தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday 10 February 2015

முருகனுக்கு அரோகரா ....தமிழனுக்கும் அரோகரா!

இடுப்பில் பச்சை வேட்டி, தோளில் பச்சைத் துண்டு, கையில் வேல், காவடி எடுக்கும் மனைவி அருகில் என்று பழனிக்குப் புறப்பட்டு விட்டார் தம்பி சீமான். தனியாக இல்லை....தம்பிகள் பலரையும் அழைத்துக் கொண்டு!

பண்பாட்டுப் புரட்சி அல்லாது, அரசியல் புரட்சி வெல்லாது' என்னும் முழக்கத்தோடு, "வீரத் தமிழர் முன்னணி" என்னும் பெயரில் பழனிக்குக் காவடி எடுப்பதே பண்பாட்டுப் புரட்சி என அறிவித்துவிட்டார்.  (இந்தப் பண்பாட்டுப் புரட்சியை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான முருக பக்தர்கள் ஏற்கனவே செய்து கொண்டுள்ளனர். அது மட்டுமின்றி, அலகு குத்தி, நெருப்பு மிதித்துக் காவடி எடுக்கும் பெரும் புரட்சியாளர்களாகவும் அவர்கள் உள்ளனர்).


இது குறித்து,  'தி இந்து' 08.02.15 ஆம் நாளிட்ட தமிழ் நாளேட்டில் 'இயக்குனர் சீமான் புதிய இயக்கம் தொடக்கம்' என்னும் தலைப்பில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அதே செய்தியில், 'இந்த இயக்கம் புதிய அரசியல் கட்சியல்ல என்றும், நாம் தமிழர் கட்சியில் ஒரு இயக்கமாகச் செயல்படும் என சீமான் தெரிவித்தார்' என்றும், 'நாம் தமிழர் கட்சியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாகவே சீமான், அந்தக் கட்சிக்கு மாற்றாக புதிய கட்சி தொடங்குவதற்காக இந்தப் புதிய இயக்கத்தைத் தொடங்கியதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது' என்றும் இருவேறு செய்திகள் இடம்பெற்றுள்ளன. 

அவர்கள் கட்சி விவகாரம் எப்படி வேண்டுமானாலும் போகட்டும். 'நாம் பண்பாட்டுப் புரட்சி' பற்றி மட்டும் பார்க்கலாம். கடந்த 7ஆம் தேதி பழனியில் தொடங்கப்பட்டுள்ள வீரத் தமிழர் முன்னணி நிகழ்ச்சி, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, இணையத்தளத்தில் (யூ ட்யூப்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்றரை மணி நேரம் சீமானின் பேச்சு இடம் பெற்றுள்ளது. அதனை முழுமையாகக் கேட்ட பின் நமக்குப் பல செய்திகள் புரிகின்றன.

தன் உரையின் மூலம் அவர் மூன்று செய்திகளைத் தொட்டுக் காட்டுகின்றார். முருகன் வழிபாடு என்பது முன்னோர் வழிபாட்டின் ஒரு பகுதி என்பதும், தமிழின உணர்வின் வெளிப்பாடு என்பதும், பார்ப்பனிய எதிர்ப்பின் வடிவம் என்பதும் அவருடைய கருத்துகளாக வெளிப்படுகின்றன. 

முன்னோர் வழிபாடு என்பது புதுமையும் இல்லை, புரட்சியும் இல்லை. காலகாலமாகத் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் ஒன்றுதான் அது. 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோரை வானுறையும்  தெய்வத்துள் வைத்துப்' பார்க்கும் மரபு!  அதனைத்தான் நாட்டார் தெய்வ மரபு என்கிறோம். அந்த மரபில் முருகனை இணைத்து, அவன் நம் முப்பாட்டன் என்கிறது, வீரத் தமிழர் முன்னணி. முருகன், இராவணன், வள்ளுவர் ஆகிய மூவரையும் முன்னோர் வழிபாட்டில் சீமான் சேர்க்கின்றார். முருகன் புராணத்தில்  இடம் பெற்றுள்ள பாத்திரம். இராவணன் இதிகாசப் பாத்திரம்.வள்ளுவரோ  வரலாறு. எல்லோரையும்  ஒன்றாகப் போட்டுக் குழப்பி அடிப்பதன் நோக்கம் திட்டமிடப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது.

முன்னோர் வழிபாடு, நடுகல் வணக்கத்தில் தொடங்குகிறது. இது குறித்துத் தொல்காப்பியத்திலேயே, "காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்" என்று கூறப்பட்டுள்ளது. புறநானூற்றில் இது பற்றிய பாடல்கள் உள்ளன. சிலம்பில் கண்ணகிக்குக் கோட்டம் அமைப்பதே இந்த அடிப்படையில்தான். இந் நடுகல் வழிபாட்டின் தொடர்ச்சியாகத் தமிழகத்தின் தென் மாவட்டங்களில், அம்மன்,  மாடன், வீரன், கருப்பு ஆகிய முன்னோர் வழிபாடுகள் தொடங்கின. மாரியம்மன், காளியம்மன், இசக்கியம்மன் என்றும், சுடலை மாடன், பன்றி மாடன், காட்டு மாடன், புல மாடன் என்றும், மதுரை வீரன், முனிய வீரன், காத்தவராய வீரன் என்றும், பெரிய கருப்பு, சின்னக் கருப்பு, சங்கிலிக் கருப்பு, பதினெட்டாம்படிக் கருப்பு என்றும் பல தெய்வ வழிபாடாக அவை விரிந்தன. 

முருகன் நம் முன்னோன், அவனை வழிபட வேண்டும் என்றால், மாடன், வீரன், அம்மன் எல்லோரும் நம் முன்னோர்தானே! அவர்களையும் வழிபட வேண்டாமா? பிறகு, வருடம் முழுவதும் வழிபடும் வேலை ஒன்றினைத்தானே செய்து கொண்டிருக்க முடியும்? முருகன் நம் முன்னோன் என்பதால் ஆண்டுதோறும் தைப் பூசம் கொண்டாட வேண்டும் என்று கூறும் சீமான், சிவனும் நம் முப்பாட்டனுக்குப் பாட்டன் என்கிறார். அப்படியானால், சிவராத்திரி கொண்டாட வேண்டாமா?

இந்த முன்னோர் வழிபாடு, வீரத்தமிழர் முன்னணி தொடக்கி வைக்கும் பண்பாட்டுப் புரட்சி என்கிறார்  சீமான். அப்படியானால்,  இதுவரை நடந்துவந்த வழிபாட்டுக்கெல்லாம்  என்ன பெயர்? 

தமிழின உணர்வைத் தூண்டுவது எங்கள் நோக்கம், தமிழின மரபை மீட்பது எங்கள் நோக்கம் என்று அவர் பேசுகின்றார். உண்மைதான், குறிஞ்சி நிலக் கடவுள் முருகன் என்றுதான் தொல்காப்பியம் தொடங்கிப் பழந் தமிழ் நூல்கள் எல்லாம் கூறுகின்றன. ஆனால் அவை முருகனை மட்டும்  குறிப்பிடவில்லை. வேறு பல தெய்வங்களையும் குறிப்பிடுகின்றன.

"மாயோன் மேயக் காடுறை உலகமும் 
சேயோன் மேய மைவரை உலகமும் 
வேந்தன் மேயத் தீம்புனல் உலகமும் 
வருணன் மேயப் பெருமணல் உலகமும்"

என்கிறது தொல்காப்பியம்! மைவரை (குறிஞ்சி) உலகத்துச் சேயோனை (முருகன்) மட்டும் வணங்கினால் போதுமா?  காடுறை (முல்லை) உலகத்து மாயோனை (கண்ணன்), தீம்புனல் (மருதம்) உலகத்து வேந்தனை (இந்திரன்), பெருமணல் (நெய்தல்) உலகத்து வருணனை எல்லாம் வணங்க வேண்டாமா? அவர்களுக்கும் வெவ்வேறு நாள்களில் விழா எடுக்க வேண்டாமா?

வீரத் தமிழர் முன்னணி தொடக்க விழாவில் பேசிய சீமான், தான் பக்தி மார்க்கத்தில் கலந்து விட்டதை மறைப்பதற்கு, இதுதான் பகுத்தறிவு என்கிறார். முருகனை வணங்க வேண்டும் என்று சொல்லும் அவர், பிள்ளையாரையும், ராமரையும் எதிர்த்துப் பேசுகின்றார். பார்ப்பனிய எதிர்ப்பில் உறுதியாக இருப்பது போல் காட்டிக் கொள்கின்றார். இது ஒரு ஏமாற்று வித்தை. தமிழ் உணர்வின் பெயரால், பகுத்தறிவுச் சிந்தனைகளைக்  காயடிக்கும் தந்திரம்.


பழனிக்குப் போய் முருகனை வணங்கினோம் என்கின்றனரே, அங்கு முருகன் சிலைக்குப் பூஜை செய்பவர் யார்? போகர் வழிவந்த  புலிப் பாணிச் சித்தர்களா அங்கு கருவறைக்குள் உள்ளனர்? அவர்களைத்தான் திருமலை நாயக்கர் காலத்திலேயே தளவாய் ராமப்பைய்யர் துரத்தி விட்டாரே! பார்ப்பனர்கள்தானே இன்று அங்கு ஆதிக்கம் செய்கின்றனர். அவர் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பேசும்போது, "என் முப்பாட்டனைக் கண்டதும், மகிழ்ச்சியில்  கண் கலங்கி நின்று விட்டேன்" என்கிறார். கண் கலங்கி விட்டதால், உள்ளே இருக்கும் பார்ப்பனரைப் பார்க்கவில்லை போலிருக்கிறது! பாட்டனைப் பார்க்கப் போன அவர், குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தாராம். அவரே சொல்கிறார். அடேயப்பா...புதிய பண்பாட்டுப் புரட்சிதான்.

"ஆரியப் பார்ப்பனியச் சூழ்ச்சியில் சிக்காமல் தப்பியவன் முருகன்" என்கிறார் சீமான். எப்படித் தெரியுமா? நாரதர் கொண்டுவந்த மாம்பழக் கதையை அதற்கு எடுத்துக் காட்டாகக் கூறுகின்றார். பார்ப்பனியச் சூழ்ச்சியை எதிர்த்து அவர் பழனி மலைக்கு வந்து விட்டாராம். அந்தக் கதையே பார்ப்பனியக் கதைதான்.அதனை நம்புவதும், சிவபெருமான் நக்கீரரிடம் நெற்றிக் கண்ணைத் திறந்து காட்டியதை நம்புவதும் எந்த விதமான பகுத்தறிவு என்று நமக்குப் புரியவில்லை. இந்த இரண்டு கதைகளையும் எடுத்துச் சொல்லித் தன் தொண்டர்களுக்குத் தமிழ் உணர்வை ஊட்ட முயல்கின்றார் அவர்.

தமிழீழத் தேசியத் தலைவர் பிராபகரனுக்கு முன்பே தமிழனுக்குத் தனிநாடு கேட்டவர் முருகன் என்கிறார். எந்த வரலாற்று நூலிலிருந்து இந்தச் செய்தி கிடைத்ததோ தெரியவில்லை.

இந்தக் கட்டுரையைப் படித்ததும், இங்கு எழுப்பப்பட்டுள்ள எந்த வினாவிற்கும் விடை சொல்லாமல், தி.மு.க.வில் யாரும் கோயிலுக்குப் போவதில்லையா, கலைஞர் வீட்டில் யாருக்குமே கடவுள் நம்பிக்கை கிடையாதா என்று நண்பர்கள் சிலர் பின்னூட்டம் இடுவார்கள் என்பதை அறிவேன். அது தனி மனித நம்பிக்கைக்கு உட்பட்டதே தவிர, அதற்கென்று தி.மு.க.வில் வீரத் தி.மு.க. முன்னணி என்று தனிப் பிரிவு ஏதும் இல்லை.

சீமானின் துணைவியாருக்குக் கடவுள் நம்பிக்கை இருக்குமானால், அவர் காவடி தூக்கிக் கொண்டு போவது அவருடைய சொந்த விருப்பம். அதனை யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. கேட்கவும் முடியாது. ஆனால் அதனையே ஒரு தத்துவமாக்கி, அதற்கு ஒரு அணியையும் உருவாக்கி, அவற்றை நியாயப் படுத்துவது நேர்மையாகாது!

உண்மையில் இந்த அணிக்கு இப்போது என்ன தேவை வந்தது என்பதை அவரே அவருடைய பேச்சின் நடுவில் வெளிப்படுத்தியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன், பஞ்சாபைச் சேர்ந்த சிம்ரன்ஜித் சிங் மான், சீமானிடம், "கோயிலைக் கைப்பற்றாமல், நீ கோட்டையை எப்படிக் கைப்பாற்றுவாய்?" என்று கேட்டாராம். அது நெஞ்சில் உறுத்திக் கொண்டே இருந்ததாம். பிறகு, அம்பேத்காரைப் படித்த போது, பண்பாட்டுப் புரட்சி இல்லாமல், அரசியல் புரட்சி செய்ய முடியாது என்று அவர் எழுதியிருந்தாராம். அதனால்தான் இந்த இயக்கம் என்கிறார் அவர்.

கோயிலைப் பிடித்தவரெல்லாம்  கோட்டையைப் பிடித்து விடலாம் என்றால், தமிழ்நாட்டு ஆட்சியை என்றோ பா.ஜ.க. பிடித்திருக்குமே? சரி, அவர் எப்படியாவது கோட்டையைப் பிடித்துவிட்டுப் போகட்டும். அதற்காக அம்பேத்கார் கூற்றினை இப்படியா கொச்சைப்படுத்துவது?

பண்பாட்டுப் புரட்சியில் முருகனுக்காக  மொட்டை போட்டு, எதிர்காலத்தில் தமிழனுக்கும் மொட்டை போடலாம் என்ற எண்ணத்தில்தான் வீரத் தமிழர் முன்னணி உருவாகியுள்ளதோ?  

தொடர்புகளுக்கு:subavee11@gmail.com


நன்றி: tamil.oneindia.in

14 comments:

  1. நல்ல வேளை பெரியார் இன்று இல்லை
    ஆனாலும் பெரியார் முன்பை விட அதிகமாய் தேவைப்படும் காலம் இது என்றே எண்ணுகின்றேன் ஐயா

    ReplyDelete
  2. நீங்கள் மொட்டை போடாமலேயே, தமிழனுக்கு மொட்டை அடித்து விட்டீர்கள் !!!!

    ReplyDelete
  3. பெரியாரின் பேரன் என்று சொன்னார் ,சேகுவேர படம் போட்ட சட்டையை மாட்டிகொண்டு அலைந்தார் ,பிரபாகரனின் தம்பி என்று சொல்லிக்கொண்டார் ,இது எதுவும் போணி ஆகவில்லை .இப்போது முப்பாட்டன் முருகன் அடிமை ஆகிவிட்டார் .அவர் கிடக்கட்டும் யாரும் மதிக்க போவதில்லை .ஆனால் இவருக்கு இவ்வளவு பெரிய போஸ்ட் நீங்கள் போடுவதுதான் புரியவில்லை திரு சுபவீ .

    ReplyDelete
  4. ஒரு வேண்டுகோள் நீங்கள் எழுதும் கட்டுரைகளை பதிவேற்றி அதை படிக்க இந்த பக்கத்தில் நிரந்தர இணைப்பை [link id ]கொடுத்தால் நன்றாக இருக்கும் .

    ReplyDelete
  5. ஷ்யாம்10 February 2015 at 23:54

    தமிழனுக்கும் மொட்டையை யார்,எப்படிப் போடப்போகிறார்கள் என்பதிருக்கட்டும் அவர்களின் தலையையே(மூளையை) மொட்டை போட்ட,போட்டுக் கொண்டிருக்கும் திராவிடக் கட்சிகளை என்ன சொல்லப்போகிறீர்கள்?.உணர்ச்சி அரசியல்,கவர்ச்சி அரசியல்,வெறுப்பு அரசியல்,பொறுக்கி அரசியல்,ஊழல் அரசியல்,சாராய அரசியல்,மணல்&கனிமவளக் கொள்ளை அரசியல் போன்ற உன்னத பகுத்தறிவுக் கோட்பாட்டு அரசியலை நடத்திக் கொண்டிருக்கும் திராவிடக் காலிகளிடம் காணாத குற்றம்,குறையையா நாம் தமிழரிடம் காண்கிறிர்கள்?.ஜனநாயகத்தின் முதல்&முக்கிய எதிரியான வெறுப்பு/துவேஷ அரசியல்&பொறுக்கி அரசியலைத்தான் அவர்களும் திராவிட அரசியல்வாதிகளைப் போல முன் வைக்கிறார்கள்.டெல்லியில் நடந்தது போல தமிழகத்தில் மாற்றம் வரும் நாள் எந்நாளோ?

    ReplyDelete
    Replies
    1. வெறுப்பு ,துவேஷ ,சாதி,அரசியலை இந்த தேசத்திற்கே கற்று கொடுத்த பெருமை [சிறுமை ]ஆரிய அரசியலையே சேரும் திரு .ஷ்யாம் .உங்கள் கோபம் புரிகிறது .அடிமையாகவே இருப்பான் என்று நினைத்த திராவிடன் ஆள வந்துவிட்டது ஆத்திரமாக வெடித்து வார்த்தைகளாக வருகிறது .தங்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது .மரகரி சாப்பிடுகிறவன் தான் புத்திசாலியாக இருப்பான் ,சேப்பா இருக்கிறவன்தான் அறிவுடையவன் ,ஆங்கிலம் எங்களுக்கு மட்டுதான் பேசவரும் ,இந்த மாதிரியான உங்களது பொய் புரட்டு எல்லாம் தோற்றுபோய் ,உங்களை பார்த்தே கைகொட்டி சிரிப்பது கொஞ்சம் கஷ்டந்தான் .ஆனால் வேற இடத்தில இருந்து வந்து இங்க வுள்ளவனை இத்தனை ஆண்டு காலம் அடிமையாக வைத்திருக்க முடிந்த உங்கள் சாமர்த்தியத்தை தோற்க்க அடிக்க கொஞ்சம் கோவமாகதான் பேசவேண்டிஇருக்கு என்ன செய்ய ?கடவுள் இல்லை அது கல்லு அதை கும்புட சொன்னவன் அயோக்கியன் அவனை நாட்டைவிட்டு தூரத்து ன்னு பெரியார் வேகமா சொன்ன பிறகுதான் இங்க உள்ளவங்களுக்கு உரைக்க ஆரம்பித்தது .ஐயோ இவன் மூழிச்சுகிட்ட நாம எங்க போறதுங்கிற உங்க பயம்தான் உங்கள் வார்த்தைகளில் தெரிகிறது .

      Delete
    2. கணேஷ்வேல் மணிகாந்தி11 February 2015 at 15:09

      ஷ்யாம்- தங்களின் நாம் 'தமிழர்' ஆதரவு கோஷத்தின் பின்னால் உள்ள நயவஞ்சகத்தை அறிய ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை.
      தமிழன் என்ற பெயரில் ஒழிந்து கொள்ள இடம் பார்க்கும் பச்சைப் பார்ப்பனியம்.

      ஆரியத்தால் வீழ்ந்தோம். திராவிடத்தால் எழுந்து விட்டோம். மிச்சம் மீதி இருக்கும் ஆரியத்தையும் ஒழிப்பதுதான் இன்றைய தேவை! இதை முடிக்கும் வரை ஆரியத்தின்/பார்ப்பனியத்தின் இதுபே்ான்ற புலம்பல்களை நாங்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும் போலிருக்கிறது.

      Delete
    3. கணேஷ்வேல் மணிகாந்தி11 February 2015 at 15:15

      என்ன செய்து கிழித்தது திராவிடம் எனக் கேள்வி கேட்கும் திராவிடர்களுக்காக திரு. வே. மதிமாறன் அவர்களின் கவிதை !
      --------------------------------------------------------------------

      “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”
      பனை ஏறும்
      தந்தை தொழிலில்
      இருந்து தப்பித்து
      தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார்

      *

      “பெரியாரின்
      முரட்டுத்தனமான அணுகுமுறை
      அதெல்லாம் சரிபட்டு வராதுங்க”
      இதுமுடி
      வெட்டும் தோழரின் மகனான
      எலக்ட்ரிக்கல் என்ஜினியர்.

      *

      “என்னங்க
      பெரியார் சொல்லிட்டா சரியா?
      பிராமணனும் மனுசந்தாங்க.
      திராவிட இயக்கம்
      இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?”

      இப்படி ‘இந்தியா டுடே’
      பாணியில்கேட்டவர்
      அப்பன் இன்னும்
      பிணம் எரித்துக் கொண்டிருக்க
      இங்கே டெலிபோன் டிபார்மென்டில்
      சுபமங்களாவை விரித்தபடி
      சுஜாதா
      சுந்தர ராமசாமிக்கு
      இணையாக
      இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்
      அவருடைய மகன்.

      ஆமாம்
      அப்படி என்னதான் செய்தார் பெரியார்?

      -வே. மதிமாறன்

      -----------------------------------------------------------------------

      Delete
    4. தவறுகுக்குத் தத்துவார்த்த முலாம் பூசுகின்ற எதனையோ பேரைத் தாண்டித்தான் பகுத்தறிவு இயக்கம் வளர்ந்திருக்கின்றது இன்றைக்கு இந்தக் காளான்!

      Delete
  6. Andho paridhaabam......seemaan ipadi seerazhivaar yendru yaan kinjithum yenniyadhillai. Yedhrigalaivida evargal kodiyavargal

    ReplyDelete
  7. See man don't deserve such post....I agree with anonymous. .

    ReplyDelete
  8. நண்பர் சீமானுக்கு இந்த வீடியோ இணைப்பு அவரது ஞாபக மறதி நோய்க்கு நல்ல மருந்து என்று நம்புகிறேன்

    http://youtu.be/XDHNDx5Mq9E

    http://youtu.be/ciWNozQ5EAE

    ReplyDelete
  9. சீமானின் பழைய பேச்சை கேட்டிடும் போது சிரிப்புதான் வருகிறது. சுபவீ தனது மன கொதிப்பை கொட்டிதீர்துள்ளார் ... பரம மண்டலத்தில் இருக்கும் பரம பிதா சீமானை மன்னிப்பாராகுக

    ReplyDelete
  10. படு குழியிலே படாத பாடு படும் பாமரர்களை பகுத்தறிவு பேசி பாராளும் நிலைக்கு பாதை காட்டுவார் என்று நினைத்தால் மாறி பேசி மாற்றம் ஒன்றுதான் மாற்றம் இல்லாதது என்கிற கோட்பாட்டை இதில் கொண்டார்போலும் கோட்டைக்கு போக எண்ணும் சிரிப்பு சீமான் !

    மக்கள் மன்றத்திலே பகுத்தறிவு மார்தட்டிய மானமிகு சீமான் அன்று மன்றத்திலே மார்த்தட்டியத்தை இன்று அவர் மறந்தாலும் இணையம் மறக்கவில்லை !

    அலகு குத்துவதை அழகாக சாடியதை ஆற போட்டு ஆறியதும் ஆரவாரத்துடன் ஆர்பரிக்கும் ஆளாகிவிட்டார் ஆனந்த வேலாட்டம் ஆடுகிறார் அரோகரா ஆண்டி ஆனார் சீ - மான - ம் கெட்டார் !

    சைவத்துல வீர சைவரைப்போல வீர தமிழர் ஆனார். இவர் வீரத்தமிழர் என்றால் மற்றவரெல்லாம் கொழைத்தமிழரோ !

    இவர் நடைமுறை வாழ்க்கையை புறக்கணிக்கிறார். முப்பாட்டன் முருகனும் தனித்தமிழ் நாடு கேட்டாராம். அப்படியென்றால் தமிழர்களுக்கு என்றுமே தனித்தமிழ் நாடு என்று ஒன்று இருந்தது இல்லையா ?

    சாக்கடையை தூர் வாருகிறோம் என்று கிளம்பி தன்னை சுற்றி சேற்றை வாரி குவித்துக்கொண்டு வருகிறார் !
    பகுத்தறிவு பேசுகிறோம் என்று கிளம்பி மடத்தமிழர் மார்பிலே பகுத்தறிவு சந்தனம் பூசாமல் சேற்றை பூசிக்கொண்டு வருகிறார் !

    எதிர் பார்த்த ஈழம் கிட்டாத துயரத்திலே சீமானுக்கு தற்போது என்ன செய்வது என்றே தெரியவில்லை !

    இரண்டாம் உலகப்போர் காலத்திலே அமெரிக்காவிலே ராணுவத்துக்கு கட்டாய ஆளெடுப்பு நடந்த போது ஒரு பள்ளிகூட ஆசிரியரும் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு ராணுவ அணிவகுப்பு நேரத்துல அவரை நிற்க வைத்து நேராக நில் நிமிர்ந்து நில் வளைந்து திரும்பு நேராக நட திரும்பி வா என்றெல்லாம் உத்தரவு போட்டுக்கொண்டிருந்தானாம் ஒரு தளபதி. அந்த உத்தரவெல்லாம் எதற்கு என்றே புரியாமல் அணிவகுப்பிலிருந்து அந்த ஆசிரியர் விலகி ஓரமாக நின்றானாம். புரியாமல் விழித்த தளபதியை பார்த்து அவர் சொன்னாராம் நீ முதலில் ஒரு முடிவுக்கு வா என்று !

    அதைப்போல தற்போது நாட்டு நடப்பை சரியாக புரிந்து கொள்ளாமல் சீமான் பகுத்தறி பாதையை விட்டும் மக்களை விட்டும் விலகி நின்றுக்கொண்டு மற்றவர்களுக்கு புத்தி சொல்லிக்கொண்டு வருகிறார் !

    உணர்ச்சியை தூண்டுகிறோம் என்று கிளம்பி தானே உணர்ச்சி பிழம்பாகிவிட்டார் !

    இப்படிப்பட்டவருக்கு ஏன் சுபவீ முக்கியத்துவம் தந்து இவ்வளவு எழுத வேண்டும் என்று ஒருவர் கேட்டுள்ளார். அவருக்கு என்ன சொல்லுவது. சுபவீ சீமானுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை முன்னோர் வழிபாடு என்பதை பற்றி நமக்கெல்லாம் சொல்லுவதற்கு சீமானின் இன்றைய போக்கை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டுள்ளார் சுபவீ அவ்வளவுதான்.

    ReplyDelete