தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday 13 January 2017

ஆதிக்கம் வேறு துணிச்சல் வேறு


ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த ஒரு சமூகம், சர்வாதிகாரிகளைக் கண்டு முதலில் மிரளும். பிறகு, அடடா, இதுவன்றோ துணிச்சல் என்று பாராட்டுப் பாத்திரம் வழங்கத்  தொடங்கும். காலப்போக்கில், அப்படிப்பட்டவர்களை -  மக்களால் அணுக முடியாதவர்களை - தங்களின் முன்மாதிரிகளாகக்  கொள்ளும் ஆபத்தும் நேரும்.


துணிச்சல் வேறு, சர்வாதிகாரம் வேறு என்பதைப்  புரிந்து கொள்ளாததால் எற்படும் சிக்கல் இது. ஒடுக்குமுறைகளை, ஆதிக்கத்தை, அதிகாரத்தை எதிர்த்து நிற்பதுதான் துணிச்சல். அதற்குத்தான் நமக்குப் போர்க்குணம் தேவை. ஆள், அம்பு, எடுபிடி, சேனை எல்லாவற்றையும் தன் விரல்  நுனியில் வைத்துக் கொண்டு அதிகாரம் செய்வதற்குத் துணிச்சல் என்ற பெயர் பொருந்தாது.

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஒப்பியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி, 10 ஆண்டுகளுக்கு முன்னால்  மறைந்த எழுத்தாளர், ஓரியண்டலிசம் என்னும் புகழ் பெற்ற நூலை  உலகுக்குத் தந்தவர், பாலத்தீனப் போராட்டத்தில் 40 ஆண்டுகள் கத்தில் நின்றவர், பேராசிரியர் எட்வார்ட் சையித், 

"அதிகாரங்கள், தான் புரியும் அனைத்துச் செயல்களுக்கு மான ஏற்பிசைவைக் கற்றவரிடையே  இவ்வுலகில் உருவாக்குகின்றன.  அல்லது, அவர்களை மௌனம் காக்கத் தூண்டுகின்றன. இவை போன்ற ஏற்பிசைவு அல்லது மௌனம் ஆகியனவற்றை உடைத்தெறிவதுதான் கல்வியின் நோக்கம்" 

என்று கூறுவார். அத்தகைய போர்க்குணத்தை எந்தக் கல்வி கற்றுத் தருகிறதோ, அதுவே உண்மை கல்வி என்பது அவருடைய பார்வை. அதனை நம் கல்வி கற்றுத் தராத காரணத்தினால்தான், முரட்டுத்தனத்தை, அதிகாரத்தை எல்லாம் நம் மக்கள் துணிச்சல் என்றும், அது ஒரு சிங்கத்தின்  குணம் என்றும் கூறத்  தொடங்குகின்றனர்.

சமூக, அரசியல் அரங்குகளில் நாம் எவ்வளவோ துணிச்சல் மிக்கவர்களைப் பார்த்திருக்கிறோம். உலகமே ஒரு திசையில் நின்றாலும், தனக்குச்  சரியெனப் பட்டதைத் தயங்காமல் சொன்ன தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்காரையும் நம் நாடு கண்டுள்ளது.  நெருக்கடி நிலைக்  காலத்தில், தன் மகன் உட்பட  கழகத் தோழர்கள் பலரும்,  கடும் சிறைவாசத்திற்கு உள்ளாகிச் சித்திரவதைகளை எதிர்கொண்டிருந்த நேரத்தில், எதற்கும் அஞ்சாமல், தன்னந்தனியாக, அண்ணா சிலைக்கு அருகில், சென்னையில், துண்டறிக்கைகளைக் கொடுத்தபடி நின்ற தலைவர் கலைஞர் துணிச்சல்காரர்.

1965, 1976, 1991 என்று பல்வேறு காலங்களில், பல்வேறு விதமான அடக்குமுறைகளைக் கண்ட பின்னும் எதற்கும் அயராமல், கருப்பு, சிவப்புக் கரை வேட்டியோடு, கலங்காமல் எதற்கும், களத்தில் நின்ற தி.மு.. தொண்டர்கள் துணிச்சல் மிக்கவர்கள்.

இத்தனை இரும்பு நெஞ்சம் கொண்டிருந்தாலும், ஆட்சியில் இருக்கும்போது, கரும்புச் சாற்றின் கனிவோடு, மக்களை மட்டுமின்றி எதிர்க்கட்சியினரையும் அணுகிய தலைவர் கலைஞரின் நடைமுறை எளிமையானதே அன்றி, கோழைத்தனமானது இல்லை. அவர் முதல்வராக இருந்தபோதும், ஊடகவியலாளர்கள் அவரை எப்போதும்  நெருங்க முடியும். கட்சியின் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்டத் தலைவர்கள்,  அவரைப் பார்த்துத்  தம் கருத்துகளை எடுத்துக் கூற முடியும்.  

மாறாக, மக்களால் அணுக முடியாதவர்கள்தாம் பெரிய தலைவர்கள் என்னும் பிம்பம் இங்கு கவனமுடன் கட்டி எழுப்பப்பட்டது. பத்திரிகையாளர்களால் பார்க்கவே முடியாத அளவுக்கு ஒருவரின் தோற்றம் உயர்த்திக் காட்டப்பட்டது. இவையெல்லாம் இரும்பு மனிதர்களுக்கான அடையாளம்  அன்று.

ஒரே கையெழுத்தில் 12000 பேர் அரச பணியிலிருந்து இடைநீக்கம் செய்தது  துணிச்சல் என்று போற்றப்பட்டது. 13000 மக்கள் நலப் பணியாளர்களை இறுதிவரையில் பணியில் அமர்த்தவே இல்லை என்பதும், அவர்களில் சிலர் தற்கொலை செய்து கொண்டு இறந்த பின்னும் மனம் இளகவில்லை என்பதும் சிங்கத்தின் குணம் ஆகாது.  தொடுக்கப்பட்ட வழக்குகளை வாய்தா வாங்கி வாங்கித் தள்ளிப் போடாமல் இருந்திருந்தால் அதனைத் துணிச்சல் என்று நாமும் பாராட்டலாம். 

இறந்து போனவர்களை பற்றிப் பேசுவது நாகரிகம் இல்லை என்று ஒரு போலித்தனமான வாதம் இங்கே வைக்கப்படுகிறது. அப்படிச் சொல்லிக்கொண்டே பெரியாரை, அண்ணாவை இங்கு பலர் விமர்சனம் செய்து கொண்டுள்ளனர். ஆளுக்கொரு சட்டம் என்பது நம் நாட்டிற்குப் புதிதா என்ன? இறந்து போனவர்களை விமர்சிப்பது என்பது வேறு, இறந்து போனவர்களின் ஆட்சியை விமர்சிப்பது என்பது வேறு. இறந்தவர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்றால், இட்லரும் நல்லவர் என்று நாளையே நாம் அறிவித்துவிட  வேண்டும். 

எந்தச் சூழலிலும் ஒடுக்குமுறைகளை, சர்வாதிகாரத்தை எதிர்க்கும் துணிச்சல், போர்க்குணம் நமக்கு வேண்டும். அதுவே தமிழரின் பண்பாடு. அப்பண்பாட்டைப்  பின்பற்றுவோம் என்னும் உறுதியை இப்பொங்கல் நாளில் நாம் அனைவரும் ஏற்போம்! 

தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும்  சர்வாதிகாரிகளை எதிர்ப்போம்! ஜனநாயகத்தைக் காப்போம்!!  இதுவே பொங்கல் -  புத்தாண்டில் நாம் மேற்கொள்ள வேண்டிய உறுதி!! 


 நன்றி: முரசொலி பொங்கல் மலர்

5 comments:

  1. நன்று

    ReplyDelete
  2. ஆம் ! சர்வாதிகாரத்தைப் புறுகணித்துப் போராடத் தேவையான துணிச்சல் தான் இன்று தமிழருக்குத் தேவை !

    ReplyDelete
  3. மிக அருமையான கட்டுரை. நல்ல அரசியல் தலைவர்களின் பொறுப்பாக மக்களை துணிச்சல்காரர்களாக மாற்றுவதற்கான வேலைகள் முக்கியத்துவம் பெறுகிறது. அதே போல இனிமேல் டி ஆர் பி ரேட்டிங்கை காட்டக்கூடிய பிரச்சனைகளை அரசியல் தலைவர்கள் கையில் எடுக்காமல் அடுத்த தலைமுறை நன்கு வாழ்வதற்கு எவை இன்று தடையாக இருக்கிறதோ (உதாரணம் அதிக பிளாஸ்டிக் பயன்பாடு) அவற்றை களைவதற்கு தேவையான நடவடிக்கைகளை இன்றே தொடங்க வேண்டும். அதனை தலைவர்கள் யோசிக்க வேண்டும்.

    ReplyDelete
  4. இரத்தினவேல்14 January 2017 at 10:58

    சர்வாதிகாரத்துக்கும், துணிச்சலுக்கும் உள்ள வேறுபாட்டை அருமையாக விளக்கிச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

    ReplyDelete
  5. THUNIVUKOLVOM MAKKALTHUYARKALAIVOM

    ReplyDelete