தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday, 16 June 2017

வெளியே வந்தது பூனைக்குட்டி


தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுக மூன்று, நான்கு அணிகளாகப் பிரிந்து கிடக்கின்றது என்றே இன்று பலரும் கருதுகின்றனர். அவை அணிகளாக இல்லை, கட்சிகளாகவே பிரிந்து விட்டன என்பதே உண்மை. பன்னீர்செல்வம், பழனிச்சாமி, தீபா ஆகியோரின் தலைமையில் இன்று மூன்று கட்சிகள் உள்ளன. வேண்டுமானால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உள்ள ஒரு கட்சி, எடப்பாடி அணி, தினகரன் அணி என்று இரண்டாகப் பிரிந்துள்ளது என்று கூறலாம்


இவை அனைத்தையும், தில்லியிலிருந்து பாஜக இயக்குகிறது என்னும் உண்மை அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இந்த உண்மையை இரு கட்சிகளும் மறுத்து வந்தன. இப்போது, ஓர் ஆங்கில நாளேட்டிற்கு (The Times of India, Chennai ed., 14th June 2017) பன்னீர்செல்வம் அளித்துள்ள நேர்காணலில் எல்லா உண்மைகளும் வெட்ட வெளிச்சமாகி உள்ளன


நீங்கள் பிரதமர் மோடியைச் சந்தித்தபோது, அவர் உங்களிடம் என்ன கூறினார் என்னும் வினாவிற்கு, பன்னீர்செல்வம் தந்துள்ள விடை இதுதான்:- 

"நிலையான அரசைத்  தரும் வகையில், இரண்டு அணிகளும் இணைந்து, ஒரு கட்சியாக இயங்க வேண்டும் என்று அவர் கருதுகிறார். மிக முக்கியமாக, ஊழலற்ற அரசாக இருக்க வேண்டும் என்ற கருத்தை எங்களிடம் கூறினார். நிலைமை எப்படியிருந்தாலும், அரசு நிர்வாகத்தில் ஊழல் இருக்கக்கூடாது என்பதிலும், அதனைத் தான் அனுமதிக்க மாட்டேன் என்பதிலும் அவர் மிகத் தெளிவாக உள்ளார். அதில் அவர் உறுதியாக உள்ளார்."  

இதற்கு மேல் இங்குள்ள அதிமுக கட்சிகளை யார் இயக்குகிறார்கள் என்பதை ஆராயத் தேவையில்லை. இரண்டு நாள்களுக்கு முன், பேச்சுவார்த்தைக்கான குழுவையே கலைத்து விட்டதாகவும், இனி இணைப்புக்கு இடமில்லை என்றும் பேசிய பன்னீர்செல்வம், இப்போது மோடியின் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்

இங்கே அதிமுக இணைந்து செயல்படுவதில் மோடிக்கு அப்படியென்ன அக்கறை? எந்த ஒரு கட்சியும் தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று கருதுமே  தவிர, அடுத்த கட்சியை வலுப்படுத்துவதில் ஆர்வம் காட்டாது. ஆனால் மோடி அப்படி ஆர்வம் காட்டுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, பாஜக ஒருநாளும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரமுடியாது என்பது. எனவே அந்த முயற்சியில் ஈடுபடுவது வீண் வேலை என்பதை அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். இரண்டாவது, இப்போது ஆட்சி கவிழ்ந்து, தேர்தல் வருமானால், திமுக மாபெரும் வெற்றி பெற்றுவிடும் என்பது வெளிப்படையான உண்மை. அதனை பாஜக ஒருநாளும் விரும்பாது.

பாஜக மட்டுமின்றி, சமூக நீதி, திராவிட இயக்கம் ஆகியனவற்றை முழுமையாக வெறுக்கும் எவரும் திமுக ஆட்சிக்கு வருவதை விரும்ப மாட்டார்கள். அதனால்தான், ரஜினியைக் கொண்டுவந்து வாக்குகளைப்  பிரித்தோ, அல்லது  வேறு வழியிலோ அந்த நிலை ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்வதில் சிலர் முனைப்பாக உள்ளனர்.  

பன்னீர்செல்வம், எடப்பாடி தலைமையிலான கட்சிகளுக்கும், தினகரன் தலைமையிலான அணிக்கும் பணம், பதவி இரண்டையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.எனவே, அவர்களும் சட்டமன்றத்திற்கு வெளியே  முட்டி மோதிச் சண்டை போட்டுக் கொள்வார்களே தவிர, சட்டமன்றத்திற்குள், ஆடாமல், அசையாமல் வெறும் பொம்மைகளாக அமர்ந்திருப்பார்கள்

தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் தன்னலம் மிக்க அதிமுக அரசு நாட்டை ஆள்வதும், அதற்கு மதவாதக் கட்சியான பாஜக துணை போவதும் வெட்கக்கேடானது


1 comment:

  1. ஐயா, பாஜக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரமுடியாது என்று கூறுவதை ஏற்க முடியவில்லை. நேர்மையாக தேர்தல் நடத்தி வரமுடியாது என்பது உண்மை. ஆனால் உத்திர பிரதேச மாநில தேர்தல் முறைகளை கையாண்டு வர வாய்ப்பிருக்கிறது. அதற்குத்தான் ரஜினி அரசியல் பிரவேசம். ரஜினி பாஜக கட்சியில் சேர்ந்து மாநில தலைமை பொறுப்பை ஏற்கலாம். அதனால் பாஜக விண்ணளவு வளர்ந்துவிட்டது என்று இங்குள்ள ஜால்ரா ஊடகங்கள் கருத்துக்கணிப்புகள் வெளியிடலாம். தி மு க ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்கு செங்கல் உருவ திருமாவளவன்கள் இப்போதே தயாராகிவிட்டார்கள். தெர்தல் தில்லுமுல்லுகள் செய்து பாஜக தேர்தலில் மிருகபலத்துடன் ஆட்சி அமைத்து அடிமை கட்சி எதிர்க்கட்சியாக உட்காரலாம். தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்துக்கொண்டால் எல்லாம் சாத்தியமே. டைம்ஸ் நவ் டிவியில் வெளியான சரவணன் எம் எல் ஏ உரையாடலில் ஆர் கே நகர் இடைத்தேர்தல் ரத்தாகுமென்று தமது ஒ பி எஸ் அணிக்கு பத்து நாளைக்கு முன்பே தெரியுமாம் அதுவும் மத்தியில் உள்ள பாஜக மூலமாக. ஆக தேர்தல் ஆணையம் மத்திய பாஜகவின் ஏஜென்டாக செயல்படுகிறது ஊர்ஜிதமாகிறது. ஓட்டு எந்திரத்தில் முறைகேடு செய்யமுடியும் என்று நிருபிக்க முடியுமா என்று அரசியல் கட்சிகளுக்கு சவால்விடும் தேர்தல் ஆணையம் அதற்கு என் நிபந்தனைகள் வைக்கவேண்டும். நான்கு மணி நேரத்தில் நிருபிக்க வேண்டுமாம். தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்ய நான்குமணி நேரம்தான் எடுத்துக்கொள்கிறதா? ஏற்கனவே நம் நீதிமன்றங்கள் அநீதிமன்றங்களாகவும் கமிஷன் மண்டிக்களாகவும் சிறந்து விளங்குகின்றன. பறக்கும் பச்சை குதிரையை பார்த்துள்ள நீதிபதிகள் பூராவும் தமிழ்நாட்டில்தான் உள்ளார்கள். அந்த பறக்கும் குதிரையின் இறக்கைக்கும் இலை வடிவத்திற்கும் வித்தியாசம் தெரியாத அதிபுத்திசாலிகள் நீதிபதிகளாக நம்மிடம்தான் இருக்கிறார்கள். அவாளுக்கு பாதகம் என்றால் ஒரு வழக்கை பத்தொன்பது வருடத்திற்கு இழுத்தடிக்க உதவும் நீதிமன்றம் அவாளுக்கு சாதகம் என்றால் மூன்று மாதத்தில் முடிக்கவேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிப்பார்கள். மோசமான சாலைகளை சீரமைக்க உத்திரவு போடமுடியாத நீதிபதிகள் தலைக்கவசம் அணியவேண்டும் ரசீதை காட்டவேண்டும் என்று ஆவேசமாக ஆணை இடுவார்கள். ஆகவே நீதி மன்றங்கலை நம்பமுடியாது. தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து வாக்கு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய உள்ள தீயசக்திகளின் ஆபத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிரீர்கள்? எப்படி தவிர்க்கப்போகிரீர்கள். இன்றைய இளைஞர்கள் திராவிட தேவையை உணரவில்லை. அவர்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்களுக்கே நேரம் போதவில்லை. அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட எந்த ஊடகமும் முன்வரவில்லை. கலைஞர் டிவி சொரியாசிஸ் மற்றும் ரியல் எஸ்டேட் விளம்பரங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் திராவிட வரலாறு குறித்து இன்றைய இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் இல்லை. போலிஸ் அடிக்காதவரை மட்டுமே மெரீனா புரட்சி. திடமான தீவிரமான நடவடிக்கைகளை தங்களைபோன்ற திராவிடத்தலைவர்கள் மேற்கொள்ளவேண்டும்.

    ReplyDelete