தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 11 February 2017

எல்லாம் 'அவாள் ' செயல்! (1)


தமிழ் நாட்டில்  இன்னும் குழப்பம் தீரவில்லை. எப்போது தீரும் என்றும் உறுதியாகத்  தெரியவில்லை. 

இத்தனை குழப்பத்திற்கும் யார் காரணம்? முதல் காரணம் - மத்திய அரசு அல்லது பா.ஜ. க. இரண்டாவது காரணம் சசிகலா. மூன்றாவது காரணம் - முதலமைச்சர் பன்னீர்செல்வம்.

மேலே உள்ள என் குற்றச்சாற்று சிலருக்கு அதிர்ச்சி அளிக்கலாம். அரசியலை உற்று நோக்குகின்றவர்களுக்கு இதில் வியப்பு ஏதும் இருக்காது.


நம் சொந்த விருப்பு வெறுப்புகளை விட்டுவிட்டுப் பார்த்தால் பல உண்மைகள் தெரியும். நான் உட்பட, சசிகலா முதல்வர் ஆவதைப் பலரும் விரும்பவில்லை. ஆனால் நம் விருப்பங்களுக்கெல்லாம் சட்டத்தில் இடமில்லை.  சட்டமன்ற ஆளும்கட்சி உறுப்பினர்களால், கடந்த 5 ஆம் தேதி, முதலமைச்சர் பொறுப்புக்குச் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட மறுநாளே ஆளுநர் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்திருக்க வேண்டும் என்பதுதான் சட்டப்படி நியாயம்.  'சட்டப்படி'  என்பதை இங்கு அடிக்கோடிட விரும்புகிறேன். ஆளுநர் அதனைச் செய்யவில்லை. 7 ஆம் தேதியாவது அவர் சென்னை வந்திருக்க வேண்டும்.  வரவில்லை. 7 ஆம் தேதி இரவு, ஜெயலலிதா நினைவிடத்தில் பன்னீர்செல்வம் புதிய வாக்குமூலங்களை எல்லாம் வெளியிட்ட பின்பு, 9 ஆம் தேதிதான் அவர் இங்கு வந்தார்.

ஆளுநர் என்பவர், மத்திய அரசின் சார்பாளர் (பிரதிநிதி). எனவே அவருடைய நடவடிக்கைகள் அனைத்திற்கும் மத்திய அரசு அல்லது மத்தியின் ஆளும் கட்சிதான் பொறுப்பேற்க வேண்டும்.

முன்னாள் முதலமைச்சர்,  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்  இருந்தபோதும் பல்வேறு குழப்பங்கள் நிலவின. எந்த ஒன்றும் வெளிப்படையாகப் பேசப்படவில்லை. முதலமைச்சர் செயல்பட இயலாத நிலையில் இருக்கிறாரா என்பதைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பும் ஆளுநரைச் சாரும். அவர் மூலம், மத்திய அரசு அந்தப் பணியையும் சரிவரச்  செய்யவில்லை.

இரண்டு மாதங்களுக்குப் பின், சசிகலா முதல்வர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்றைய இரவில், அவருடைய கணவர் நடராசன் அதே அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றார்.  அதற்கு அடுத்த நாள், மருத்துவர் குழு ஓர் அறிக்கையை வெளியிடுகின்றது. எல்லா நிகழ்வுகளும் சந்தேகத்தின் நிழல் படிந்தனவாகவே இருக்கின்றன. . எதிலும் ஒரு வெளிப்படைத்தன்மை (transparency)  இல்லை. இப்போது அந்த மருத்துவமனையின் மருத்துவர் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் ராம சீதா, செப்டம்பர் 22 ஆம் தேதியே அவர் (ஜெயலலிதா) மருத்துவமனைக்குப் பிணமாகத்தான் கொண்டுவரப்பட்டார் என்கிறார்.  உடலைப் பதப்படுத்த மட்டுமே மருத்துவர்கள் அழைக்கப்பட்டனர் என்கிறார். 

இது ஒரு சாதாரண செய்தியன்று. இதனை நீதிமன்றங்கள் தாமாகவே ஒரு வழக்காக எடுத்துக்கொண்டு விசாரணை செய்ய வேண்டும். இச்செய்தி உண்மையாயின், மத்திய அரசு, அப்பல்லோ மருத்துவமனை மற்றும் உண்மையை மறைத்த சசிகலா உட்பட்ட அனைவர் மீதும் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். செய்தி பொய்யாக இருந்தால், அதனை வெளியிட்ட மருத்துவர் தண்டிக்கப்பட வேண்டும்.  

இப்படியாக எல்லாக் குழப்பங்களுக்கும் மத்திய அரசு முதல் காரணமாக உள்ளது. தன் பேராசையினால் சசிகலா இரண்டாவது காரணமாகிறார். உண்மைகளை உரிய நேரத்தில் கூறாமல்,  எல்லாவற்றுக்கும் மௌன சாட்சியாக இருந்துவிட்டு, தனக்கு முதலமைச்சர் பதவி இல்லை என்பது உறுதியான பின்பே பலவற்றை வெளிப்படுத்த முன்வந்துள்ள பன்னீர்செல்வம் மூன்றாவது காரணம். 

ஆனால் எல்லோருமாகச் சேர்ந்து இப்போது தி.மு.க.வைக் குறை கூறுகின்றனரே, அதனை விடப் பெரிய கோமாளித்தனம் வேறு ஒன்றுமிருக்க முடியாது.  எதிர்க்கட்சித் தலைவரோடு சிரித்துப் பேசியதும், கை  குலுக்கியதும்தான் பெரிய தவறு என்கிறார் சசிகலா. ..  ஒரு சிறிதும் அரசியல் பக்குவமற்ற அவரது நிலையைத்தான் இது காட்டுகிறது. 

அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட அ.தி.மு.க. தலைவர்களைத் தி.மு.க. மூளைச் சலவை செய்துவிட்டது என்கிறார், அக்கட்சிப் பெண்மணி ஒருவர். அவர்தான் , ஒரு பெண் இருந்த இடத்திற்கு  இன்னொரு பெண்தான் வரமுடியும் என்ற புதிய தத்துவத்தைச் சொன்னவர். இத்தனை தத்துவ ஞானிகளை அந்தக் கட்சி எப்படித்தான் தாங்குகிறதோ தெரியவில்லை. ஓர் ஆளும் கட்சியின் அவைத்தலைவரையே மூளைச்சலவை செய்ய முடியும்  என்றால், அது தி.மு.க.வின் வலிமையையும், அ.தி.மு.க.வின் பலவீனத்தையும்தானே காட்டும்! 

இத்தனை குழப்பங்களையும் பா.ஜ.க ஏன் செய்ய வேண்டும்? காரணம் இருக்கிறது. அவாளின்  குடுமி அவசியமில்லாமல்  ஆடாது. அந்தத் தேவை என்ன, அதில் அவர்களுக்கு லாபம் என்ன என்பதை அடுத்துத் தொடர்ந்து பேசுவோம்! .


7 comments:

 1. சசிகலா, பன்னீர், ஆளுநர், மத்திய அரசு சதுரங்க ஆட்டத்தில் ராணியின் ஆட்டத்தை தாக்கு பிடிக்க முடியாமல் சிப்பாய்கள் பின்னால் மறைந்திருக்கம் மோடி அரசு ராணியின் ஆட்டத்தில் தோற்பது உறுதி.

  ReplyDelete
 2. Nailed it ! Tamil Nadu is devolving day by day ! I guess there's one more revolution coming on the way.

  ReplyDelete
 3. எது எப்படியோ 'எரிகிற வீட்டில் புடுங்கியது ஆதாயம்'(உம் 1967) என்பது போல திமுக மறைமுகமாக/நேரடியாக ஆட்சிக்கு வராமல் கவர்னர் பார்த்துக்கொள்ள வேண்டாம்!.அவர்கள் இனிவரும் 41/2 வருடங்களுக்கு ஆள மக்கள் தீர்ப்பளிக்கவில்லை!.சுபவீக்கள்/சகுனிக்களின் குடுமிக்கள்/கோமணங்கள் நேரடியாக/மறைமுகமாக ஆடும்.அதைப் பொருட்படுத்தாமல் திமுக ஆட்சிக்கு வராமல் கவர்னர் பார்த்துக்கொள்ள வேண்டும்.இது தான் அனைத்தையும் விட மிகமிக முக்கியம்!

  ReplyDelete
 4. Politically correct commented. Well done sir. Keep going! Regards from Norway!

  ReplyDelete
 5. I fully endorse this text written by Subavi.The governor should act on the truth rather than fact.More over the Governor should see the benefit of large portion of the Tamilians than observing the rules.That is why our Pakutharivu Pakalavan asked questions to Dr.B.R.Ambedakar about writing of constitution of India those days.Frankly speaking in India justice is highly expensive where as judges are very cheap and I am only reproducing the comments of late eminent Jurist Mr.Nani Palkiwala

  ReplyDelete
 6. ஒரே ஒருவரை மட்டும் நம்பி ஓட்டு போட்டால் என்ன ஆகும் என்பது தெரிந்து விட்டது. பன்னீர் வென்றாலும் சசி வென்றாலும் ப ஜ க விற்கு இலாபம் தான். திராவிடம் பேசும் பலர் சசிகலா ப ஜ க விற்கு எதிரானவர் என்ற மாயை உருவாக்கி விட்டார்கள். சசிகலாவை விரட்டுவற்கு பா ஜ க தான் சரி என்று பல பேர் என்ன துவங்கி விட்டார்கள். பன்னீர் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்தவர். சசிகலா வந்தால் அவர் எதிர்பை பா ஜ க தன் வச படுத்த முயற்சி செய்யும். தமிழகதின் பல உரிமைகள் பரிக்க பட்ட போது ஒன்றையும் சொல்ல வில்லை. இவர் வந்தால் தமிழ் நட்டை மத்திய அரசின் பலத்தோடு சுரண்டி விடலாம்.

  ReplyDelete
 7. சசிகலா அவர்களுக்கு இன்று நேர்ந்த இதே போன்றவொரு நிலைமை நாளை சுற்றி இருப்பவர்களால் தளபதி அவர்களுக்கும் வரலாம். காரணங்கள் ஏதாவது அவர்களுக்கும் கிடைக்கும். உசுப்பேற்றி விட ஒரு பிரிவினர் தமிழகத்தில் எப்போதும் உண்டு.

  ReplyDelete