தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 3 June 2017

பேசு தலைவா பேசு!


                     நீ என்றன் பள்ளிக்கூடம் - 
                          சிந்தை தெளியாப் பருவத்துச் 
                          சிறுவனாய்ப் படித்தேன் உன்னை 
                          உயர்கல்வித் தளத்தில் கூட 
                          உன்னைத்தான் படித்தேன்  
                          அப்போதே எனது 
                          திசைகளைத் தீர்மானித்த 
                          தொலைதூர வெளிச்சம் நீ 
                          தொடமுடியா விண்மீன் நீ!


                    நீ என்றன் பள்ளிக்கூடம் 
                           இலக்கியம் எப்படி எழுதுவதென்றும் 
                           மேடையில் எப்படிப் பேசுவதென்றும் 
                           வாதம் புரியும் வகைஎது என்றும் 
                           வடிவாய் உன்னிடம் பாடம் கற்றேன் 

                    நீ என்றன் பள்ளிக்கூடம் - 
                            பத்து ஆண்டுகள் உன் 
                            பக்கம் இருந்தேன் 
                            பார்த்துக் கொண்டிருந்ததாய்ப் 
                            பலரும் கருதினர் 
                            படித்துக் கொண்டிருந்தேன் 
                            தலைவா உன்னை!

                     நீ என்றன் பள்ளிக்கூடம் - 
                            ஆண்டுகள் பலவாய்ப் படித்தும் கூட 
                             ஆரம்பப் பாடமே முடியவில்லை 
                             தோண்டத்  தோண்டச் 
                             சுரக்கும் ஊற்று நீ 

                    நீ என்றன் பள்ளிக்கூடம் - 
                             இப்போது ஏன் இந்த மௌனப் பாடம் 
                             ஏங்கும் தமிழினம் பார்த்திடு தலைவா 
                             உன் குரல் கேட்க 
                             குவிந்திருக்கின்றன 
                             கோடான கோடிக் காதுகள் 
                             எத்தனை கோடிச் சொற்கள் இருந்தென்ன 
                            'உயிரினும் மேலான உடன்பிறப்புகளே' 
                             என்னும் 
                             ஒற்றைத் தொடருக்கு ஈடாகுமா அவை?
                             பேசு தலைவா பேசு 
                             உன் நாவை அசை - எங்கள் 

                             கண்ணீரைத் துடை!

5 comments:

 1. " உன் நாவை அசை எங்கள் கண்ணீரை துடை"
  அதுதான் எங்களின் ஏக்கமாகும்

  ReplyDelete
 2. ஐயா, தாங்கள் ஒரு தீவிர திராவிடவாதி, கொள்கையாளர், திராவிட இயக்கத்தலைவர், சிறந்த பேச்சாளர், வாதத்தில் வல்லவர், தமிழறிஞர், தமது கருத்தை நேர்மையாக கூறும் துணிச்சல்காரர் என்று அறிவேன். தங்களை சந்தித்து பழகிய ஒரு சில மணித்துளிகளில் தாங்கள் மிகவும் எளிமையானவர், அன்பானவர், பண்பானவர் என்றும் உணர்ந்தேன். இன்று தங்கள் ஒரு சிறந்த கவிஞர் என்றும் தெரிந்துகொண்டேன். மாற்றுக்கட்சியினர்உட்பட கோடானுகோடி மக்களின் ஏக்கத்தை தங்களின் கவிதை வெளிப்படுத்துகிறது. வாழ்த்துக்கள்; தங்களின் கவிதை வெளியிடும் பொதுவிருப்பம் நிறைவேற. நன்றி. இவன்; நடராஜன் கண்ணையன் 9994290076

  ReplyDelete
 3. ஐயா, வணக்கம். சரவணன் எம்எல்ஏ வீடியோவில் கூவத்தூர் பேரம் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பேசப்படுகிறது. அதைவிட முக்கிய விஷயம் ஆர்கேநகர் தேர்தல் ரத்தாகுமென்று பாஜக மூலமாக பத்து நாட்களுக்கு முன்பே தெரியும் என்று சொல்லியதே. இது தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை தகர்க்கிறது. இது குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை கோர வேண்டும்.

  ReplyDelete
 4. நீ என்றன் பள்ளிக்கூடம் -
  பத்து ஆண்டுகள் உன்
  பக்கம் இருந்தேன்
  பார்த்துக் கொண்டிருந்ததாய்ப்
  பலரும் கருதினர்..
  படித்துக் கொண்டிருந்தேன்
  தலைவா உன்னை!

  அடடா...அருமையான வரிகள் ஐயா....!

  எழுந்து வா தலைவா…

  தமிழகத்தின் இறுதி
  நம்பிக்கை நீயல்லவா…!
  எழுந்து வா தலைவா…!

  மொழியை அழிக்க
  முந்தியடிக்கிறது வடக்கு
  எழுந்து வா தலைவா…!

  தளபதி பார்த்துக்கொள்வார்
  என்று திருப்தியடைந்துவிட்டாயோ.?
  அரசியலை மீறிய
  அன்பு கொண்டுள்ளோம் உம்மிடம்...
  எழுந்து வா தலைவா…!

  நாற்காலியில் நீயமர்ந்தும்
  போர்த்தலைவனாய் முன்னின்றாய்…!
  போதுமிவ்வாழ்வு
  என்றெண்ணிவிட்டாயோ ?
  நாணிக் குறுகிடுவோம்
  கேள்விக்குறிபோலே...
  நானிலத்தில் நாணமில்லா
  அவ்வடிமைகள் போலே...
  எழுந்து வா தலைவா…!

  உயிரெழுத்து நீ போனால்..
  மெய்யெழுத்தாய் தனியாவோம்
  உயிர்மெய் எழுத்துக்கள்
  உயிரற்று போகும்…!
  எழுந்து வா தலைவா…!

  பகுத்தறிவு பாசறையே..!
  பைந்தமிழ் பட்டறையை..!
  அரசியலில் சூரியனே..!
  அஞ்சாத திராவிடனே..!
  வந்துவிடு வந்துவிடு
  எழுந்து வந்துவிடு தலைவா…!

  கோபிநாதன் பச்சையப்பன்

  ReplyDelete