்த பார்வைக்கும், பணிக்கும் என் உளமார்ந்த நன்றிகள் !

  உண்மையில் இது தொடர்பான இழிநிலை போராட்டத்தில் பங்கெடுத்தோர் நிச்சயம் இப்புதினத்தை முழுமையாய் படித்திருக்க வாய்ப்பே இல்லை . செவிவழி செய்திகளை கேட்டும் , சிலர் அச்சில பக்கங்களை படித்தும் மட்டுமே பங்கெடுத்திருப்பர்.

  தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள தத்தமது இருப்பை உறுதி செய்துகொள்ள என இப்படி ஏதோ ஒரு காரணம் தேவைப்படுகிறது .

  தன் முனைப்போடு கூடிய தற்சிந்தனை பெற்ற எழுத்தாளனின் நோக்கமறிந்து,அவர் எழுதிய தளத்திலிருந்து உணர்ந்து வசித்தாலே போதும் இந்த தேவையற்ற வன்மங்கள் வழக்கொழிந்து போகும் !

  ReplyDelete
 5. ஒடுக்குமுறைகள் ஒருநாளும் வென்றதில்லை' என்னும் உண்மையை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திடவேனும், பெருமாள் முருகன் அவர்களே, தொடர்ந்து எழுதுங்கள்!

  ReplyDelete
 6. பெருமாள் முருகன் மதவாதிகளுக்கு பயப்படக்கூடாது. சுபவீ அவர்கள் குறிப்பிடுள்ளதுபோல மஹாபாரதம் இது
  போன்ற செயல்களை அனுமதிக்கிறது. எனவே ஒரு நாவலுக்கு எதிர்ப்பு என்பதால் அனைத்து எழுத்துக்களையும் அழிக்க வேண்டியது இல்லை. அவர் தொடர்ந்து எழுத வேண்டும்

  ReplyDelete
 7. //கருத்து சுகந்திரம் ஒரு எல்லைக்கு உட்பட்டது என்றால் ,அது எல்லா தளத்தில் இருப்பவர்களுக்கும் பொருந்துமா ?// கருத்தை தெரிவிப்பதற்கும் கருத்தை திணிப்பதற்க்கும் கருத்தை அநாகரீகமாக சாடுவதற்க்கும் இருக்கும் வித்தியாசம் மிகப் பெரியது.. //வேதங்களையும் ,கீதையும் விமர்சிக்கின்ற கருத்தும் எல்லைக்கு உட்பட்டதா ?.// இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.. ஆனால் அதைல் உள்ள உண்மைகளை கண்ணியமான முறையில் அதைல் பயன்படுத்த படும் வார்த்தைகளையே பயன்படுத்தும் போதே அதை தாக்குதலாக கருதினால் என்ன சொல்வதென்று தெரியவில்லை. //மத போதகர்கள் தங்களுடைய மதம் இவ்வளவு சிறப்பு வாய்ந்தது ,எங்கள் மதத்தில் தீண்டாமை இல்லை ,எங்கள் கடவுளை தொழுதால் உங்கள் பாவங்கள் நீங்கிவிடும் என்று விளம்பரம் செய்தால் ,உங்கள் மதத்தில் தீண்டாமை இருக்கிறது ,உங்கள் மதத்தில் பெண் அடிமைத்தனம் இருக்கிறது ,உங்கள் மதமும் சரியானது இல்லை என்று சொல்கிற உரிமையை எப்படி தவறானது ஆகும் .பால் தினகரனுக்கு இருக்கும் உரிமை ,ஏன் சார்லி ஹெப்டோ வுக்கு இருக்க கூடாது ?// அவரவர் கருத்தை சொல்வதற்கு உரிமை உண்டு, எல்லை மீறாத வரை.. பால் தினகரன் பேசுவதெல்லாம் அவர்களது மத கூட்டத்தில், சார்லி பத்திரிக்கை வெளியிட்டது அனைத்து சமுதாயத்திடமும்.. இடம் பொருள் ஏவல் என்பதை அறிந்தால் நன்று

  ReplyDelete
  Replies
  1. சார்லியும் தனது சொந்த பத்திரிகையில் தனது கருத்தை வெளியிட்டார் .உங்கள் வீட்டுக்குள் வரவில்லை ,வாங்கி படிப்பதும் ,ஒதுக்குவதும் உங்கள் இஷ்டம் .தனது மத கூட்டத்தில் என்ன உரிமை பால் தினகரனுக்கு [பால் தினகரனை மட்டும் சொல்லவில்லை எல்லா மத தலைவரையும் சேர்த்தே சொல்கிறேன் ]உள்ளதோ அதே உரிமை தனது பத்திரிகையில் சார்லிக்கும் உண்டு

   Delete
 8. இரத்தினவேல்21 January 2015 at 22:51

  மதவாதிகள் தங்களிடமுள்ள பலவீனத்தை மறைத்துவிட்டு, கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்து கல்லெறிகிறார்கள், உண்மை சுடும்., கசக்கதான் செய்யும்., இதைத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் வேண்டும் என்பதை பெருமாள் முருகனின் எதிர்ப்பாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

  ReplyDelete
 9. அய்யா முகநூலில் பெருந்தேவி பெருந்தேவி என்ற தோழியின் பக்கத்தில் நியோகம் என்ற தலைப்பில் ஆணித்தரமான தரவுகளுடன் ஒரு பத்தி எழுதியிருக்கிறார் , வாய்ப்பிருந்தால் வாசிக்கவும் .

  ReplyDelete
 10. 'ஒன்றே சொல், நன்றே சொல்' இன்றைய நிகழ்ச்சியில் சுபவீ அய்யா குறிப்பிட்ட அரசியல் சட்ட பிரிவு 19 ஐ இணையத்தில் தேடிய போது கிடைத்தது.

  அரசியல் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள சுதந்திர உரிமைகள் (பிரிவு 19):


  1. பேச்சுரிமை, கருத்தை வெளியிடும் உரிமை, மற்றும் பத்திரிக்கை சுதந்திரம்.

  2. அமைதியாக ஆயுதங்கள் இல்லாமல் கூடும் உரிமை.

  3. சங்கம் அல்லது குழுக்களை உருவாக்கும் உரிமை.

  4.இந்திய பிரதேசத்தின் எந்த பகுதிக்கு வேண்டுமானலும் போகும் உரிமை.

  5. இந்திய பிரதேசத்தின் எப்பகுதியில் வேண்டுமானலும் வசிக்கும் அல்லது குடியேறும் உரிமை.

  6.சொத்துரிமை (44 வது திருத்தச் சட்டம் 1978 ஆல் இந்த உரிமை நீக்கப்பட்டு விதி 300 - A க்கு மாற்றப்பட்டது, இது தற்போது அடிப்படை உரிமை இல்லை)

  7. எந்த வித வேலை, வியாபாரம் மற்றும் தொழில் நடத்தும் உரிமை.

  (இந்த சுதந்திரங்கள் நாட்டின் பாதுகாப்பு, அயல்நாடுகளுடன் நட்புறவு, பொது ஒழுங்கு, மரியாதை, ஒழுக்க முறை, நீதிமன்ற அவமதிப்பு, அபராதம் ஆகியவற்றின் அடிப்படையில் நியாயமான நிபந்தனைகளை அரசு விதிக்க முடியும்)

  மேலும் இந்த அடிப்படை உரிமைகளை தடை செய்து வெளிவரும், சட்டம், அரசாணை ஆகியவை செல்லாது என அறிவிக்கும் உரிமை நீதிமன்றத்திற்கு உண்டு (பிரிவு 13)

  இது போல இந்த அடிப்படை உரிமைகளை மறுக்கும்தனிமனிதன், அரசு, அமைப்பு, சங்கம் ஆகியவற்றிற்கு எதிராக நேரடியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும் உரிமை உள்ளது. (பிரிவு 32)

  எனவே தனிமனிதரின் அடிப்படை உரிமைகளை தடை செய்ய எந்த தனிமனிதராலோ, அமைப்பாலோ, சங்கங்களாலோ இயலாது.

  ReplyDelete
 11. The right for freedom of expression should be absolute.The right for criticism should also absolute.

  ReplyDelete
 12. பீமராவ்24 January 2015 at 23:38

  உண்மையை விட்டு விட்டு உப்பு சப்பில்லாமல் எழுத வேண்டுமென்பதற்காக எதோ எழுதியிருக்கிறிர்கள். அரசியல்வாதியாக மாறத் தொடங்கி விட்டீர்களா என்று எண்ணத் தோன்றுகிறது.
  உண்மையாகச் சொல்லவேண்டுமென்றால் கொங்கு வேளாளக் கவுண்டர்கள்தான் மேற்கு தமிழகத்தின் முதன்மையான ஆதிக்க சாதி.பிற்படுத்தப்பட்ட பட்டியிலில் வரும் வன்னியர்,முக்குலத்தோர் போன்ற ஏனைய ஆதிக்க சாதிகளை விடவும் இவர்கள் சமூக ரீதியில் மேல் தட்டில் இருக்கிறார்கள். தற்போது திருப்பூர் தொழிலதிபர்கள்,நாமக்கல் வட்டார பிராயலர் பள்ளிகள்,வட்டார கோழிப்பண்ணைகள், லாரி நிறுவனங்கள் அனைத்திலும் இவர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். கணிசமானோர் விவசாயிகளாகவும் நீடிக்கிறார்கள்.
  காருண்யா கல்லூரி வழியில் இருக்கும் நாதே கவுண்டன் புதூரில், சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு “ஆதித்தமிழர் பேரவை” எனும் அருந்ததியருக்கான இயக்கத்தின் கொடி, பெயர்ப்பலகை நட்ட போது கவுண்டர்கள் பொருளாதாரத் தடை விதித்தனர்.
  பொருளாதார வாழ்க்கையில் கவுண்டர்களையே சார்ந்து இருக்கும் அம்மக்கள் தடையை மீறி தாக்குப்பிடிக்க முடியுமா? இறுதியில் பெயர்ப்பலகையும், கொடி மரமும் காணாமல் போனது.பிறகு இத்தகைய போராட்டங்களுக்கு பிறகு அருந்ததியருக்கான அமைப்புகள் கோவைப் பகுதியில் செயல்பட்டாலும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு சாதிக்க முடியவில்லை.
  தமிழகத்திலேயே இரட்டைக் குவளை தேநீர்க் கடைகள் அதிகமிருப்பது இங்குதான்.தலித் மக்களை பெயர் சொல்லி அழைத்தால் அது கொஞ்சம் கௌரவம்.டேய் மாதாரிப்பயலே என்று அழைத்தால் மீடியம்.டேய் சக்கிலிப்பயலே என்று அழைத்தால் கவுண்டர் கோபமாக இருக்கிறார் என்று பொருள்.இது போக வயதானவர்களைக் கூட நீ, போ,தே,நாயி,எருமை, பன்னி வாடா என்று அழைப்பதெல்லாம் இங்கு சகஜம்.கொங்கு தமிழின் அழகை கோவை சரளாவிடம் ரசித்தவர்களுக்கு இது அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
  தேவர்-பள்ளர், வன்னியர்-பறையர் திருமணங்களெல்லாம் நடக்க முடிந்த தமிழகத்தில் கவுண்டர்-அருந்ததி திருமணம் மட்டும் இன்னும் பாலைவனக் கனவுதான்.கவுண்டர்கள் என்னமோ தொப்புளில் பம்பரம் விட்ட“சின்னக் கவுண்டர்”களாகவே உலா வருகின்றனர்!.
  உடுமலை, காங்கேயம், பொள்ளாச்சி போன்ற நகரங்களில் கூட இன்றைக்கும் ஒரு பொது திருமண மண்டபத்தை ஏதேனும் ஒரு தலித் அமைப்பு வாடகைக்கு கூட எடுத்து விட முடியாது. இது போக நகரங்களின் கடைகள், சிறு தொழில்களிலும் தலித் மக்களுக்கு இடமில்லை.தென் மாவட்டங்களில் இருக்கும் கல்லூரிகளில் தேவர், பள்ளர் மாணவர் மோதலோ பிரிவோ இருக்கும். இங்கே அப்படி எதுவும் கிடையாது.காரணம் இங்கே கவுண்டர்களை எதிர்த்து தலித் மாணவர்கள் எதுவும் செய்ய முடியாது.அனைத்து நல்ல தரமுள்ள கல்வி நிறுவனங்களும் கவுண்டர்களின் கையில்,கருணா-ஜெயாவின் சொத்தை,சோடை அரசு,ஆதி திராவிடப் பள்ளிகள் தான் தலித் மாணவர்களுக்கு!.
  இளவரசன் திவ்யா பிரச்சினையை ஒட்டி ஆதிக்க சாதி கூட்டணியை ராமதாஸ் கட்டிய போது கொங்கு வேளாளர் சங்கங்களே முன்னணி வகித்தன.கவுண்டர் சாதி வெறியை இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும்.
  எங்கே கற்பின் மேன்மையும் அதைப் பாதுகாக்கும் கடமையும் ஓங்கி உரைக்கப்படுகிறதோ அங்கேதான் பெண்கள் அடிமையாக இருக்கிறார்கள். “மாதொரு பாகம்” நாவலை எதிர்த்து இணையத்தில் எழுதும் கொங்கு ‘சிங்கங்கள்’ இதை உறுதி செய்கின்றன.மற்ற சாதிகளை விட விதவைகளுக்கு வெள்ளுடை தரித்து மறுமணம் செய்யாமல் சாகும் வரை கற்புக்கரசியாக காத்த மண் என்கிறார்கள்.கணவன் இறந்த பின்பு உடன்கட்டை ஏறி கற்பாத்தாக்களாக பல ஆத்தாக்கள் வழிபடப்படும் பகுதி என்கிறார்கள். இதை பெருமையாக பீற்றுபவர்கள் பெருமாள் முருகனின் எழுத்தை எரிக்கத்தான் செய்வார்கள்.
  கொங்கு மண்ணின் கற்பு சென்டிமென்டை அறுவடை செய்ய பாரதக் கற்பை குத்தகைக்கு எடுத்திருக்கும் இந்துமதவெறியர்கள் ஓடோடி வருகிறார்கள். இந்த நாவல் ஆங்கிலத்தில் வெளியானதும் புது தில்லியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர் குழுமம் அதை படித்து தடை செய்ய வேண்டிய பட்டியலில் இணைத்து அதற்கான முயற்சிகளை செய்தாகவும் பலர் கூறியிருக்கின்றனர்.
  இதையே கருத்துச் சுதந்தரம் பாதி,எதை எழுதுவது என்ற கட்டுப்பாடு மீதி என்று மாதொரு பாகனுக்கு புதிய விளக்கம் கொடுக்கிறது ஒரு வார இதழ்.கருத்து சுதந்திரம் கேட்கும் பெருமாள் முருகன் கேரளாவிற்கு சென்று அங்கிருந்து எழுதலாமே என்று ஆலோசனை கூறுகிறது ஒரு நாளிதழ்.
  ஆக எது கருத்து,எது சுதந்திரம் என்பதை இவர்கள் தீர்மானிப்பார்கள்.நாம் தீர்மானித்தால் அது தடைசெய்யப்படும். அதை ஒத்துக் கொண்டால் சுதந்திரம்,மீறினால் தண்டனை.மனு தர்மம் எங்கே இருக்கிறது என்று சமாளிப்பவர்களுக்கு இதை விட சுரணையூட்டும் சான்று வேறு வேண்டுமா?.இதை எல்லாம் சொல்லாமல்(இது குறைந்தபட்சம் தான்,ஆழமாகப் போனால் இன்னும் எவ்வளவோ சொல்லலாம்)பூசி முழுகி,மண்புண்ணாக்கு போல் எழுதப்பட்டுள்ளது இந்த கட்டுரை.

  ReplyDelete
  Replies
  1. what exactly you want ?

   Delete