தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday, 23 July 2017

மாணவர்களின் மீது பாயும் குண்டர் சட்டம்


ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, இறுதியில் தமிழக மாணவர்களைக் கடிக்கத்  தொடங்கியுள்ளது தமிழக அரசு!  தமிழ்நாட்டில் முதன்முறையாக,வளர்மதி என்னும்  ஒரு மாணவியின் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது. இன்னும் ஓர் ஆண்டு காலம், எந்த விசாரணையும் இன்றி, அம்மாணவி சிறையில் இருக்க நேரிடலாம். இல்லையென்றாலும், விசாரணைக்குழு, நீதிமன்றத் தீர்ப்பின்படி, ஆறேழு மாதங்களுக்குப் பின் விடுதலை ஆகலாம். 


தமிழ்நாடு குண்டர் சட்டம் என்பது எம்ஜிஆர் ஆட்சிக் காலத்த்தில் கொண்டுவரப்பட்ட ஒன்று. 1982 மார்ச் 12 ஆம் தேதி, இந்தியக் குடியரசுத் தலைவர்  அதற்கு ஒப்புதல் அளித்தார். குறிப்பாகத் தொடர் குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் (bootleggers), கள்ளச் சாராயம் காய்ச்சுவோர், போதைப்  பொருள் கடத்துவோர் ஆகியோரை, எந்த விசாரணையுமின்றி, உடனடியாகக் கைது செய்வதற்காக அந்தச் சட்டம் என்று சொல்லப்பட்டது. பிறகு திருட்டு விசிடி வைத்திருப்போருக்கும்  அந்த சட்டம் செல்லுபடியாகும் என்னும் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 

அந்தச் சட்டம்தான் இன்று மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி, கதிராமங்கலம் போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர் ஜெயராமன், மாணவி வளர்மதி ஆகியோர் மீது 'பாய்ந்திருக்கிறது.' 

வளர்மதியின் மீது ஏற்கனவே ஆறு வழக்குகள் உள்ளன என்று முதலமைச்சர் சட்டமன்றத்தில் கூறுகின்றார். அந்த வழக்கில் ஒன்று கூட, சமூக விரோதச் செயல்பாடு சார்ந்ததன்று. மாணவர் போராட்டங்களில் கலந்து கொண்டது, மக்களின் அறவழிப் போராட்டங்களுக்குத் துணை நின்றது ஆகியவற்றிற்காகத் தொடுக்கப்பட்ட வழக்குகளே அவை. அவற்றின் அடிப்படையில் எப்படி குண்டர் சட்டத்தின் கீழ்க் கைது செய்யலாம்? 

இது வெறுமனே ஒரு கைது நடவடிக்கை அன்று. இதற்குள் ஓர் அரசியல் இருக்கவே செய்கிறது. கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்துப் போராடியவர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சமூக வலைத்தளங்களில் வருவது போல, தமிழ்நாட்டின் சிரிப்புப்  போலீஸான எடப்பாடியை எதிர்த்து யார் வேண்டுமானாலும் போராடலாம். ஆனால் மத்திய அரசை  எதிர்த்தால் கடும் சட்டங்களின் கீழ் கைது செய்யப்படுவார்கள். ஆக, எஜமானின் ஆணைக்கு ஏற்ப ஆடும் எடுபிடி அரசுதான்  இங்கு உள்ளது. 

இது ஓர் அச்சுறுத்தல். மத்திய அரசின் திட்டத்தை யாரேனும் எதிர்த்தால்,  அவர்கள் மாணவர்களாக இருந்தாலும், ஓராண்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்னும் அச்சுறுத்தல். மாணவர்களின் மீதும், ஜனநாயக சக்திகளின் மீதும் தொடுக்கப்பட்டுள்ள ஒடுக்குமுறை, அரச பயங்கரவாதம்! 

சல்லிக்கட்டுக்காக ஆயிரக்கணக்கில், பல்வேறு ஊர்களிலும்  கூடிய மாணவர்கள் இப்போது எங்கே?  இன்று ஒரு மாணவிக்குநேர்ந்துள்ளது, எதிர்காலத்தில்  பிறருக்கும் நேராது என்பதற்கு என்ன உறுதி? அறவழிப் போராட்டங்களை ஒடுக்க நினைக்கும் அரசுகளுக்குத்  தமிழக மக்கள் தரப்போகும் விடை என்ன? இதுவே இன்றைய காலத்தின் குரல்!

4 comments:

 1. மக்களை வன்முறை நோக்கி தூண்டியதாக வளர்மதி மீது குற்றச்சாட்டு..ஜல்லிகட்டு போராட்ட வன்முறைகாக ஆதியோ ,லாரன்ஸ்,ஆர் ஜே பாலாஜி போன்றவர்கள் தான் குண்டர் சட்டத்தில் கைது செய்ய படனும்.ஆனா நடக்க போறதில்ல.மனு நீதி சாதிக்கு ஒரு நீதி தான் செய்யும்...
  - தேவி

  ReplyDelete
 2. dont paint the community color on this issue

  ReplyDelete
 3. இரத்தினவேல்24 July 2017 at 14:34

  ஜனநாயக உரிமைகளின் பாதை அடைக்கப்படும்போதுதான், தீவிரவாதம் பிறக்கிறது. இதை உணர்ந்து அரசின் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

  ReplyDelete
 4. (நல்ல) மாட்டுக்கு ஒரு சூடு, நீட்டுக்கு எத்தனை சூடு வேண்டும் ?
  மாட்டுக்கு சிலிர்த்தெழுந்த மாணவர்கள் நீட்டுக்கு ஏன் திரண்டு எழவில்லை? நீட் தங்களது எதிர்காலத்தைமட்டுமல்லாது தமது சந்ததியினரின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்பதை உணரவில்லையா? நீட் தேர்வு எழுதவந்த தமிழக மாணவ மாணவியரை வேண்டுமென்றே அவமானப்படுத்தி மனதளவில் ஊனமடையச்செய்ததை புரிந்துகொள்ளவில்லையா? பழ கருப்பையா அடிக்கடி சொல்லுவார், “ இப்போதுள்ள இளைஞர்களுக்கு ஒரு கொள்கையும் கிடையாது ஒரு லட்சியமும் கிடையாது, அவர்கள் ஒரு பொக்கையான மனோபாவத்தில் இருக்கிறார்கள்” என்று. தினமும் இலவசமாக பிரியாணி போட்டு சினிமாகாரர்கள் புடை சூழ ஊடக வெளிச்சமும் பாய்ச்சி போலிஸ் அடிக்காது என்ற சூழ்நிலையில் மட்டுமே கூடும் மனோபாவமா. அன்று இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டோர் எங்கிருக்கிறார்கள் என்றே சக போராட்டக்காரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு தெரியாது. ஏன் போராட்டக்காரர்களுக்கே தெரியாது.பிரியாணி இல்லை சாப்பாடு போட யாருமில்லை. ஊடக வெளிச்சம் கிடையாது. சிறை, அடி, உதை, வழக்கு, குண்டடி எதற்கும் அஞ்சவில்லை. கொள்கைக்காக இலட்சியத்திற்காக, இனத்திற்காக, வருங்கால சந்ததியினருக்காக அதாவது இன்றைய இளைஞர்களுக்காக போராடினார்கள். பலர் உயிர்த்தியாகம் செய்தார்கள். இவையெல்லாம் எதோ பல நூற்றாண்டுகளுக்கு முன் கதையல்ல. நமது பெற்றோர் அல்லது பாட்டன் காலத்து வரலாறு. ஏன் அந்த உணர்வு அந்த வீரம் இன்று இல்லை. இதனை விதைக்க இன்ற திராவிட தலைவர்கள் தவறி விட்டனர். இப்போது ஊடக வசதி இருந்தும் ஒரு புரட்சியை, விழிப்புணர்வை, இலட்சிய வேட்கையை வளர்க்க தவறி விட்டோம்.இன்றைய மனித சங்கிலி போராட்டத்தில் மாணவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு கலந்துகொள்ளவில்லை. வருந்தத்தக்க விஷயம் இது.

  ReplyDelete