தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 30 July 2016

சுயமரியாதை - 4

சமூக நீதியும் கடவுள் மறுப்பும் 
                                     

பெரியாரின் கடவுள் மறுப்பே, சமூக  நீதியின் அடிப்படையில் எழுந்ததுதான் என்பதற்குப் பல சான்றுகள் உண்டு! வைணவ மரபுகளைக் கடுமையாகப் பின்பற்றிய ஒரு வைதீகக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு, அவர் குடும்ப நடவடிக்கைகளே ஓர் எதிர்க் கருத்தை அவரிடம்  தோற்றுவித்தன. அதனால்,  யார் ஒருவருடைய நூலையும் படிக்காமல், தன் சுயசிந்தனையின் அடிப்படையில் ஒரு பகுத்தறிவாளராக உருப்பெற்றார். என்றாலும் பகுத்தறிவு அடிப்படையில் தோன்றிய கடவுள் மறுப்புக் கோட்பாட்டைச் சாதி எதிர்ப்பு, சமூக நீதி என்னும் தளங்களிலேதான் நிலைநிறுத்தினார்.


1919 இல் காங்கிரசில் சேர்ந்த அவர், 1925 இறுதியில் அக்கட்சியை விட்டு விலகினார். காங்கிரஸ் கட்சி  கடவுள் மறுப்பை ஏற்கவில்லை என்று  கூறி அவர் அக்கட்சியை விட்டு விலகவில்லை. சமூக நீதிக்கு வழிவகுக்கும் பாதைகளில் ஒன்றான இட ஒதுக்கீட்டை ஏற்கவில்லை என்பதனாலேயே விலகினார். 


காங்கிரஸ் கட்சியையும், காந்தியாரின் தலைமையையும் முழுமையாக ஏற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே அவர் சாதி ஏற்றத்  தாழ்விற்கு எதிரானவராகத்தான் இருந்தார். வைக்கம் போராட்டமும், வ.வே.சு.அய்யரின் சேரன்மாதேவி குருகுலப்  போராட்டமும் அவர் காங்கிரசில் இருக்கும்போதேதான் நடந்தன. இரண்டிலும் அவருடைய பங்கு மிகப் பெரியது. வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் தியாகத்தைப் பாராட்டி அண்ணல் அம்பேத்கார் எழுதியிருப்பதை, அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள தனஞ்சய் கீர் தன் நூலில் குறிப்பிடுகின்றார். 

1920 இறுதியில் இரட்டை ஆட்சி முறை அடிப்படையில் பிரிட்டிஷ் அரசு முதன் முதலாகத் தேர்தலை இந்தியாவில்  நடத்தியபோது, காங்கிரஸ் அதில் கலந்து   கொள்ளவில்லை.  ஆனால் கட்சியின் ஒரு பகுதியினர் அந்த நிலைப்பாட்டை ஏற்கவில்லை. தேர்தலில் வென்று உள்ளே சென்று சட்டமன்றத்தை முடக்க வேண்டும் என்ற கருத்து கொண்டிருந்தனர். அவர்களின் கருத்து 1922இல் வலுப்பெற்றது. அதன் விளைவாக 1922 டிசம்பரில் கயாவில் நடைபெற்ற காங்கிரஸ்  மாநாட்டில்,   சுயராஜ்யக் கட்சி  என்ற ஓன்றை உருவாக்கினார். அக்கட்சி 1923 ஆம் ஆண்டு  தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்தனர்.  

சுயராஜ்யக் கட்சியில் பார்ப்பனத் தலைவர்களின் கையே ஓங்கி இருந்தது. அதனை அப்போதே பெரியார் கண்டித்தார். "சுயராஜ்யக் கட்சியின் அரசியல் கொள்கைகளை விட, நீதிக்கட்சியின் அரசியல் கொள்கை தாழ்வானது அல்ல"  என்றும், "அந்நிய ராஜ்யத்திற்கு மறைமுகமாகத் துணைபோகும் இவர்களை சுயராஜ்யக் கட்சி என்று அழைக்க நேரிட்டுள்ளதே" என்றும், குடியரசு (1925 செப்டம்பர்) இதழில் எழுதினார். 

சுயராஜ்யக் கட்சித் தலைவர் "ஸ்ரீமான் ஸ்ரீனிவாச அய்யங்கார்" பற்றிக் கடுமையாக விமர்சனம் செய்தார். பொழுது விடிந்தால், கோர்ட்டுக்குப் போய் என் கடவுளே, பிரபுவே என்று வெள்ளைக்கார நீதிபதியைக்  கெஞ்சி அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் இவர் சுயராஜ்யம் பற்றிப்  பேசுவதை என்னவென்று சொல்வது என்றார். காந்தியடிகள் வக்கீல் தொழிலைக் கைவிட வேண்டும் என்று சொன்னபோது, மகாத்மாவுக்குப் புத்தியில்லை  என்று சொல்லிவிட்டு, கோர்ட்டுக்குப் போய்ப் பணம் சேர்த்தவர்தான் இவர் என்பதையும் தன்னுடைய கட்டுரையில் சுட்டிக் காட்டினார்.

தலைவராகக் காந்தியாரை ஏற்றுக்கொண்டிருந்தாலும், சாதி எதிர்ப்பில் மிக உறுதியாக இருந்தார் பெரியார். தீண்டாமை ஒழிப்பைக் காந்தியார் முன்வைத்தார். பெரியாரோ, சாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்க முடியாது என்றார். 1925 மத்தியில், காரைக்குடியில் நடைபெற்ற முதல் ராமநாதபுரம் மாவட்ட அரசியல் காங்கிரஸ் மாநாட்டில், தீண்டாமை விலக்குத் தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய பெரியார், சாதி ஒழிப்புத்தான், தீண்டாமைக்குத்  தீர்வு என்பதை வலியுறுத்தினார்.

பிற்காலத்தில்,  சாதி ஒழிப்பு என்பது கடவுள், மதம், வேதம் ஆகியனவற்றோடும் பின்னிப் பிணைந்துள்ளது என்பதை அவர் கண்டறிந்தார். கடவுள் உட்பட, சாதிக்கு ஆதரவாக இருக்கும் எதனையும் அவர் விட்டுவைக்கத்  தயாராக இல்லை.

                                                                                                              (தொடரும்)
                                                                                  
நன்றி: நக்கீரன்


4 comments:

 1. தந்தை பெரியார் சமூக சீர்திருத்தம் கொண்டவர் அனால் அவரின் பெருமை அனைத்தும் கடவுள் மறுப்பு என்னும் ஒற்றை வரியில் முடித்துவிடுகிறார்கள், அண்ணல் அம்பேத்கர் அவர்களும் மிக பெரிய மேதை அனால் அவரை தலித் தலைவர் என்று சுருக்கிவிடுகிறார்கள் ,இது மிக பெரிய மோசடி

  ReplyDelete
 2. ஆம், பெரியார் கடவுள் உட்பட சாதிக்கு ஆதரவான எதையும் விட்டு வைக்கத் தயாராக இல்லை, இந்தியத்தையும் சேர்த்துத்தான்

  ReplyDelete
 3. மிகச் சிறப்பான வரலாற்று கட்டுரை. இக்கட்டுரையில் நான் 4 முக்கிய அமசங்களைப் புரிந்து கொண்டுள்ளேன்.
  1. பெரியார் காங்கிரஸில் சேர்ந்திருந்தாலும், சாதிக்கெதிரான தன் எதிர்ப்புணர்வை எப்போதும் வெளிப்படுத்திக்கொண்டே இருந்தது.
  2. ஆங்கிலேய இரட்டை ஆட்சி முறையில் சுயராஜ்ஜியக் கட்சியின் இரட்டை வேடம்.
  3. தீண்டாமை எதிர்ப்பை முன்வைத்த காந்தியார் சாதி எதிர்ப்பை முன்வைக்காதது.
  4. சாதி என்னும் ஆணி வேருக்கு ஊற்று கண்களாக கடவுள், மதம், வேதம் ஆகியன விளங்குவதை பகுத்தறிவு கொண்டு பார்த்தது, எல்லோரையும் பார்க்க வலியுறுத்தியது.

  ReplyDelete